Sunday, January 2, 2011

கேரக்டர் - ஹரி..

படைப்பின் விசித்திரம் பல நேரம் கற்பனைக்குள் அடங்காது. ஏன் ஏன் இப்படி என நம் மனதை பதைக்க வைக்கும் படைப்புக்களைக் கண்டே வந்திருக்கிறோம். பல நேரம் இவர்கள் முன் நான் எம்மாத்திரம் எனக் கூசும்படியான பலரை நான் சந்தித்திருக்கிறேன். சில நேரம் இவர்களை இன்னும் கொடுமையாகப் படுத்தும்போது கடவுளே உனக்கு வேறு யாருமா கிடைக்கவில்லை என நொந்துக் கொண்டதும் உண்டு.


அப்படி ஒருவன்தான் ஹரி. அலுவலகத்திலிருந்து எட்டு பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து சொகுசாக வண்டியில் நிதானமாக கிளம்பி ஒன்பதேகால் அலுவலகத்துக்கு பத்தே முக்காலுக்கு வந்து ‘ஒரே ட்ராஃபிக்’ என்றும், 9.45 ரயில் 20 நிமிஷம் லேட் என்றும், 5.15 வண்டியில்தான் உட்கார இடம் கிடைக்குமென்றும், 5.30கு கிளம்பினால்தான் ஆறறைக்குள் வீடு சேரலாம் என்றும் இருக்கும் மெஜாரிட்டியில் நேரத்தே அலுவலகம் வந்து அலுவலக நேரம் முடிந்து கிளம்பும் ஊழியன் அவன்.

வந்து டேபிள் துடைத்து, வாடிக்கையாக சிலருக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு ஹிந்து பேப்பரைப் பிரித்தான் என்றால் வரி விடாமல் படிப்பான். அவன் அப்பாவைப் போலவே. சில நேரம் துவண்டு போய் தூங்கிவிடவும் செய்வான். சோம்பேறித்தனமல்ல. அவன் எடுத்துக் கொள்ளும் மருந்தின் வினை. ‘ஹரி! இது அர்ஜண்ட்டுப்பா. எல்லா செக்‌ஷனிலும் கொடுத்துவிட்டு வருகிறாயா? என்றால் குடுங்க சார்’ என்று உற்சாகமாய்ப் போவதுண்டு பெரும்பாலும்.  ‘எனக்கு முடியலை! வைங்க அப்புறம் போறேன்’ என்று சொல்லும்போது சரி என்று விட்டால் ஐந்தாம் நிமிடம் வந்து கொண்டு போவான். மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியா இருக்கிறோம்? ஒரு சிலருக்கு ஈகோ தலை விரித்தாடும்போது, ’யோவ் சொல்றேன் அர்ஜண்டுன்னு, அப்புறம் போறியா’ என்றால் போச்சு. ஹரி விசுவரூபம் எடுப்பான். அந்தக் கடிதம் அவனால் கொடுக்கப்பட மாட்டாது.

யார் அந்த ஹரி என்று தோன்றுகிறதா? ஐந்தடி மூன்றங்குலம் இருப்பான். கட்டை குட்டையான உருவம். சில நாட்கள் எண்ணை வைத்து அழகாக வாரினாலும் பெரும்பாலும் எண்ணெய் காணாமல் கலைந்து பின்னியிருக்கும் சுருட்டை முடி. வாரம் ஒரு முறையோ பதினைந்து நாட்களில் ஒரு முறையோ, சில நேரம் அடிக்கடியோ மனம்போல மாற்றும் உடை. சற்றே கருப்புதான். கொஞ்சம் அழுக்கான தோற்றம்தான். சற்றே கூன் விழுந்த முதுகு. முற்றிய முகம். உருண்டைக் கண்கள். கட்டுப்பாடின்றி ஈரம் கசியும் உதடுகள். பிதுங்கித் தொங்கும் கீழுதடு. சிரிக்கும் போது அப்படியொரு வெள்ளந்தியான குழந்தைச் சிரிப்பு. பெரும்பாலும் ‘உர்’ என்று உதடு குவித்தபடி கர்ச்சீப்பால் அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளும் மேனரிசம்.

ஆமாம். மாற்றுத் திறனாளி என்று திறனற்ற நாம் பெயர் சூட்டிய ஒரு திறமைசாலி. சம்பந்தமில்ல்லாமல் ஹரியின் அறிமுகத்துடன் ஆஃபீஸ் நேரம் பற்றிய அளப்பு எதற்கு என்கிறீர்களா? ஹரி தினமும் திருப்பத்தூரிலிருந்து வருகிறான். காலை 3.30க்கு கிளம்பி, மாலை அலுவலகம் முடிந்து சரியான நேரத்தில் போனால் சேரும் நேரம் 10.30. அங்கு இறங்கி பஸ் பிடித்து வீட்டிற்குப் போக வேண்டும். அந்த ஒரு வேளை சோறும், கொஞ்ச நேர தூக்கமும் போக வாழ்க்கை முழுதும் ஏலகிரி எக்ஸ்பிரஸில்தான்.

சொந்த ஊர். விலைவாசி பரவாயில்லை. ஹவுசிங் போர்டில் ஒரு சிறிய வீடு கிடைத்தது என்பது தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. முடிவெடுத்தவரும் கூட அவன் தந்தை. இப்படியானவர்களுக்கென்றே சற்றே பொறுப்பான, புத்திசாலி மனைவிமார்களும் படைப்பினால்  உருவாக்கப் படுகிறார்கள். அப்படி ஒரு நல்ல பெண் மனைவியானாள். சூட்டிகையான ஒரே பெண். காலையில் அலுவலகம் வந்ததும், தன் வேலை முடித்து கேண்டீனுக்கு போவதோ, நண்பர்கள் யாராவது கொடுக்கும் டிஃபனோ சாப்பிட்டு தன் இடம் விட்டு நகராமல் இருப்பார்.

மதியம் ஒரு நண்பர் சாப்பாடு சேர்த்து கொண்டுவந்து விடுவார். மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட பொறுமை இராது பெரும்பாலும். மோர் இல்லையா? சரி பரவாயில்லை என்று தன் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். எத்தனையோ உசாராக இருந்தாலும், யாராவது ஒருவர் மதியம் பார்ட்டி அல்லது வேலை என்று தன் சாப்பாட்டைக் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிட்டு விடுவார். சில நேரம் இரண்டு மூன்று அப்படி சாப்பிட்டுவிடுவார். கொடுத்த கொடுமை போறாதென்று செரிப்ரல் பால்சியுடன் காக்காய் வலிப்பும் வந்துவிடும்.

நடக்கும் போதோ, உட்கார்ந்த நிலையிலோ தடாலென விழுந்து நுரை தள்ள வெட்டி வெட்டி இழுத்து மருத்துவ மனைக்கு தள்ளிச் சென்று ஊசி போட்டு ஆசுவாசமாக உயிர் போய் வரும். இது எல்லாருக்கும் உள்ளதுதானே. இவருக்கென்ன இவ்வளவு சிலாகிப்பு என்கிறீர்களா? ஒரு முறை ஒரு உயர் அதிகாரியின் இன்கம்டாக்ஸ் கணக்கை என்னிடம் சரிபார்க்க இவர் மூலம் கொடுத்திருக்கிறார்கள். வரும் வழியில் வந்து சேர்ந்ததது வலிப்பு. வெட்டி இழுத்து நுரைதள்ளி மயங்கிய நிலையிலும் கையில் உள்ள காகிதத்தைப் பறிக்க இயலவில்லை. தண்ணீர் தெளித்து, அரை மயக்க நிலையில் வீல் சேரில் இருந்தபடி ஒரு நண்பரிடம் ‘இதை பாலாஜி சாரிடம் தரணும்’ என்று சொல்லி மயங்கிவிட்டார்.

மருத்துவமனை சென்று, அவசர சிகிச்சை முடித்து, ஆசுவாசமாகி, தள்ளாடியபடி அலுவலகம் வந்ததும் என்ன செய்தார் தெரியுமா? நேரே என்னிடம் வந்து இன்னாரிடம் இவருடைய பேப்பர் கொடுத்தேன். ’கொடுத்துட்டாங்களா சார். ஃபிட்ஸ் வந்துடுத்து சார். நனைஞ்சு போச்சா, சரியா இருக்கா? தேங்க்ஸ் பாலாஜி சார். ஒரே கேரா இருக்கு சார்’ என்று நழுவும் பேண்டை இழுத்து விட்டுக் கொண்டு சென்றவனை எப்படி பாராட்டினால் தகும்.

இப்படியான நாட்கள் தவிர விடுமுறை எடுப்பது அபூர்வம். இப்படி ஒரு ஜீவனை ஏமாற்றவோ பலிகடா ஆக்கவோ இன்னொரு மனிதனால் முடியுமா? அந்தக் கொடுமையும் நடந்தது. மகளின் திருமண நேரம் பார்த்து, அட்வான்ஸும்,  வாடகைப் படியை விட வாடகை அதிகம் தருகிறேன். குவார்ட்டர்ஸ் உன் பேரில் வாங்கிக் கொள் என்று வாங்க வைத்து, வாடகை கேட்டபோதெல்லாம் மிரட்டி, அட்வான்ஸ் பணத்தோடு ஏமாற்றியும் விட்டு, அந்த வீட்டை சட்ட விரோதமான சிலருக்கு மேல் வாடகைக்கு விட்டு, போலீஸ் கேசாகிப் போனது. அரசு வீட்டை சட்ட விரோதப் பயன்பாட்டுக்காக வாடகைக்கு விட்ட பெருங்குற்றமாகி இருக்க வேண்டியது.

ஹரியைப் பார்த்ததுமே ‘இவரையா ஏமாத்தினான் அந்த நாதாரி’ என்று போலீசாரே இரக்கப்படும் அதிசயமும் நிகழ்ந்தது. தெரியாமல் ஏமாறிப்போய் செய்தாலும் தவறு தவறுதானே. நிர்வாக ஒழுங்குச் சட்டத்தில் தண்டனை கிடைத்தாலும் வேலை பிழைத்தது. பெண்ணின் திருமணத்துக்கு முன் மனைவியுடனும், மகளுடனும் என்னிடம் வந்தார்.

என்னால முடியல பாலாஜி சார். மெடிகல் அன்ஃபிட் வாங்கிட்டு மகளுக்கு வேலை வாங்கிடலாம்னு பார்க்கிறேன். யாரோ வாங்கித் தரேன்னு சொன்னாங்க. நீங்க சொல்லுங்க சார் என்று வந்து நின்றார். முழு பென்ஷனும் வராது. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரும் பென்ஷன் சோத்துக்கே சரியாகிவிடும். இப்படி உடல் நிலையை வைத்துக் கொண்டு வயதான காலத்தில் இரயில்வே மருத்துவமனையை நாடி இருத்தல் இயலாத ஒன்று.

மகளுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் அவள் இவரைப் பராமரிக்க வேண்டும் என்பது எப்படிச் சாத்தியம்? சம்பளமும் குறைவு. மெதுவாக எடுத்துச் சொல்லி, அப்படி வேலை வாங்குவது எவ்வளவு சிரமம், பத்தாவது படித்த அந்தக் குழந்தைக்கு எங்கே வேலை கிடைக்குமோ அங்கு போய் குடித்தனம் வைக்கும் யதார்த்தமற்ற நிலமை, அவள் திருமணத்துக்குப் பின்னான நிலமை, வரவிருக்கும் சம்பள கமிஷன்களின் சலுகைகள் என்று எடுத்துச் சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் காலை தேடி வந்து, யோசிச்சேன் சார். வீட்லயும் பேசிட்டேன். நான் வேலைக்கே வரேன் சார். ரொம்ப தேங்க்ஸ் என்று போனார். ஐந்தாம் ஆறாம் சம்பளக் கமிஷன் கடந்துவிட்டது. தினமும் வணக்கம் சொல்வதும், கடிதம் கொடுக்க வரும்போது சவுக்கியமா இருக்கேன் சார். பேத்தி பிறந்திருக்கா சார். கடன் எல்லாம் அடைச்சிட்டேன் சார் என்று சொல்லிவிட்டுப் போவார். தவறாமல் தண்ணீர் பாட்டிலில் பாதி தண்ணீர் இருந்தால், தண்ணி கொண்டு வரேன் சார் என்று கொண்டு கொடுப்பார். வயதான காலத்தில் ஆரோக்கியமாவது அவருக்கு நல்லபடி அமைய வேண்டும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கும்.  

‘வரேன் சார்! மணி 5 ஆயிடுத்து. இதெல்லாம் கொடுக்கணும். எல்லாரும் சீக்ரம் போய்ட்டா பெண்டிங் ஆயிடும்’ என்று ஓடுகிறார் ஹரி. ஆமாம். கொடுத்த வேலை முடித்துவிட வேண்டும் அவருக்கு..
~~~~~

39 comments:

பழமைபேசி said...

இஃகி... பிள்ளையார் சுழி போடத்தான்!

bandhu said...

உங்கள் மகுடத்தில் இன்னொரு ரத்தினம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

//உங்கள் மகுடத்தில் இன்னொரு ரத்தினம்.. //

ஆம், பாலாண்ணா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Bala

Unknown said...

பாலா சார்! இன்று ஒரு நல்ல கேரக்டரை அறிந்து கொண்ட திருப்தி. உங்க கேரக்டர் படைப்புகளே அலாதியானது. நன்று சார்.

க ரா said...

Nice writing bala sir.. Really a great man.. Thanks sir...

கே. பி. ஜனா... said...

A great man! A great portrait!

a said...

நல்லா இருக்கு பாலா சார்...

எல் கே said...

அனைத்து இடங்களிலும் இது போல் ஒருவர் இருக்கின்றனர். புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலா சார்

பழமைபேசி said...

உங்க அனுபவத்துக்கு வணக்கம் பாலாண்ணே... அவருக்குத் தெரியுமா? அவர் இங்க கதாநாயக்ன் அப்படின்னு?

பிரபாகர் said...

பழமையண்ணே கதாநாயகர்களை கேரக்டர் வாயிலாய் அறிமுகப்படுத்தும் என் ஆசான் தான் என்றும் கதாநாயகர்...

மாற்றுத் திறனாளிகள் பற்றி ஆசானின் கருத்து செவிட்டடி.

நிறைவாய் உணரும் கேரக்டர்களில் இவரும் ஒருவர். ஹரி சாரை அறிமுகப்படுத்துங்கள் அய்யா...

பிரபாகர்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா வந்திருக்கு பாலா சார்.. ஒரு நல்ல காரியமும் பண்ணியிருக்கீங்க.. ஹரி நல்லா இருக்கட்டும்.. வாழ்த்துகள்..:-))

settaikkaran said...

எழுத்தின் மூலம் எவரோ ஒருவரின் பிம்பத்தை இறக்கி, உயிர்ப்பித்து உலாவ விடுவதில் ஐயாவுக்கு இணை ஐயாவே! ஹரி, நெஞ்சுக்குள்....!

'பரிவை' சே.குமார் said...

ஒரு நல்ல கேரக்டரை அறிந்து கொண்ட திருப்தி.

மங்குனி அமைச்சர் said...

சார் உண்மையிலேயே படிக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு சார் ,........ புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

இப்படிப் பட்டவர்களுக்கும் வைக்கும் மனைவிகள் குறித்த வரிகள் உண்மை. எனக்கும் அதே போல தோன்றியிருக்கிறது. நல்லதொரு கேரக்டர் அறிமுகம்.

ஸ்ரீராம். said...

மன்னிக்கவும்...'வாய்க்கும் மனைவிகள்' என்பது 'வைக்கும் மனைவிகள்' என்று வந்து விட்டது

பெசொவி said...

இவர்களைப் போலும் சில மனிதர்கள் இருப்பதால்தான் அரசாங்கம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம்!
நல்லதொரு அறிமுகம், பாலா சார், நன்றி!

பவள சங்கரி said...

சின்சியர் கேரக்டர்.......புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

க.பாலாசி said...

என்னா போங்க சார் வாழ்க்கை.. இப்படியான மனுஷால பாக்கும்போதுதான் மனசுக்குள்ள நீ இன்னும் சோம்பேறிதானடான்னு நெனப்பு வருது.. நல்ல மனுஷன், உடல் ஆரோக்கியத்தோட வாழணும்..அவ்ளோத்தான்.

பத்மா said...

ஆஹா தலை வாங்குகிறேன் கடமை உணர்ச்சி உள்ள அவருக்கும்,அவரை இத்தனை உயரத்தில் வைத்த உங்களுக்கும்

ஈரோடு கதிர் said...

வாசிக்கும் போது மனது திக் திக் என அடித்துக் கொண்டே இருந்தது...

கேரக்டர் பகுதிக்கு மிக நல்லதொரு அறிமுகமும் கூட!

ரிஷபன் said...

மீண்டும் நெகிழ வைத்த இன்னொரு கேரக்டர். என்ன ஒரு மனுஷர்.. அவரை எங்களிடம் சேர்த்த உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட்

அகல்விளக்கு said...

நெகிழ்ந்து போகிறது மனது....

இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்களா???

சிவகுமாரன் said...

இது போன்ற மனிதர்களால் தான் நிறைய அலுவலகங்கள் இயங்குகின்றன. நல்ல பகிர்வு. நன்றி.

Unknown said...

எவ்வளவு அருமையான மனிதர்.. அவருக்கும் உங்களுக்கும் என் சல்யூட் ...

காமராஜ் said...

புத்தண்டு வாழ்த்துக்கள் அண்ணா...

சத்ரியன் said...

பாலா அண்ணா,

வெள்ளந்தி மனிதர்களை ஏமாற்றவும் இந்த உலகத்தில் சிலர் இருக்கிறார்கள். என்ன செய்யிறது?


புத்தாண்டு வாழ்த்துகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...

http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html

சமுத்ரா said...

நல்ல பதிவு..

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி.

செ.சரவணக்குமார் said...

இப்போதுதான் படிக்க முடிந்தது. ஹரி சாருக்கு என் வணக்கங்கள்.

பாலா சார் நீங்களே அருமையான‌ கேரக்டரா என் மனசுல நிக்குறீங்க.

அப்புறம் புத்தாண்டெல்லாம் முடிஞ்சிடுச்சிங்கிறதால இனிய பொங்கல் வாழ்த்துகள்.

அன்புடன் நான் said...

வணக்கம் அய்யா.....

நீங்க அறிமுக படுத்தும் ஒவ்வோரு நாயகர்களும் ஒருவிதம்.... அவர்கள் மனதில் நுழைந்து நெருடுகிறார்கள்.... அதி திரு ஹரி.... கூடுதல் கவனத்தை ஈர்க்கிறார்.....

திரு ஹரிக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

வணக்கம் அய்யா.... உங்களுக்கு குடும்பத்தினருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

vinthaimanithan said...

ம்ம்ம்...நடத்துங்க ராஜாங்கத்த!

டக்கால்டி said...

சார்... அருமையான ஆளைப் பற்றிய அருமையான இடுகை சார். ஹரி அவர்களைப் பார்த்தால் என்னைப் போன்ற பலரின் வேண்டுதல்கள் அவரின் பக்கம் இருக்கிறது, கவலைப் பட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

இந்த மாதிரி மனிதர்கள் இப்போது கிடையாது என்றே நம்பி இருந்தேன். மனிதத்தின் மீது மீண்டும் நம்பிக்கை கொடுக்கிறார் ஹரி. நன்றி பாலா சார்.

ஸ்ரீராம். said...

என்ன வழக்கத்துக்கு மாறாக சற்று பெரிய இடைவெளி?

vasu balaji said...

கொஞ்சம் உடல் நிலை சீர்கேடு, கொஞ்சம் வேலை,கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் விருந்தோம்பல், அதனால் கொஞ்சம் அதிகமாகவே கேப்..ஹிஹி..நன்றி அனைவருக்கும்