Tuesday, January 10, 2012

கேரக்டர் : வைத்தி மாமா

வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.

வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.

பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள்.

வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.

பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார்.

‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.

பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று.

வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு.

மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.

அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.

சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.

திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.

Friday, December 30, 2011

ஈரோடு சங்கமம் 2011 - என் பங்குக்கு

ஈரோடு சங்கமம் குறித்து எல்லாரும் பதிவிட்டு விட்டார்கள். நான் பிந்தங்கிப் போனேன். ஆஃபீஸ் ஆணி அதிகமிருந்தது ஒரு பக்கம் என்றாலும், ஓசி பாஸ் இருந்தாலும் எனக்கென்று ரிசர்வ் செய்தால் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த், இல்லாவிட்டால் மூனு இஞ்ச் கேப்பில் மூஞ்சியில் ஏசி அடிக்கும் மேல் பர்த்தான் கிடைக்கும். சுக்கிரன் ஏழில் இருந்து அஞ்சாம் இடத்து சூரியனைப் பார்ப்பானேயாகில் வெயிட்டிங் லிஸ்ட் ஈக்யூ போட்டாலும் கன்ஃபர்ம் ஆகாது. பட்டா பாக்கியம் காலி இருந்தால் ரிஸர்வ் செய்யலாம் என்று போக, போக ஏற்காட்டில் ஏஸியும் வர கோவையில் செகண்ட் சிட்டிங்கும் இருக்க (நான் பார்த்தபோது 55 காலி இடங்கள்)  ஏற்காடு ரிஸர்வ் செய்து கோவைக்கு ரிசர்வ் செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் ரண்டு என்று வந்தது.  ஆனாலும், கிளம்பும் அன்று கன்ஃபர்ம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டேன்.

சொல்லி வைத்தாற்போல் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த் எனக்கே எனக்கு. கொஞ்சம் படித்துவிட்டுத் தூங்கலாம் என்றிருக்க, தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை.

முதல் சங்கமம் முடிந்ததும் ஆடியோவோடு பதிவிட்டது நாந்தான். இந்த முறை பழமைபேசி கேட்டிருந்தும், என்னிடம் ஐஃபோன் இருந்தும் ரிக்கார்ட் செய்யவில்லை. காரணம் பிரபல எழுத்தாளர் பாலாசி. போன முறை பள்ளிபாளையம் கோழி வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றியதோடல்லாமல், ஸ்டேஷனிலிருந்து வரும்போதே பார்த்தேன் என்று கண்டுக்காமல் விட்டதுமில்லாமல் சொல்ல வேறு செய்தார்.  சங்கமம் நடைபெறும் அரங்குக்கு கதிரோடு வந்து சேர்ந்தேன். ங்கொய்யால திருவிழாக் கூட்டத்தில் தொலைத்தாற் போல் கழட்டி விட்டு அரங்க அமைப்பைப் பார்க்கப் போய்விட்டார். ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்து, வாங்க டிஃபன் சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டார். எனக்குப் பசிக்கிறதா என்று கேட்காமல் வாங்க சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டதில் கதிரின் டிஃபனாதிக்கப் பூனைக் குட்டி வெளியே தெரிந்தது.

ஆனாலும், டிஃபனுக்குப் போய் உட்கார்ந்தேன். எனக்குப் போட்ட இலையின் முனை சுருண்டிருந்தது. வலது பக்க ஓரம் வாழைப்பால் கறை வேறு. ஈரோட்டில் வாழைக்கா பஞ்சம்? அடுத்த முறை முதல் நாளே வாழை இலை வாங்கி வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து, இஸ்திரி செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் காலை டிஃபன் சாப்பிடுவதில்லை. ஆனாலும் கதிரின் டிஃபனாதிக்கத்துக்கு அடிபணிந்து, சாப்பிட உட்கார்ந்தால், இட்டிலி, வடை, பொங்கல், பூரி என்று வைத்துக் கொண்டு போனார்கள். போறாததற்கு கதிர் தோசை வைங்க என்று ஆளூமை செலுத்தியபோது பொத்தென்று விரல் கனத்துக்கு ஒரு தோசை விழுந்தது. ஓரம் பிய்த்து சாப்பிட்டு, நடுவில் விரல் வைக்க ரொட்டி மாதிரி அமுங்கியது. ஒரு டவுட்டில் பிரித்துப் பார்த்தால் மஞ்சளாக ஒரு கோட்,. அண்ணே, என்னாதிது என்றால் முட்டை தோசையாம்.

தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். குறையாகச் சொல்லவில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். கலியாணத்தில் அப்பளத்தில் மணமகன் பெயர் மணமகள் பெயர், நன்றி போட்டு வறுத்தெடுக்கிறார்போல் முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம். செய்வார்கள் என்று நம்புகிறேன். சாப்பிட்டு முடித்ததும் திரும்ப கதிர் அரங்குக்குப் போய்விட்டார்.

அரங்கத்தில் கழிப்பறை எந்தப் பக்கம் என்று கண்ணில் படாததால் (நோட் திஸ் ஆல்ஸோ யுவர் அமைப்பாளர்ஸ்) நானே தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று. மணிஜி, வாசு, மயில், இவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு அப்படியே ஓரம்கட்டினால், பிரபல ஃபோட்டோக்ராஃபர், பிட் நாயகன் (ஓய் BIT இல்லை PIT) ஜீவ்ஸ் ஏற்கனவே ஒரு அடிக்கு இருந்த அட்டாச்மெண்டைக் கழட்டி கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மற்ற அட்டேச்மெண்ட் மாற்ற உதவியபோது தெரியவில்லை. யுவர் ஹேண்ட் யுவர் ஐ பாலிசி என்பது. வளைச்சு வளைச்சு என் மண்டையை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். (உசாரா பாத்து சொல்லுங்கப்பு, எங்கயாச்சும் ஃபோட்டோ போட்டில சூரியன் க்ளோஸ் அப் ஷாட்டுனு பரிசு கிடைச்சா பங்கு கேக்கணும்)

சரி இனம் இனத்தோடே சுரக்குடுக்கை ஆத்தோடே என்று தருமி சார் பக்கமாகப் போய் நின்றேன். மாத்தி மாத்தி அய்யா அய்யா என்று யாரோ ஒருவர் வரவும் முந்தின இடுகையில் சொன்னாற்போல் ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப் படுத்திக் கொண்டோம். மெதுவாக மொட்டை வாசு, எம்மின கா.பா என்று வட்டமாக நின்று பேச எங்களை வைத்து லென்ஸ் டெஸ்ட் செய்திருக்கிறார் ஜீவ்ஸ். ஒரு வழியாக அரங்கத்துக்குச் செல்ல, ஐ.டி கார்ட் பொறுப்பாளராக பாலாசி. பயபுள்ளைக்கு ஆளைப்பார்த்தும் கண்டுக்கலையே என்று கார்டில் பேர் எழுதி மாட்டியதும், ‘அல்லோ! புடிங்க கேமரா. இதுலயும் படம் எடுக்கணும்’ என்று உத்தரவாயிற்று. எழுத்தாளர் சொன்ன பிறகு தட்ட முடியுமா? உவர் மோஸ்ட் ஒபிடியண்ட்லி என்று படம் எடுத்துக் கொண்டிருக்க என் மண்டையை யாரையோ விட்டு படமும் எடுத்து பஸ்ஸும் விடுது பயபுள்ள.

நான் வந்து அவ்வளவு நேரமாகியும் முதலாளியின் தரிசனம் கிடைக்கவில்லை. முட்டை தோசை திங்கவா அவ்வளவு தூரம் வந்தோம்? முதலாளி முன்னே நிற்க வேண்டாமா? முதலாளியின் சின்ன மகன் ஒரு டெர்ரரிஸ்ட் என்று தெரியும்தான். ஆனாலும், குரு சுக்கிரனைக் கோணப்பார்வை பார்க்கும் ஜாதகத்தில் பிறந்த ஒருவன் தப்ப முடியுமா? சும்மா ஓடிக்கொண்டிருந்தவரை பிடித்து இழுத்து, என்னைத் தெரியுதா என்றேன். தலையை லேசாக மேலே சாய்த்து, ஆள்காட்டி விரலால் விரலைத்தட்டி ஒரு யோசனை போஸ். கண்ணில் ஒரு மின்னல். “அய்ங். தெரிஞ்சிரிச்சு!!! எங்க வீட்டுக்கு ஏஸி மாட்ட வந்தீங்க! 18ல வச்சிங்கன்னு” அடுக்கடுக்கா அள்ளி விடுது சின்ன ஆரூரரன். ‘அடேங்கப்பா! ஆள விட்றா சாமி’ என்று எஸ்ஸாகி நிற்க நெடு நெடு என்று ஒரு உருவம். ‘வானம்பாடி அண்ணந்தானே, நான் யார் தெரியுதா?’ என்று ஹேண்ட் க்ரனேட் வீசியது.

‘பிட் அடிச்சி மாட்டின பார்வையோடு’ தத்தித் தத்தி சௌம்யன் என்று குத்து மதிப்பாக இழுக்க, ‘அது எங்கண்ணன், நான் அபி அப்பா’ என்று சொன்னார். ‘அட கெரகமே! சப்புனு அப்புனா தலை தனியாப் போறாமாதிரி ஒரு உருவத்த வச்சிக்கிட்டு அப்து அண்ணன், இந்த மனுசன் கொஞ்சம் காத்தடிச்சா, புடிங்க புடிங்கன்னு கத்துறா மாதிரி இருந்துகிட்டு பஸ்ஸுல ப்ளஸ்ஸுல என்னா சவுண்டு?’ன்னு கிறுகிறுன்னு வந்துச்சு. அப்புறம் ஒன்னு ரண்டு தெரிஞ்சவங்க கூட பேசிட்டு, ஒரு ஓரமா உட்கார்ந்தேன்.  என்னை யாருக்கும் தெரியாததாலும், எனக்கும் யாரையும் தெரியாததாலும், மனுசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகப்படாதா? ரயில்ல தூங்காத தூக்கம் தொத்திக்கிச்சி. அடுத்த முறை இப்படித் தூங்குபவர்களை இனம் கண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள வெட் டிஷ்யூ ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அப்புறம் பரிசளிப்பு விழா கைத்தட்டலில் கண் விழித்து, நானும் கைதட்டி, நடுவில் கிடைத்த கேப்பில் தூங்கி, எல்லாப் பந்தியும் கடந்து இனியும் தாமதித்தால் ட்ரெயின் பிடிக்க முடியாது என்ற நிலையில் சாப்பிட்டு, கிளம்ப, திரும்ப கதிரைப் பார்த்தபோது எக்ஸிபிஷனில் காணாமல் போய் போலீஸ் பூத்தில் இருந்த குழந்தை பெற்றோரைப் பார்த்ததுபோல் அழுவாச்சியும் சிரிப்பாச்சியுமாய் இருந்தது. விழா சிறப்பாக நடந்தாலும் சிறு குறைகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் குறைகளும் அடுத்த சங்கமத்தில் இருக்காமல் இருப்பதற்காக அவற்றைக் குறிப்பிடுகிறேன்.:

* கூகிள் ஆர்க்குட், ஹைஃபைவ் உபயோகிப்பாளர்களைச் சேர்க்காமல் விட்டது தவறு.
* என்னதான் வளைச்சு வளைச்சு எழுதினாலும் பின்னூட்டம் இல்லாத இடுகை பாழ் அல்லவா. எனவே பின்னூட்டாளர்களையும் அழைக்க வேண்டும்.
*டிப்பன், சாப்பாடு மெனு கார்ட் மற்றும் முன்கூட்டியே கொடுத்து விட்டால் தேவைக்கேற்ப டிஃபனையோ சாப்பாட்டையோ ஒரு பிடி பிடிக்க வசதியாய் இருக்கும்.
*அடுத்த சங்கமத்துக்கு ஒரு மாதம் முந்தியே அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபோட்டோவோடு வாங்கி தளத்தில் வெளியிட்டு, பக்கத்திலேயே பி.ப,பு.ப,ர.கெ.ப,ட்,ஃப்,ப், என்று அடையாளக் குறியிடுவது புதுமையாக இருக்கும்.
*என்னதான் கவனமெடுத்துச் செய்தாலும் எப்படியோ யாருக்காவது ஒரு குறை இருக்கும் என்பதால் குழுமத்தினர் அனைவரும் ‘குறை இருந்தா மன்னிச்சுக்குங்க, அடுத்த முறை இன்னும் சிறப்பாச் செய்யுறோம்’ அப்படின்னு சொல்றது நல்லாருக்கும். அம்புட்டு தூரம் வந்து காட்டுன விடுதில தூங்கி, அது வேணும் இது வேணும்னு கேக்காம குடுத்தத சாப்பிட்டு, அவிங்க இஷ்டத்துக்கு அமைச்ச நிகழ்ச்சியப் பார்த்து கைதட்றமே. இது கூட செய்யலன்னா எப்புடி?

Monday, December 19, 2011

ஈரோடு சங்கமத் துளிகள்

* நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் வெளியில் நின்றிருக்கும்போது அஃப்கானோ, லிபியாவோ அட்ரஸ் தெரியாமல் வந்துவிட்டாற்போல் ஒரு உணர்வு. ஆளாளுக்கு பஸூகா, போஃபார்ஸ் மாதிரி அரை அடியிலிருந்து ஒன்னரை அடி நீளத்துக்கு அட்டாச்மெண்டுடன் கழுத்தில் காமராவோடு அலைந்தார்கள்.

* கூடிய சீக்கிரம் ஜெய்ஜாக்கி வட்டம் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது மட்டும் வந்துச்சுன்னா ஊர்ல இருக்கிற வட்டம் எல்லாம் சதுரம், முக்கோணம்னு மாறிக்கிறணும். ஜாக்கியின் அதி தீவிர வாசகர் ஒருவர், அவரின் பையைச் சுமப்பதை பாக்கியமாக எண்ணி சுமந்து சிஷ்ய பரம்பரை காத்தது ஆச்சரியம். (இதுக்காகவே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து சீன் போட்ட ஜாக்கியின் குசும்பை வேறு யாரும் நோட் பண்ணாங்களா தெரியலை)

* மணிஜி லிக்விட் ஃபார்மில் குற்றாலமாகவும் சாலிட் ஃபார்மில் அண்டார்ட்டிகாவும் ஆகிவிடுகிறார். வழக்கமான மணிஜி மிஸ்ஸிங்.

*ஈரோடு குழுமத்தினருக்கு எச்சரிக்கை. வருடாவருடம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கறது என்று சாப்பாட்டில் ஏனோதானோவென்று இருந்துவிட முடியாது. டாக்டர் கந்தசாமி சார் இலையில் ஒவ்வொரு ஐட்டமாக பறிமாறிக் கொண்டிருக்க புகைப்படத்தில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

* சற்றேறக் குறைய மூன்று பந்திகள் முடிந்து அடுத்த பந்திக்கு ஆட்கள் சேராத சைக்கிள் கேப்பில் தாமோதர் சந்துருவும், விஸ்வம் சாரும் ருசி பார்க்க உட்கார்ந்தார்கள். சமையலுக்குப் பொறுப்பானவர் போலிருக்கிறது வெள்ளை வேட்டியும் சட்டையுமாக தானே வந்து கறி வகைகளை பரிமாரினார். முதல் துண்டு கறி வாய்க்குப் போனதும் சந்த்ருவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. டைப்ரைட்டிங்கில் நிமிஷத்துக்கு இத்தனை வார்த்தை என்று ஸ்பீட் டெஸ்ட் இருப்பதுபோல் இதற்குமிருந்தால் சந்த்ரு சூப்பர் ஹைஸ்பீட் டெஸ்டில் மெடல் வாங்கியிருப்பார். ஒரு துண்டு கறி வாய்க்குப் போனதும், எம்ப்டியாக ரிட்டர்ன் ஆகாமல் சீராக இன்னோர் அயிட்டம்போல் வாயிலிருந்து இலையில் எலும்பைச் சேர்க்க, கறி காலியாகிக் கொண்டிருந்தது. ம்கும். இதுங்கூட போட்டி போட என்னால ஏலாது என்று விஸ்வம் சாதத்துக்குப் போய்விட்டார்.

*அபி அப்பா அவ்வப்போது குடை சாய்ந்து மணிஜி பக்கம் சரிந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோதும் போதி தருமர் போஸில் நோக்கு வர்மத்தில் இலையை காலி செய்தார் மணிஜி.

*ஒரு நல்ல ரசிகனே நல்ல எழுத்தாளராக முடியும் என்பது ஜெமோலாஜி சாப்பிடும்போது தெரிந்தது. கலந்தோமா அடைத்தோமா வேலையே கிடையாது. தேர்ந்த கலைஞன் போல் சோற்றையும் குழம்பையும் புரட்டிக் கொடுத்து செம்புலப் பெயல் நீர் போல சோற்றில் குழம்பு கலக்க சுருதி சேர்த்து, செல்லமாக ஒரு வாய் கறி கொறித்து, முதல் கவளம் வாயில் போக அப்படி ஒரு ரசிப்பு. (வரப்போற அம்மணி பாவம்)

*புதுசா மாறின வேதக்காரன் போப்பாண்டவருக்கே பைபிள் சொல்றா மாதிரி மயில்ராவணன் குடல்கறி இல்லாத குறையைச் சொல்ல தலைக்கறியோடு குடல்கறி மதியத்தில் ஜோடி சேராது என்ற பரமார்த்த தத்துவத்தோடு பல்பு கொடுத்தார் சந்த்ரு.

*சாப்பிடும்போது முகத்தையும், பரிமாறும் போது இலையையும் பார்த்து பரிமாறணும்னு சொல்லுவாங்க. அகநாழிகைக்கு சாப்பாடு போடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்/வாணிகள். தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் போல முகத்தில் அத்தனை பாவமும் பார்க்கலாம். ஆனந்த விகடனில் சினிமாவுக்கு மார்க் போடுவது போல் வாசு எழுந்திருக்கும்போது முகத்தைப் பார்த்து சாப்பாட்டுக்கு மார்க் போடலாம்.

* சைவப் பந்தியில் ஒரு வன் புணர்ச்சி நடத்தினார்கள் வேலு Gயும் இன்னோருவரும். அதுவரை கோழி படம் தொங்கவிட்டுக் கொண்டு ஆஹா ஓஹோ என்று அலம்பலோடு சாப்பிடும் மனோரமா போல் இருந்திருப்பார் போல் வேலு. மற்றவர் முட்டைப் பணியாரம் கேட்கவும், ‘நண்பேண்டா’ என்று கூவாமல் தானும் வாங்கிக் கொண்டு நிம்மதியாக சாப்பிட விடுகிறதா உலகம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் ’நீங்க சைவமில்ல’ என்று ஒருத்தர் கேட்க ‘முட்டை சாப்பிடுவேன்’ என்ற குரல் கிணத்துற்குள்ளிருந்து வந்தாலும் லேசாக தீய்ந்த வாடை அடித்தது.

* ஆரூரன், கார்த்தி, ஜாஃபர், மேடி ஆகியோரை ‘சாப்பிடல’ என்று அவ்வப்போது யாராவது லந்து கொடுப்பதும், ‘தோ சாப்பிடப் போறோம்’ என்று சொல்லி எஸ்ஸாகும்போது அந்த வெட்கமும் சிரிப்பும் எந்த நடிகையும் திரைப்படத்தில் கொண்டுவந்து விடமுடியாது.

* என்னவோ வெட்டி முறிக்கிறாமாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓட்டிட்டிருந்த கும்பல ஒரு ஓரமா நின்னு நானும் தருமியும் பார்த்துக்கிட்டிருந்தோம். அந்த அலைச்சலுக்கு நடுவேயும் தவறாம யாரோ ஒருத்தர் வந்து மாத்தி மாத்தி ஐயான்னு ஏதோ சொல்ல, ‘இவிங்க வேற எவ்வளவு சொன்னாலும் ஐயா ஐயான்னுகிட்டு’ என்று தன் சோகத்தை இறக்கி வைத்த தருமி சாருக்கு ‘உங்களுக்காவது பரவாயில்லை. என்னைய ஆசான்னு வேற கொல்றாய்ங்க’ என்று ஆற்றுப்படுத்தியபோது. ‘என் இனமடா நீ’ என்ற அர்த்தத்தில் ஓவியமாய் ஒரு புன்னகை சிந்தினார்.

* முதல்வருக்கு மனு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். வளைத்து வளைத்து பிடித்து கேஸ் போட்டும் நில அபகரிப்புக் கூட்டமொன்று பதிவராகவோ/ட்வீட்டராகவோ/ஃபேஸ்புக் பயனாளராகவோ வளைய வருகிறது. குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது