Friday, October 16, 2009

காய்த்த மரத்தில் கல்லடி!

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவருக்கும் நெருக்கமாகவும் இரண்டு தினங்களாக வெறுப்போடும் சித்தரிக்கப்படும் ஒருவர். சில பல பத்திரிகைகள், இடுகைகள், பின்னூட்டங்களில் படித்தபோது நியாயமோ இல்லையோ ஒரு சின்ன ஆதங்கத்தின் வெளிப்பாடு பகிர்ந்து பகிர்ந்து, இந்தியனா, தமிழனா என்பதையும் தாண்டி ஜாதி வரை போய்விட்டது வருந்தக்கூடிய விடயம்.

இதில் கூட‌ பார‌ப‌ட்ச‌ம‌ற்ற‌ த‌ன்மையைக் காண முடிய‌வில்லை.மூன்று வ‌ய‌திலேயே நான் குஜ‌ராத் சென்றுவிட்டேன். பின்னெப்ப‌டி கோவிந்த‌ராஜ‌ன் போன்றோர் நான் அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌டித்தேன் என‌க் கூற‌முடியும் என்ற‌ அவ‌ரின் வ‌ருத்த‌ம் எவ‌ராலும் க‌ண்டுக் கொள்ள‌ப் ப‌ட‌வேயில்லை. அண்ணாம‌லைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் இது குறித்து ம‌றுத்தோ ஆமோதித்தோ அறிக்கை விட்ட‌தாக‌ நான் எங்கும் பார்க்க‌வில்லை.

இத்துணை வெறுப்புக்கு கார‌ண‌ம், திரு வெங்க‌ட்ராம‌ன், தன்னைப் பாராட்டி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் குறித்துக் கூறிய க‌ருத்தும், த‌ன‌க்கு மிக‌ப் பிடித்த‌மான‌ ப‌ணிபுரியும் சூழ‌ல் உள்ள‌ ஆக்ஸ்ஃபோர்ட் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தைத் த‌விர்த்த‌ வேறோர் இட‌த்தை த‌ன்னால் க‌ற்ப‌னை செய்து கூட‌ பார்க்க‌ முடியாது என‌க் கூறியதும்தான். பார்க்க‌ப் போனால் இது குறித்து நாம் க‌ருத்துக் கூறுவ‌து கூட‌ அவ‌ர‌து த‌னிமையில் நாம் செய்யும் அத்துமீற‌ல் என‌க் க‌ருதுகிறேன்.

உதார‌ண‌த்துக்கு பதிவுலகை எடுத்துக் கொள்ளுங்க‌ள். தின‌மும் சில‌ நூறு பேர்க‌ளாவ‌து வ‌ருகிறார்க‌ள். ஒன்றோ இர‌ண்டோ இடுகைக‌ள் ப‌டிக்கிறார்க‌ள். அது ஒரு நாளோ, அல்ல‌து சில‌ நாட்க‌ளோ, அத்த‌னை பேரும் பாராட்டியோ எதிர்த்தோ பின்னூட்ட‌ம், மின்ன‌ஞ்ச‌ல் என‌ க‌ருத்துத் தெரிவிப்பார்க‌ளானால், அத்த‌னையையும் ப‌டிக்க‌வில்லை, ப‌தில‌ளிக்க‌வில்லை. என‌வே அவருக்கு த‌லைக்க‌ன‌ம் என்ற‌ தீர்மான‌த்துக்கு வ‌ருவோமேயானால் அது எவ்வ‌ள‌வு த‌வ‌று.

உங்க‌ள் குழ‌ந்தை மாநில‌த்தில் ப்ள‌ஸ் டூவில் முத‌லாவ‌தாக‌ வ‌ந்திருக்கிற‌து என‌ வைத்துக் கொள்ளுவோம். முத‌லில் எங்க‌ள் ப‌ள்ளி என‌ ஆர‌ம்பித்து, எங்க‌ள் வீதி, எங்க‌ள் ஊர், எங்க‌ள் அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ரின் குழ‌ந்தை என‌ அனைவ‌ரும் பாராட்டியே தீருவேன் என‌ உங்க‌ள் வீட்டில் வ‌ந்து அடைகிறார்க‌ள். ஒரு புற‌ம் நிருப‌ர்க‌ள். இவையெல்லாம் தாண்டி ஒரு தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. உங்க‌ள் பெற்றோர் செய்தி கேட்டு வ‌ந்திருக்கிறார்க‌ள். உள்ளே வ‌ர‌ முடியாம‌ல் அவ்வ‌ள‌வு நெரிச‌ல்.

என்ன‌ செய்வீர்கள்? எல்லாரும் போன‌ பிற‌கு வாருங்க‌ள் என்பீர்க‌ளா? கொஞ்ச‌ம் வ‌ழி விடுங்க‌ள் என் பெற்றோர் வ‌ந்திருக்கிறார்க‌ள் என‌க் கேட்க‌லாம். ச‌ரியென்று வ‌ழிவிட்டால் ப‌ர‌வாயில்லை. நாங்க‌ளும் பாராட்ட‌த்தானே வ‌ந்தோம் என்றால் உங்க‌ள் எதிர்வினை எப்ப‌டி இருக்கும்? ஒரு க‌ட்ட‌த்தில் இனி முடியாது, நாளை பார்க்க‌லாம் என‌க் க‌த‌வ‌டைத்தால் அத‌ன் பெய‌ர் திமிரா?

நேற்று க‌திரின் இடுகையில் அவ‌ர் தாத்தா கேட்ட‌து போல் (அவ‌ருக்கு உரிமை இருந்தாலும்) கதிர் விவ‌சாய‌ம் செய்ய‌ப் போவதில்லை என‌ ஒரு நிலைப்பாடு எடுப்பாரேயானால் அது குறித்த‌ விம‌ரிச‌ன‌ம் செய்ய‌ யாருக்கு உரிமை இருக்கிற‌து? அத‌னால் அவ‌ர்க‌ள் ஊரில் விவ‌சாயிக‌ள் சேர்ந்து க‌ண்ட‌ன‌ம் தெரிவிப்பார்க‌ளேயானால் என்ன‌ நியாய‌ம் இருக்கிற‌து?

இதில் ந‌ம் த‌வ‌று எதுவுமே இல்லையா? ஒரு க‌டையில் துணி எடுக்க‌ப் போகிறோம். ப‌ண‌ம் செலுத்துகையில் ஒரு ப‌டிவ‌த்தை நீட்டுகிறான். உங்க‌ள் குடும்ப‌ விப‌ர‌ம், முக‌வ‌ரி, கைபேசி எண், அலுவ‌ல‌க‌ முக‌வ‌ரி, மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, அனைவ‌ர‌து பிற‌ந்த‌ நாள் த‌க‌வ‌ல் அத்த‌னையும் கேட்டிருக்கிற‌து அதில். வாய் பேசாம‌ல்   ச‌ந்தோச‌மாக‌ நிர‌ப்புவோம்.

ஒரு சில‌ர் எத‌ற்கு இது என‌க் கேட்டால் ஒரு கார்ட் த‌ருவோம். நீங்க‌ ள் வாங்கும்போதெல்லாம் 1 ச‌த‌வீத‌ம் த‌ள்ளுப‌டி என்றால் போதும். ம‌று பேச்சே இல்லாம‌ல் நிர‌ப்புவோம். ஆனால், க‌ட‌ன் அட்டை எண் உட்ப‌ட‌ ந‌ம் சொந்த‌த் த‌க‌வ‌ல் அத்த‌னையும் யாரோ ஒருவ‌னிட‌ம் என்பதை உணருவதில்லை.

தெரியாத‌ ஒருவ‌ன் ந‌ம் வீட்டு முக‌வ‌ரி கேட்டால் த‌ருவோமா? ஆனால், ப‌ஸ்ஸிலோ ர‌யிலிலோ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி, கைபேசி எண் எதுவானாலும் க‌வ‌லையே இன்றி சொல்லுவோம். வீட்டு முக‌வ‌ரி மாதிரி இதுவும் மிக‌த் தேவைப்ப‌ட்டால் ம‌ட்டுமே, தேவைப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமேயான‌து என்ப‌தை ஏன் நாம் உண‌ருவ‌தில்லை? என‌க்கு ஒரு முக‌வ‌ரி தெரியுமென்ப‌தாலேயே மின்ன‌ஞ்ச‌ல் செய்துவிட்டு அந்த‌ ஆள் எத‌ற்காக‌ என‌க்கு மின்ன‌ஞ்ச‌ல் செய்தீர்க‌ள் என‌க் கேட்பாரேயானால் கோபிப்ப‌து நியாய‌மா?

ராஜீவ் காந்தி காலத்தில் அயல்நாட்டில் பணி புரியும் விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப வேண்டும். எல்லா வசதிகளும் தரப்படும் என்பதை நம்பி வந்து,  விட்டால் போதும் என ஓடியவர்கள் எத்தனை பேர்?

நம் வீட்டுப் பிள்ளையை எங்கோ தொலைத்து விட்டோம். யாரோ ஒருவர் எடுத்து வளர்த்து படிக்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து அந்தப் பிள்ளை ஒரு சாதனை செய்கையில் அதுவரை கவலையே படாத, அல்லது காணோம் என நினைத்து அழுதது தவிர வேறெதுவும் செய்யாத நாம், இப்போது போய் என் பிள்ளை நீ, எங்களோடு தான் இருக்க வேண்டும், மாட்டேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்பது நியாயமா?

அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது குறித்து வெங்கட்ராமனின் விரிவான விளக்கம். இப்போது என்ன சொல்லப் போகிறோம்? வழக்கம்போல தலைகுனிய வேண்டியதுதான்.

Thursday, October 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.0



ஒன்னொன்னு மூஞ்சிலயும் பாரு எவ்வளவு சோகம். பரதேசிங்க. இழவு வீட்ல கலியாணம் பேச போனா மாதிரி இருக்கு.


வரது மழைக்காலமாம். ஒரே சேறா இருக்குமாமே. சேத்துக் கால்வாய் திட்டம்னு அண்ணண்ட சொல்லி அதுக்கு என்ன மந்திரியா போடுங்கப்பா. கை அரிக்குது.



உங்கள எல்லாம் பார்த்தப்புறம் நான் என்ன வேணா பண்ணலாம், ஒருத்தனும் ஒன்னும் கேக்க முடியாதுன்னு பூரிச்சி போவுது. 



அதே மூஞ்சிங்க! என்னாமா சீன் போடுதுங்க எழவுக்கு போய்ட்டு வந்தா மாதிரி!

கலைஞர்: அவனுக்கு போத்துனா மாதிரி ஒரு நாளாவது சிரிச்சிகிட்டு எனக்கு போர்த்துனீங்களா? சரி சரி. இலங்கைக்கு தூதனுப்பிய இனமானக் காவலர் விருதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. டேன்ஸ் முக்கியம்.



மக்களுக்கு குடிநீர் இல்லை; மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் கண்டோம்: இந்திய தூதுக்குழு முதல்வரிடம் அறிக்கை

பாருங்க. செட்டப்புலயே இவ்வளவு தெரியுதே. இன்னும் மிச்சமிருக்கிறது எவ்வளவு இருக்கும்..
____________________________________________________________________________________________
பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

மாவீரர் நாள்ள வருவாருன்னு நெடுமாறன் ஐயா சொன்னாரே. அதானா? ஜனங்கள ஏமாத்தலாம். கோர்ட்ட கூமாங்குன்னு நினைச்சா குவாட்டரோச்சி கேசும் திரும்ப தொறக்க வேண்டி வருமேன்னு உசாராய்ட்டாங்க போல.
____________________________________________________________________________________________

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தன் மூலமே யுத்த வெற்றி ஈட்டப்பட்டது: சரத் பொன்சேகா

ஆமாம். டைர‌க்ட் டீலிங்ல‌ ஊழ‌ல் எப்புடி வ‌ரும். அப்ப‌டின்னா நீ புடிங்கின‌தால‌ன்னு ப‌த‌வி உய‌ர்வெல்லாம் எதுக்கு குடுத்தானுவ‌?
____________________________________________________________________________________________

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மன்றாட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்: முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை: திருமா

தெரியாம‌தான் கேக்குறேன். அவ‌ங்க‌ளுக்கு திருப்திக‌ர‌மா இல்லையான்னு முடிவு செய்ய‌ நீங்க‌ யாரு?
____________________________________________________________________________________________

இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர்: மு. கருணாநிதி

ஹ‌ய்ய்ய்ய்யோ. ஹ‌ய்ய்ய்ய்யோ. இதெல்லாம் ந‌ம்ப‌ப்போறாங்க‌ளான்னு கூசாம‌ எப்பிடி ஐய்யா பேசுறீங்க‌.
____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றது பிரித்தானியா

கேளுங்க‌ கேளுங்க‌ கேட்டுகிட்டே இருங்க‌. துட்ட‌ குடுக்குற‌வ‌ன் கேட்ட‌ கேள்விக்கே ப‌தில் சொல்லாம‌ போயாங்குறான். இவ‌ருக்கு ப‌தில் சொல்லிட்டுதான் ம‌று வேலை.
____________________________________________________________________________________________

இலங்கை தமிழர்கள் அவதிப்பட வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார்: கலைஞர்

அவ‌ங்க‌ என்ன‌ விரும்புறாங்க‌ன்னு அவ‌ங்க‌ சொல்லுவாங்க‌. நீங்க‌ என்ன‌ விரும்பினீங்க‌ன்னு சொல்லுங்க‌ய்யா.
____________________________________________________________________________________________

ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்



சிரிச்சிகிட்டே செருப்பால அடிப்பேன்னா நகைச்சுவையா. உங்க முகத்தப் பார்த்தா கிலியடிச்சி போய் இருக்கே.
____________________________________________________________________________________________

முகாம்களில் இருந்து 58 ஆயிரம் பேர் வெளியேற்றம்: எங்களுடைய பயணத்தால் கிடைத்த வெற்றி: திருமா

ஏங்க‌? நீங்க‌ அப்பாவியா? இல்ல‌ அட‌ப்பாவியா?
____________________________________________________________________________________________

இலங்கை முகாம்களில் தமிழர்கள் குறைபாட்டோடு தான் இருக்கிறார்கள்: கலைஞர்

ஆமாங்க. எல்லாம் கிடைக்குதாம். நல்லா இருக்காங்களாம். இலவச தொலைக்காட்சி பெட்டில கலைஞர் டிவி பார்க்கமுடியாதது தான் பெரும் குறையாமுங்க.
____________________________________________________________________________________________

ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்லாதது ஏன்?: ஜெயலலிதாவுக்கு தங்கபாலு கேள்வி

நிஜம்மா சொல்லுங்க டங்குவாலு. நல்லகாலம் நான் ஜெயிக்கல. இல்லன்னா நீயேன் போகலன்னு டரியலாக்கி இருப்பாங்கன்னு குசியாதானே இப்புடி கேக்குறீங்க?
____________________________________________________________________________________________

தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் அதிக சரக்குகள்

அது முக்கியம். கட்டிங் வரவேணாமா?
____________________________________________________________________________________________

மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை புரட்டிப் பார்த்த ஜெயலலிதா: கலைஞர்

இதென்னாங்க அனியாயம். ரெண்டுபேரும் ஒரே மாதிரியாச்சா. பெல்டக் குடுத்துட்டாரோன்னு பார்த்திருப்பாங்க.
____________________________________________________________________________________________

தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்

அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?
____________________________________________________________________________________________


Wednesday, October 14, 2009

பெற்றால் மட்டும் பிள்ளையா?

தத்தெடுப்பது குறித்த எனது போன இடுகையில் இது சம்பந்தமான சட்ட விதிகளைப் படித்த போது ஒரு வார்த்தை மிகவும் உறுத்தியது. அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட காலக் கட்டத்தில் வேண்டுமானால் அந்த வார்த்தை சட்டப்படி சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தமோ, அதன் வலியோ உணரப்படவில்லை எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை 'சட்டத்திற்குப் புறம்பாக' பிறந்த குழந்தை என்பதாகும் (Illegitimate child).

அப்ப‌டியானால் ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் யார் என‌ப் பார்த்தால் திரும‌ண‌மான‌ ஒரு த‌ம்ப‌திய‌ருக்குப் பிற‌ந்த‌ குழ‌ந்தை அவ்வாறு அழைக்க‌ப் ப‌டுகிற‌து. பிற‌ப்புச் சான்றித‌ழ் பெறுவ‌த‌ற்கான‌ ப‌டிவ‌த்தைப் பார்த்திருப்பீர்க‌ள். குழ‌ந்தையின் பெய‌ர், தாயின் பெய‌ர், த‌ந்தையின் பெய‌ர் என்று இருக்குமே த‌விர‌ திரும‌ண‌மான‌வ‌ரா?, அத‌ற்குரிய‌ அத்தாட்சி இருக்கிற‌தா என்று யார் செய்த‌ புண்ணிய‌மோ கேட்காம‌ல் விட்டார்க‌ள்.

அடுத்த‌தாக‌ ப‌ள்ளியில் சேர்க்கையில் அந்த‌ப் ப‌டிவ‌த்திலும் த‌ந்தை பெய‌ர், தாயின் பெய‌ர் என்றிருக்குமே த‌விர‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ பிள்ளையா? ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ பிள்ளையா என‌க் கேட்க‌ப் ப‌டுவ‌தில்லை. உத்தியோக‌ம், இன்சூர‌ன்ஸ் இன்னும் என்ன‌வெல்லாம் இருக்கிற‌தோ எங்குமே ச‌ட்ட‌ப்ப‌டியான‌/அற்ற‌ குழ‌ந்தையா என்ற‌ கேள்வியே எழும்புவ‌தில்லை.

இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ள் பார்ப்போம்:

1. 'அ'வும் 'ஆ'வும் காத‌ல‌ர்க‌ள். திரும‌ண‌ம் செய்துக் கொள்வ‌து என்ற‌ தீர்மான‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள். வரம்பு மீறிய ஒரு நாளில் 'அ'வின் வீட்டில் தெரிய‌வ‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ 'இ'யுட‌ன் திரும‌ண‌ம் ந‌ட‌த்தி வைக்க‌ப்படுகிற‌து. அந்த‌ உற‌வினால் 'அ'க‌ருவுற்றிருப்ப‌து ம‌றைக்க‌ப்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக்கு தாய் 'அ' என‌வும் த‌ந்தை 'இ' என‌வும் ப‌திவாகிற‌து.

2. 'A'யும் 'B'யும் திரும‌ண‌ம் என்ற‌ ஓர் உற‌வு அவ‌சிய‌மில்லை என்ற‌ க‌ருத்துடைய‌வ‌ர்க‌ள். சேர்ந்து வாழ்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு 'C' என்ற‌ ஒரு குழ‌ந்தை இருக்கிற‌து. தாய் 'A ' என‌வும் த‌ந்தை 'B' என‌வும் ப‌திவாகிற‌து.

ச‌முதாய‌த்தின் க‌ண்ணில் முத‌ல் உதார‌ண‌த்தில் பிற‌ந்த‌ குழ‌ந்தை ச‌ரியான‌து. இர‌ண்டாவ‌து பிற‌ந்த‌ குழ‌ந்தை முறைய‌ற்ற‌ உற‌வில் பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ க‌ருத‌ப்ப‌டும். பிற‌கு ச‌ட்ட‌ப்ப‌டி என்ற‌ கேள்வி எப்போது எழுகிற‌து?

உதார‌ண‌த்துக்கு 'இ' த‌ன் சுய‌ ச‌ம்பாத்திய‌த்தில் உண்டாக்கிய‌ சொத்து அவ‌ருக்குப் பின் யாருக்குச் சேரும் என‌க் குறிப்பிடாத‌ ப‌ட்ச‌த்தில் ஏதாவ‌து வில்ல‌ங்க‌ம் ஏற்ப‌டின் நீதிம‌ன்ற‌த்தை நாடி ச‌ட்ட‌பூர்வ‌மான‌ பிள்ளை என‌ நிரூபிக்க‌ தாயும் த‌ந்தையும் திரும‌ண‌ம் செய்த‌ ஆதார‌ம், த‌ன்னுடைய‌ பிற‌ப்புச் சான்றித‌ழ் ஆகிய‌வ‌ற்றைக் காட்டினால் போதும்.

'அ' ம‌ற்றும் 'ஆ'வின் உற‌வை அறிந்த‌வ‌ர்க‌ள் எவ‌ரேனும், 'ஆ' உயிருட‌னிருக்கும் ப‌ட்ச‌த்தில் நீதிம‌ன்றத்தில் எதிர் முறையீடு செய்து, ம‌ர‌ப‌ணு சோத‌னை செய்ய‌ப்ப‌டல் வேண்டும் என‌க் கோரினாலே ஒழிய‌ ச‌ட்ட‌த்தின் முன்னும் ச‌ட்ட‌ப்ப‌டியான‌ குழ‌ந்தைதான்.

இர‌ண்டாவ‌து உதார‌ண‌த்தில், சமூகத்தின் பார்வையில் திரும‌ண‌ உற‌வில்லாம‌ல் பிற‌ந்த‌ குழ‌ந்தையாத‌லால் தாயும் தந்தையும் ஒப்புக் கொண்டாலும், விஞ்ஞான பூர்வ‌மாக‌, 'B'யின் குழ‌ந்தை என‌ நிரூபிக்க‌ முடிந்தாலும் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும்.

முத‌ல் உதார‌ண‌த்தில் திரும‌ண‌ம் செய்யாவிடினும், எதிர்க்கப் பட்டாலே ஒழிய‌ த‌க‌ப்ப‌ன் 'ஆ' என்று ஒத்துக் கொள்ளும் ச‌ட்ட‌ம், இர‌ண்டாவ‌தில் எதிர்ப்பில்லாவிடினும் ம‌றுப்ப‌து எப்படி? திரும‌ண‌ம் என்ற‌ உற‌வு தான் கார‌ண‌மா? அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும் பரவாயில்லையா? அப்ப‌டியாயின் ச‌ட்ட‌ப் பிற‌ழ்வு நேராம‌லிருக்க‌ என்ன‌ ச‌ட்ட‌மிருக்கிற‌து?

எனவே சொத்து குறித்த அல்லது தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தேவையில் தந்தை யார் என நிரூபிக்க முடியாத கால கட்டத்தில் சமுதாயச் சீர் கேட்டைத் தடுக்கத்தான் திருமணம் என்பது முக்கியமாகக் கருதப்பட்டதா?

ஒரு கால கட்டத்தில் தாய் யார் என்பதிலாவது குழப்பமில்லாமல் இருந்தது. இப்போதோ மருத்துவ மனையிலேயே குழந்தைத் திருட்டும் தாய் யார் என்பதை நிரூபிக்க நீதி மன்றத்தை நாடும் நிலை உண்டாகிவிட்டதே. இந்நிலையில் திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகவே அமைகிறது. மேலும், சட்டப் பிறழ்வை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன் படுகிறது.

இந்த நிலையில் விஞ்ஞான பூர்வமாகவே குழந்தையின் தாய் தந்தை யார் என்பது ஏற்றுக் கொள்ளப் படும்.இனி பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் பிற‌ந்த‌வுட‌ன் ம‌ர‌ப‌ணுப் ப‌ரிசோத‌னை மூல‌மே ச‌ட்ட‌ப்ப‌டி பிற‌ந்த‌ குழ‌ந்தையாக‌ ப‌திய‌ப்பட வேண்டும் என‌ச் ச‌ட்ட‌ம் வ‌ர‌ ச‌முதாய‌மோ, ச‌ட்ட‌மிய‌ற்றும் அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளோ முன் வ‌ருவார்க‌ள் என்றா நினைக்கிறீர்க‌ள்?

சமுதாய‌க் க‌ட்ட‌மைப்பு குருடா? ச‌ட்ட‌ம் குருடா?