Saturday, September 12, 2009

தொலைந்து போனவர்கள் - 4

பாண்டி பஜார் வளையல் கடையில் வளையல் வாங்கப் போனேன். மச்சான் இது எவ்வளவு என்று  கடை ஆள் குரல் கொடுக்க உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்து என்ன போட்டிருக்கு என்கிறது. ’ருங்டுக்’ என்கிறான் இவன். மொழி பெயர்த்து டஜன் 65 ரூபாய் என்றான். போன முறை ஐம்பதுக்கு தந்தாய் என்றேன். திரும்ப மச்சான் ’குர்டு’ ங்கிறாங்க என்கிறான். அந்தாளு அது ’துன்சி ’ என்கிறார். இவனும் இதும் ’துன்சி’ தான் ’சுரிபெ’ இல்லை என்றான். சரி கொடு என்றதும், மெதுவாய் சிரித்து என்ன பாஷை இது என்றேன். மலாயா தமிழ் சார் என்றான். கண்ணா, 20 வருசம் முன்னாடியே நாமளும் பேசின பாஷை தான். சுரிபெ என்றால் பெரிசு, துன்சி என்றால் சின்னது என்று. நானும் தலைகீழாய் நின்று பார்த்து விட்டேன், நம்பர் மட்டும் புரியுதில்லை. டுங் என்று ரெண்டு எழுத்து போட்டு 1300 ரூபாய் என்று எப்படி மொழி பெயர்க்கிறீர்கள் என்றேன்.  விவரமான ஆளுங்க சார் நீங்க என்ற பாராட்டோடு கேனையனாய் வெளியே வந்தேன். மண்டைக்கு மேல் சுருள் சுருளாக. அட முடி இல்லைங்க. ஃப்ளாஷ்பேக்.

ஏழாவது வகுப்புப் படிக்கும்போது என் கணக்கு நோட்டை வாங்கிக் கொண்டு சென்ற என் வகுப்பு மாணவி இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. வீட்டுப் பாடம் சேர்ந்து விட, வாங்கப் போனபோது எப்பொழுதுமில்லாமல் அவள் அம்மா மறித்துக் கேட்டார்கள். என் கணக்கு நோட்டு வாங்கிக் கொண்டு வந்திச்சி. வீட்டுப் பாடம் எழுதணும். பள்ளிக்கு வரவில்லை அதனால் வாங்கிக் கொண்டு போக வந்தேன் என்றேன். உள்ளே கூட அழைக்காமல், கடவடைத்து பிறகு தானே கொண்டு வந்து தந்தார்கள். உர்ரென வந்து அம்மாவிடம் புலம்பிய போது சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவள் பெரிய மனுஷி ஆயிட்டா. நீ அங்க போகக் கூடாதென்று.

டேய் மூக்கா. ப்ளீஸ் அப்பா வந்துடுவாங்கடா. தம்பியக் காணோம். ஓடிப்போய் தேங்காய் சில்லு வாங்கிட்டு வாடா. சமையல் முடியலன்னா தட்டு பறக்கும் என்பாள் கௌரி அக்கா. வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் தேங்க்ஸ்டா மூக்கா என்று மூக்கைத் திருகுவாள் அலற அலற.  திருமணமாகி முதல் முறை வந்த போது பார்த்தும் பாராமல், எப்படி இருக்கிறாய் என்ற போது யாரோவானாள்.

தயிர்க்காரன், பால்காரனென்று வீதியில் பேரம் பேசி வாங்கும் பக்கத்து வீட்டு மாமி, மாமாவின் நண்பரோ வெளியாட்களோ வந்தால், கதவு மறைவில் நின்று பதில் சொல்லும்.  எட்டு மணிக்கு சாப்பிட்ட ஃபாரக்ஸ் உதட்டைச் சப்பிக்கொண்டு அழகாய்ச் சிரிக்கும் குழந்தை கூட தூக்கப் போனால் அலறும். கண்ணகியின் மறு வாரிசென புளகித்துப்போய் ஆம்பிளப் பசங்கள பார்த்தா அழுவான்னு அலட்டும் அவள் அம்மா.

ஒடிசலான உருவம். வெயிலில் அலைந்து அலைந்து கருத்துச் சுருங்கிய சருமம். தலையில் முண்டாசு. வெள்ளைக் காடாக்குள் வைத்துக் கட்டி ஒரு தோளில் தொங்கும் பாரம். இரண்டடிக்கு இரண்டடியில் பிடி வைத்த ஒரு மரப்பெட்டி மறுகையில். வாலிபத்தில் கால் வைத்து மீசை வரைந்தாற்போல் பேரனும் இதே கோலத்தில். அடிக்கிற வெயிலில் அலைந்து, சலித்து “தல்லி! ஸல்லகா மஞ்சி நீள்ளு ஈ ரா” என்ற குரல் வந்ததும் அத்தனை தடையும் உடைத்து பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்தான் வளையல் தாத்தாவும் அவர் பேரனும்.

தண்ணீர் குடித்து, முகம் கழுவி, முண்டாசு பிரித்து உதறி துணி மூட்டை அவிழ்ப்பார். அவசரமின்றி மொத்தம் எடுத்து அடுக்குவார் கட்டி வந்த துணியில். அவரவர் விருப்பத்துக்கு வளையல் காட்டுவார். கண் பார்வையிலேயே இது சின்னதும்மா. உன் கைக்கு சரி வராது. இது பெரிசு. வேற பாரு என்பார். பேரனும் கடை திறந்து வைத்திருப்பான். தலை வெளுத்தவரெல்லாம் அவ்வா, மற்றவரெல்லாம் அக்கா. விரல் குவித்துப் பிடித்து வளையல் சொருகி பெரும்பாலும் சரியாக இருக்கும். சிலருக்கு ’சவக்காரம் தே ரா’ என்று, கையை நனைத்து சோப்பைக் குழைத்துப் பூசி வளையல் போடுவார்.சிலருக்கு வெறும் கையில் வைத்துப் பிடித்து விட்டு சொடுக்கெடுத்து போடுவார்கள். சிலருக்கு ”நூன”( எண்ணெய்) என்று மஸாஜ் செய்து போடும்போது என்ன மாயமோ, விறைத்திருந்த கை நெகிழ்ந்து தடையின்றி வளையல் ஏறும். பெரிய மனுஷியான வகுப்புப் பெண், புது மணப்பெண் கௌரியக்கா, கதவுக்குப் பின்னால் ஒளியும் மாமி என எல்லாரும் தயக்கமின்றி  கை நீட்டுவார்கள்.

ஒன்றொன்றாய் அவரவர் வாங்க, மதியம் வந்துவிடும். தவறாமல் லட்சுமிப் பாட்டி சாதம் பிசைந்து, பலா இலை கழுவி எடுத்துக் கொண்டு மெதுவாய் வரும். நிதானமாய் உண்டு முடித்து “தேவுடு நின்னு சல்லகா சூஸ்தாடம்மா” என்கையில் கண்கள் பனிக்கும். ஒருவரும் பேரம் பேசி நான் பார்த்தில்லை.  வீதி முழுதுமே அங்கு வந்து விடுவார்கள். ஏக்கமாய் பார்க்கும் வேலை செய்யும் சிறுமிகளுக்கும் சும்மாவே 2 வளையலாவது போட்டு விடுவார் தாத்தா. வியாபாரம் முடிந்ததும், கலியாணம், சீமந்தம், வளைகாப்பு என்று விசேஷமிருப்பவர்கள் வெற்றிலை பாக்கில் பத்திரிகை வைத்து அழைப்பார்கள். நல்ல டிசைனில் கொண்டு வர வேண்டும். இத்தனை பேர் வருவார்கள். எல்லா அளவிலும் கொண்டு வர வேண்டுமென்று கேட்பார்கள். இவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள்.

வளையல் அடுக்கி காசு வாங்கியதும், ஒரு தட்டு வாங்கி, பைக்குள் கசங்கிய வெற்றிலை பாக்கில் காசு வைத்து ஆசிர்வாதம் செய்வார். அதும், வளைகாப்பில் பெண்கள் காலில் விழுமுன்னரே பதறி பாதியில் தடுத்து ‘ஒத்துரா சிட்டி தல்லி’ என்று உச்சி முகரும்போது அங்கே வியாபாரி இல்லை, ஜாதி இல்லை, பொருளாதார ஏற்றத் தாழ்வில்லை . நேசம் நேசம் நேசம் மட்டுமே. ஆண்களைக் கண்டால் அழும் குட்டிப் பெண் கூட மடியில் அமர்ந்து முகம் பார்த்து வளையல் போட்டுக் கொள்ளும்.

பிற்பாடு எங்கோ படித்தேன். கி.ரா. என்று கவனம். இந்தத் தொழிலுக்கு வருமுன்னர் தொழில் கற்றுக் கொடுக்கும் முதியவருடன் (தந்தை அல்லது பாட்டன்) குல சாமி கோவிலில் சத்தியம் செய்வார்களாம். நான் மணக்கும் பெண்ணைத் தவிர அனைவரையும் தாயாய், சகோதரியாய் நினைப்பேன் என்று.  அதனால் தானோ அத்தனை பெண்களும் கூச்சமின்றி கை பிடிக்க விட்டு வளையல் போட அனுமதித்தார்கள்? இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.

Friday, September 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.3

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்

ஃபெய்ன், பாய்ல்லாம் முன் வைத்ததை முதல்ல பார்த்துட்டு வருவாங்கப்பு. சரிதானே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர் விடயத்தில் ராகுல் காந்தி கூறுவதெல்லாம் தவறு: வைகோ

நீங்களெல்லாம் சரியாச் சொல்லிதான் என்னாச்சி?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய விவசாய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது

ஏன்டா! உள்ளூர்ல ஓணான் புடிக்க வழியில்லை. இறக்குமதின்னு சாவறீங்க. அவனுக்கு இடுப்பு பிடிக்க ஆளனுப்புறாராம்ல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் ரத்து தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம்

அதிகாரப் பிச்சைன்னு சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கேன், இதானா அது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவலில் உள்ள ஐ.நா. சபை ஊழியர்கள் துன்புறுத்தப்படும் பட்சத்தில், அரசு சட்டத்தை மீறியுள்ளதாக கணிக்கப்படும்: ஐ.நா.சபை கண்டனம்

ஏனோ? ஒரே நாள்ள எத்தனை உயிர் போச்சி. அதெல்லாம் மீறினதில்லைன்னு தானடா இருக்கீங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், அதன் சர்வதேச தொடர்புகள் அச்சுறுத்தலாகவே உள்ளன: ஜீ எல் பீரிஸ்

ரொம்பத்தான்டா அஞ்சுறீங்க. மொத்தமா அழிச்சாச்சின்னு டாக்டர் பட்டமெல்லாம் குடுத்துக்குறீங்க. அப்புறம் யாருடா தொடர்பு வைக்கிறா? ஒய்ஜா போர்ட்ல ஆவி கூடதான் வெச்சிக்கணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தக் குற்ற நாடுகள் தொடர்பான ஐ.நாவின் வரைபடத்தில் இலங்கை

இதத்தான் படம் காட்றதுன்னு சொல்லுவாங்க போல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை பாதுகாப்பு அமைச்சு

எல்லாத்தையும் ரொம்ப உறுதியா சொல்லிட்டீங்களோ. இது மட்டும் ஏன் சொல்ல முடியாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

மறைவுக்கு விளம்பரம் குடுக்க சொல்லி இவன்ட வந்தாங்களா? வெறி புடிச்சி அலையுது நாயி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் : சம்பந்தம்

இவங்க அபிலாஷைக்கு அது தடையா இருக்கிறது தான் பிரச்சினை. இல்லாத ஊருக்கு  இலுப்பைப் பூ சர்கரைன்னு அப்படியாவது நாம ஒரு பதவி புடிச்சிடணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சனல்-4" வீடியோ குறித்த சர்வதேச விசாரணை:அரசு ஒருபோதும் சம்மதிக்காது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

அது எங்களுக்கு தெரியுமே? உங்கண்ணன் ஏதோ கதை சொல்றான் பாரு தம்பி. பேசிக்கிங்கடா. ஆளாளுக்கு உளறாம.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேனல் 4 இல் ஒளிபரப்பான வீடியோ உருவாக்கியது யார் என கண்டுபிடித்துள்ளோம் - மஹிந்த சமரசிங்க

மகா கேவலமா இருக்கு தம்பி கதை. இப்புடியே ஊரை ஏமாத்த முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்டி ஆப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்

இதான் 3 மாசமா அலறிக்கிட்டிருக்காங்களே. நீங்க தேர்தல் துக்கத்துல இதெல்லாம் எங்க பார்த்திருக்கப் போறீங்க?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்கிறோம்:ராகுல்

இப்படி சொல்லி அனுப்பி வெச்சது போறாதா தம்பி. விடுப்பா. அவங்களுக்கே விதி முடிஞ்சி போய்டுவாங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர் பிரச்சனையில் என் பாட்டி,தந்தை, தாயார் அக்கறை செலுத்தினர்:ராகுல்

ம்ம்கும். பாட்டி பேரை கெடுக்கறதுக்குன்னே இருக்கு போல பேராண்டி.  மத்த ரெண்டு பேரு செலுத்தின அக்கறை எல்லாருக்கும் தெரியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்பாட்டு பாடி அசத்திய மத்திய அமைச்சர்!

ஆகக்கூடி தமிழனுக்கு பாட்டும் கதையும் சொல்லி விளுத்திடலாம். போங்கடாங்கொய்யாலே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இளம் தலைவர் ராகுல்தான்: வாசன்

பாடைய புடிச்சி தொங்கறதெல்லாம் பதவிய விட மனசில்லாம இருக்கிற கட்சியில 50 வயசு ஆனாலும் இளைஞர்தான். பதினெட்டு வயசில சேர்ந்தா பாலர் அணியாங்க வாசண்ணா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியார் இல்லத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: இல.கணேசன்

ங்கொய்யாலே. பாரதி அரசாங்க சொத்தா? ஓட்டுக்கு எவ்வளவு காசு குடுக்குறீங்க. அக்கறை இருந்தா நீங்க பண்ணலாம்ல?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாமீன் கேட்டு மான்கறி வைத்தியர் மனு

பிணையா பணம் கட்டுறானாமா? இல்ல தங்கபஸ்பம் தரானா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ராசி இல்லாதவளா?: நடிகை ரோஜா ஆவேசம்!

ராஜ் டிவிய பாருங்கம்முனி. ராசிக்கல்லு போட்டுக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூண்டிற்புழுவினைப் போல்

பன்னிக்காய்ச்சல் பீதியெல்லாம் ஒன்னுமே இல்லங்கறா மாதிரி கொஞ்ச நாளா பேப்பர் வாங்க கடைக்குப் போனா தவறாம காதுல விழற கேள்வி. இன்னைக்கு எத்தன பேருப்பா மாட்டினான்னு. பக்கத்துக்கு பக்கம் லஞ்ச ஊழலில் கைதுன்னு ஒரு நியூஸ். தவராம ஒரு சுமாரான மீன் மாட்டினாலும், ஆண், பெண், பியூனிலிருந்து பெரிய அதிகாரின்னு ஒரு துறை விட்டு வைக்காம லஞ்சம் வாங்கி மாட்டிகிட்டுதானிருக்காங்க. அட பிடிக்கிறாங்கப்பா, கொஞ்சம் கேப் விடுவோம்னு கூட எவனுக்கும் உறைக்காதுபோல. எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.

சாதாரணமா யாரோ ஒரு புகார் குடுத்துட்டாங்க, போய் ரெய்ட் அடின்னு அடிக்க மாட்டாங்க. தீவிரமான கண்காணிப்பு, விசாரிப்பு, அதுவும் ஒரு எல்லை மீறிப்போய் குடுக்கலைன்னான்னு கொலக்கேசு ரேஞ்சுக்கு போறப்பதான் கஞ்சி காச்சுவாய்ங்க. பரதேசிப் பய புள்ளைய கொட்டித்தான் குடுக்குறான் சம்பளம். அதுக்கு உக்காந்து தின்னாலே ரெண்டு பேருக்கு உதவலாம். அப்படி இருந்தும் இப்படிப் பேராசை பிடிச்சி எல்லாம் இழந்து, பிச்சை எடுக்கிற நிலமைக்கு வந்தும் எவனுக்கும் எப்படி உறைக்காம போகுது? எனக்காகவா வாங்கினேன், பொண்டாட்டி புள்ளகுட்டின்னு கதை விட்டாலும் மனுபோட்டு பார்க்க கூட வருவாங்களானு சந்தேகம்.

இது நிறைய சலிக்க சலிக்க படிச்சாலும், நேற்றும் இன்றும் மாட்டின ரெண்டு கேஸ் ரொம்பவே கேவலமா இருக்கு. காசநோய் ஒழிப்புக்கு உதவியாளருக்கு ஆள் எடுக்கிறாங்களாம். 180க்கும் மேல வேலை காலின்னு, பக்காவா ஏஜண்ட் வச்சி வாங்கி இருக்கிறாரு ஒரு உயரதிகாரி. பேப்பர்காரன் பங்குக்கு இந்தியத் தொலைக்காட்சியிலேயே மாதிரி இந்தத் துறையில் உயர் அதிகாரி மாட்டினதுன்னு (வாங்கினதில்லை) சிறப்பா வேற சிலாகிச்சுக்கிறான். சின்ன வயசோ? கன்னா பின்னான்னு செலவுக்கு காசு போதாதுன்னனு வாங்கி இருக்குமோன்னு பார்த்தா கழுதைக்கு 52வயசு. மனைவி கோவையில் விரிவுரையாளர். மகனும் மகளும் படிக்கிறார்களாம். ரூம் போட்டு லஞ்சம் வாங்கியிருக்காரு அய்யா.

எங்க பார்த்தாலும் கார்டு தேய்க்கிற நாள்ள, பெரிய மகாராஜா மாதிரி 2லட்சத்து 30ஆயிரம் மாட்டின காசை செலவுக்கு வெச்சிருந்தேன்னு சொல்லுறானாம். புடிச்ச பிறகு மூஞ்சில கர்சீப்பைபோட்டு மூடிக்க இருக்கிற அறிவு, தன் செயலால ஒரு ஆசிரியத் தொழில்ல இருக்கிற மனைவிக்கும், படிக்கிற பிள்ளைகளுக்கு கல்லூரியில் ஏற்படும் அவமானத்தை நினைச்சுப் பார்க்க முடியாமலா காசு கண்ணை மறைச்சுடும்?  ஆள் நியமனத்துக்கே இப்படி வாங்கினான்னா, மருந்து வாங்குறதுல எவ்வளவு அடிப்பான்? இவனுக்கு லஞ்சம் குடுத்தவன் காசநோய் ஒழிக்கவா வேலை செய்வான்? அவன் ஒன்னுக்கு பத்தா போட்ட முதல் எடுக்க நினைக்க மாட்டானா? காச நோய் சாவடிக்குதோ இல்லையோ இந்தக் காசு நோயை ஒழிக்கக் கூட காசு தேத்துவாங்களாட்ருக்குது.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்லுவாங்கல்ல. அடுத்த கேஸ் கோவில்ல. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை அதிகாரி (காசு வாங்கறதே அறம் போல இவருக்கு). இந்தக் கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜகணபதி கோவில் அர்ச்சகர், தட்டில் விழும் காசை தானே வைத்துக் கொள்ளவும், தனி உதவியாளரை நியமித்துக் கொள்ளவும் 10ஆயிரம் ரூபாய் தரணும். இல்லைன்னா காசு வராத கோவில்ல மாத்திடுவேன்னு மிரட்டி காசு வாங்கி இருக்காரு. விட்டா, சாமிதான் வாங்க சொன்னாருன்னே சொல்லுவானுங்க போல. மனசு சரியாயில்லை கோவிலுக்காவது போலாம்னா காசு குடுத்தாத்தான் சாமி பார்க்கலாம்னு மறிப்பானுங்க போல.

நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு பாட்டு கவனம் வரும்போது பாரதியும் கவனம் வருமில்லையா? இன்னைக்கு அவரோட நினைவுநாள். நாம ஏன் இந்தப் பாட்டை நினைச்சி இன்னும் நொந்து போகணும். அழகா பாரதி பாடின ஒரு காதல் பாட்டு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் கடைசியில் நாமளே தேத்திக்க வேண்டியதுதான்னு சொல்றா மாதிரி அழகான பாட்டு. கேட்க மனசிருந்தா கேட்டுப் பாருங்க.