Tuesday, September 8, 2009

கனவாய்ச் சில நினைவுகள்..

ஒன்றும் செய்ய இயலாமல்
ஓய்ச்சலாய் இருந்த ஓர் தினம்
கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான
ஓர் மவுனப் போராட்டம்.

ஏங்கத் தொடங்கியதென் மனது.
இழந்தவர்களைத் தேடி அல்லலுற்றது!
கிடைக்காதெனத் தெரிந்தும்
கிளர்ந்தெழுந்தடிக்கும் வேகம் தாங்கவில்லை.

சிறுவயதில் இழந்த என் அப்பனை
வேண்டியதென் உள்ளம்.
இப்போதிருந்தால் என்ன செய்திருப்பேன்?
செய்திருப்பேன் என்பதை விட‌

இந்த நொடி என்ன செய்யத் துடிக்கிறது என் மனம்?
வெளியே கொஞ்சம் நடக்க அழைக்கலாம்.
முடியாதென்பவரை நான் பிடித்துக் கொள்கிறேன்
வாருங்கள் என்று அழைக்கலாம்.

கொஞ்ச தூரம் எனக் கெஞ்சலாம்.
தவிர்க்கமாட்டாமல் வரும் என் தகப்பனை
பாதி வழியில், எனக்கு ஆசையாய் இருக்கிறதென்று
சிறுவயதில் கை பிடித்து நடந்த‌ மாதிரி நடக்கலாம்.

மகிழ்ந்து போகமாட்டானா என் தகப்பன்?
வம்படியாய் மிட்டாய் வேண்டுமெனலாம்.
கதை சொல்லிக் கூட்டிப் போகச் சொல்லலாம்.
கால் வலிக்கிறது தூக்கு எனச் சொல்லிச் சிரிக்கலாம்.

முடியாமல் ஆங்காங்கே நிற்கும் போது
பராக்குப் பார்க்காமல் வா எனலாம்.
ரயில் பாதையோரம் நின்று
ரயில் காட்டலாம்

சாலையோர ஜவுளிக் கடை நுழைந்து
சேலம் குண்டஞ்சு வேட்டி எடுத்து
வெள்ளைச் சட்டை வாங்கி
அங்கேயே போட வைக்கலாம்.

எனக்கொரு சட்டை என
அடிக்கிற நிறத்தில் எடுக்கலாம்.
முகம் சுளித்து அழகாய்
எடுத்துக் கொடுக்கும் சட்டையில் மகிழலாம்.

களைத்திருக்கும் தகப்பனின்
தோளில் கை போட்டணைத்து
ஆட்டோ பிடித்து
வீடு சேரலாம்.

கால் எடுத்து மடி வைத்து
இதமாய்ப் பிடிக்கலாம்.
கண்மூடிக் கிடக்கையில்
நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிடலாம்.

பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.

யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக் பகுதியில்: http://youthful.vikatan.com/youth/index.asp

_________________________

Monday, September 7, 2009

சாப்பிடலாம் வாங்க ...

காலைல பத்திரிகையில் ஒரு செய்தி. ஒரு கலியாணமே நின்னு போச்சாம். விசயம் என்னன்னா மாப்பிள்ளை வீட்டில காலை விருந்து சரியில்லையாம். மதிய சாப்பாட்டுக்கும் ஏற்பாடு சரியில்லைன்னு பெண்ணுக்கு அப்பாக்கு கோவமாம்.(என்னாங்கடா. அவனவன் பெண்ணுக்கு கலியாணம் ஆவலையேன்னு தவிக்கிற தவிப்பென்ன. இவருக்கு ஏத்தத்த பாரு). அப்புறம் சமாதானம் பண்ணியும் முஹூர்த்த நேரம் நெருங்க பெண்ணோட அக்கா வீட்டுக்காரரு பொண்ண எழுப்பி கூட்டி வந்துட்டாராம். போலீசெல்லாம் சமாதானம் பண்ணியும் கலியாணம் நின்னு போச்சாம். இவனுவள என்னா பண்ணா தகும்?.

கலியாணத்தில சாப்பாடு ஒரு முக்கியமான விஷயம்தான். அதில் தகராரு வருவதும் சகஜம்தான். ஆனா பாருங்க கலியாண சாப்பாட்டுல கூட நம்ம பெருசுங்கள நினைச்சா பெருமையா இருக்குங்க. வாழையிலைய கழுவிபோடத் தெரியாமலா அப்படியே போட்டாங்க. அதுக்கு மருத்துவ குணமுண்டு. விஷத்த முறிக்கும்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துக்கு தண்ணிய தெளிச்சி அழுத்தி துடைக்கிறப்போ அதுக்கொரு குணம் உண்டு. பரிமாருவாங்க பாருங்க.

கீழ் வலக்கையோரம் ஒரு ஒரு ஸ்பூன் பாயசம் வெச்சிட்டே போவாங்க. சும்மா நாக்க சீண்ட்றதுக்கு. அதுக்கு நேர்மேல தயிர் பச்சடி. நேர்மாறான ருசி. நாக்கு தத்தளிச்சி போகும். பக்கத்துல கூட்டு. காரமே இல்லாம. பக்கத்துல பச்சைக் காய்கறி வதக்கல். லேசான காரமும் உப்பும் கலந்திருக்கும். பக்கத்துல கிழங்கு வகையில ஒரு பொரியல். காரம் கொஞ்சம் தூக்கலா. அடுத்து உப்பு. தேவைன்னா ஏத்திக்கிங்க ராசான்னு. அப்புறம் காரமா ஊறுகாய் இடது மேல் மூலையில. அதுக்கு கீழ இனிப்பு அல்லது பழங்கள். முடிக்கிறப்ப பாயசம்.

சாப்பாட்டுலயும் முதல்ல பருப்பும் நெய்யும், அப்புறம் சாம்பார். அதுக்கும் மேல காரம் தேடுற நாக்குங்களுக்கு காரக் குழம்பு, அய்யய்யோ பத்திக்கிச்சிக்கு மோர்க் குழம்பு. அப்புறம் செரிமானத்துகு ரஸம். நாக்குக்கு காரம் கேட்டாலும் வயித்துக்கு சமாதானமா தயிர்னு உடம்பை எப்படி ஆராதிச்சிருக்காங்க. வடை, அப்பளம் எல்லாமும் இடது கோடிக்குதான். ஆகாதப்பு. பார்த்து சாப்பிடுன்னு. இடதுன்னா இளக்காரமாதானே சொல்றது. பாயசத்தையும் பச்சடியையும் நக்கினதுமே பக பகன்னு பசி பிச்சிக்க சாதம் வைப்பா முதல்லன்னு பறப்பாங்களா இல்லையா?

அம்மா கிராமத்துக்கு போறதுன்னா தனி குஷி. வீட்டில ஆரேழு பசுமாடு. பின்னாடி தொழுவம். ஒண்ணர அடி உசாரத்துக்கு ஒரு தொட்டி நீளமா. அளவா தண்ணி கிணத்துல இருந்து நிரப்பி, தவிடு, பிண்ணாக்குன்னு கலந்து வச்சி திமிறிட்டிருக்கிற மாடுங்கள அவிழ்த்து விடுவாரு தாத்தா. பிச்சிக்கிட்டு ஓடி புஸ்ஸூ புஸ்ஸூன்னு உறியும். குடிக்க குடிக்க கலந்து விடுவாங்க. அங்க முடிச்சி வரதுக்குள்ள தளை கிட்ட புல்லு, வைக்கோலுன்னு அளவா பரத்தி வைப்பாங்க. அப்புறம் புடிச்சி கட்றது. அது அங்க இருக்கிறத மேயும்.

கிறுக்குப்பய புள்ள கலியாண சாப்பாடுன்னு சொல்லிண்டு மாட்டுக்கு தீனி வைக்கிறத ஏண்டா சொல்றான்னு பார்க்கறீங்களா. தாலி கட்டின கையோட மத்த சடங்க செய்ய விடாம கைய குலுக்கி (பெரிய சாதனை பாருங்க) கவரை திணிச்சிட்டு, இல்ல வரவேற்புன்னா கண்ணெல்லாம் டைனிங் ஹால் பக்கம் வச்சிகிட்டு அங்க ரெடின்னா ஃபோடோக்கு நின்னுட்டு அடிச்சி பிடிச்சி போக , அங்க ஒருத்தன் கைய பரத்திட்டு நிப்பான். இருங்க இருங்கன்னு. இலைய போட்டு எல்லாம் பரிமாறி வச்சிட்டு, அனுப்பலாமான்னு கேட்டு அப்புறம் விடுவான். நம்மாளுங்க இளைக்க இளைக்க ஓடி, நாலு சீட்டு, பக்கதுல ரெண்டு போட்டு வைங்கன்னு போய் உட்க்காற்ற‌தும், பால் பாயசத்தை தயிர்னு நினைச்சு கவிழ்த்து வழியறதும், வெளிய பீடாக் கடைக்காரன் கிட்ட தழை மெல்றதும் பார்த்தா மாட்டு கதை கவனம் வராம போகுமா சொல்லுங்க?

இப்போல்லாம் பிச்சைக்காரனாக்கிட்டாங்க. தோசைக் கடை, பரோட்டாக் கடை, பீடாக் கடைன்னு போட்டு வைக்கிறானுங்க. சம்பந்தமில்லாம ஐஸ்கிரீம்ல சூடா குலாப்ஜாமுன். வாழையிலை போயே போச்சு. பீங்கான் தட்டை வெச்சுகிட்டு, கலந்த சாதம். அதுலயும் நம்மாளுங்க பண்ற லந்து இருக்கே. பூரியோ பரோட்டாவோ பாய்ஞ்சி எடுத்து அதுக்கு கிழங்கா குருமாவான்னு குழம்பி ஏதோ ஒண்ண அள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பானுவ. அத முடிக்கலாமா இல்லையா. மாட்டானுவ. ஏதாவது விட்டுப் போனா சாமி குத்தமாயிடும்னு இருக்கிறதெல்லாம் அள்ளிப் போட்டுகிட்டு குழம்புல குருமா கலக்கும். பொரியல்ல ஊறுகாய் ஊறும். அத்துனூண்டு தட்டு குடைசாயும்.

அத விட கொடுமை அடியில மாட்டிக்கிட்ட பூரிய எடுக்கறேன்னு போராடி போராடி ஒரு வழியா பிச்சி உள்ள தள்றதுக்குள்ள காம்பினேஷன் அடிபட்டு போகும். அப்போவே கையில மத்ததெல்லாம் ஒட்டி இருக்குமா இல்லையா. விரல் தோல் வழண்டு போறா மாதிரி அதை நக்கி உறிஞ்சி சுத்தம் பண்ணிக்கிட்டு (மாடு மூக்குல ஒட்டி இருக்கிற புண்ணாக்க நக்குறது ஏனோ கவனம் வந்து தொலையுது) ரொம்ப ஸ்டைலா அப்புறம் ஸ்பூன பிடிக்கிற ஜோர் இருக்கே. ஒருத்தன் குழம்பு கிளர்றா மாதிரி புடிப்பான், ஒருத்தன் பேனா புடிக்கிறா மாதிரி புடிப்பான், ஒருத்தன் மண்ணு குத்துறா மாதிரி பிடிப்பான்.

ஓபாமாவுக்கு ஃபினான்ஸ் மேனேஜ் பண்ணத் தெரியலன்னு பீட்டர் விட்டுக்கிட்டே ஒண்ணு இந்தப் போராட்டத்தில நிக்கிறவன் முழங்கைய ஒரு தட்டு தட்டி திரும்பிப் பார்க்காம,ஓஹ் அம் ரீயல்லி சாழினு போய்டும். இவரு குடைசாஞ்சதில மேல கொட்டினதக் கூட துடைக்காம அய்யோ போச்சேன்னு ஓடிப் போய் நிறப்புவாரு. அதுக்குள்ள ஒண்ணு ரொம்ப ஸ்டைலா வந்து கொட்டினதுல காலை வச்சி ஒலிம்பிக்ல ஜிம்னாஸ்டிக் கோல்ட் மெடல் வாங்கினா மாதிரி ஒரு கால் முன்னையும் ஒரு கால் பின்னையுமா நீட்டி விழுந்து என்ன நடந்துச்சுன்னே தெரியாம ஞேனு கெடக்கும். அதப் பார்த்து சிரிக்கிறதில பாதி கொட்டும். தட்டை வெச்சா க்ளீன் பண்ண சுத்திக்கிட்டிருக்கிற ஆளு (இவனப் பார்த்தாலும் வேற ஒண்ணு கவனம் வரும். சாப்பாடு பத்தி பேசுறமேன்னு தவிர்க்கிறேன்) லவட்டிட்டு போய்டுவானேன்னு யாரும் தூக்கக் கூட மாட்டாம மூஞ்சிய திருப்பிக்குவாங்க. இதுக்குப் பேரு விருந்தாங்க?

இதில வேற கம்பேர் பண்ணுவானுங்க பாருங்க, ரமேஷ் கலியாணத்துல 46 ஐட்டம் வெச்சானாம். ஏண்டா எவ்வளவு இருந்தாலும் வயிறு எல்லாமா அடைக்கும்னு அப்பலாம் போல வரும். இது சரியில்லைன்னு கலியாணத்த நிறுத்துறானாம்ல.

சரி இவ்வளவும் சொல்லிட்டு சாப்பிடாம போறதா. இங்க கொஞ்சம் சுட்டுங்க சாமிகளா. ரெகார்ட் பண்ணி மேலேத்தம் செய்யலாம்னா பேப்பர மைக் மாதிரி சுத்திகிட்டு பாடினா மாதிரி வருது. கொஞ்சம் சிரமம்னாலும் மிஸ் பண்ணாதீங்க. கலியாண வீட்டுல சொல்லிக்காம போறது தப்பு. பின்னூட்டத்தில சொல்லிட்டு போங்க மக்களே.

Sunday, September 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - V 2.2

கருணாவும் நானும் வெளியேறியதே புலிகள் பலவீனமடையக் காரணம்: முதலமைச்சர் சந்திரகாந்தன்

இவ்வளவு நாள் ஒருத்தன் உளறினான். இப்போ நீயுமா? எட்டப்பன் யாருன்னு அடிச்சிக்கிட்டு சாவுங்கடா.
_________________________________________________________________________
விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஊடுருவல்

பிடிக்காதவன போட்டுத்தள்ள வழி.
_________________________________________________________________________
அமைச்சர் கெஹலிய நிதி மோசடியில் ஈடுபட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன: சண்டே லீடர் தகவல்

குடுத்த காசுக்கு மேல கூவிட்டிருந்த ங்கொய்யாலே தானே இவன். செஞ்சிருப்பான்.
_________________________________________________________________________
பிரதமர் ஜப்பான் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

வலயத்துக்குள்ள 5 ஸ்டார் வசதி தரமுடியாதுன்னு நக்கலடிச்ச பரதேசி. 2 நாள் வெச்சிருந்து விட்டுருக்கலாம்டா.
_________________________________________________________________________
வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

ஆளே இல்லாத ஊர்ல யாருக்குப்பா நீ முதலமைச்சர்?
_________________________________________________________________________
தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்

அது எப்பவோ ஆயிடுச்சி. அவரமாதிரி உண்டுமான்னு அத்தனை பேரும் கை தூக்குவான். வேலையத்த வேலை.
_________________________________________________________________________
எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்

எதுக்குத்தான் எவ்வளவுதான் திடுக்கிடுறது. நம்மாளுங்க குத்தறது போறாதுன்னு இவனுங்க வேறயா?
_________________________________________________________________________
முகாம் அவலத்தை அம்பலப்படுத்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றும் இலங்கை

அட அவன் சொன்னா சொல்லிட்டு போறான். அண்ணன் அக்ரீமென்ட்ல தானே.
_________________________________________________________________________
சிங்கள கொலைவெறியாட்ட வீடியோ: இலங்கை அமைச்சரிடம் ஐ.நா. விசாரணை

என்னான்னு? HD விடியோ டோல்பி 7.1 ல ஏன் எடுக்கலைன்னா? போங்கடா.
_________________________________________________________________________
ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்

உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர்.
_________________________________________________________________________
வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

இந்த ஒரு விஷயத்துலயாவது வக்கீலும் போலீசும் அடிச்சிக்காம இவன நொங்கெடுக்க மாட்டாங்களா?
_________________________________________________________________________
பெண்கள் டி.வி.க்கு அடிமையாகிவிட்டார்கள்: ராமதாஸ் பேச்சு

தமிழன் டிவில சீரியல் போடமாட்டேன்னு இருந்துகிட்டு இப்படி வயிறெரிஞ்சா என்னாத்த சொல்ல.
_________________________________________________________________________
சென்னை-டெல்லி:புயல்வேக ரயில்

கரை கடக்காம ஸ்டேஷன்ல நின்னா சரி.
_________________________________________________________________________
திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது: மா.கம்யூ.,

எத்தனை வாட்டி இப்படி சொல்லி சொல்லி திரும்ப கூட்டணி வைக்கல. எங்கள பார்த்தா எப்புடி தெரியுது?
_________________________________________________________________________