Thursday, August 22, 2013

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


பிறந்து வளர்ந்தது அம்பத்தூர் என்றாலும் மெட்ராஸ் அப்போது பட்டணம்தான். பட்டணத்தோடான என் முதல் நினைவு லீவில் சேலம் அல்லது ஈரோட்டுக்குப் போவதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் போவதுதான். ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் (இப்போதைய வெஸ்ட்கோஸ்ட்) எப்போதும். தேர்ட் க்ளாஸ் பெட்டியில் இடம் கிடைக்கும். பேஸின் ப்ரிட்ஜ் தாண்டும் வரை சிறுசுகள் உட்கார்ந்ததாக சரித்திரம் கிடையாது. முண்டியடித்து இடது வலது என்று பாய்ந்து பக்கிங்காம் கனாலில் போட்டில் போகும் சவுக்கு, உப்பு மூட்டைகளைப் பார்ப்பதில் அத்தனை குஷி.


தீபாவளிக்கு பாரிஸ் கார்னரில் இப்போதைய சரவணபவன் இருக்கும் இடத்தில் சுபைதா டெக்ஸ்டைல்ஸில் ரெடிமேட் பட்டி டவுசர், ஸ்லாக்‌ஷர்ட் தீபாவளி பொங்கலுக்கு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். அப்போதெல்லாம் தள்ளுபடிக்கு பாய்பவர்கள் இல்லை வாடிக்கையாளர்கள். கொத்தவால் சாவடி காய்கறிக்கென்றால் ட்ரஸ்ட் ஸ்கொயர் மளிகைக்கு.



நகைக்கடைகள் செட்டியார்களிடமிருந்தது. குடும்ப வைத்தியர் மாதிரி குடும்ப செட்டியார்கள். தலை முறை உறவுகள். இன்னாரின் பேரன் என்றால் கல்லாவில் இருக்கும் பெரிய செட்டியார் மற்ற உறவுகளை விசாரிப்பார். 



பட்டுக்கு காஞ்சீபுரம் போக முடியாவிட்டால் கந்தசாமி கோவில் தெரு மணிசங்கர் தவே. ஆரிய பவன் தோசை. இப்ரஹீம் கரீம் குடை. ரெயின் கோட், ஸ்வெட்டருக்கு யூனூஸ் சேட்/யூசுஃப் சேட் கடை, புடவைக்கு மங்காராம். சீக்கோ வாச்சுக்கு பர்மா பஜார். பல் நோவுக்கு ரத்தன் பஜார் சீன டாக்டர்கள்.



மூர்மார்க்கட் தனி உலகம். பேனா பேர் படிக்க சொல்லிவிட்டு சொக்காயை பிடித்து வாங்க வைப்பது, 30ரூ தோல் செருப்புக்கு பித்தளை ஆணி 5 பைசை என்று ரோபோ வேகத்தில் டிசைன் கட்டி அடித்துவிட்டு 50ரூ கேட்டு மிரட்டும் வியாபாரம், குச்சி பால் ஐஸ்/சர்பத் ஒன்னு பத்துபைசா என்று சொல்லி  கெத்தாக பத்து சொன்ன பிறகு ஒரு ரூ பத்துபைசா என்ற மோசடியெல்லாம் வாசலோடு. 



கிழக்குப் புறம் செண்ட்ரலை ஒட்டி இரும்பு சாமான்கள், கத்தி கபடாக்கள், தெற்குப் புறம் மிலிடரி யூனி ஃபார்ம்கள், மேற்கே சூட்கேசுகள்/ரெக்ஸின் பைகள் பார்டர் தாண்டி மெயின் காம்ப்ளக்சுக்கு வந்தால் சுற்றிலும் புத்தகக் கடைகள்.



கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.



உள் வளைவில் பொம்மைகள், பைகள், ஃபேன்ஸி ஐட்டம்கள். அடுத்த கட்டத்துக்கு குடும்பஸ்தர்கள் போக மாட்டார்கள். விடலைகள் அங்கு விட்டு வரமாட்டார்கள்.  வேடிக்கை மட்டும் பார்த்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும் மாமாக்கள் காசு பிடுங்கி விடுவார்கள் என்பதால் ஓரக் கண்ணால் பார்த்தபடி  ஒரு நோக்காக/நேக்காக சுத்தி வந்து மையப் பகுதிக்கு வந்தால் இன்றைய அல்லிகுளம். இறைக்காத நீறூற்று. ஹார்லிக்ஸ்/ஹமாம் அட்டை பெட்டியில் பாஸ்போர்ட்/பணம்/மாற்று அழுக்கு உடையுடன் கஞ்சா/சப்பி/ஆர்.எஸ்.பவுடர்/அபின் மயக்கத்தில் வெளிநாட்டு ஹிப்பிகள். 



லுங்கி கட்டிக் கொண்டு வந்தால் டிக்கட் கொடுக்காத மினர்வா தியேட்டர், விசிலடித்தால் வெளியே இழுத்துப் போடும் காசினோ, பிட்டுப் படத்துக்கு கெயிட்டி, இளஞ்சோடிகள் படம் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒதுங்க ப்ளூடைமண்ட் கண்டினுவஸ் ஷோ, நேப்பியர் பாலம் அருகில் சுராங்கனி ரெஸ்டாரண்ட் பின்புறம் நடந்தால் சண்டைப் பயிற்சி செய்வதாக சீன் போடும் ரவுடிகள். தாண்டிச் சென்றால் மணலில் தடுப்பு தடுப்பாக செய்த லவ் ஸ்பாட், ஜோடியோடு வராவிட்டால் ஜோடிக்கு காசு, வேடிக்கை பார்க்க வந்தால் பொளேரென்று அறை, மீட்டர் கேஜ் ரயில் நிலைய 15 பைசா மசால் தோசை 10 பைசா சாதா தோசை, 15 பைசா 2 இட்லி, இட்லி தெரியாம சாம்பார், 12 பைசா காஃபி, 8 பைசா டீ. 

பட்டணம் வந்தா உயிர்காலேஜ் செத்த காலேஜ் பாக்காம போனா ஒரு மருவாதி இருக்குமா. இன்னைக்கும் சபர்பன் ஸ்டேஷன் 14வது ப்ளாட்ஃபார்ம் முடியற இடத்துல இருக்க காடுதான் உயிர்காலேஜ். எவ்வளவு பசுமை. ஜூன் மாசமே உள்ள குளிரும். முக்கியமான அட்ராக்‌ஷன் எம்.ஜி.ஆர் சிங்கம், சிவாஜி புலி. அதையொட்டிய கதைகள், சண்டைகள். பெரிய தூக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு மரத்தடி விருந்து. படிக்காத ஜனங்கள் பெரும்பாலும். அதனால் இலைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள். பிற்பாடு மினி ட்ரெயின் வந்தது.

சென்னைக்கு எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்தது. மனுசன் நிலாவில கால் வச்சான். டெலிவிஷன் வந்தது. 14 மாடி கட்டிடம் எரிந்தது. நேரு ஸ்டேடியத்திலிருந்து கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போச்சு. இப்படி எவ்வளவோ மாற்றங்கள். மாறாதது ஒன்னு இருக்கான்னா இருக்கு. ஜெமினி சர்க்கஸ். 14வது ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல இருக்க அதே இடம். கிறிஸ்துமசையும் சேர்த்தா மாதிரியா ஆரம்பிச்சி பொங்கல் தாண்டி ஃபிப்ரவரி 2ம் வாரம் வரைக்கும். அதே டெண்ட், அதே காட்சிகள். அதே விஐபிகளுக்கு ஓசி பாஸ்கள். 

காசு இருக்கவன் சபாக்கு போய் கச்சேரி கேப்பான். காசில்லைன்னா கார்பரேஷன் வாசல் புல் தரையில 4.30லிருந்து கூட்டம் சேரும். 5 மணிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். சுத்தமான கர்நாடக சங்கீதம். ஆபட்ஸ்பரி கலியாணத்துக்கு நாதமுனி பேண்ட் இருந்தா அன்னாடங்காச்சிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். இப்பதான் சினிமாப்பாட்டு வச்சாதானே மரியாதை.  சமீப காலம் வரை கார்ப்பரேஷன்ல பணம் கட்டினா கலியாணத்துக்கு புக் பண்ணிக்கலாம். மாப்பிள்ளை அழைப்புக்கு கார்ப்பரேஷன் பேண்ட் செவப்பு வெள்ளை யூனிஃபார்ம்ல என்னா கெத்து தெரியுமா.

பாக்ஸிங் டே தெரியுமா?  கிறிஸ்மசுக்கு அடுத்த நாள். வெள்ளைக்காரன் போயிட்டாந்தான். பாக்ஸிங்கும் போச்சு. ஆனா இன்னைக்கும் சென்னைல மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்னைக்கு விருப்ப ஓய்வு நாள். கண்ணப்பர் திடலில் சார்பேட்டா பரம்பரை, வைத்தியர் பரம்பரைன்னு சவால், போட்டி, பதக்கம். வட சென்னை மொத்தம் குவியும். ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், போர்ட்டர்கள், நடிகர்கள் ஆதரவு. வால்டாக்ஸ் ரோடு, பெரிய மேடெல்லாம் போஸ்டர்கள். 

கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போனப்புறம் ஃபுட் பால் லீக் மேச் முன்னாடி யூரோ கப் எல்லாம் எம்மாத்திரம். கோடி ரூபா குடுத்தாலும் போர்ட்டர் வரமாட்டார். கூலி எப்போது வேண்டுமானாலும் வரும். முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ் லுங்கியோட வந்து க்ரவுண்ட்ல உக்காரும்போது கூட விசிலும் கும்மாளமுமா மேச் வருமா. 

கமெண்ட் கேக்கணும். த்த்தா! டாய்! ரெப்ரீ! கண்ல இன்னாடா கீது? கார்னல் கண்ணு தெர்ல கெயப்பொட்ட!!

ஆப்புல அட்சாம்பா! பிகிலட்றா நாயே!

ஃபவுல் பண்ணா பிகிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரண்டு கை தூக்கி சாலி சொல்லி கட்டி புட்சிக்கணும். கோல் போட்டா கொத்தவரங்கா நாகேஷ் தூக்க பார்ப்பார். லைன் மேன் பாடு திண்டாட்டம். பால் அவுட்னு கரெக்டா சொல்வில்லை என்றால் டவுசர் போயிடும். தொடர்ந்து தப்பு பண்ணா ரத்தகாயம்தான். 

அந்தக் கோலாகல இடத்தில்தான் இன்று நடிகர்கள் நடிகைகள் பாராட்டு விழாவும் நடக்கிறது. 

ஏனோ ஆங்கிலோ இந்திய இளைஞர்களும், முஸ்லீம்களும் ஹாக்கியையும், பாக்சிங்கையும் புறக்கணித்து விட்டார்கள். 

சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். 

ம்ம்ம்..போதும்..சொல்லி மாளாது.

20 comments:

பொன் மாலை பொழுது said...

நோஸ்டால்ஜியா- பிரமாதம், மெட்ராஸ், சென்னை - ஆயிரம்தான் ஆனாலும் நம்ம ஊர் நம்ம தான்.
நமது சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்......


கலக்கலான பதிவு, தொலைஞ்சு போன சென்னையை கண் முன்னாடி கொண்டாந்து நிறுத்தினது போல இருக்குதுங்க.....

ஸ்ரீராம். said...

புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்கே இருக்கும் அது? மூர்மார்க்கெட்?

மதுரை தஞ்சை நினைவுகள்தான் எனக்கு! என் சென்னை அப்போது 90 சதவிகிதம் க்ரோம்பேட்டோடு முடிந்து விடும்!

Anonymous said...

இவை எல்லாம் எந்தாண்டுகள்? நான் பிறக்க பல்லாண்டுகள் முன் போல, ஆனால் சென்னையின் அந்தக் காலத்தை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்களே. ஒரு காலத்தில் சென்னை சொர்க்கமாக ஒரு பட்டணமாக அழகிய பதுமையாக இருந்துள்ளாள் என்பது மட்டும் தெரிகின்றது. இன்று கிழவியை விட கேவலமாய் ஆக்கிவிட்டோமோ? மரங்கள்? ஏரிகள்? பிரித்தானிய கட்டடங்கள், அகண்ட சாலைகள் எல்லாம் எங்கே போயின? :(

வல்லிசிம்ஹன் said...

ஜெமினி சர்க்கஸ், மூர் மார்க்கெட்,உயிர் காலேஜ்,செத்தகாலெஜெல்லாம் பத்துவயதில் பார்த்தது. 55 வருடங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடங்களை மிஸ் பண்ணுகிறேன்.
Zooவில் படகு சவாரி. இந்தக் காட்சி வரும் சினிமாப் படங்களைத் தவறாமல் பார்க்கிறேன். மதராஸ்,சென்னை புரசவாக்கம், உமா தியேட்டர்,ராக்ஸி யில் பாவமன்னிப்பு,சர்வர் சுந்தரம்.
மிக நன்றி. மிக மிக நன்றி.

vasu balaji said...

/புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்கே இருக்கும் அது? மூர்மார்க்கெட்?/

அதச் சொல்லாம முடியுமா. சொல்லிருக்கேனே. :)

Geetha Sambasivam said...

@ஶ்ரீராம், இங்கே பாருங்க,

//கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.//

:)))))))

ரிஷபன் said...

சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். //

எங்க பாஸ்கிட்ட நைசா இதை காட்டி படிக்க வைக்கணும். ராத்திரி 10 மணிக்கு கிளம்பினாக்கூட ‘அதுக்குள்ளீயா’ என்று ஆச்சர்யம் காட்டும் அசகாயசூரர் அவர் !

ரிஷபன் said...

சென்னையில் இருந்ததில்லை.. வந்து போகிறதுதான்.. வந்தால் ‘எப்போ’ போகலாம்னுதான் இருக்கும் இப்பவும்.. ஆனாலும் வந்தாரை வாழவைக்கும் அதன் பெரிய மனசுக்கு கோடி நமஸ்காரம்.

இரசிகை said...

nallairukku.

Unknown said...

Hey....nostalgic memories....I wanted 2 cry after reading ur article...those days were golden period ........

Unknown said...

Hey...fsb...

YESRAMESH said...
This comment has been removed by a blog administrator.
YESRAMESH said...

பழைய மெட்ராசுக்கு ஒரு இனிய துரித சுற்றுலா. நன்றி.

செந்தில்குமார் said...

Hi still in my plant office or shit time if we go before or leave after our official time we have to give explanation(not in india)

ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?) said...

Wow. . Namma area, evlo super!!!

கிருத்திகாதரன் said...

அடுத்த முறை சென்னை வரும்பொழுது இந்த வரலாற்று புகழ்மிக்க..மிச்சம் மீதி உள்ள இடங்களை தரிசிக்க தோன்றுகிறது..அருமை
..

vaishu dop said...

Valid information....gud....feel....

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_6.html

ezhil said...

சென்னையைப் பற்றி உங்க பாஷையிலே படிக்க நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்