Friday, September 30, 2011

கேரக்டர் - அப்துல்லா குட்டி

அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை. ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான மனிதனும் இல்லை. நல்ல உயர அகலம். அதற்குச் சற்றும் பொருந்தாத சிறிய வட்டமுகம், பெரிய வாய், கருத்துத் துருத்திய கனத்த உதடுகள், பரந்த மூக்கு, பரந்த நெற்றியில் மேலேறித் தொடங்கும் சுருள் சுருளான முடிகள் என்று ஒரு கற்கால மனிதனை நினைவூட்டக் கூடும் உருவம். ஆனாலும், கலகலவென்ற பேச்சும், நொடிக்கு நொடி பகடியும் சிரிப்புமாக சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மனிதன்.

முதல் சந்திப்பின் அறிமுகத்திலேயே அவரின் வயிற்றுக்கு சற்றே உயர்ந்திருந்த என்னை கிண்டல் செய்தபடிதான் அறிமுகமானார். பதவியில் எனக்கு அடுத்த உயர்நிலையானாலும், அதிகாரத்தில் எனக்கு கட்டுப்பட வேண்டிய நிலை. ‘சாரே! நிங்கட ஹைட்டுக்கு எனிக்கு உக்காந்து குட்மார்னிங் சொன்னா போறே! ஆனா அது மரியாதையில்லை கேட்டோ. பின்னே ஞான் சார்னு பிள்ளார்னு தூக்குன்னது மாதிரி தூக்கி கொஞ்சி குட்மார்னிங் பறயட்டே’ என்றால் சிரிக்காமலா இருக்க முடியும்? முதல் சந்திப்பில் முதல் டீயோடு மனைவியும், முதலாண்டு இஞ்சினியரிங் படிக்கும் மகனும் ‘நாட்டில்’ இருப்பதாகச் சொன்னார்.

குட்டி சார் வந்தால் அலுவலகம் கலகலப்பாகிவிடும். ஒவ்வொருவராக போய் வம்பிழுத்து சிரிக்கவைத்து எல்லோரோடும் ஒரு அன்னியோன்னியத்தை உருவாக்கியிருந்தார். பலரின் உடல் மொழியில் ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவருடைய அலுவலர்கள் மத்தியில் அவர் ஒரு தேவன். குளிர் பிரதேசம். பெரும்பாலும் அந்தக் காட்டைச் சேர்ந்த மக்கள். குடி என்பது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. சில நேரம் போதையில் விபத்துக்கு ஆளாவார்கள். ரூல் படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும், குடிபோதையில் பணியில் இருந்ததற்காக வேலை போகும் அபாயமும் உண்டு. குட்டி அப்படியான தண்டனைகளை நிகழவிட்டதே இல்லை என்பார்கள். அவசர சிகிச்சைக்குப் பின், மைசூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் பேசி இஞ்சுரி ஆன் டூட்டி கொடுத்துவிடுவார். தேறி வரும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். 

என் தனிப்பட்ட உதவிக்காக இருந்த நஞ்சப்பன் கூறிய தகவல்கள் இவை.  ‘சார், கல்யாணம் வச்சிருக்கேன்னு போய் நின்னா போதும் சார். அவங்க அவங்களுக்கு ஏத்தாமாதிரி தேவையானது கிடைக்கும். கலியாணத்துக்கு முதல் நாள் கூப்பிட்டு என்னவாச்சும் வேணுமான்னு கேப்பாரு. அண்ணன் தம்பி இல்லைன்னே கவலை இல்ல சார். ஆளுங்கள கூப்புட்டு நீ இது பண்ணு, அந்த வேலை பாருன்னு சொல்லீடுவாரு. பேச்சு வார்த்தை இல்லாதவன் கூட குட்டி சார் சொன்னா செய்யாம இருக்கமாட்டான். ஒரு அஞ்சாரு வருஷம் இருக்கும் சார். குட்டி சாருக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டாங்க. கூலி வேலை செய்யறவன் கூட வரலை சார். ஒரு நாள் முழுக்க வேலை செய்யாம கேன்ஸல் பண்ண வச்சிட்டோம்.’

ஆனாலும் குட்டியை இரண்டு பேருக்கு மட்டும் பிடிக்காது. தன்னைத் தவிர மற்றவரெல்லாம் ’அரிசிக்கரே கள்ளரு’ என்ற அபிப்பிராயம் கொண்ட அக்கவுண்ட்ஸ் லக்ஷ்மி நரசிம்மன், லட்சம் என் அப்பா சேர்த்தது, அதுக்காக நான் சம்பளத்தை மட்டும் நம்ப முடியுமா என்றிருந்த டைப்பிஸ்ட் கிருஷ்ண மூர்த்தி. எல்லாம் திருடனுங்க. பினாமில காண்ட்ராக்ட் எடுத்து நம்மளுக்கு ப்ரஷர் குடுப்பாங்க என்ற சலிப்பு லக்ஷ்மி நரசிம்மனுக்கு என்றால், பில், அக்ரிமெண்ட் டைப் பண்ண 50ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்ற கடுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு. 

லக்‌ஷ்மி நரசிம்மனின் பார்வையில், ’குடித்தான்ரீ அவனு! கிளப்பினல்லி ஹோகி, சன்னாகி குடுதுபிட்டு பாக்கி ஆடுத்தான. லோஃபர் நன்ன மகா.. கேஷுவல் லேபர் ஹுடுகிகளு லீவ் பேக்கு சாரந்த்ரே ரெஸ்ட் ஹவுசிகெ பாந்த ஹேள்தான. அவனு சகவாசா பேடாரீ நிம்மகே (குடிப்பாங்க அவன். க்ளப்பில் போய் குடித்துவிட்டு, சீட்டு ஆடுவான். பெண் பித்தன். தினக்கூலிப் பெண்கள் லீவ் கேட்டால் ரெஸ் ஹவுசுக்கு வான்னு சொல்லுவான். அவன் சகவாசம் உங்களுக்கு வேண்டாம்) என்றார். 

பின்னொரு நாள், ராமன் நாயர் கடை வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூன்று பெண்கள் வந்தனர். கேஷுவல் லேபர்கள்தான். குட்டி சாருக்கு வணக்கம் சொன்னதும், எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி, வழக்கமான இடிச்சிரிப்போடு,  ‘சினிமால நடிக்கப் போறீங்களா? மேக்கப்பெல்லாம் பலமா இருக்கு?’ என்றவருக்கு நாணிக் கோணி,  ‘இல்லா சார்,  சினிமாக ஹோக்திவி சார். லீவ் பேக்கு சார்’ (சினிமாக்கு போகிறோம் சார். லீவ் வேண்டும் சார்) என்றார்கள். ‘ஹோகாணா ஹோகாணா! ரெஸ்ட் ஹவுஸிக ஹோகுரி பர்த்தினி’ (போலாம் போலாம் ரெஸ்ட் ஹவுஸுக்கு போங்க வரேன்) என்று அனுப்பிவிட்டு, உடலை முறுக்கி ‘பின்ன நோக்காம் சாரே. நன்னாயிட்டு ஒரு மஸாஜ் எடுத்து குளிச்சிட்டு, வீட்டினு போயால், மீன் கறியும், கோழியும் இருக்கும்’ என்று கண் சிமிட்டிவிட்டுப் போனார். சரிதான். லக்ஷ்மி நரசிம்மனுக்கு காமாலைக் கண் இல்லை போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

பின்பொரு நாள் டவுனில், குட்டியின் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண்ணோடும் நான்கு வயது சிறுவனோடு பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ‘சாரோட சின்ன வீடு’ என்று அறிமுகம் செய்தான். குட்டி சார் இன்னும் இரண்டு படி கீழிறங்கினார். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியும், குவார்ட்டர்ஸ் கிடைக்காமல் சமைக்க முடியாமல் மழையில் மெஸ்ஸுக்கு போவதும் முடியாமல், நஞ்சப்பன் கொண்டு வரும் ஆறிப்போன சாப்பாடுமாய் இருந்த நிலையில் ஒரு குவார்ட்டர்ஸ் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியும் பேச்சிலர் என்பதால் ஷேர் செய்து கொள்வது வசதியாக இருந்தது. அடுத்த குவார்ட்டர்ஸ் குட்டியின் நெருங்கிய நண்பரான ராமச்சந்த்ரன் நாயருடையது.

அது கட்டுமான அலுவலகம் என்பதால், எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் காலையில் சைட் இன்ஸ்பெக்‌ஷன், அது இது என்று அலைந்து விட்டு அலுவலகம் வருவதே பெரும்பாலும் மாலை ஐந்து மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் அலுவலகம் வேலை தொடங்கி இரவு ஒன்று இரண்டு என்று நடக்கும் என்பதால், பகல் போதில் அவரவர் வசதிக்கு வந்து வேலை பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் பக்கத்து குவார்ட்டர்சில் சீட்டுக் கச்சேரி காலை பத்து மணிவாக்கில் தொடங்கிவிடும். சும்மாவே அதிரச் சிரிக்கும் குட்டி சாரின் குரல், சரக்கும் சேர்ந்துவிட்டால் குவார்ட்டர்ஸ் அதிரும். முன்னூரு ரூபாய் அதிகம் வருமென்று இந்தக் காட்டிற்கு ப்ரோமோஷனில் வந்த எனக்கு, ஒரு ஆட்டத்துக்கு 200, 500 என்று ஆட்டம் நடப்பது நம்ப முடியாததாகவிருந்தது.

அதிக பட்சம் 50ரூ கேம் ஆடுவான் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாள் இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது குட்டி சாரின் கிளப் கதையோடு சின்ன வீட்டின் கதையும் சொன்னான். நகரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப் அது. ரெஸ்ட் ஹவுஸ் குட்டி சாரின் பராமரிப்பில் இருந்ததாலும், மத்திய அரசின் ஒரு மூத்த அதிகாரி என்ற சலுகையும் அவரை உறுப்பினராக்கியது. சீட்டாட்டம் என்பது அங்கே வெறும் ஆட்டம் மட்டுமில்லை. அந்தஸ்தோடு சேர்ந்த விஷயம். பிஸினஸ் போலவே அங்கும் நாணயம் முக்கியம். குறைந்த எண்ணிக்கை சீட்டு எடுப்பவர் போடுவதுதான் பந்தயம். முடியாது என்று எழுந்திருந்தால் ஒரு மாதம் சஸ்பெண்ட் என்பதோடு, இன்ஸால்வென்ஸி கொடுத்ததற்குச் சமமான சமூக மதிப்பு. கையில் காசில்லை என்றால் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால் போதும். பணம் கொடுக்க அடுத்த நாள் வரை டயம் தருவார்கள். தவறினால் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பதான காட்டு விதிகளுடன் கூடிய க்ளப்பாம். 

சபிக்கப்பட்ட ஒரு நாளின் இறுதியில் குட்டிசாருக்கு ரூ 50000 கடன் ஆனது. அடுத்த நாள் கொடுத்தாக வேண்டுமாம். வங்கியிலும் இருப்பில்லை. செய்வதறியாது வீட்டில் இருந்தவரை வீட்டுச் சொந்தக்காரரின் மகள் காரணம் கேட்டிருக்கிறாள். போதையில் நடந்ததைச் சொல்லி அழுதவரை தன் நகைகளைக் கொடுத்து விற்றுக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாளாம். அவள் ஒரு செக்ஸ் ஒர்க்கராக இருந்தாள் என்றும் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. நகையை விற்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, மிகுந்த பணத்தில் சீட்டாட உட்கார்ந்த குட்டியின் மடியில் அதிர்ஷ்டதேவதையும் அமர்ந்தாள் போலும். அன்றைய ஆட்டத்தின் முடிவில் குட்டியின் வெற்றி தந்த பரிசு இரண்டரை லட்சமாம். தான் அந்த ஊரில் இருக்கும் வரை தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என்ற உடன் படிக்கையில் அந்தப் பெண்ணுடன் இருப்பதாகச் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. 

சோம்பலான ஒரு ஞாயிறன்று ராமன் நாயர் கடைக்கு காலை டிஃபனுக்குப் போனபோது பத்து மணியிருக்கும். ’தோசா இல்லா சாரே. இரிக்கு. அஞ்சு மினிட்டில சப்பாதி தரும்’ என்று  காத்திருந்தபோது ‘எடோ நாயரே!’ என்ற குட்டியின் குரல். அதிகபட்ச போதை. கையில் ஒரு பை. வழக்கமான, இடி சிரிப்புடனான குட் மார்னிங் டி.ஏ. சார் இல்லை. நான் இருப்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘இதில் கரி மீனும், கோழியும் உண்டு. ச்சோறு இவிடதன்னே. கேட்டோ. ஞான் இப்பத்தன்னே வராம்’ என்று கொடுத்துவிட்டுப் போனார்.

என்ன ராமண்ணா, காலையிலயே இன்னைக்கு என்றேன். எண்ட குருவாயூரப்பண்ட களி சாரே. இன்னு ஞான் மாட்டி. எப்பவோ செத்திருக்கணும் இந்தாளு. போயிருந்தா நன்னாயிட்டிருக்கும். பெரிய ப்ரிட்ஜிலிருந்து விழுந்து கால் மட்டும் உடையுன்னது இப்படி ஜீவிக்கான் வேண்டியோ சாரே. ரண்டு வாரம் ஊர் முழுக்கத் தேடி சாரே. பின்னே நொண்டி நொண்டி வந்தது ஆளு. காட்டிலிருக்குன்ன ஜனங்கள் வைத்தியம் பார்த்தது கொண்டாணு ஆயாளு ஜீவிச்சு. பின்னே கொறே விஷயம் நடந்து போயி.

உடம்பு முழுக்க ரோகம் சாரே. ரண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்நு. குடலும் கெட்டுப் போயி. பீப்பீ, சக்கரா எல்லாமுண்டு. உப்பு கூடாது, சக்கரை கூடாது. மாமிசம் கூடாது. குடிக்கக் கூடாது. சொன்னாக் கேட்டாதானே. ‘பின்னெந்தாடா ஜீவிக்கணும்’ என்னு களியாக்கும் சாரே. நாட்டிலிருந்து மோன் வந்திருக்கும். காசு வேண்டி. அதாணு இப்பமே ஆரம்பிச்சு. இனி வந்து குடியும் அழுகையும் எண்டே ஈஸ்வரா. சாரு அறியுமல்லே. இவிட உள்ள பெண்குட்டி சார்னு சின்ன வீடுன்னு பறையும் மக்களு. அதல்லா சாரே நிஜம். அது ஒரு பாவப்பட்ட குடும்பம். பெரிய மோளுக்கு தீராத்த ஒரு ரோகம். இவள் சின்ன வயசிலேயே தெற்றிப் போயி. அச்சனுக்கு சுகக்கேடாணு. குட்டி சார் இவிட வரும்போ என்னொத்த பிராயம். 

ஆபீசு பணியல்லல்லே. எப்பவோ போகும். எப்பவோ வரும். தாமசிக்கான், சோறுண்ணான் வேண்டி அவருடே வீட்டில் கேறி. சாரு அறியுல்லே குட்டி சாரிண்டே சீட்டுக் களியிண்டே பிரபாவம். அது நிஜமாணு. பின்னே ஆ பெண்ணு யாரோடோ கர்ப்பமாயி. அவளுக்கு அபார்ஷன் செய்யானு வழியில்லான்னு பறஞ்சு டாக்டர்மாரு. இவனுக்கெந்தா பற்றி சாரே. மணிப்பாலிலே கொண்டு எத்தி. ப்ராந்தணாணு சாரே இவன். கலியாணம் கழிச்சில்லா. அவளினு கூட்டிக் கொண்டு போய் ஒரு வீடு உண்டாக்கி கொடுத்து அவிடயா தாமசிக்குண்ணு. இவிட எல்லாரும் பேசுன்னது ஆயாளு அறியும். பின்னே யாரும் நேரே சம்சாரிக்கானில்லல்லோ. அத்தர பயமா குட்டி சாருனு கண்டெங்கில். பின்னே நூறு கதை சம்சாரிக்கும். தூ. 

எனிக்கறிஞ்சி பின்ன ஒரே ஒரு தரம் நாட்டிக்கு போயி சாரே. எந்தாயி, ஏது சமாச்சாரம் ஒன்னும் பறையில்லா ஆயாளு. ‘நாயரே. இனி ஞான் நாட்டிக்கு போகுல்லடே’ன்னு மாத்ரமா பறஞ்சது. பின்னே ஆரம்பிச்சதாணு தினம் குடி. மோன் வரும். வெறும் ஃபீஸ், ட்ரெஸ்ஸுக்கு மாத்திரம் அம்மை சொன்ன எமவுண்ட் வேண்டிப் போகும். சொந்த மகனல்லே. அவன் வந்நு போயால் இவிடத்தன்னே சாரிண்டே களி. நீ போய்க்கோ சாரே. ஒரு பாடு ஜோலியுண்டு. வரும்போ மீன் கறி ரெடியாட்டிருக்கணும் என்றனுப்பி வைத்தார்.

பின்னெப்போதும் குட்டி சாரை தரக்குறைவாக நினைக்கத் தோன்றியதில்லை. ட்ரான்ஸ்ஃபரில் கிளம்பி வரும்போது, ஸ்டேஷனுக்கு வந்து கிளம்பும் சமயம் இறுகக் கட்டிக் கொண்டு, ‘சாரே! என்னே மாத்ரம் மறக்கரிது கேட்டோ! வி ஹேட் அ நைஸ் டைம்’ என்றபோது உடைந்துவிட்டேன். ‘இதெந்தினா அய்யே! சாரு வரும்போ செறிய குட்டியாணு. இப்போ கல்யாணம் கழிஞ்சல்லே சார்னு. அழுன்னது கண்டால் பெண்டாட்டி சிரிக்கும்’ என்று இடிச்சிரிப்போடு அனுப்பி வைத்தார்.

நஞ்சப்பன் மட்டும் வரும்போதெல்லாம் சந்திப்பான். இரண்டு வருடம் கழித்து சந்தித்தபோது வழக்கம் போல் குட்டி சாரை விசாரித்தேன். ‘தேவுரு இல்லா சாரே. சாரு சத்தோகிபிட்ரு’ என்றான். சாவா அது. பெரிய பாலத்திலிருந்து விழுந்து காப்பாற்றிய உயிரை இப்படிப் பறிக்கத்தானா? மோட்டார் ட்ராலியில் சரிவில் போகும்போது ஒரு ஜெர்க்கில் வீசி எறியப்பட்ட குட்டி சாரையும், அவரைக் காப்பாற்றப் பாய்ந்த ராமச்சந்திரன் நாயரையும் கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிற கரும்பு மாதிரி சிறுகச் சிறுக சிதைத்ததாம் ட்ராலி. . ‘சார் மாடித்து ஏனில்லா சாரே. குட்டி சார் ஹெண்த்தி பந்தவரே. செட்டில் மெண்ட் ஹணா மொத்தம் இவளிக கொட்டோகிபிட்ரு சார்’(சார் பண்ணினது ஒன்னுமில்லை சார். அவர் மனைவி கிடைத்த செட்டில்மெண்ட் பணம் மொத்தம் இந்தம்மாவுக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க சார்). கம்பாஷ்னேட் அப்பாயிண்ட்மெண்ட்டு பேடாந்துபிட்ரு சார் (அவர்களுக்கோ பையனுக்கோ அனுதாப அடிப்படையில் வேலை கூட வேண்டாமென்று விட்டார்கள் சார்)’ என்றான்.

அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? இத்தனை வெறுப்பு ஏன்? குட்டிக்கு ஏன் இப்படி ஒரு முடிவு? இப்படி ஒரு வாழ்க்கை? ஒரு வேளை ‘தேவுரு இல்லவா சாரே?’

Thursday, September 15, 2011

கேரக்டர்..சித்ராங்கி

அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை பெய்து கொண்டேயிருக்கும். எப்போதாவது ஒரு நாள் விட்டு சில மணி நேரம் சூரியன் தலைகாட்டும். அப்படி ஒரு நாளில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு அபூர்வமான குடியமைப்பு அந்தப் பகுதி. காஃபி, ஏலக்காய் தோட்ட அதிபர்கள், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் என்று மலையும் மடுவுமான குடிகள். தோட்ட அதிபர்களின் வீட்டுப் பெண்களை வெளியில் காண்பதே அரிது. கூலிக் குடியில் இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்த்திருக்கவே முடியாது.

ஒரு நடிகையைப் போல மேக்கப்புடன், சிவப்பு நைலக்ஸ் சேலை, ஹீல்ஸ் செருப்பு, கையில் அந்த வெயிலுக்கே விரித்த குடையுடன் இறங்கி வந்துக் கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்து குவார்டஸ் பெண்களின் கன்னட வசவும், உமிழ்தலும் பிடிபடத்தான் இல்லை. அப்போதுதான் அவளைக் கடந்து போகிற இருவரை ‘நம்ஸ்காரா அண்ணா, நம்ஸ்காரா ரீ’ என்று அவள் வணங்குவதும், ‘நம்ஸ்காரம்மா’ என்ற சொல்லோடு கடந்த அடுத்த நொடியில் ‘ஹேங்கிதாள நோடு சூளே நன்னமகா (எப்படி இருக்கிறாள் பார் விலைமாதுக்குப் பிறந்தவள்)’ என்ற சொல் அவளைக் காயப்படுத்திற்றோ இல்லையோ, என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்ததாலும், மொழிப் பிரச்சனையோடு, வயதும் சேர மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை.
அடுத்த நாளில், அவசரமாக வீட்டிற்குக் கடிதம் எழுதவேண்டியிருந்ததால், ப்யூனிடம் போஸ்டாஃபீஸ் எங்கே என்று விசாரித்தபோது, அலுவலகத்துக்கு மேலேயே லைசன்ஸ் செல்லர் இருப்பதாகத் தெரியவந்தது. இடம் விசாரித்துப் போனபோது, ஒரு டேபிளில் ட்ரேயில், கார்டு, கவர், இன்லண்ட் லெட்டர், மணியார்டர் ஃபாரம் இத்தியாதியோடு, அந்தப் பெண் அமர்ந்திருந்தார். சித்ராங்கி, லைசன்ஸ் போஸ்டல் செல்லர் என்ற போர்டும் இருந்தது. ‘ஏனு பேக்கு தம்மா (என்ன வேண்டும் தம்பி?)’ என்ற கேள்வியோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துச் சிரித்தாள். ரண்டு இன்லண்ட் லெட்டர், ரண்டு கவர் என்று காசை நீட்டியபடியே கவிழ்த்து வைக்கப் பட்ட புத்தகத்தின் மீது கண்ணை ஓட்டினேன். மைசூர் யூனிவர்சிடியின் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு புத்தகம் அது.

மாதம் ஒரு முறை மணியார்டர் அனுப்புவதற்கு மட்டும் மலையிறங்கி மெயின் போஸ்டாஃபீஸ் போனால் போதும் என்பதால், தபால் தேவைகளுக்கு அவள் வீட்டில் வாங்குவது எளிதானது. அப்படிப் போகையில், ஒரு நாள் அவளில்லாமல் போக காத்திருந்தபோது, உள்ளிருந்து, ‘ஏனு பேக்கு? (என்ன வேண்டும்) என்ற குரல் மட்டும் வந்தது. இன்லண்ட் லெட்டர் என்ற போது காசை வைத்துவிட்டு எடுத்துச் செல் என்ற அவளின் குரல் மட்டும் கேட்டது. பல நாட்களில் இப்படி நடக்கவும், தவிர அந்த ட்ரேயில் இருந்த கணிசமான காசும் அதெப்படி இப்படி ஒரு நம்பிக்கை. யாராவது காசு போடாமல் எடுத்துக் கொண்டு போனாலோ, அல்லது ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டு போனாலோ என்ன செய்வாள்? காசு வேறு இப்படி கிடக்கிறதே என்ற கேள்விகள் எழத்தான் செய்தன.

அப்படி ஒரு நாளில், கவரோடு வந்து, கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் உடன் பணிபுரியும் ரகோத்தமராவிடம் கேட்டேன். நமட்டுச் சிரிப்போடு, நீ இனிமேல் அங்கே போய் வாங்க வேண்டாம். எப்போதாவது டவுனுக்குப் போகும்போது வாங்கி வைத்துக் கொள் என்றாரே ஒழிய விஷயம் வெளிவரவில்லை. வயதில் மிக மூத்தவராதலால், தயக்கத்துடனே மாலையில் மீண்டும் கேட்டேன். நீ அங்கே போறது நல்லதில்லைப்பா. பொறுப்பான பதவியில் இருக்கிறாய். ஊரில் ஒரு மாதிரி பேச்சு வரும் என்று மேலும் தயங்கியபோது லேசாக புரிந்தது. அவரே தொடர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு பெற்றவர் யாரும் இல்லையாம். மாமன் வீட்டில் இருக்கிறாளாம். தேயிலைத் தோட்ட அதிபர்கள் எந்தப் பெண்ணைக் கை காட்டினாலும், அது அவளுடைய புருஷனே ஆனாலும், அழைத்துக் கொண்டு போய்விட வேண்டுமாம். அப்படி அவள் மாமனால் அழைத்துச் செல்லப் பட்டாளாம் படிக்கும் காலத்திலேயே. மாறி மாறி அவர்களுக்கு விருந்தாகி, ஒரு கட்டத்தில் செக்ஸ் தொழிலாளியாக மாறியவளாம்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், திருந்தி ஒரு ஆரம்பப் பாடசாலையில் டீச்சர் வேலை கிடைத்ததும் இதிலிருந்து ஒதுங்கியிருந்தாளாம். பட்டதாரி ஆனால் பிறகு உயர்வகுப்புக்கு ஆசிரியையாகச் செல்லலாம் என்ற கனவில் இருந்தவளை, ஒன்றாவது இரண்டாவது படிக்கும் பிள்ளைகளுக்கு இவள் பாடம் சொல்வதை விட வேறு ஏதோ சொல்லிக் கொடுப்பாள் என்ற ஊர் மக்களின் பிராது மீண்டும் தொழிலுக்கே தள்ளியதாம். அப்படி ஆட்கள் இருக்கும்போதுதான் ட்ரேயில் காசு போட்டு விட்டு கார்டோ கவரோ கொண்டு போகச் சொல்லுவாள் என்று கிண்டலாக அவர் சொன்னபோது அருவருப்பாய்த்தான் இருந்தது.

அதோடு அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டு அவர் சொன்னபடி மொத்தமாக கார்டு, கவர் வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. வழியில் பார்க்க நேரும்போது ‘ஏனு தம்மா பரோதில்லா’ (என்ன தம்பி வருவதே இல்லை) என்று சிரித்தபடி கேட்கையில் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பதைப்பும் அருவருப்பும் கூட வந்து தொலைந்ததே தவிர, அவள் நரகத்தைப் புரிந்து கொள்ள புத்தியில்லாமல் போனது.

ஏட்டு கெங்கண்ணா அலுவலகத்தின் மேல் புறம் அமைந்துள்ள டீக்கடையில்தான் டீக்குடிக்க வருவார். டீக்குடிப்பது ஒரு சாக்கென்பதும், அவளிடம் மாமூல் வாங்க வந்திருந்த நேரம் சரியில்லையென்பதால் டீக்குடித்துக் காத்திருப்பதும், டீக்கடை ராமன் நாயர் பின்பு சொல்லித்தான் தெரியும். புழுவை விடக் கேவலமாக, ‘அவனுக்க நாயி மேலல்லா சாரே! அவளே விதியில்லாம உடம்ப விக்கிறா. இந்த வேசிமகன் அதுக்க காசும் வேண்டிட்டு அவளுக்க சுகமும் கேப்பான். பட்டிமகன்’ என்று உமிழ்வார். ஒரு நாள், ‘சூளே முண்டே! நன்னத்தர ஆட்டவாடுத்தியா (தேவடியா முண்டை, என்னிடமே விளையாடுகிறாயா)’ என்ற குழறலான கெங்கண்ணாவின் மிரட்டலும் ’(அண்ணா பிட்டு பிடண்ணா, நினக தேவரு ஒள்ளேது மாடலி (அண்ணா விடு அண்ணா, கடவுள் உனக்கு நல்லது செய்யட்டும்)’ என்ற அவள் கதறலும் அலுவலகம் முழுதையும் வெளிக் கொணர்ந்தது. அவிழ்த்துத் தோளில் போட்ட சட்டையோடு, அவளைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் கெங்கண்ணா. இரண்டு கையாலும் புடவையை மார்பைச் சுற்றி இருக்கிக் கொண்டு நாய் போல் இழுபட்டுக் கதறிக் கொண்டிருந்தாள் சித்ராங்கி.

‘விடய்யா கெங்கண்ணா அவளை’ என்று வந்த ராமன் நாயரை ஒரே தள்ளில் விழுத்திக் கொக்கரித்தான் கெங்கண்ணா. காசும் கொடுக்காமல் உடம்பு சரியில்லை என்று அவனோடு படுக்கவும் மறுத்தாளாம் அவள். அத்தனை பேரிருந்தும் ஒருவரும் அவளுக்காக பேச வரவில்லை. சுற்றிலும் குவார்ட்டர்ஸ். பெண்களெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்காக பேசி குடும்பத்தில் குழப்பம் வருமென்ற பயமும் ஆண்களும் ஒதுங்கியிருக்க ஒரு காரணம். அப்போது பார்த்து அவள் நல்லகாலம், எங்கள் இன்ஸ்பெக்டர் அப்துல்லா குட்டி வந்து சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் என்றால் போலீஸ் இல்லை. பில்டிங் இன்ஸ்பெக்டர். கோட்டை அறையாய் ஒரு அறை கொடுத்தார் கெங்கண்ணனுக்கு. அவன் மேலிருந்த சட்டையை பிடுங்கி தன்னிடம் பணி புரிபவனிடம் கொடுத்து, ‘ஹேமவதி ஆத்தில் கொண்டு போய் போடுடா’ என்றார்; ’தாயி! நீனு மனேக ஹோகம்மா (தாயீ நீ வீட்டுக்கு போம்மா) என்றார். சிங்கம் போல் கர்ஜித்த கெங்கண்ணா நாயை விடக் கேவலமானான். காலில் விழுந்தான். பேட்ஜ் போனால் சஸ்பெண்ட் பண்ணி விடுவார்கள் என்று அழுதான்.

கட்டுடா அவனை என்று லாம்ப் போஸ்டில் கட்டவைத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போட்டு இன்ஸ்பெக்டரை வரவழைத்தார். வீடு புகுந்து பெண்ணை நடு ரோட்டிற்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்தியதாக புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார். ஒரு வழியாக கெங்கண்ணா இனி தொல்லை கொடுக்கமாட்டான் என்ற உத்தரவாதத்தின் பேரில் கெங்கண்ணா விடுவிக்கப்பட்டான். ‘அண்ணா, அண்ணா என்று இரு கை கூப்பி உதடு துடிக்க அழுதவளை போம்மா’ என்று அனுப்பிவிட்டு, ‘வா சாரே, நமுக்கு ஒரு டீ குடிக்காம் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார் அப்துல்லா குட்டி.
ஒரு சில மாதங்களில் பஞ்சாயத்து எலக்‌ஷன் வந்தது. தோட்டத்து முதலாளிகள் ஆதரவில் ஆளுங்கட்சிக்கு ஒருவரும், அவனின் பரம எதிரியான ஒருவனும் வேட்பாளராவதாகப் பேச்சு இருந்தது. அப்போதே ஏதாவது வெட்டு குத்து நடக்கும் என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. அதற்கும் பகடைக்காய் ஆணாள் சித்ராங்கி. 

எதிர்க்கட்சி ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு, கன்னாபின்னாவென்று காயப்பட்டு, ஆளும்கட்சி வேட்பாளர் கடத்திச் சென்று அடித்ததாக கேஸ் கொடுக்க வைத்தார்கள். கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி ஆளும் கட்சி ஆட்களிடமும் அடியும் உதையும் விழுந்தது. தேர்தல் இருந்ததால் உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டு கோர்ட்டில் உடனடியாக கேஸ் வந்தது.
யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் சித்ராங்கி. ஆளும் கட்சி ஆளைக் கவிழ்ப்பதற்காக அடித்து உதைத்து புகார் கொடுக்க வைத்ததைச் சொன்னாள். புகாரை வாபஸ் வாங்க ஆளும் கட்சி ஆட்கள் அடித்ததையும் சொன்னாள். அதையும் விட ஊர் முழுதும் பேச்சானது அவளின் சாட்சி. ‘எஜமானரே! உங்கள் முன் பல முறை விபச்சாரத்துக்காக ஃபைன் கட்டியிருக்கிறேன். டீச்சராக இருந்தேன். இந்தத் தொழிலைச் சொல்லி என்னை அதில் நிலைக்க விடவில்லை. இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சுயமாகத்தான் நான் முன்னேற முடியும். நானும் ஒரு வேட்பாளராக களமிறங்கப் போகிறேன். எனக்குப் பாதுகாப்பு வேண்டும். யாருக்காகவோ பலிகடா ஆக்கப்பட்டேன். அவர்கள் மேல் வருத்தம் மட்டுமே இருக்கிறது. கேசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றாளாம். .

அதே கெங்கண்ணா பாதுகாவலுடன், ‘அம்மா,, அவ்வா,,அண்ணா,,தாத்தா’ என்று வயதுக்கேற்றவாறு கால் பிடித்து கை பிடித்து ஓட்டுக் கேட்டாள். இதற்குள் எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி சென்னை வந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அங்கிருந்து வந்த ஒரு ஊழியர் நஞ்சப்பன் என்னைச் சந்தித்தபோது கேட்டேன். அவளின் தைரியத்தை மெச்சியோ, கவுன்சிலரானால் தன் வீட்டு ஆண்மகன்கள் இவளிடம் இனி காசைத் தொலைக்க மாட்டார்கள் என்றோ விழுந்த ஓட்டுகள் போக, ஆளும் கட்சி வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கியதால் அந்த ஒட்டும் கிடைத்ததாம்.

சித்திராங்கி பெருத்த வாக்கு வித்தியாசத்தில் கவுன்ஸிலராகிவிட்டாளாம். தன்னை வேலையிலிருந்து தூக்கிய பள்ளிக்கு நிதி திரட்டி நல்லதாகக் கட்டிக் கொடுத்தாளாம். ஊரில் பெருமதிப்பாம் அவளுக்கு. எல்லாம் விட ‘நம்ம ஊரிந்த ஒந்தே ஒந்து ஹெண்ணுகே கண்ணாக்தக்கே பிடல்லா ஆ எஸ்டேட் சூளே நன்ன மக்க சாயபுருக்கே சார். (நம்ம ஊர் பெண்கள் ஒருத்தி மேலும் அந்த எஸ்டேட் அதிபர்கள் கண்ணெடுத்துப் பார்க்க விடுவதில்லை சார்)’ என்று சொன்னபோது குரல் கம்மியது நஞ்சப்பனுக்கு

(பண்புடன் செப்டம்பர் 15 மின்னிதழில் வெளியானது)