Sunday, May 1, 2011

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - வாசிப்பனுபவம்.

கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ படித்த பின்பு அவரின் எழுத்தாளுமை ஆட்கொண்டது. அதன் தாக்கம் குறையவும், நாஞ்சில் நாடன் கதைகள், கருப்பு நிலாக் கதைகள் என்று வரிசைகட்டி நின்றவற்றை முடிக்கவுமான கால அவகாசம் தேவைப்பட்டது.  மீண்டும் கண்மணி குணசேகரனின் ‘வெள்ளெருக்கு’, மற்றும் ‘நெடுஞ்சாலை’ வரிசையில் முந்தியது.

வழக்கம் போல கண்மணி குணசேகரன் கட்டிப் போடத் தவரவில்லை. ‘அஞ்சலை’ ஒருத்தியின் போராட்டம் ஒரு வகை என்றால் ‘வெள்ளெருக்கு’ சிறுகதைத் தொகுப்பு அதன் பல பரிமாணங்களைக் காட்டுகிறது. வர்ணனையோ, வாதையோ அதனதன் இயல்பில் வெகு இயல்பாக வந்து விழுகிறது. மேம்போக்காக படித்துவிடமுடியுமா மனிதர்களையும், அவர்களின் வாழ்வின் போராட்டங்களையும்? ஒரு கதை முடித்ததும் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கும் போது, கண்மூடி அதில் ஆழ்ந்து அதற்குரிய மரியாதையைக் கொடுத்து, உன்னில் இதனைக் கற்றுக் கொண்டேன். இன்னும் கற்க இருக்கிறது என்று அடுத்த பாடத்துக்கு நகர்ந்தாக வேண்டும்.

‘கொடிபாதை’ ஒரு கிராமத்தின் வழியே செல்லும் பேருந்தில் நடக்கும் பிரசவம். அவ்வளவுதானா அது? ஒரு வீம்பு பிடித்தவளின் காதல், நிறைப் பிரசவ நேரத்திலும் உழைத்தால்தான் முடியும் என்ற ஏழ்மை, தவிக்கும் ஒரு பெண்ணுக்காய் பதறும் ஆணும் பெண்ணுமாய் மனிதக் கூட்டம், வண்டியின் குலுக்கலில் பிரசவித்து பின்னும் மருத்துவமனைக்குச் சென்றால் செலவு என்ற ஏழ்மையின் யதார்த்தம். எள்ளுக் காய்களை தகடையாக்கி விரையும் பேருந்தை கூட்டமாய் எதிர்க்கும் ‘மாப் சைக்காலஜி’ ஒரு பெண் பிரசவத்துக்காய் தவிக்கையில் ஆக்கபூர்வமாய் மாறும் விந்தையும் எடுத்துக்காட்டும் வெள்ளந்தி மனிதர்கள் நேசமுற வைப்பதோடு இந்த உணர்ச்சி வேகம்தானே நாசத்தையும் தருகிறது என்ற யதார்த்தத்தை சொல்லாமல் சொல்கிறது.

ஆணிகளின் கதை’ விதவிதமான மனிதர்களின் ஆவிகளின் மூலமாக அவர்களின் வாழ்க்கைக் கதையாக ஆலமரத்தில் ஆணியிறக்கப்பட்டு கட்டுப்படுகிறது. ஆவியான பின்னும் பெண்ணுக்கு அலையும் பேட்டையானுக்கு இரையாகும் சபிக்கப்பட்டவளின் ஆவி எத்தனை துரோகங்களைச் சொல்கிறது?

முதலிரவுக்குச் சென்றவளாயினும் உட்புகுந்து இழுத்துச் சென்று தாலிகட்டும் உரிமை கொண்ட தாய்மாமன்களைக் கேட்டதுண்டா? மனிதருக்குள்தான் எத்தனை நியதிகள்? பெண் என்பவளின் முறைமை மீதான உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு விருந்தும், பணமும் ஈடு. அதில் குறை கூறி பன்றியின் ஈரலுக்கும், ரத்தத்துக்கும், சாராயத்துக்கும், பணத்துக்கும் ஒரு பெண்ணின் முதலிரவை தடுத்து நிறுத்தும் தாய்மாமன். இரண்டாம் விருந்தும், காசும் வந்த பிறகு விடியலில் முதலிரவுக்கு போகச் சொல்கையில் சிட்டுவின் மனம்தான் எவ்வளவு குன்றிப் போயிருக்கும்? ‘சமாதானக் கறி’யில் ஊர் கூடி முதலிரவுக்கு சம்மதிக்கையில் சிட்டு தெளிக்கும் சாணி சமுதாயத்தின் முகத்தில்.

ஊர் ஊராய் ஒடுக்கெடுத்துப் பிழைக்கும் தங்களானும் கங்காயியும் என்னுமா ஒரு வயசி புள்ளையை வளர்க்கறது? இந்த ஒரு கதைக்கே குணசேகரனுக்கு தங்க மோதிரம் போடலாம். ‘புள்ளிப் பொட்டையின்’ முதல் நான்கு பத்திகளுக்கு ஈடாக எந்த ஒரு திரைப்படத்திலும் கற்பழிப்புக்காட்சி இருந்திருக்க முடியாது. புள்ளிப் பெட்டையின் பதைப்பும் நடுக்கமும், இயலாமையும், இறுதியாய் ஒரு முட்டையிட அது படும் பாடும், ஒரு பெட்டைக் கோழி கூட்டை விட்டு வந்தால் ஊர்ச்சேவல்களுக்குதான் எத்தனைக் கொண்டாட்டம் என்பதன் மூலம் ‘வயசி பிள்ளைக்கு’ இந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பற்ற தன்மையை எவ்வளவு நேர்த்தியாய் சொல்கிறார் குணசேகரன்.

கிக்குலிஞ்சானில்’ கௌதாரி பிடித்து பிழைப்பை நடத்தும் கூனன் வயதான காலத்தில் விரட்டப்பட்டு இறக்கும் அவலமும், ‘மழிப்பில்’ குடிக்கு அடிமையான ரத்னவேல் போதையில் தன்னைப் பராமரிக்காத ஊரைக் குதறியெடுக்கும் வலியும், ‘ஏவலில்’ பேங்கு ரெட்டி தன் அதிகாரத்துக்கு சக்கரைக்கு ரெண்டாம்தாரம் கட்டிக் கொள்ள ஏவி விட்டு சக்கரை படும் பாடும், ‘ராக்காலத்தில்’ பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை மாடுகளைக் கட்டாமல் நாசமடித்து வம்பிழுக்கும் முந்திரிக் காட்டுக்காரர்களின் அடாவடியும், ‘வனாந்திரத்தில்’ ஒற்றைப் பிள்ளையைக் கடைத்தேத்த முந்திரி பயறு பொறுக்கி காசாக்கும் அம்மா ஒரு நாளாவது தின்னட்டும் என்று அடம் பிடித்து வறுக்கச் சொல்லும் பிள்ளையின் பாசமும், பிள்ளைக்காக காசு போனாலும் பரவாயில்லை எனக் கறியாக்கும் தாயின் பரிவும், பிழைக்க கரிக்கு வழியின்றி சிதைக் கரியை பொறுக்கி வந்து கத்தி பதப்படுத்தி ‘சீவனம்’ செய்யும் கொல்ல ஆசாரியும், ஆசியரின் குழந்தைக்கு அரைஞாண் கயிறு திரிக்க ‘வெள்ளெருக்கு’த் தேடிப் போகும் கிராமப்புற மாணவர்களின் அவலமும், ஓவியனாகத் துடிக்கும் இளைஞனுக்கு சுதைக் குதிரையின் கால் குளம்புக்கு கருப்பு வண்ணம் அடிப்பதிலிருந்து அதன் குறிக்கு சிவப்பு வண்ணம் அடிக்கக் கிடைக்கும் பதவி உயர்வுமாய் எத்தனை உணர்ச்சிப் போராட்டங்கள்?

இத்தனைக் கதைகளுக்கு மத்தியில் இதயத்தை இழுத்துப் பிடித்து கண்ணீர் துளிர்க்கவைக்கும் கதைகள் இரண்டு. சிவப்பாய் பிறந்த காரணத்தால் செல்லமாய் முன் கோபக்காரியாய் வளர்ந்த லட்சுமிக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு சித்ராவுக்கு வாய்த்தது அவளின் பழந்துணிமணியும், பாடப்புத்தகமும் மட்டுமல்ல விதி விரித்த வலையில் அவள் குழந்தையும், புருஷனும் கூடத்தான்.

ஒரு குழந்தைக்கு வழியின்றி அண்ணன் மகன்களின் கேலிக்கு ஆளாகி, இருக்கும் கரட்டுக் காட்டையும் பிடுங்கிவிடுவார்களோ என்று ஏமாந்து போகும் வெங்கடாலம் ஆசையாய் வளர்த்த ஒற்றைப் பனையையும் கரட்டையும் விட்டு வாங்கு கத்தி எனக்கு இருக்கு என்று ‘ஆண் ’ மகனாய்ப் போகும்போது நம் உள்ளத்தையும் சேர்த்தெடுத்துப் போகிறான்.

எப்போதும் போல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்த கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துச் சொல்வதும் இன்னும் சிறந்த படைப்புகளுக்காய்க் காத்திருத்தலும் தவிர வேறென்ன செய்ய இயலும். 
 
_/\_

23 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நிறைவான பகிர்வு பாலாண்ணா.

இனிமேல்தான் கண்மணி குணசேகரனைப்படிக்க வேண்டும்.

இந்த இடுகை அவரைத் தேட வைக்கிறது.

ஈரோடு கதிர் said...

ஒவ்வொரு கதையும் உடனே அடுத்த கதைக்கு தாண்டவிடாமல், அங்கேயே சுற்றிச்சுழலடித்த தொகுப்பு

ஓலை said...

Arumaiyaana thoguppu ungalathu.

க.பாலாசி said...

இன்னும் படிக்கல.. வாங்கணும்னு எழுதி வச்சிருந்தேன்.. எப்டியோ விட்டுட்டேன்..

லேசா எரிகிற விளக்கை தூண்டிவிட்டதுபோலான விமர்சனம்... படிக்கணும்..

Paleo God said...

நன்றி சார். லிஸ்ட்ல சேர்த்தாச்சு! :))

R. Gopi said...

\\எப்போதும் போல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தந்த கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்துச் சொல்வதும் இன்னும் சிறந்த படைப்புகளுக்காய்க் காத்திருத்தலும் தவிர வேறென்ன செய்ய இயலும்\\

சிறப்பான முத்தாய்ப்பு வரிகள்

தாராபுரத்தான் said...

இது மாதிரி படைப்புகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க..தேடி படிப்போமில்ல..வேறென்ன செய்ய.

சத்ரியன் said...

போன வாரம் ஊரிலிருந்து வந்தபோது தான் “அஞ்சலை” வாங்கிட்டு வந்திருக்கேன். வேலை கூடுதலா இருக்கிரதால இன்னும் வாசிக்க ஆரம்பிக்கலை.

இப்போ,ஊரிலிருந்து யாராவது தெரிஞ்சவங்க வந்தா, வெள்ளெருக்கையும் வாங்கிவரச் சொல்லனுமே!

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு பாலாண்ணா.

அகல்விளக்கு said...

அருமையான பகிர்வு அண்ணா... :-)

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)

yogesh said...

இன்னும் படிக்கவில்லை...

காமராஜ் said...

இப்படி வரிக்கு வரி சிலாகிக்க ஒரு மனசு வேண்டும்.அது கேரக்டர் பேசும் மொழியுடைய அண்ணாவிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் குவிந்து கிடைக்கிறது.

இனி எங்காவது புத்தகக்கடையில் இவரது புத்தகங்கள் தென்பட்டால் வாங்காமல் இருக்கமுடியது.

நன்றி அண்ணா..

பழமைபேசி said...

உங்களுக்கு மட்டும் இறைவன் ஒரு நாளைக்கு 48 மணித்தியாலம் கொடுத்திருக்கான். வாழ்த்துகள்!!

vasu balaji said...

@@யோகேஷ்..அவசியம் படிங்க
@@காமராஜ். நன்றிங்க காமராஜ்.

vasu balaji said...

:)). நன்றிங்க பழமை.

அது சரி(18185106603874041862) said...

இதுவரை கண்மணீ குணசேகரனை படித்ததில்லை. படிக்கும் ஆவலை தூண்டி இருக்கிறீர்கள்.

நான் படிச்சிட்டு சொல்றேன் சாரே.

vasu balaji said...

நன்றிங்க குடந்தை மணி

vasu balaji said...

/அது சரி(18185106603874041862) said...

இதுவரை கண்மணீ குணசேகரனை படித்ததில்லை. படிக்கும் ஆவலை தூண்டி இருக்கிறீர்கள்.

நான் படிச்சிட்டு சொல்றேன் சாரே./

அஞ்சலை படிச்சப்புறம் உங்க விமரிசனத்துக்காக வெயிட்டிங். :))

Admin said...

நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்

நிலாமகள் said...

சிலாக்கிய‌மான‌ எழுத்து நடையும், எளிய‌ தோற்ற‌மும், உள்நிறைந்திருக்கும் ச‌க‌ ம‌னித‌ர்க‌ள்பால் நிறைந்து த‌தும்பும் அன்பும், முத‌ல் பார்வையிலேயே அனைவ‌ரையும் உற‌வுசொல்லி அர‌வ‌ணைக்கும் வெள்ள‌ந்தியான‌ பொட்ட‌ங்காட்டுப் பேச்சுமாக‌ அலாதியான‌ ம‌னித‌ர் அவ‌ர்.பேசியிருக்கிறீர்க‌ளா அவ‌ரிட‌ம்...? 9790214515 இது என்னிட‌மிருக்கும் அவ‌ர‌து எண். முய‌ற்சிக்க‌வும். பேச்சும், எழுத்தும், வாழ்வும் வேறு வேற‌ல்ல‌ அவ‌ருக்கு.

vasu balaji said...

நன்றிங்க பேசி இருக்கிறேன் அவரிடம்.

அனைவருக்கும் அன்பு  said...

உங்களின் விமர்சனம் ஒரு படைப்பாளியின் படைப்பை உற்றுநோக்க வைக்கிறது அதற்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ........