Monday, April 4, 2011

”கருப்பு நிலாக் கதைகள்” ஒரு வாசிப்பனுபவம்.

‘கருப்பு நிலாக் கதைகள்”. கவிதைத் தலைப்புக்கேற்ற கவித்துவமான புகைப்படம். புத்தகத் திருவிழாவிற்கு நாளை போகலாம் என்றிருந்தபோது தோழர் காமராஜின் பதிவில் அதற்காகக் காத்திருப்பதாக படித்ததும், நான் உங்களுக்கு முன் வாங்கிவிடுவேன் என்று அலட்டிக் கொண்டு போய் வாங்கிப் படிக்கவும் ஆரம்பித்தாயிற்று. இடையே திருச்செங்கோடு பயணமிருந்ததால் மாதொருபாகனை அங்கு போவதற்குள் படித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இது தள்ளிப் போயிற்று.

வாசிப்பனுபவம் என்று ஒன்றிரண்டு எழுதினாலும், இந்தப் புத்தகம் தந்த அனுபவத்தை எழுதச் சற்றே தயக்கம் தட்டியதற்குக் காரணம் உண்டு.  இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து.

அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, கோவில் மணி டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ ஒரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை.

இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும். இது கல்யாணியா, காம்போஜியா என்ற விசாரம் எனக்கில்லை. மேலாண்மை பொன்னுச்சாமியின் விமரிசனத்தை விடவா சொல்லிவிட முடியும்? ஆனாலும் என் அனுபவத்தைப் பகிராமல் முடியுமா என்ன? அதுவும் கரிசல் மண்ணின் மணத்தோடான பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதைகள் வாசிப்பு மட்டுமல்ல வாழும் அனுபவமுமாயிற்றே!

"கருப்பு நிலாக்களின் கதைகள் " சமூகமென்கிற ஒரு அக்கப்போர் கூட்டம் சபிக்கப்பட்ட ஒருவளின் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தைக் கொண்டு வந்துவிடுகிறது? கோனார்க் கோவில் அருகில் இளநீர் விற்கும் பெண்ணாக, ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஓங்கிச் சிரிக்கும் சாந்தியாக மாறிய அவளுக்கு கண்ணகியென்று எத்தனை பொருத்தமாகப் பெயர். சபாஷ் காமராஜ். கண்ணகி சாந்தியான கோலம்தான் கதை.

"மருளாடியின் மேலிறங்கியவர்கள்"  இதேபோல் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிறப்பாலிழிந்தவளென்று ஒதுக்கி,  பெண்டாள மட்டும் அதை மறந்தவர்கள் நிறைந்த இச் சமூகத்தின் முகத்திரையை அவள் ஒரு சாமியார் என்று கொண்டாடும்படியாக கிழித்தெறியும் பாங்கு அற்புதம். போலியின்றி வார்த்தைகள் கிழித்துக் குதறுவது சரஸ்வதி என்கிற சச்சியை மட்டுமா? நம் மனத்தையும்தான்.

"சிறு பிள்ளைகள் என்னருகே வரத் தடை செய்யாதிருங்கள்", குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் கூறும் கதை. போலியாய் ஒரு சட்டம். அதை செயல்படுத்தாத அரசுகள் என்று அத்தனையும் ஒரு சொல்லின்றி நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் கதை.

"பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய்" ஒரு அருமையான கதை. ஒரு பாழ்மண்டபத்தின் இருட்டில் தெய்வமான ஒரு பகுத்தறிவு வாதியின் கதை எனச் சொல்லலாமா காமராஜ்?

"முளைப்பாரிகள் மீண்டும் வயலில், பாட்டுக்காரி தங்கலச்சுமி, குழந்தையாக்குபவள் " மூன்றும் அனுபவப் பகிர்வுக் கதைகள். குழந்தையாக்குபவளின் நாயகி போன்றோ தங்கலச்சுமி போன்றோ வெள்ளந்தியாகவே இருந்துவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் கதைகள்.

"சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும்
" தோழர்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தோழரின் தனிப்பட்ட இழப்பையும் சாதனையும் சொல்லும் கதை. “ஆனால் ஒரே ஒரு பார்வையில், தோளில் சாய்கையில் தலை கோதுவதில்” ஏனைய தகப்பன் பிள்ளைகள் பெறும் சந்தோஷ உலக இழப்பை மீட்டெடுக்கும் சம்பத்தும் மகள் வெண்மணியும் நம்மையறியாமல் ஒரு ரெட் சல்யூட் வைக்கச் சொல்லும் பாத்திரங்கள்.

பதினான்கு முத்தான கதைகள். அழகான அட்டை, அச்சு எல்லாம் இருந்தாலும் ப்ரூஃப் ரீடிங்கில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது. அடுத்த முறை இது நிகழக் கூடாது. உதவ நாங்கள் இருக்கிறோம் காமராஜ்.

ஒரு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.
-:o:-

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும்.//

சரியாக சொன்னீர்கள் மக்கா...

ரிஷபன் said...

அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ உரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை.


எழுத்து உங்களை உலுக்கியிருக்க வேண்டும் .. இல்லாவிட்டால் இப்படி ஒரு அருமையான விமர்சனம் வெளிப்பட்டிருக்காது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான விமர்சனம்

காமராஜ் said...

பாலாண்ணா....

இதோ கணினியின் முன்னே
நானும்,எனது இணையும்
எங்கள் கண்கள் பனிக்கிற
நான்கு சொட்டுத்துளியும்.

இது போதும்
இது மட்டுமே போதும்.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் காமராஜ்.

க ரா said...

பகிர்ந்தமைக்கு நன்றி பாலா சார்

ஓலை said...

அருமையான விமர்சனம் பாலா சார். தினமும் காலையில இன்னிக்கு கரிசல் மண்ணிலிருந்து என்ன வந்திருக்குன்னு முதல்ல தேடி ஓடி வருவது நண்பர் காமராஜின் வலை தான். கரிசல் மண்ணை கைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் ஒரு எழுத்து நடை அவரது. அது உங்களுது மற்றும் மேலாண்மை ஐயாவின் விமரிசனத்தால் இன்னும் மினுக்கிறது.

எங்க மண்ணிலிருந்து அதிகம் படைப்புகள் வருவதில்லை. முன்பு கு.சின்னப்பபாரதி. இப்போது மாதொரு பாகனின் ஆசிரியர்.

பா.ராஜாராம் said...

//சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும்//

இந்த சிறுகதையை மட்டும் நாலைஞ்சு முறை காமுவின் தளத்தில் வாசித்திருக்கிறேன் பாலாண்ணா. பிறகு 'மறுதோன்றி நினைவுகளை' எப்போ மனசு அடைத்து வந்தாலும் காமு தளத்திற்கு போய் இந்த சிறுகதை வாசிப்பது உண்டு. போலவே, மாதுவின் 'இன்னும் கிளிகள்'.

பிறகு, மஹாவின் திருமணத்திற்கு வந்த போது இவர்களிருவரின் கைகளை பற்றிய போதெல்லாம் மறுதோன்றி நினைவுகளையும், இன்னும் கிளிகளையும் பற்றியது போலத்தான் இருந்தது.

கேட்டீர்களா? கைகளை பற்றிக் கொண்டே இருந்தேன். வாசித்துக் கொண்டே இருக்கிற இச் சிறுகதைகளைப் போல.

லெச்சனமான பிறப்புகள்!

தளும்பித் தளும்பி நிறை செய்துவிட்ட ஒரு ஆசுவாசம், உங்கள் பகிர்விலும் பாலாண்ணா. பகிர்விற்கு மிக்க நன்றி!

செ.சரவணக்குமார் said...

நல்ல விமர்சனம் பாலா சார்.

//இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து. //

சத்தியமான வார்த்தைகள். மண்ணின் கலைஞன் காமு அண்ணனின் எழுத்திற்கான சரியான அங்கீகாரம் இது.

புனைவெழுத்தில் வாழ்க்கையை அப்படியே கச்சிதமாக வார்த்தெடுக்கும் காமு அண்ணனின் எழுத்துக்களுக்கு என் வந்தனங்கள்.

அண்ணனின் தளத்தில் கதைகளை வாசித்திருந்தாலும் புத்தகத்தை ஏந்திக்கொள்ளும் நாளிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

Chitra said...

ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைத்தமைக்கு நன்றிங்க.

ஸ்ரீராம். said...

//"வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது"//

உண்மை.

ரிஷபன் பாராட்டியுள்ள வரிகள் என்னையும் கவர்ந்தன.
பகிர்விற்கு நன்றி.

kashyapan said...

"கருப்பு நிலாக் கதைகள்" பற்றிய விமரிசனம் படித்ப்தேன்.தொகுப்பை படிக்கவில்லை . ஆனாலும் பல கதைகளைப் படித்துள்ளென். சக மனிதனின் துன்பம் கண்டு பொருக்க முடியாத கள்ளங்கபடமற்ற மனிதம் அற்புதமாக வெளிப்பாட்டுள்ளது. விமரிசனம் என்ற வகையில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.தனிதனியாக படிக்கும் போது கிடக்கும் சுவை தொகுப்பில் கிடைக்கவில்லை.அத்துணையும் கரிசல்பூமி, கரிசல் மொழி, கரிசல் சித்தரிப்பு தோழர்காமராஜுக்கு. ஒரு வேண்டுகோள்! மனிதர்கள் சென்னையில்,மதுரையில்,கொவையில் நெல்லையில் வாழ்கிறார்கள் அவர்களையும் எழுதுங்கள்.நீங்கள் தமிழ் எழுத்தாளர்.வெறும் கரிசல் எழுத்தாளர் என்ற முத்திரை வேண்டாமே! ---காஸ்யபன

Unknown said...

இன்னும் வாசிக்காததை நினைத்து வெக்கப்படுகிறேன்..

ராஜ நடராஜன் said...

உங்களுக்கென்ன புதுசும் படிப்பீங்க....
மூட்டை மூட்டையா கட்டி வச்சிருக்கிற கடையில தேடிப்பிடிச்சும் படிப்பீங்க.

நவீனமயத்தில் தொலைந்து போனது படிப்பு வாசனையும் கூட!

க.பாலாசி said...

இந்தக் கொடுப்பனை இன்னும் எனக்கு வாய்க்கலப்பாருங்க...

காமராஜ் சார் கதைகள்னா சொல்லவாவேணும்...!!!!!

rajasundararajan said...

முதலில், இப் பதிவுக்கும் இதை எழுதினவருக்கும் நன்றி. இப் புத்தகத்தை வாங்கிப் போட்டிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை. இன்று முடிந்தது.

வேஷங்கட்டி நடிக்கும் நாடக மேடையிற் கூட, சாதிக் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாட்டுப்புறக் கட்டாயத்தில் தொடங்கி, ஓர் ‘ஆனியன் தோசை’ சாப்பிடுகிற தகுதிக்குத் தன்னை உயர்த்திக்கொள்வதில் பெருமைகண்டவன் பெற்ற மகள் கற்று முன்னேறத் திறமை கொண்டிருப்பதில் முடிகிறாற்போல ‘கருப்புநிலாக் கதைகள்’ தொகுக்கப் பெற்றிருக்கின்றன.

நாட்டுப்புற வாழ்க்கை, இந்தியாவில், போற்றப்பட வேண்டிய ஒன்றல்ல. பாகம்பட்டுக் கிடக்கும் அது, மனிதருக்குள் மனிதர் இழுக்கி/ இழுக்குப்பட்டுப் பிழைக்கும் வெட்கக் கேடுகளால் ஆனது. இந்தக் கோளாறான நிலைமையை அதே மட்டத்தில் தந்திருக்கும் காமராஜின் எழுத்துகளை வரவேற்கிறேன். அதாவது, வற்றிப்போன நாட்டுபுற முலைக்கண்கள் இப்போதும் பசிதீரப் பால்பிலிற்றித் ததும்புவதாக எழுதிப் புனையும் பொய்யர்களிடையே, சாதி இழிவுகளை ஒதுக்கிப் பொருளாதார நசிவுகளை - அல்லது பொருளாதார நிலைவேறுபாட்டை ஒதுக்கிச் சாதி இழிவுகளை - மட்டுமே கணக்கில் எடுத்துக் கூவும் ஒருதலைப் புரட்சியாளர்களிடையே, எல்லா நிலைகளிலும் உள்ள சீர்கேடுகளை அவற்றின் இருண்மை மட்டத்திலேயே கதைகளாக்கித் தந்திருக்கிற காமராஜின் எழுத்துகளை வரவேற்கிறேன்.

சச்சு, கண்ணகி முதலிய குணவார்ப்புகள் தங்கள் பிரச்சனைகளுக்குக் கண்டு தேர்கிற தீர்வுகள், (புரட்சி அல்லது சமூக நீதிக்) கற்பனைகளாக அல்லாமல் அந்தந்தச் சூழ்நிலைகளில் இருந்து பெறப்பட்டனவாக அமைந்திருப்பதைக் கவனிக்க வாசகர்களை வேண்டுகிறேன். ஓரொரு கதையிலும் அப்படி இயல்பாக...

வாழ்க!

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி.

Unknown said...

நல்ல விமர்சனம், இந்த புத்தகத்தை இன்றே வாங்கி படிக்கும் ஆவலை உண்டாக்கி விட்டது.