Wednesday, January 26, 2011

எலி புராணம்.




அப்பாவுக்கும் எலிக்கும் அப்படி ஒரு ஜென்மப் பகை இருக்கக் காரணமென்ன என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு புதிர். பின்னாளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்த பிறகு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களைப் பார்க்க நேர்ந்ததில் அவர்களுக்கிடையேயான பகைமையை விட நீயின்றி நானில்லை என்ற உறவு புரிந்தது. அப்புறம் ஏனோ அப்பாவின் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஜெர்ரியின் முகமும் சேர்ந்தே நினைவுக்கு வரும்.


ஒரு மழைக்கால காலையில் அலுவலகம் செல்வதற்காகத் தயாரான அப்பா உத்திரத்தில் மாட்டியிருந்த குடையை எடுக்கப் போனார். குடையென்றால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அதன் கீழ் ஒரு குடும்பமே நனையாமல் நடக்க முடியுமளவுக்கு பெரிய குடை. மூங்கில் தண்டும் உலக்கைக்குச் சற்றே குறைந்த சைசில் குறுக்குக் கம்பிகளும், திறந்தால் நட்சத்திரம் போல் பல துளைகள் வழியே வெளிச்சமும் தெரியும் குடை அது. தவலையைக் கவிழ்த்துப் போட்டு குடையை எடுக்க அடிப்பகுதியைத் தொட்ட அப்பா 'உய்க்' என்று ஒரு வினோத சப்தத்துடன் தவலை ஒரு மூலைக்கும் அவர் தரையிலுமாக கிடக்க அவர்களுக்கிடையேயான மோதலின் அறிமுகம் நடந்தது.


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, ஒரு போராளியின் வெறியுடன் ஸ்டூலின் மேல் தவலையைப் போட்டு ஏறி, 'தவலையைப் பிடிடி' என்று அம்மாவுக்கு உத்தரவு போட்டு கரகாட்டக் காரனின் நேர்த்தியுடன் ஏறி நின்றபோது அம்மா தவலையை ஒரு கையிலும் தாலியை ஒரு கையிலும் பிடித்தபடி நின்றிருந்தாள். ஒரு வழியாக குடையின் வாய்ப்பகுதியை சேர்த்துப் பிடித்து, உத்திரத்திலிருந்து எடுத்து வெற்றிக் களிப்பில் அங்கிருந்தே குதித்து தலைசுத்தி தடுமாறினாலும் 'நம்மகிட்டயேவா' என்ற அப்பாவின் தோரணையும், 'ஆம்பிள்ளே சிங்கம்' என்று அம்மாவின் கண்ணில் தெரிந்த பெருமையும் காலத்தால் அழியாத ஓவியம்.


குடையை அவர் பிடித்திருந்த இடத்துக்கு அரையடிக்கு கீழே காட்டி அம்மாவைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி அதற்குக் கீழே தான் சணலால் கட்டி வாளித் தண்ணீரில் முக்கிவிடுவதாகவும் சொன்னபோது அம்மாவின் பார்வையில் அப்பா வில்லனாகிப் போனார். ஆனாலும், மனம் கோணாமல் 'நீங்க அப்படியே புடிச்சிருங்க. நான் கட்டுறேன்' என்று அம்மா, குடையில் புடைத்திருந்த பகுதிக்கு சற்றே மேல் சணலால் இருக்கக் கட்டியிய பிறகு வாளித் தண்ணீரில் முக்கிவிட்டு வெளிவரும் குமிழிகள் அடங்கக் காத்திருந்தார் அப்பா. கட்டிய குடைதானே என்று எலி ஜல சமாதி அடைவதைக் காண, நான், அம்மா, அக்கா, தம்பி என்று காத்திருந்தோம்.


சுறா படத்தில் விஜய் கடலுக்குள்ளிருந்து ராக்கெட் மாதிரி கிளம்புவாரே அப்படி எலி குடையை ஓட்டை போட்டு தண்ணீருக்குள்ளிருந்து எங்களையெல்லாம் விட்டு சரியாக அப்பாவின் மேல் பாய்ந்தது . அப்பா 'அய்யோ' என்று அலறித் துள்ளி முழங்கையை சுவற்றில் இடித்துக் கொண்டு கரண்ட் கம்பியில் அடிபட்ட காகம் போல் விழ, இப்போது எலி 'நம்ம கிட்டயேவா' என்று ஒரு பார்வை பார்த்து வீட்டுக்குள் ஓடி மறைந்தது.


அன்றைக்கு அலுவலகத்துக்கு மட்டமடித்துவிட்டு கந்தசாமி கோவிலுக்குச் சென்று எலிப் பொறி வாங்குவதாக முடிவானது. அதிலும் பொறியை எடுக்க வரும் எலியின் தலையை அழுத்திக் கொல்லும் ஸ்ப்ரிங் பொறிதான் என்று அப்பா கொலை வெறியோடிருக்க, சமரச சன்மார்க்கத்தின் பிரதிநிதியாக மரப் பொறிதான் என்று அம்மா முடிவெடுக்க எப்போதும் போல் 'தாய்க்குப் பின் தாரம்' 'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற முதுமொழிகளை சேர்த்துப் புரிந்து வைத்திருந்த அப்பா மரப் பொறியுடன் திரும்பினார். எலி புண்ணியத்தில் மழைக்கால மாலையில் சுடச் சுட மசால்வடை எங்களுக்கு வாய்த்தது. அதிலும் முதல் வடை எலிக்கு என்று அப்பா எடுத்து வைத்த பாசத்தை நாங்கள் கண்டதேயில்லை.


வடையை வைத்துவிட்டு விளக்கெல்லாம் அணைத்துவிட்டு வைகுண்ட ஏகாதசி போல் காத்திருக்க, சொல்லி வைத்தாற்போல் அப்பாவின் மேல் ஏறி ஓடியது எலி. காத்திருந்தும் படக்கென்ற சத்தம் வராததால் பொறுமையிழந்து விளக்கைப் போட்டுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, எலி வடையை லவட்டிக் கொண்டு ரிடர்ன் ஜர்னியில் அப்பாவுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டுப் போனது. பிறகு நெய்தடவி சுட்ட வெங்காயம், சுட்ட தேங்காய்ச் சில்லு என்று விதவிதமாக வைத்தபோதும், தினமும் வந்து நேரத்துக்கு லவட்டிக் கொண்டு போய்விடும்.


ஒரு ஞாயிறு பகல் போதில், அதற்கும் போரடித்ததோ என்னவோ, ஸ்டவ் துடைத்துக் கொண்டிருந்த அப்பாவின் முதுகு வழியேறி காதில் கிசுகிசுத்து துடையில் நின்று ஸ்டைலாய் பார்க்க பதறி, அவர் விட்ட உதையில் மண்ணெண்ணெய் சீசா சிதற, அடுத்த நொடி நான் ஸ்டூல் மீதும் தம்பி அலமாரியில் இரண்டாம் படியிலும் தொத்திக் கொண்டு சிரிக்கத் தொடங்கினோம். 'அடியே கதவைச் சாத்தடி' என்று உத்தரவு போட்ட கையோடு துணி உலர்த்தும் கழியைத் தூக்கிப் பிடித்தபடி டைகர் உட்ஸ் கோல்ஃப் மட்டையைப் பிடித்தாற்போல் பிடித்துக் கொண்டு எலியை எதிர் நோக்கினார் அப்பா.


தம்பி, அப்பா இதோ என்று சரியாக அவர் பின்புறம் காட்ட வீசிய வீச்சில் தாத்தா ஃபோட்டோவின் கண்ணாடி தெறித்தது. எலி எப்படியோ சரியாக அப்பாவின் பின்புறம் தலை நீட்டுவதும், அப்பா கண்ணை மூடிக் கொண்டு கழியைச் சுழற்றுவதும், அதைக் கண்ட எங்களின் கிக்கிக்கீ சிரிப்பிலும் கடுப்பாகிப் போனார் அப்பா. அல்லாட்டத்தில் அவிழ்ந்து தன் பங்குக்கு கடுப்பேற்றிய வேட்டியை தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொள்ள வாய்ப்பளித்து 'இன்று போய் நாளை வாராய்' பாவனையில் எலியும் பார்த்தபடி இருந்தது.


'இப்ப நான் ரெடி', என்று அப்பா தலைக்கு மேல் தடியை உயர்த்த, 'நானும் ரெடி' என்று எலியும் எதிர் நோக்க ஒரே போடு போட்டார் அப்பா. அடி பட்ட எலி 'ஹம்மா' என்று கத்துமா என்ற குழப்பத்தில் இருந்தோம் ஒரு நொடி. பவுன்ஸர் பாலை சிக்ஸருக்குத் தூக்க முயற்சித்து பேட் நழுவி ஸ்டம்பில் விழுந்த பேட்ஸ்மேன் போல், என்னேரம் எலி பாய்ந்துவிடுமோ என்ற பயத்திலோ என்னவோ குச்சி பின்பக்கம் விழ, கூட்டிப் பிடித்திருந்த கையிரண்டு மட்டும் கவட்டியில் நச்சென்று இறங்க அலறியது அப்பாதான். 'விட்டேனா பார்' என்று எலியும் பாய, மூச்சுப் பிடித்த குரலில், 'அடியே கதவைத் திறடி' என்ற குரலுக்கு சமயம் தெரியாமல், 'சிக்கிடிச்சா' என்றாள் அம்மா.


விழுந்த திட்டில் பதறினாலும், உஷாராக கதவின் பின் ஒளிந்து கொண்டாள். எலியோ, 'இப்ப போறேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன் ரேஞ்சுக்கு' ஒரு பார்வை பார்த்து, ஒரு எலி அடிக்க (பிடிக்க) தெரியாத குடும்பத்தில் இருப்பது இழுக்கு என்று ஓடி மறைந்தது. 

Sunday, January 2, 2011

கேரக்டர் - ஹரி..

படைப்பின் விசித்திரம் பல நேரம் கற்பனைக்குள் அடங்காது. ஏன் ஏன் இப்படி என நம் மனதை பதைக்க வைக்கும் படைப்புக்களைக் கண்டே வந்திருக்கிறோம். பல நேரம் இவர்கள் முன் நான் எம்மாத்திரம் எனக் கூசும்படியான பலரை நான் சந்தித்திருக்கிறேன். சில நேரம் இவர்களை இன்னும் கொடுமையாகப் படுத்தும்போது கடவுளே உனக்கு வேறு யாருமா கிடைக்கவில்லை என நொந்துக் கொண்டதும் உண்டு.


அப்படி ஒருவன்தான் ஹரி. அலுவலகத்திலிருந்து எட்டு பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து சொகுசாக வண்டியில் நிதானமாக கிளம்பி ஒன்பதேகால் அலுவலகத்துக்கு பத்தே முக்காலுக்கு வந்து ‘ஒரே ட்ராஃபிக்’ என்றும், 9.45 ரயில் 20 நிமிஷம் லேட் என்றும், 5.15 வண்டியில்தான் உட்கார இடம் கிடைக்குமென்றும், 5.30கு கிளம்பினால்தான் ஆறறைக்குள் வீடு சேரலாம் என்றும் இருக்கும் மெஜாரிட்டியில் நேரத்தே அலுவலகம் வந்து அலுவலக நேரம் முடிந்து கிளம்பும் ஊழியன் அவன்.

வந்து டேபிள் துடைத்து, வாடிக்கையாக சிலருக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு ஹிந்து பேப்பரைப் பிரித்தான் என்றால் வரி விடாமல் படிப்பான். அவன் அப்பாவைப் போலவே. சில நேரம் துவண்டு போய் தூங்கிவிடவும் செய்வான். சோம்பேறித்தனமல்ல. அவன் எடுத்துக் கொள்ளும் மருந்தின் வினை. ‘ஹரி! இது அர்ஜண்ட்டுப்பா. எல்லா செக்‌ஷனிலும் கொடுத்துவிட்டு வருகிறாயா? என்றால் குடுங்க சார்’ என்று உற்சாகமாய்ப் போவதுண்டு பெரும்பாலும்.  ‘எனக்கு முடியலை! வைங்க அப்புறம் போறேன்’ என்று சொல்லும்போது சரி என்று விட்டால் ஐந்தாம் நிமிடம் வந்து கொண்டு போவான். மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியா இருக்கிறோம்? ஒரு சிலருக்கு ஈகோ தலை விரித்தாடும்போது, ’யோவ் சொல்றேன் அர்ஜண்டுன்னு, அப்புறம் போறியா’ என்றால் போச்சு. ஹரி விசுவரூபம் எடுப்பான். அந்தக் கடிதம் அவனால் கொடுக்கப்பட மாட்டாது.

யார் அந்த ஹரி என்று தோன்றுகிறதா? ஐந்தடி மூன்றங்குலம் இருப்பான். கட்டை குட்டையான உருவம். சில நாட்கள் எண்ணை வைத்து அழகாக வாரினாலும் பெரும்பாலும் எண்ணெய் காணாமல் கலைந்து பின்னியிருக்கும் சுருட்டை முடி. வாரம் ஒரு முறையோ பதினைந்து நாட்களில் ஒரு முறையோ, சில நேரம் அடிக்கடியோ மனம்போல மாற்றும் உடை. சற்றே கருப்புதான். கொஞ்சம் அழுக்கான தோற்றம்தான். சற்றே கூன் விழுந்த முதுகு. முற்றிய முகம். உருண்டைக் கண்கள். கட்டுப்பாடின்றி ஈரம் கசியும் உதடுகள். பிதுங்கித் தொங்கும் கீழுதடு. சிரிக்கும் போது அப்படியொரு வெள்ளந்தியான குழந்தைச் சிரிப்பு. பெரும்பாலும் ‘உர்’ என்று உதடு குவித்தபடி கர்ச்சீப்பால் அவ்வப்போது வாயைத் துடைத்துக் கொள்ளும் மேனரிசம்.

ஆமாம். மாற்றுத் திறனாளி என்று திறனற்ற நாம் பெயர் சூட்டிய ஒரு திறமைசாலி. சம்பந்தமில்ல்லாமல் ஹரியின் அறிமுகத்துடன் ஆஃபீஸ் நேரம் பற்றிய அளப்பு எதற்கு என்கிறீர்களா? ஹரி தினமும் திருப்பத்தூரிலிருந்து வருகிறான். காலை 3.30க்கு கிளம்பி, மாலை அலுவலகம் முடிந்து சரியான நேரத்தில் போனால் சேரும் நேரம் 10.30. அங்கு இறங்கி பஸ் பிடித்து வீட்டிற்குப் போக வேண்டும். அந்த ஒரு வேளை சோறும், கொஞ்ச நேர தூக்கமும் போக வாழ்க்கை முழுதும் ஏலகிரி எக்ஸ்பிரஸில்தான்.

சொந்த ஊர். விலைவாசி பரவாயில்லை. ஹவுசிங் போர்டில் ஒரு சிறிய வீடு கிடைத்தது என்பது தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. முடிவெடுத்தவரும் கூட அவன் தந்தை. இப்படியானவர்களுக்கென்றே சற்றே பொறுப்பான, புத்திசாலி மனைவிமார்களும் படைப்பினால்  உருவாக்கப் படுகிறார்கள். அப்படி ஒரு நல்ல பெண் மனைவியானாள். சூட்டிகையான ஒரே பெண். காலையில் அலுவலகம் வந்ததும், தன் வேலை முடித்து கேண்டீனுக்கு போவதோ, நண்பர்கள் யாராவது கொடுக்கும் டிஃபனோ சாப்பிட்டு தன் இடம் விட்டு நகராமல் இருப்பார்.

மதியம் ஒரு நண்பர் சாப்பாடு சேர்த்து கொண்டுவந்து விடுவார். மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட பொறுமை இராது பெரும்பாலும். மோர் இல்லையா? சரி பரவாயில்லை என்று தன் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். எத்தனையோ உசாராக இருந்தாலும், யாராவது ஒருவர் மதியம் பார்ட்டி அல்லது வேலை என்று தன் சாப்பாட்டைக் கொடுத்தாலும் மறுக்காமல் சாப்பிட்டு விடுவார். சில நேரம் இரண்டு மூன்று அப்படி சாப்பிட்டுவிடுவார். கொடுத்த கொடுமை போறாதென்று செரிப்ரல் பால்சியுடன் காக்காய் வலிப்பும் வந்துவிடும்.

நடக்கும் போதோ, உட்கார்ந்த நிலையிலோ தடாலென விழுந்து நுரை தள்ள வெட்டி வெட்டி இழுத்து மருத்துவ மனைக்கு தள்ளிச் சென்று ஊசி போட்டு ஆசுவாசமாக உயிர் போய் வரும். இது எல்லாருக்கும் உள்ளதுதானே. இவருக்கென்ன இவ்வளவு சிலாகிப்பு என்கிறீர்களா? ஒரு முறை ஒரு உயர் அதிகாரியின் இன்கம்டாக்ஸ் கணக்கை என்னிடம் சரிபார்க்க இவர் மூலம் கொடுத்திருக்கிறார்கள். வரும் வழியில் வந்து சேர்ந்ததது வலிப்பு. வெட்டி இழுத்து நுரைதள்ளி மயங்கிய நிலையிலும் கையில் உள்ள காகிதத்தைப் பறிக்க இயலவில்லை. தண்ணீர் தெளித்து, அரை மயக்க நிலையில் வீல் சேரில் இருந்தபடி ஒரு நண்பரிடம் ‘இதை பாலாஜி சாரிடம் தரணும்’ என்று சொல்லி மயங்கிவிட்டார்.

மருத்துவமனை சென்று, அவசர சிகிச்சை முடித்து, ஆசுவாசமாகி, தள்ளாடியபடி அலுவலகம் வந்ததும் என்ன செய்தார் தெரியுமா? நேரே என்னிடம் வந்து இன்னாரிடம் இவருடைய பேப்பர் கொடுத்தேன். ’கொடுத்துட்டாங்களா சார். ஃபிட்ஸ் வந்துடுத்து சார். நனைஞ்சு போச்சா, சரியா இருக்கா? தேங்க்ஸ் பாலாஜி சார். ஒரே கேரா இருக்கு சார்’ என்று நழுவும் பேண்டை இழுத்து விட்டுக் கொண்டு சென்றவனை எப்படி பாராட்டினால் தகும்.

இப்படியான நாட்கள் தவிர விடுமுறை எடுப்பது அபூர்வம். இப்படி ஒரு ஜீவனை ஏமாற்றவோ பலிகடா ஆக்கவோ இன்னொரு மனிதனால் முடியுமா? அந்தக் கொடுமையும் நடந்தது. மகளின் திருமண நேரம் பார்த்து, அட்வான்ஸும்,  வாடகைப் படியை விட வாடகை அதிகம் தருகிறேன். குவார்ட்டர்ஸ் உன் பேரில் வாங்கிக் கொள் என்று வாங்க வைத்து, வாடகை கேட்டபோதெல்லாம் மிரட்டி, அட்வான்ஸ் பணத்தோடு ஏமாற்றியும் விட்டு, அந்த வீட்டை சட்ட விரோதமான சிலருக்கு மேல் வாடகைக்கு விட்டு, போலீஸ் கேசாகிப் போனது. அரசு வீட்டை சட்ட விரோதப் பயன்பாட்டுக்காக வாடகைக்கு விட்ட பெருங்குற்றமாகி இருக்க வேண்டியது.

ஹரியைப் பார்த்ததுமே ‘இவரையா ஏமாத்தினான் அந்த நாதாரி’ என்று போலீசாரே இரக்கப்படும் அதிசயமும் நிகழ்ந்தது. தெரியாமல் ஏமாறிப்போய் செய்தாலும் தவறு தவறுதானே. நிர்வாக ஒழுங்குச் சட்டத்தில் தண்டனை கிடைத்தாலும் வேலை பிழைத்தது. பெண்ணின் திருமணத்துக்கு முன் மனைவியுடனும், மகளுடனும் என்னிடம் வந்தார்.

என்னால முடியல பாலாஜி சார். மெடிகல் அன்ஃபிட் வாங்கிட்டு மகளுக்கு வேலை வாங்கிடலாம்னு பார்க்கிறேன். யாரோ வாங்கித் தரேன்னு சொன்னாங்க. நீங்க சொல்லுங்க சார் என்று வந்து நின்றார். முழு பென்ஷனும் வராது. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரும் பென்ஷன் சோத்துக்கே சரியாகிவிடும். இப்படி உடல் நிலையை வைத்துக் கொண்டு வயதான காலத்தில் இரயில்வே மருத்துவமனையை நாடி இருத்தல் இயலாத ஒன்று.

மகளுக்கு வேலை கிடைக்கும் என்றாலும் அவள் இவரைப் பராமரிக்க வேண்டும் என்பது எப்படிச் சாத்தியம்? சம்பளமும் குறைவு. மெதுவாக எடுத்துச் சொல்லி, அப்படி வேலை வாங்குவது எவ்வளவு சிரமம், பத்தாவது படித்த அந்தக் குழந்தைக்கு எங்கே வேலை கிடைக்குமோ அங்கு போய் குடித்தனம் வைக்கும் யதார்த்தமற்ற நிலமை, அவள் திருமணத்துக்குப் பின்னான நிலமை, வரவிருக்கும் சம்பள கமிஷன்களின் சலுகைகள் என்று எடுத்துச் சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் காலை தேடி வந்து, யோசிச்சேன் சார். வீட்லயும் பேசிட்டேன். நான் வேலைக்கே வரேன் சார். ரொம்ப தேங்க்ஸ் என்று போனார். ஐந்தாம் ஆறாம் சம்பளக் கமிஷன் கடந்துவிட்டது. தினமும் வணக்கம் சொல்வதும், கடிதம் கொடுக்க வரும்போது சவுக்கியமா இருக்கேன் சார். பேத்தி பிறந்திருக்கா சார். கடன் எல்லாம் அடைச்சிட்டேன் சார் என்று சொல்லிவிட்டுப் போவார். தவறாமல் தண்ணீர் பாட்டிலில் பாதி தண்ணீர் இருந்தால், தண்ணி கொண்டு வரேன் சார் என்று கொண்டு கொடுப்பார். வயதான காலத்தில் ஆரோக்கியமாவது அவருக்கு நல்லபடி அமைய வேண்டும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கும்.  

‘வரேன் சார்! மணி 5 ஆயிடுத்து. இதெல்லாம் கொடுக்கணும். எல்லாரும் சீக்ரம் போய்ட்டா பெண்டிங் ஆயிடும்’ என்று ஓடுகிறார் ஹரி. ஆமாம். கொடுத்த வேலை முடித்துவிட வேண்டும் அவருக்கு..
~~~~~

குறிப்பலகை...


எவருக்கான அம்புகளுக்காகவோ
இலக்கு நான்
என் காயங்களுக்கேற்ப
அம்புக்கு புள்ளிகளும்
எய்தவருக்குப் பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...

-o-