Sunday, September 12, 2010

கேரக்டர் - சங்கர்

வாழ்க்கையில் சில நட்பூக்கள் பூக்கின்றன ப்ரயத்தனமின்றி. ஆம்! இரவில் பார்த்தபடி கண்ணுறங்கிய பூந்தொட்டியில், காலையில் கண்விழிக்கையில் சின்னதாய் ஒரு அரும்பு, இலைகளுக்கிடையே எட்டிப் பார்த்து சிரிக்குமே அப்படி. பார்த்துக் கொண்டிருக்கையிலே, மெதுவே விரிந்து மலர்ந்து அறை முழுதும் வாசனை நிரப்புமே! அப்படி மனம் நிரப்பும் நட்பூக்கள் அபூர்வம்.

பள்ளியிலிருந்தும், கல்லூரியிலிருந்தும் பிடுங்கி நடப்பட்ட பயிர்களாக வயிற்றுப்பாட்டுக்கு வேலைக்குச் சேர்ந்த இளசுகளின் உலகம். அலுவலகம், அந்த கலாச்சாரம் எல்லாம் உடைத்தபடி, சிற்றெறும்பாய் ஓடி ஓடி நாள் முழுதுக்குமான வேலையை சில மணிகளில் முடித்து, அரட்டையும், கேலியுமாய் ஒரு புது உலகம் அது.

இந்த உலகத்தில், வெளுத்த தலையும், சலவை வேட்டியும், எம்.ஜி.ஆர் போல் சுருட்டி மடித்து முண்டாவுக்கு ஏற்றிய வெள்ளைச் சட்டையும், வெயிலில் உழைத்து உழைத்து மஞ்சளும் சிகப்புமாய் விழியும், பீடிக் கறையேறிய பற்களும், மூன்று பெண்களுக்குத் தகப்பனுமான, கன்னங்கரேலென்ற அந்த வெள்ளந்தி மனிதன் வாய் கொள்ளாச் சிரிப்புடன் என் வாழ்வில் பூத்தான்.

நீதான் பாலாசியா? ஒன்னட்ட ஒக்கார சொன்னாய அந்த சாரு, என்று அடுத்ததாக ஏதோ ஜனாதிபதி சந்திப்பு மாதிரி கைகுலுக்க நீட்டியதும் வலது கையில் கை பற்றி இடதுகையால் பொத்தியபோது, சுருக்கென்ற வலியோடு கண் அவரின் இடது கையில் கட்டைவிரல் காணோம் என்பதை உணர்ந்தது.

எம்பேரு சங்கரு. ஊரு மய்ரப்பக்கம் மேலூரு. பதினாலு வயசுல பொளுது சாய இருட்டுல ஆளு தெரியாம எங்கப்பய்ண்ட்டயே கங்கு கேட்டுபுட்டேன். ஊரு  புல்லா ஓட ஓட புளிய மிளாறுல வீசிப்புட்டான். தாளி, தூங்கையில இடுப்புச் சுருக்குல ஆட்டய போட்டு முப்பது ரூவாயோட திருட்டு ரயிலேறி மட்ராசு வந்துட்டேன். ஊர்ல சலவைத் தொளிலு. இங்கிட்டு வந்து ஒரு அண்ணன் டோபிகானால (வண்ணாந்துறை) சேர்த்து விட்டுச்சி.

நம்மூர்க்கார பாயி ஒலுத்தரு இங்கிட்டு பார்ஸல் ஆபீசுல கேசுவல் லேபரா இருந்தாரு. அவரு அங்கிட்டு சேர்த்து விட்டு, அப்புறம் பார்ஸல் ஆபிசில வேல பார்த்து, சண்டிங் அஸ்ஸண்டா இருக்கையில, கப்ளிங் மாட்டக்குள்ள பிகிலூதிட்டான். கட்டை விரல் போச்சி. மெடிக்கல் அன்பிட்ல இங்கிட்டு வேல குடுத்தாக. சாரு ஒன்னட்ட இருக்க சொன்னாரு என்று சில வரிகளில் நெஞ்சை நிறைத்தான்.

பள்ளிக்கூடம் போனதில்லை. அழுக்கெடுக்க, ஆற்றங்கரைக்குப் போக, வெள்ளாவிப்பானையில் துணிசுத்த, என்று படித்து, கஞ்சி போட்ட வேட்டி, புடவை,  முனையிழுத்து நாலாய் மடித்து ஒரு முறை, எட்டாய் மடித்து ஒரு முறை பெட்டி போட்டால் ஒரு சின்ன சுருக்கமின்றி விடைத்துக் கொள்ளும்படி இஸ்திரி போடும் திறனில் பட்டம் இருந்தால் இவனுக்குத்தான் என்று முன்னேறினான். ராயபுரத்தில் ஒரு சின்ன சலவைக்கடை இருந்தது. ரயில்வேயில் வேலைக்குப் போகும் நேரத்தில் வைப்பு கடையில் இருப்பாய்ங்க என்றவருக்கு, அதை வைஃப் என்று சொல்ல வைக்க நான் பட்ட பாடு இருக்கிறதே..ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. பி.எஃப் என்பதை ஃபி.எப் என்று சொல்ல முடிபவருக்கு வைஃப் என்று சொல்ல வராத மாயம் என்னவோ?

மூனும் பொட்டப் புள்ளையலாப் போயிருச்சி, என்று வருந்துவார். யோவ்! எல்லாம் போதும். இப்போதே கருத்தடை செய்தால் ஒரு இன்கிரிமெண்டாவது வரும்யா என்றால், மனுசனுக்கு காசா மிக்கியம், நம்ம பேரு சொல்ல ஒரு ஆம்பளபுள்ள வேணும்யா என்பார். அட சை! எழுதி வைக்க ரெண்டு கழுதக்குட்டி கூட சொந்தமில்ல, என்னமோ திருமலை நாயகர் மகாலுக்கு வாரிசு இல்லாத மாதிரி பேச்சப் பாருய்யா என்றால் கண்ணில் தண்ணீர்வர சிரிப்பார். எப்படியோ, சாமியாடியும், சைனீஸ் காலண்டரும், சைக்கிள் முறையும் கூட்டாய் அடுத்தது ஆணென்று சதி செய்து இன்னும் ரெண்டு பெண்களுக்குத் தகப்பனாக்கியது.

ஏபிசிடி தெரியாது. எழுதப் படிக்கத் தெரியாது. பார்சல் ஆஃபீஸில், ஊர் ஊராகச் செல்ல குவிந்திருக்கும் பார்சலை வகை வாரியாக பிரித்து, எழுத்தே தெரியாத ஒரு ஆள், ரயில் நிலைய சங்கேதத்தை ஒரு படம் போல் பார்த்து, இது மதுரை, இது திருச்சி, இது ஜான்ஸி, இது தில்லி என பிரித்து லோட் செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா? நம்ம சங்கர் அதில் கில்லாடி. ‘

சங்கர்’ எனக் கிறுக்கி தமிழில் கையெழுத்து போட்டவரை, படாதபாடுபட்டு, ஆங்கிலத்தில் ‘Sankar' என்று எழுதக் கத்துக் கொடுத்தால், கன சிரத்தையாக இம்போசிஷன் மாதிரி எழுதி எழுதிப் பழகி, ‘SAKNAR' என்று கையெழுத்துப் போட்டு, இது தப்புதானே! இது அங்கிட்டு, அது இங்கிட்டு வரணும்ல என்று சிரித்து ‘SANKAR' என்று பாராமல் எழுதியதை, மடித்து வைத்து வீட்டில் அத்தனை பேரிடமும் காட்டி அசத்திவிட்டான்.

வட்டம் போட்ட முத்திரைக்குள் தேதியிருந்து, நம்பர் இருந்தால் அது பாலிசி லெட்டர். மத்தபடி வேறே ஸ்டேம்ப் இருந்தால் அது கரெஸ்பாண்டென்ஸ். 23ம் நம்பர் இருந்தா, வீட்டு லோன், 483ல ஆரம்பிச்சா தொழிலாளர் விஷயம் என்று சரியான கோப்பு எடுக்கத் தெரிந்த மிகத் திறமையான  எழுத்தறிவில்லாத ரிக்கார்ட் சார்ட்டர் இவர்.

ஏகலைவனைக் கேனையாக்குவான் என் சங்கர். ஆம்! கட்டை விரல்  இல்லைதான். அதனாலென்ன? வேட்டி மடிப்பிலிருந்து கனேஷ் பீடி கட்டை எடுத்து, சுண்டுவிரலால் ஒற்றை பீடியை மேலெழுப்பி, பல்லால் கடித்து நாவால் ஓரம்தள்ளி, தீப்பெட்டியில் இடது கை ஆள்காட்டி,மற்றும் நடுவிரலில் பிடித்த பெட்டியில் உரசி, எந்தக் காற்றிலும் மறுகை துணையின்று நான்கு விரல் மறைப்பில் பீடி கொளுத்த முடியும்.

ஐந்தரை கிலோ எடை இஸ்திரி பெட்டியை, கங்கு உண்டாக்கி, கொக்கி போல் நான்கு விரலில் பிடித்து, தூளிபோல் ஆட்டி தணலாக்கி, நான்கு விரல் மடித்து உள்ளங்கையோடு இறுக்கி, ஓட்ட ஆரம்பித்தால், மூட்டைத் துணிகளை நீட்டாக மடித்து அடுக்குதல் அப்படி ஒரு வேகத்தில் நடக்கும். நம்மால் ஒரு அரைஅடி அந்தப் பெட்டியை நகர்த்தவியலாது.

சம்பாதிப்பது, சீட்டு கட்டி ஏமாறுவது, புறம்போக்கு நிலத்தை மடக்கப் போகிறேன், வெறும் அன்ச்ச்ச்சாயிரம் ரூவா குடுத்தா பீம நோட்டீசு. பாயி எல்லாம் பேசி முடிச்சிட்டாரு. நீயும் ஒரு மனைய மடக்கி கொட்டாய போட்டு வைக்கிறியா, நான் பார்த்துக்குறேன் என்று வருசா வருசம் மழைக்கு ஏமாறுவது ஒரு நேர்த்திக் கடன் மாதிரி.

எந்தம்பி எந்தம்பி என்று கொள்ளைப் பாசம். போதையில் யார் தம்பி என்பதில் எட்ஜாக்கும் சங்கருக்கும் சண்டை தவறாமல் வரும். நீ சொல்லு பாலு என்று மல்லுக்கு நின்று, ஒன்றும் சொல்லமாட்டாமல் இருக்க ஆளுக்கு ஒரு பக்கம் கன்னத்தில் இடித்து ஒன்னய போய் தம்பின்னு சொன்னம்பாரு என்று கோவித்துக் கொண்டு போவது வாடிக்கை. அடுத்த நாள் காலையில் எட்ஜா கையில் என் காதும் சங்கர் கையில் என் கையும் சிக்கித்தவிக்கும்.

ஒழுக ஒழுக எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுற மணல்த்தான் ஒட்டும் என்ற சொலவடை பொய்யாகிவிடக் கூடாதே! சக்கைபோடு போட்டு வந்த எக்ஸ்போர்ட் துணி பிஸினஸ் படுத்துவிட, இஸ்திரித் தொழிலில் பெரிய வருமானமில்லாமல் போனது. எப்படியோ முட்டி மோதி இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து கடனில் குடும்பம் நடத்துவதே பெரும்பாடானது. போதாத குறைக்கு, ஒரு சண்டியன், கிட்டத்தட்ட பாதிக்கும் கம்மியான வயதில் இருந்த மூன்றாவது பெண்ணை பெண்கேட்டு, அதிர்ந்து போய் மறுக்க, என்னைக்குன்னாலும் தூக்கிறுவேன் என்ற சபதம் கடையை மூடி தெருவுக்கு அனுப்பியது.

கை வண்டி தயார் செய்ய வைத்து, எங்கள் ஏரியாவில் புதிதாக முளைத்த அடுக்கு வீடுகளில் வாடிக்கை பிடித்து கொடுத்து சனி ஞாயிறுகளில் மட்டும் ஓரளவு நல்ல வருமானம் வரத்தொடங்கியது. நெகிழ்ந்த தருணங்களில், தாளி என்னைக்குண்டாலும் சரி, ஒன்னய ஏ.சி.ரூம்புல பாக்காம சாவமாட்டம்பா. ங்காரு! வெளீய நிண்டு அய்யா இருக்காராண்டெல்லாம் கேட்டுருய்க்கமாட்டன். நீ மீட்டிங்லதான் இரு, ரெட் லைட் போட்டு வேணாலும் இரு. எந்த மசுரான் என்னய தடுப்பான் பார்க்கலாம் என்பார்.

கலங்கிய நேரங்களில், கை பிடித்து குழந்தை மாதிரி அழுதபடி, பாலாசி ஒனக்கே தெரியும்லப்பா. இருக்கையில புடுங்கிதிங்க வருவாய்ங்க ஒரவுன்னு. நாளபின்ன எனக்கு ஏதும் ஆச்சின்னா எனக்கு எந்தம்பியிருக்கான்னு கண்ண மூடுவேன். அது ஒரு பச்ச மண்ணு. ஒரு எளவும் தெரியாது. நீதான் பார்க்கணும் சொல்லிபுட்டேன் என்பார்.

எந்தம்பி எப்பவும் கர்ட்டா சொல்லுவாப்பல என்று நம்பிய அந்த ஜீவனை, அதெல்லாம் ஒன்னும் ஆவாது சங்கர். நீ ரிட்டயர் ஆகி பாஸ் வாங்க வரும்போது என்னை பார்க்கணும்னு வந்தாச் சரி என்று சொல்லிச் சிரிப்பதை பொய்யாக்க விதிக்கு என்ன வெறியோ.

ஒரு ஞாயிறு காலை விடியலில், மருமகன் வந்து மாமா போய்ட்டாங்க என்றபோது ஏதோ ஒரு அவயம் பிடுங்கப்பட்டது போன்றதொரு உணர்வு. சொன்னாற்போல் சாவு எடுக்கும் முன்னரே, அண்ணன் வகையறா, மைத்துனன் வகையறா என்று எத்தனை தேறும் என்ற விசாரிப்பில் ஓரம் கட்ட,  பெண்ணுக்குத்தான் வேலை என்றவர்களை போக்கு காட்டி, அவர் மனைவிக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வேலைக்கு வழி செய்யத்தான் வாய்த்தது.

வாழ்ந்த நாளில் உழைத்தும் கடனே வரமாய் இருந்த குடும்பம்,  இறந்த பிறகு, வேலை, பென்ஷன் என்று வருமானம் நிலைப்பட, செட்டில்மெண்டில் கை வைக்காது மகள்களுக்குத் திருமணம் முடித்து எப்போதாவது தேடி வந்து உனக்கு பேரம் பொறந்துருக்கான் சார். சாந்தி ஊட்டுகாரரு கேட்டுட்டே இருப்பாரு மாமா ஏன் வரமாட்டங்குறாரு என்றெல்லாம் சொல்லும்போது, பட்டாப்பட்டி அண்டர்வேர் லேசாகத் தெரியும் மடிப்புக் கலையாத வேட்டியுடன், மடித்து விட்ட சட்டையும், உதட்டோரம் பல்லால் கடித்த பீடியுடன் வலக்கையில் என் கை பொத்தி இடக்கை நான்கு விரல்களில் என் தோள் இறுகப்பற்றி ‘எந்தம்பி’ என்று சிரிப்பானோ சங்கர்?

~~~~~~~~~~~~~~~~~

44 comments:

Unknown said...

Vanakkam Sir. Expecting something today

பழமைபேசி said...

பாருங்க வேணா, தளபதி நசரேயன் டைரக்டர் சங்கர்னு வாசிச்சிட்டு, பின்னூட்டம் போடுவார் பாருங்க...

பழமைபேசி said...

சங்கர்... தங்கர்!!!

Unknown said...

அருமை சார். இறந்தவர்களுக்கான ஒரு ஆத்மானர்ந்த அஞ்சலி உங்கள் எழுத்தால் கிடைக்கப்பெற்ற அந்த ஒரு நல்ல மனிதருக்கு அஞ்சலி சார். உழைத்து வாழனும் நினைச்சா உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல என்று அருமையாக சொல்லி சென்றிருக்கிறார். அவர் குடும்பம் முன்னேற வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//Sethu said...
Vanakkam Sir. Expecting something today//

இவரு எப்படிதான் மோப்பம் புடிக்கிறார்னே தெரியலை?

Unknown said...

இல்லைங்க பழமை. கதிரின் டவுட் படிச்சுட்டு கண்டிப்பா ஐய்யாட்டேர்ந்து எதாவது வருமென்று எதிர்பார்த்தேன். நல்லா 3 மணி நேரம் தூக்கத்திற்குப் பிறகு பார்த்தா another சூப்பர் அஞ்சலி.

க ரா said...

படிச்சு முடிக்கையிலே கண்ணுல கண்ணிர் எட்டி பாக்குது சார்... Well Written Sir...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

நட்பின் அன்பின் இலக்கணம் சங்கர் - பாலா. அருமையான அறிமுகம் - அஞ்சலியாகவும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமை சூப்பர் பாலா

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

மணிநரேன் said...

ஒவ்வொரு கேரக்டரையும் ரொம்ப தெளிவாகவும், மனதில் நிற்கும்படியாகவும் உங்க எழுத்துக்களில் கொண்டு வந்துடறீங்க பாலா சார்.
தொடருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை Bala

ஸ்ரீராம். said...

வைப்பு...வைஃபு.... சிறிய எழத்து வித்தியாசத்தில் அர்த்த மாற்றம்..ஹா..ஹா..

மீண்டுமொரு அழகிய கேரக்டர் அறிமுகம்... நான் பார்த்த ஒரு கேரக்டர் போலவே...

பெசொவி said...

இன்னா சார், பேஜார் பண்ணிட்டே, லீவு நாளும் அதுமா கண்லேந்து தண்ணி வர வுட்டியே சார்!

(ஏதோ எழுத வேண்டும் என்று நினைத்து எழுத வில்லை,சார், உண்மையில் கண்களில் காண்ணீர் மறைத்துக் கொண்டு விட்டது!)

Unknown said...

அசத்தல் சார். ரா.கா மாதிரியே எனக்கும் கண்ணுல தண்ணி எட்டிப்பாக்குது..

நெகிழ வைக்கும் உறவு..

Unknown said...

//பழமைபேசி said...
பாருங்க வேணா, தளபதி நசரேயன் டைரக்டர் சங்கர்னு வாசிச்சிட்டு, பின்னூட்டம் போடுவார் பாருங்க.//

அண்ணே தளபதி எழுதும்போதுதான் பிழை விடுவாரு.. படிக்கும்போது இல்லை. :))

settaikkaran said...

நெகிழ்ச்சி! படித்து முடிக்கையில்.....! ஏகலைவனைக் கேனயனாக்கிய சங்கர் ஒரு உதாரணம்!

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே, ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.

a said...

மீண்டுமொருமுறை மனதை கணக்க வைக்கும் கேரக்டர் அறிமுகம்....

சிவராம்குமார் said...

நல்லா இருந்தது ஜி!

dheva said...

படித்து முடித்து வெகு நேரமாகியும் மனசு..... கனாமாயிருக்கிறது பால அண்ணே.. !

Mahi_Granny said...

அலுவலக உறவு என்றாலும் நெருங்கிய சொந்தமாக உணர இரண்டு பக்கமும் நல்ல மனம் வேண்டும் . அது உங்களிடம் நிறையவே இருக்கு. நிறைவாய் இருக்கு சார்

Ahamed irshad said...

நெகிழ்வு சார்.பாதிப்பு அகலவில்லை படித்து முடித்த பிறகும்கூட..

கலகலப்ரியா said...

||வாழ்க்கையில் சில நட்பூக்கள் பூக்கின்றன ப்ரயத்தனமின்றி. ஆம்! இரவில் பார்த்தபடி கண்ணுறங்கிய பூந்தொட்டியில், காலையில் கண்விழிக்கையில் சின்னதாய் ஒரு அரும்பு, இலைகளுக்கிடையே எட்டிப் பார்த்து சிரிக்குமே அப்படி. பார்த்துக் கொண்டிருக்கையிலே, மெதுவே விரிந்து மலர்ந்து அறை முழுதும் வாசனை நிரப்புமே! அப்படி மனம் நிரப்பும் நட்பூக்கள் அபூர்வம்.||

அழகான... கவிதை..

கலகலப்ரியா said...

கேரக்டரிடை ஓடும்.. வெள்ளந்தி மொழி ரொம்ப நல்லாருக்கு சார்...

துளசி கோபால் said...

படிச்சுட்டு மனசு கலங்கிருச்சு.அருமை.

Unknown said...

உங்கள் கேரக்டர் பதிவுகள் அனைத்தும் நான் மிகவும் விரும்பிப் படிப்பவை..
நாம் ஏதாவது ஒரு வகையில் இம்மாதிரி கேரக்டர்களை நம் வாழ்விலும் சந்தித்து இருக்கிறோம் ...

இன்னும் நெகிழ்ச்சியை இந்தப் பதிவு ஏற்படுத்திவிட்டது ...

suneel krishnan said...

இன்னும் இந்த மாறி மனிதர்கள் நல்ல நட்பை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வழங்கி கொண்டு தான் இருகிறார்கள் .உங்கள் கேரக்டர் அறிமுகம் வாசித்து வருகிறேன் எல்லாமே அருமை

பழமைபேசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
பாலாண்ணே, ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்.//

படிச்சு இரசிச்சீங்களா? இரசிச்சுப் படிச்சீங்களா?? #ஐயப்பாடு

vasu balaji said...

@Sethu

நன்றி சேது

'பரிவை' சே.குமார் said...

படிச்சு முடிக்கையிலே கண்ணுல கண்ணிர் எட்டி பாக்குது சார்...

vasu balaji said...

@கலகலப்ரியா

/கேரக்டரிடை ஓடும்.. வெள்ளந்தி மொழி ரொம்ப நல்லாருக்கு சார்..//

சந்தோஷமா இருக்கும்மா. நன்றி:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனது கனத்து, வெளிறிய கண்களில் நீரோடு..ரொம்பவும் தெளிவாய் சங்கர்,கையில் பீடி..பளிச்சென்ற சலவை மடிக்கு மேல் பட்டாபட்டி தெரியும்படியாய்..ஒரு கோபுலு படமாய்,என்னுள்......

Romeoboy said...

கேரக்டர் --- இந்த தலைப்பில் நீங்க எழுதி இருக்கும் எல்லா பதிவையும் ஒரு புத்தகமா கொண்டுவரலாமே .. எல்லாமே அவ்வளவு அழகு சார் .

ஈரோடு கதிர் said...

கேரக்டர் வரிசையில் நயமான ஒரு கேரக்டர்

Chitra said...

மனதை தொடும் கேரக்டர்.

காமராஜ் said...

கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொண்டுதான் படிக்கவேண்டியதிருக்கு அண்ணா. இது கேரக்டர் இல்லை.ஒரு நெகிழ்வான வாழ்க்கை.அழகு.

பிரபாகர் said...

ஏகலைவனோடு ஒப்பிட்டு சொன்னவிதம் மிக அருமை அய்யா, கட்டைவிரல் விஷயத்தில்.

உங்களின் கேரக்டர்கள் யாவும் மனதை நெகிழ்த்துவதாய் இருக்கின்றன அய்யா!

பிரபாகர்...

vasu balaji said...

@பழமைபேசி

ம்கும். உங்க ரவுசுல வழக்கமா போடுற ம்ம்ம் கூட போடலை. அவ்வ்வ்

vasu balaji said...

@@நன்றிங்க பழமை
@@நன்றி சேது
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றி சீனா சார்
@@நன்றிங்க மணிநரேன்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி முகிலன்

vasu balaji said...

@@நன்றி சேட்டைக்காரன்
@@நன்றிங்க சைவ கொத்துப் பரோட்டா
@@நன்றி ஆரூரன்
@@நன்றி யோகேஷ்
@@நன்றி சிவராம்குமார் முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

vasu balaji said...

@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றி தேவா
@@நன்றி அகமது இர்ஷாத்
@@நன்றிங்க துளசி மேடம்
@@நன்றி செந்தில்
@@நன்றி டாக்டர் சுனீல்
@@நன்றி குமார்
@@நன்றி ஆர் ஆர் ஆர்
@@நன்றி ரோமியோ
@@நன்றி கதிர்
@@நன்றி சித்ரா
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி பிரபா

vasu balaji said...

கலகலப்ரியா said...
||வாழ்க்கையில் சில நட்பூக்கள் பூக்கின்றன ப்ரயத்தனமின்றி. ஆம்! இரவில் பார்த்தபடி கண்ணுறங்கிய பூந்தொட்டியில், காலையில் கண்விழிக்கையில் சின்னதாய் ஒரு அரும்பு, இலைகளுக்கிடையே எட்டிப் பார்த்து சிரிக்குமே அப்படி. பார்த்துக் கொண்டிருக்கையிலே, மெதுவே விரிந்து மலர்ந்து அறை முழுதும் வாசனை நிரப்புமே! அப்படி மனம் நிரப்பும் நட்பூக்கள் அபூர்வம்.||

அழகான... கவிதை..//

நன்றிம்மா.

க.பாலாசி said...

ஒவ்வொரு மனுஷனையும் எழுத்தால சுத்திக்காட்டுகிற மாதிரியே இருக்கு. மனுஷங்கள்ட கத்துக்கறதுக்கு என்னயில்ல??... எல்லாமே இருக்கு...

ஒரு விரல் இல்லாம, அதுவும் கட்டைவிரல் இல்லாம... என்ன சொல்றது...

உண்மையில் ‘நட்’பூதான்..

பத்மா said...

நானெல்லாம் எதற்கு ஒரு ப்ளாக் என்று வைத்துக்கொண்டு ?எழுதினா இப்படி இருக்கணும் ..
கற்றுக்கொள்கிறேன் சார்