Thursday, September 9, 2010

கம்ப்யூட்டர் அல்லது சொ.கா.சூ...

(டிஸ்கி: கணினியா, கனிணியா, கணிணியா என்ற பல குழப்பங்கள் இருப்பதால் வாசகரின் வசதிக்காக கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்)

கம்ப்யூட்டருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு 1975ம் ஆண்டு எதிர்பாராமல் நடை பெற்றது. அதுவும் இந்தியாவிலேயே முதல் முதல் பயன்பாட்டுக்கு வந்த IBM மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர், என்பதெல்லாம் அடுத்தடுத்தான எமது சந்திப்புகளின் போது சேகரித்த தகவல். என் அலுவலகத்தில் ராபர்ட் கிளைவ் காலத்து சுவர்க்கடிகாரம் சாவி கொடுக்கப்படாததால், நின்று விட்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாள் அது. அனெக்ஸ் பில்டிங் பக்கத்தால போனா ஒரு சந்து வரும். அது பக்கத்துல கடிகார மெகானிக் இருப்பார். போய் கம்ப்ளெயிண்ட் கொடு என்பது எனக்கிடப்பட்ட பணி.

கம்ப்யூட்டருக்கும் எனக்கும் விதி போட்டிருந்த முடிச்சு அப்போது இறுகி, முதல் சந்தில் நுழைந்தால் ஒரு கதவு இருந்தது. தள்ளித் திறந்தவுடன் நடுக்கும் குளிரில், ஒரு இயந்திரத்தில் ஒருவர் கட்டுக் கட்டாய் அட்டைகளை வைக்க, அது மாவுமில் சப்தத்துடன் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தது. அடுத்து ஒரு கண்ணாடி அறையில் கதவில்லாத பீரோ மாதிரி சில, கண்ணாடிப் பெட்டியில் பெரிய நாடாக்கள் விர்ர்ர்ர்ரென சுழல்வதும், நிற்பதுமாய் கனவுலகாய் இழுத்தது. உள்ளிருந்த ஒருவர் செருப்பை அவிழ்த்துவிட்டு வர சைகை காட்ட, தூக்கத்தில் நடப்பவன்போல், கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். 

என்ன வேண்டும் என்றவரிடம், குளிரில் பற்கள் தந்தியடிக்க, கடிகாரம் ஓடவில்லை சாவி கொடுக்க வேண்டும் என்று சொன்னதும்  அவர் திகைத்துப் போய் நிற்பதும், விர்ரென பறந்து கொண்டிருந்த நாடா சக்கென நிற்பதும் ஒரு சேர நடந்தது. செவ்வாய்கிரகத்து ஜீவராசியா, கீழ்ப்பாக்கத்து கேசா என்ற குழப்பத்துடனே நிதானமாகப் பார்த்து, சரியான வழிகாட்டிவிட்டு தன் வேலைக்கு திரும்பவும், கம்ப்யூட்டர் நாடா மீண்டும் சுழலவும் மீண்டும் ஒரு சேர நடந்தது. 

முதல் மாத சம்பளத்தில் பிராவிடண்ட் ஃபண்ட் நூறு ரூபாய் பிடித்துக் கொள்ள எழுதிக் கொடுத்து விட்டு காத்திருக்க சம்பளப் பட்டியலில் அது ஒரு ரூபாய் பிடித்திருந்தது. கணக்கரிடம் கேட்டபோது  ‘அது கம்ப்யூட்டர் மிஸ்டேக்’ அடுத்த மாதம் சரி செய்து விடலாம் என்றார். நூறை ஒன்றாக்குவதற்கு எதற்கு கம்ப்யூட்டர் என்ற குழப்பத்துடனே விசாரித்ததில், கணக்கர் பைசாவையும் சேர்த்து 10000 என்று கொடுப்பதற்கு பதில் 100 என்றே கொடுத்ததால் கடைசி இரண்டு இலக்கத்தை அது பைசாவாக்கிய துரோகம் புலப்பட்டது. 

சில காலம் கழித்து ரிசர்வேஷனிலும் கம்ப்யூட்டர் வந்து சேர்ந்தது. அதற்கு முன், தடி தடியான ரிஜிஸ்டரில் விண்ணப்பத்தைப் பார்த்து சீட் இருந்தால் சொல்லி, இல்லையெனில் தேதி மாற்றி என்பதோடு சுலபமாக முடியும். அதைவிட, இந்த இந்த ஊர்களுக்கு என்று அளவாக கவுண்டர் இருக்கும். வரிசையில் நின்று கொண்டிருக்க, திடீரென 5ம் எண் கவுண்டரில் இருப்பவர்கள் 32ம் எண் கவுண்டருக்கு வரிசை கலையாமல் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு முடியுமுன்னரே ஓடிப்போய், கடைசியில் இருந்த ஆள் முதல் நபராக பதிவது மரத்துப் போன காலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஒரு உற்சாகம் கிடைக்கும். 

அதை ஒழிப்பதற்காகவே கம்ப்யூட்டர் வந்து தொலைய, எந்த கவுண்டரில் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கேட்க நன்றாக இருந்தாலும், 15ம் தேதி ராக்ஃபோர்டில் இடமில்லையெனில் 14க்கோ 16க்கோ இருக்கிறதா என்பதோடு முடிந்த விஷயம், கம்ப்யூட்டர் வந்ததும், ராமேஸ்வரத்துல பாருங்க, பாண்டியன்ல பாருங்க என்று அதிக நேரம் எடுத்தது. சரியாக என் முறை வருகையில் ஒன்று ப்ரிண்டரோ, இல்லை நெட்வொர்க்கோ சதி செய்யும். 

ஆசுபத்திரியில் கம்ப்யூட்டர் பதிவு வந்து தொலைத்து புறப்பிணியாளர் சீட்டுக்கு அட்டையை நீட்டினால் வாசுதேவமூர்த்தி பாலாஜியை வாசுதேவமூ என்று அடித்துக் கொடுக்கும். அட்டண்டர் வாசுதேவமூ என்று அழைக்கையில் சாவலாம் போல் இருக்கும். எத்தனை பெரிய இலக்கமானாலும் கூட்டத்தெரிந்த கம்ப்யூட்டராய் இருந்தென்ன. பெயரை மட்டும் 15 எழுத்துக்கு மேல் படிக்கமாட்டேன் என்ற பிடிவாதம் என்னத்துக்கு?

ஒரு வேளை நான் அதன்பால் நாட்டம் கொள்ளவில்லை என்ற கோவமோ என்னவோ என்று சுயமாக டாஸ், ஃபாக்ஸ்ப்ரோ என்று பல மொழிகளில் பேசிப் பழகி, நல்ல புரிதலுடன் இருந்த காலத்தில், விடுமுறைக் கணக்குக்கு ஒரு ப்ரோக்ராம் எழுதி, ஒவ்வொரு ஜனவரி, ஜூலைக்கும் கணக்கிலிருக்கும் விடுப்போடு 15 நாள் கூட்ட வேண்டும். மொத்தக் கணக்கு 195 நாட்களுக்கு மிகாமல் பார்த்துக் கொண்டு 180க்குள் இருந்தால் அந்த எண்ணிக்கை, அதற்கு மேல் என்றால் 180+ வித்தியாசம், உச்சமாக 195 நாட்கள் இருப்பின் 180+15 என்று காட்டவேண்டும் என்று விபரமாக சொல்லிக் கொடுத்தேன். பல சோதனைகளுக்குப் பின், டெமோக்கு அதிகாரியிடம் காட்ட அந்தப் பாவி மனுஷன் 180 நாள் ஆரம்பக் கணக்காகக் கொடுத்துத் தொலைய கம்ப்யூட்டர் இருப்பை பூஜ்ஜியமாகக் காட்டி மானத்தை வாங்கியது.

அழமாட்டாக் குறையாக அதனோடு கெஞ்சி கொஞ்சி என்ன புரியவில்லை உனக்கு என்றால் பதில் சொன்னால்தானே? பிறகு ஒரு வழியாக, ஓ! 180க்கு கீழேயும், அதற்கு மேலேயும் இருந்தால் இப்படிச் செய் என்று சொல்லிவிட்டு 180ஆக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. சாரி! சாரி! என்று மன்னிப்புக் கேட்டுத் தொலைத்தேன். இது கூட புரியாத ஒரு கம்ப்யூட்டரை ஏன் எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

அய்யா! ஒரு பத்திரம் பதிய வேண்டுமானால், பதிவாளர் அலுவலக மரத்தடியில் ட்ரங்க் பெட்டி வைத்துக் கொண்டு அல்லது மேசையில் டைப்ரைட்டர் வைத்துக் கொண்டிருப்பவரிடம் போனால், அளவான ஒரு தொகை பேசி முகூர்த்த நேரம் மாறாமல் பதிந்து, ஓரிரு நாளில் பத்திரம் வாங்க முடிந்தது. இப்போது பாருங்கள், அங்கேயும் சனியன் கம்ப்யூட்டர் வந்து தொலைத்துவிட்டது. பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்று ஜெராக்ஸ் எடுத்த பத்திரத்தை, ஐம்பது ரூபாய் கொடுத்தால், பதிவேற்றி இரண்டு நாளில் கொடுத்த காலம் போய், இருனூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் ஐந்து நாட்கள் கழித்துதான் தருகிறார்கள். கேட்டால், ஸ்கேனிங் செய்து கம்ப்யூட்டரில் நம்பர் கொடுக்க வேண்டுமாம். ஏசியா வச்சிக்கிறானுங்கோ? ரெண்டு டாக்குமெண்ட் ஸ்கேன் செஞ்சா 10 நிமிசம் கூலாவணும். என்ன இன்னா பண்ண சொல்ற என்ற பதிலுக்கு எரிச்சல் வராமல் என்ன செய்யும்? எவன் கேட்டான் இந்த கம்ப்யூட்டரை?

உழைத்து ஓடாய்த்தேய்ந்து ஒன்னேகாலணா வருமானத்துக்கு பைசா சுத்தமாக வருமான வரி பிடித்துத் தொலைக்கிறான். அமிதாப் பச்சன் 500 கோடி வரி பாக்கி, கும்பானி ஆயிரம்கோடி வரி பாக்கி என்று பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வாய் நிறைய புன்னகையும் நட்புமாய் கை குலுக்கும் நிதி மந்திரிக்கு என்னைப் பார்த்தால் மட்டும் என்ன இளக்காரம்?  ஆன்லைனில் வரி விபரங்களைப் பதியலாம் என்று விளம்பரம் படித்து, அப்பாடா, இந்த கம்ப்யூட்டர் இழவால் குறைந்தது அலைச்சலாவது மிச்சம் என்று கட்டம் கட்டமாக நிரப்பி சேமித்துக் கொள் என்ற பொத்தானை அழுத்தினால், பாழாப் போன கம்ப்யூட்டர் அதன் புத்தியைக் காட்டி பழி தீர்த்துச் சாவடித்தது.

ஆம்! ப்ரிண்டரை தயாராக வைத்துக் கொண்டு, ப்ரிண்ட் எடுத்து, அதை தபால் மூலமோ, நேரடியாகவோ கொண்டு வந்து ஒப்புச்சீட்டு பெற்றாலொழிய, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக ஒப்புக் கொள்ளப்படமாட்டாதாம். இந்த இழவுக்கு, கையால் நிரப்பி நேரில் கொண்டு போய் கொடுக்க மாட்டேனா?

கடவுச் சீட்டு வாங்க அடிபிடி சண்டை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் ஆன்லைனில் உங்களுக்குச் சவுகரியமான தேதியில் நேரத்தில் வரலாம் என்று ஆசை வார்த்தைக்கு மயங்கி, எல்லாத் தகவலும் கொடுத்து, தேதி, நேரம் முடிவு செய்து, எல்லா ஆவணத்துடனும் போய் நின்றால், அலசி ஆராய்ந்து அது நொட்டை, இது நொள்ளை, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டுவா என்று அலைக்கழிப்பதும், ஒன்னுமே இல்லாவிடினும், போலீசுக்கு வெரிஃபிகேஷன் என்ற பெயரில் மாசக் கணக்காவதும் மாறவேயில்லை.

40 கே.பி. இணைப்போடு ஒரு மின்னஞ்சல் செய்தால், இழு இழு என்று இழுத்து பிழை காட்டுகிறது. அனுப்பிவிட்டு தகவல் சொன்னால் எதிராளி வரலையே என்று அலறுகிறார். பஸ்ஸில், ட்விட்டரில் தகவல் போட்டால் கண்ணாமூச்சி ஆடுகிறது. 4 ஜி.பி டவுன்லோட் செய்து கொண்டிருக்க 3.99ல் கனெக்‌ஷன் போச்சு என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்து வந்து பில்லை ஏத்தி விடுகிறது. 

பேயைக் கட்டிக் கொண்டு புளியமரம் ஏற மறுக்க முடியுமா என்று அத்தனையும் சகித்து, இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே  ‘அனுப்பு’ என்று நிற்கிறது. தமிழ்மணம் சரியாகச் சேர்த்தாயிற்று என்று அலறினாலும், பிடிவாதமாக அனுப்புவிலேயே நிற்கிறது. ஒரு வழியாக கட்டை விரல் தெரிந்தால், பட்டி மேலே இருந்தால் ஓட்டு போட விடமாட்டேன,  இண்டிலி கூட ஜோடியா இருந்தால் எடுப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது.

ஹூம். பார்க்கலாம். என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~

62 comments:

Unknown said...

என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?

Ketkumaa?

வடுவூர் குமார் said...

தினசரி வாழ்கை அதோடு தான் (மனைவியை சொல்லவில்லை) என்ற பிறகு அலுத்துக்கொள்வதில் ஞாயம் இல்லை. :-)

Unknown said...

"வரி பாக்கி என்று பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வாய் நிறைய புன்னகையும் நட்புமாய் கை குலுக்கும் நிதி மந்திரிக்கு என்னைப் பார்த்தால் மட்டும் என்ன இளக்காரம்?"

Computer-m kekkum sir oru naal.

Unknown said...

Sir!,

What does it mean "சொ.கா.சூ... " ?

Thanks.

vasu balaji said...

சொ ந்தக் கா சில் சூ னியம்

Bavan said...

//ஹூம். பார்க்கலாம். என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?//

கேக்குங்கிறீங்க?...:)

Unknown said...

சொ ந்தக் கா சில் சூ னியம்

Ha. Ha. Ha. Fantastic.

நசரேயன் said...

(கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்)

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

பனித்துளி சங்கர் said...

////////கம்ப்யூட்டருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு 1975ம் ஆண்டு எதிர்பாராமல் நடை பெற்றது. அதுவும் இந்தியாவிலேயே முதல் முதல் பயன்பாட்டுக்கு வந்த IBM மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர், என்பதெல்லாம் அடுத்தடுத்தான எமது சந்திப்புகளின் போது சேகரித்த தகவல்.///////////

வியப்பாகத்தான் இருக்கிறது அய்யா நீங்கள் சொல்லும் இந்த வருடத்தில் எல்லாம் நான் பிறக்கவே இல்லை .

Unknown said...

Ha ha ha.

Nalla pathivu. Commanda thappa kututhuttu computrai notta solrathap paaru

சிநேகிதன் அக்பர் said...

இதை விடக்கொடுமை ஆன்லைனில் அரைமணி நேரத்துல அனைத்து டிக்கட்டும் புக்கிங் ஆக்கி விடுவது.

Chitra said...

பேயைக் கட்டிக் கொண்டு புளியமரம் ஏற மறுக்க முடியுமா என்று அத்தனையும் சகித்து, இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே ‘அனுப்பு’ என்று நிற்கிறது. தமிழ்மணம் சரியாகச் சேர்த்தாயிற்று என்று அலறினாலும், பிடிவாதமாக அனுப்புவிலேயே நிற்கிறது. ஒரு வழியாக கட்டை விரல் தெரிந்தால், பட்டி மேலே இருந்தால் ஓட்டு போட விடமாட்டேன, இண்டிலி கூட ஜோடியா இருந்தால் எடுப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது.

.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... உங்கள் முத்திரை பதிக்கப்பட்ட அக்மார்க் காமெடி.

Ahamed irshad said...

கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?//

ஒருவேளை பதிவே எழுதமாட்டேன் என்று சொன்னால் கேட்ககூடுமோ..

Ahamed irshad said...

சொ ந்தக் கா சில் சூ னியம்//

நமக்கு கம்பெனி காசில்தான் சூ..ம்..

ப.கந்தசாமி said...

நல்ல நகைச்சுவை பதிவு. வாயால சொன்னாக் கேக்கற கம்ப்யூட்டர் வந்துடிச்சுன்னு சொல்றாங்களே, நெஜமுங்களா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இப்படியான நடைமுறைச்சிக்கல்கள் அனுதினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது .

பழமைபேசி said...

//நசரேயன் said...
(கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்)

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
//

அண்ணா, இந்தாள் படிக்காமலே இந்த பின்னூட்டத்தை போட்டிருக்காரு....

velji said...

கம்ப்யூட்டரும் தங்கமணியும் ஒன்னுதான்போல!

அருமையான எந்திர மொழி!

காமராஜ் said...

அடடா...
எங்கே அந்தக்கைகள்.இறுகப்பற்றிக்கொள்ளத் துடிக்கிறது.

அண்ணா... க்ளாஸ் அண்ணா.

ஆள் பிடித்தால் எழுத்துப்பிடித்துப்போகுமா போகாதா தெரியல.

எழுத்துப்பிடித்துப்போனால் எல்லா கருத்தும் பளீரெனத்துலங்குகிறது.

அதன் மேல் மறுகவனமும் ஸ்நேகமும் கேளாமலே வருகிறதே என்னண்ணா இந்த விந்தை.

சைவகொத்துப்பரோட்டா said...

//இண்டிலி கூட ஜோடியா இருந்தால் எடுப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது.//

ஜோடிகளை பிரிக்காதீர்கள் :))

Umapathy said...

கம்பூயட்டர் முகத்தில முழிக்கலன எதுவும் விளங்கமாட்டுது
அருமை அருமை

என்னது நானு யாரா? said...

என்ன பழைய ஜென்ம பகையோ தெரியலையே! உங்களை அந்த கம்ப்யூட்டர் படுபாவி, இந்த பாடு படுத்துறான்.

அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கம்ப்யூட்டர் ஜோசியத்தை பாருங்க ஐயா!

நம்ப பக்கம் நேரம் இருக்கும் போது வாங்க...

http://uravukaaran.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் பாலா

பாமரனின் முத்திரை பதித்த இடுகை - அருமை அருமை - அத்தனையும் உண்மை - உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

பாலா நீங்கள் பட்ட பாடு அத்தனையும் நானும் பட்டிருக்கிறேன். பலரும் அனுபவித்திருக்கிறார்கள். இருப்பினும் அடைந்த பலன்கள் பலப்பல. இவற்றுக்கெல்லாம் காரணம் - அடிப்படைக் கணினி அறிவு - படிப்பு - பயிற்சி நமக்கு கொடுக்கப் படாததுதான். நாம் பட்டறிவனாலெயே கற்றுக் கொள்கிறோம்.

இக்கால சிறுவர்களிடம் நாம் கணினியினைப் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. அவர்களின் அறிவும் - திறமையும் - வேகமும் - ஆர்வமும் - வயதும் நம்மிடம் இல்லை. நாம் கணினியுடன் வளர்ந்த காலம் கணினி அறிமுகப் படுத்தப் பட்ட காலம்.

நான் 1984ல் இருந்து கணினியுடன் பழகியவன். சிபிஎம் - டாஸ் - எட்டு இஞ்ச் தோசைக்கல் பிளாப்பி -இருந்த காலம் - ஹார்ட் டிஸ்க் இல்லாத காலம். இன்று இருக்கும் கணினியின் பலமே வேறு. ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு 1983ல் பிஸி வாங்கின காலம் அது. ஏஎம்சி மட்டும் 18000 ரூபாய் ஆண்டுக்கு.

செக்ரட்டரி, லோட்டஸ் 123 என்று இரு ப்ரொகிராம். தற்போதைய எம் எஸ் வேர்ட் - எக்செல்ல்லுக்கு இணையான் புரொகிராம்ஸ். செக்ரட்டிரியை ஆன் செய்தால் - "லோடிங் செக்ரட்டரி - பிளீஸ் வெயிட்" என்று செய்தி வரும் - அச்செய்தி மாறி செக்ரட்டரி வருவதற்குள் 15 நிமிடங்கள் ஆகி விடும்.

அதெல்லாம் அக்காலம் - ம்ம்ம்ம்ம்ம்

மறுமொழி இடுகை யாக மாறும் முன்னர் முடித்துக் கொள்கிறேன் பாலா

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

பாலா - அறிவியல் - தொழில் நுட்பம் பல மடங்கு முன்னேறி விட்டது.

சத்ரியன் said...

//பேயைக் கட்டிக் கொண்டு புளியமரம் ஏற மறுக்க முடியுமா என்று அத்தனையும் சகித்து, இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே ‘அனுப்பு’ என்று நிற்கிறது. //

அடப்பாவமே ! உங்களுக்குமா இப்பிடி நடக்குது?

இத்தனைக்குப் பிறகும் ‘அதன்’ துணைக்கொண்டு ’அதையே’ குறை கூறும் உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்குங்க பாலா.

சத்ரியன் said...

//கம்ப்யூட்டர் என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன்//

எனக்கு ‘டமில்’ தெர்யாது. அதனால எனக்கு ஒரு கொழப்பமும் கெடையாது. அது பேரு சாட்சாத் கம்ப்யூட்டரே தான்.

ஆனா பாருங்க பாலா சைனீஸ்-ல கூட அது பேரு கம்ப்யூட்டர் தானாம். மலாய்-லயும் அப்பிடிதானாம்.

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா! அருமை! ..

Unknown said...

//உழைத்து ஓடாய்த்தேய்ந்து ஒன்னேகாலணா வருமானத்துக்கு பைசா சுத்தமாக வருமான வரி பிடித்துத் தொலைக்கிறான். அமிதாப் பச்சன் 500 கோடி வரி பாக்கி, கும்பானி ஆயிரம்கோடி வரி பாக்கி என்று பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வாய் நிறைய புன்னகையும் நட்புமாய் கை குலுக்கும் நிதி மந்திரிக்கு என்னைப் பார்த்தால் மட்டும் என்ன இளக்காரம்?// இந்த விஷயத்திற்கு யாராவது நடவடிக்கை எடுத்து புண்ணியத்தை கட்டிக்கங்களேன்! கோடனுகோடு சம்பளம்,கமிஷன் வாங்கும் அப்பாவிகள் சார்பாக

Mahi_Granny said...

சரியாகச் சொன்னீர்கள் . கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்கா விட்டாலும் அது இல்லாமல் காலம் தள்ள முடியாத நிலைக்கு வந்து விட்டோம்

க.பாலாசி said...

கலக்கல் காமடி... எதையெதையோ படிச்சிட்டு வரும்போது... நல்ல ரசனைக்குரியதுக்குகூட வாய்விட்டு சிர்க்கமுடியல....

settaikkaran said...

அசத்தல் இடுகை ஐயா!

இதை வாசிக்கும்போது முதல் முதலா மவுஸைப் பிடிக்கத் தெரியாமல், நகர்த்தி நகர்த்தி அடுத்த மேஜைக்கே நான் போன அனுபவம் நினைவுக்கு வருகிறது. கலக்கல்ஸ்! :-)))

VELU.G said...

//ஹூம். பார்க்கலாம். என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?
//

நாமா சொன்னா கேக்கவா போகுது

ரொம்ப நல்லாயிருந்துச்சுங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//திடீரென 5ம் எண் கவுண்டரில் இருப்பவர்கள் 32ம் எண் கவுண்டருக்கு வரிசை கலையாமல் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு முடியுமுன்னரே ஓடிப்போய், கடைசியில் இருந்த ஆள் முதல் நபராக பதிவது மரத்துப் போன காலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஒரு உற்சாகம் கிடைக்கும்.
//

:)

//பெயரை மட்டும் 15 எழுத்துக்கு மேல் படிக்கமாட்டேன் என்ற பிடிவாதம் என்னத்துக்கு?
//

same blood.. :)

//இப்படி மொக்கைப் பதிவைப் போட்டு ஆற்றிக் கொள்ளலாம் என்று தமிழ்மணத்தில் இணைத்தால் சாணி மாதிரி அப்படியே ‘அனுப்பு’ என்று நிற்கிறது. தமிழ்மணம் சரியாகச் சேர்த்தாயிற்று என்று அலறினாலும், பிடிவாதமாக அனுப்புவிலேயே நிற்கிறது.//

:)


யோசித்துப் பார்த்தால் கம்ப்யூட்டர் நிறைய இம்சை தான் தருது போல :)

பெசொவி said...

//எத்தனை பெரிய இலக்கமானாலும் கூட்டத்தெரிந்த கம்ப்யூட்டராய் இருந்தென்ன. பெயரை மட்டும் 15 எழுத்துக்கு மேல் படிக்கமாட்டேன் என்ற பிடிவாதம் என்னத்துக்கு?//

A Million Dollar Question.
:)

ரிஷபன் said...

அருமையான நகைச்சுவை. மிகவும் ரசித்து சிரித்தேன்.

ஈரோடு கதிர் said...

பேசிக்.. ஃபோர்ட்ரான் படிக்கலையோ அதுதான் இன்னும் அந்த சாபம் இருக்கும் போல

vijayakumar said...

Nice writing sir....But you dont scold it.....Its the only machine that made me to think of my own....This system made me to realize my faults ....my commands...my inputs,,, my programmes...In tamil ....suya parisodhanai...Its more confidential than any human...I trust...in fact we trust it..... Its true....we are used to be like this only .....making others ( here machine for our incapacity) responsible....
But your words are true...I am one of regular visitors of your blog...I Like your style and language and truth ...
Sir....you must write often like this...but dont go for like Vadaikothi paravai....i think you can understand my feelings....
thankyou
Vijayakumar

ராஜ நடராஜன் said...

மறுபடியும் ஜோதியில் ஐக்கியமாகிக்கிறேன்:)

கணினி எக்சிபிஷனல ஒருத்தன் ஸ்கிரின்சேவர வச்சிகிட்டு இனிமேல் அலுவலகத்தில பேப்பரே இருக்காதுன்னு ஆ....காட்டினான்.Fan Fold ல இருந்து A4 க்கு இப்ப நடந்து வந்ததே மிச்சம்.

ராஜ நடராஜன் said...

//சரியாகச் சொன்னீர்கள் . கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்கா விட்டாலும் அது இல்லாமல் காலம் தள்ள முடியாத நிலைக்கு வந்து விட்டோம்//

ஆணும்,பெண்ணும் இப்படித்தான் ஒருத்தரப் பார்த்து ஒருத்தர் சொல்லிகிட்டு திரியறாங்க:)

You cannot live with them
You cannot live without them.

ஸ்ரீராம். said...

கணினி பற்றிய பதிவு சுவாரஸ்யம். சீனா அய்யாவின் பதிலையும் சேர்ந்தே ரசித்தேன்..

பின்னோக்கி said...

1975 ? நான் பிறந்தது. அதனால் இந்த நம்பரைப் பார்க்கும் போது வித்தியாசமான உணர்வு. நான் குழந்தையாய் கிடந்த போது உங்களுக்கு அறிமுகம் இந்த கணினி :) சாரி கம்ப்யூட்டர்.

எதோ இந்தப் பெட்டிதான் சோறு போடுது. கம்ப்யூட்டர் வாழ்க.

பருவத்தே பயிர்செய் மாதிரி, குட்டீஸ் எல்லாம் நம்மளை விட பட்டயக் கிளப்புதுங்க. ரிடையர்மெண்டுக்கு ஒரு வருடம் முன், சில ஆசிரியர்களை, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு அனுப்பிக் கொடுமைப் படுத்தியதை அறிவேன்.

பின்னோக்கி said...

போன பின்னூட்டதைப் படித்திருப்பீர்கள். அதனை அடித்துவிட்டு, “publish your comment" அழுத்த,

Service Unavailable

Error 503

என்றது. பக்கென்று ஆனது. பெரிய பின்னூட்டம் அடித்து, இந்த பிரச்சினை வந்தால் எப்படி இருக்கும் பாருங்கள் :). நல்லவேளை, "பின்னாடி போ” வேலை செய்ய தப்பித்தேன்.

நீங்கள் சொன்ன, வருமான வரி பிரிண்ட் அவுட். அறிவே இல்லையான்னு தோணுதுங்க. டிஜிட்டல் கையெழுத்து.. லொட்டு.. லொசுக்கு எல்லாம் இருக்கு. இன்னும் பிரிண்ட் எடுத்து, பெங்களூருக்கு அனுப்பி.. திருந்தவே மாட்டாங்க..

அன்பரசன் said...

நல்ல பகிர்வு சார்

vinthaimanithan said...

ஹாஹ்ஹாஹா... ஹெஹ்ஹெஹ்ஹே... ஹொஹ்ஹொஹ்ஹோ... ஹிஹ்ஹிஹ்ஹீ.... யப்பா.. யாத்தாடி.. முடியலடா சாமி.... இந்த ரவுசு பண்ணி சொம்மா பொரட்டி பொரட்டி பின்றீங்க!

கலகலப்ரியா said...

புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு... (நம்புங்க... என்னோட கவிதைக்கு வந்த பின்னூட்டத்த காப்பி பண்ணிப் போடலை..)

vasu balaji said...

@@நன்றி சேது.
@@நன்றிங்க குமார். பகடிதானே:))
@@கேக்காதா பவன்:))..அவ்வ்வ்.
@@நன்றி நசரேயன். என்னாத்த கண்டிச்சி..என்னாத்த பண்ண?
@@நன்றி சங்கர்
@@நன்றி முகிலன்:)). கமாண்ட் எங்க தப்பு. லாஜிக் முழுமையில்லை அதான்..ஹி ஹி.

vasu balaji said...

@@நன்றி அக்பர். எல்லா ஸ்டேஷனிலும் குறிப்பிட்ட நேரத்தில் கவுண்டர் திறக்கும் போது அப்படித்தான் ஆகும்:(

@@நன்றிங்க சித்ரா
@@நன்றி ஹர்ஷாத்

vasu balaji said...

DrPKandaswamyPhD said...


//நல்ல நகைச்சுவை பதிவு. வாயால சொன்னாக் கேக்கற கம்ப்யூட்டர் வந்துடிச்சுன்னு சொல்றாங்களே, நெஜமுங்களா?//

தெரியலீங். நாம பாட்டுக்கு புலம்புனா அது பாட்டுக்கு என்னத்தயாச்சும் செஞ்சி வில்லங்கத்த இழுத்து விட்டுபோடுமுங். தேவையா?

vasu balaji said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//இப்படியான நடைமுறைச்சிக்கல்கள் அனுதினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது .//

இல்லைங்க கொஞ்சம் திட்டம், கொஞ்சம் ஒருங்கிணைப்பு, நிறையவே கட்டுமானம் சரியாப் போய்ரும். 80சதம் லஞ்சமே கூட:)

vasu balaji said...

@@நன்றிங்க பழமை. அதெல்லாம் தளபதிய அப்படி சொல்லீற முடியாது. முதல் வரியில மழை பெய்ததுன்னு படிச்சிட்டே, கடைசியில நாக்குட்டி கதை முடிவச் சொல்லுவாரு

vasu balaji said...

@@நன்றிங்க வேல்ஜி.
@@நன்றிங்க சை.கொ.ப.
@@நன்றிங்க உமாபதி
@@நன்றிங்க எ.நா.யா.
@@நன்றி சத்ரியன்.:))
@@நன்றி தலைவா.

vasu balaji said...

காமராஜ் said...
அடடா...
எங்கே அந்தக்கைகள்.இறுகப்பற்றிக்கொள்ளத் துடிக்கிறது.

அண்ணா... க்ளாஸ் அண்ணா.

ஆள் பிடித்தால் எழுத்துப்பிடித்துப்போகுமா போகாதா தெரியல.

எழுத்துப்பிடித்துப்போனால் எல்லா கருத்தும் பளீரெனத்துலங்குகிறது.

அதன் மேல் மறுகவனமும் ஸ்நேகமும் கேளாமலே வருகிறதே என்னண்ணா இந்த விந்தை.//

இந்த ஸ்நேகம் நெஞ்சை நிறைக்கிறது காமராஜ்.

vasu balaji said...

cheena (சீனா) said...
அன்பின் பாலா

பாமரனின் முத்திரை பதித்த இடுகை - அருமை அருமை - அத்தனையும் உண்மை - உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

---

பாலா - அறிவியல் - தொழில் நுட்பம் பல மடங்கு முன்னேறி விட்டது.//

நன்றிங்க சீனா. சும்மா பகடிதான். சரியாச் சொன்னீங்க. கூடின வரைக்கும் கூடவே ஓடிப்பாக்குறேன். அது எங்கயோ நிக்குது:))

vasu balaji said...

@@நன்றிங்க தமிழன்
@@நன்றிங்க மஹி_க்ரான்னி
@@நன்றி பாலாசி
@@நன்றி சேட்டை:))
@@நன்றி வேலு
@@நன்றிங்க செந்தில்:))

vasu balaji said...

@@நன்றி பெ.சொ.வி
@@நன்றிங் கதிர்ணோவ்:))
@@நன்றி ரிஷபன்

vasu balaji said...

@@Thanks vijayakumar.oh.no. i am not scolding it. its just for fun:)). Glad to know that you read me regularly. Thanks for the feedback. will keep in mind:)

vasu balaji said...

@@நன்றி நடராஜன். எங்க ரொம்ப நாளாச்சு:)
@@நன்றி பின்னோக்கி. பேரு மகிமையோ, பேக் போய்ட்டு வொர்க்காவுது:))

vasu balaji said...

@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க அன்பரசன்
@@நன்றி விந்தைமனிதன்

vasu balaji said...

கலகலப்ரியா said...


//புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு... (நம்புங்க... என்னோட கவிதைக்கு வந்த பின்னூட்டத்த காப்பி பண்ணிப் போடலை..)//

=))..முடியல. வாலு:))))

எறும்பு said...
This comment has been removed by the author.
எறும்பு said...

//என்றைக்காவது கம்ப்யூட்டர் நாம் சொன்னதைக் கேட்காமலா போகும்?//


நம்பிக்கைதானே வாழ்க்கை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அன்றைய கால கட்டத்தில் நான் எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வந்து தொலைத்தது இதைப் படிக்கும் போது..
கம்ப்யூட்டரைக் காதலித்து,
கற்பிழந்த கவிதா,
பிள்ளைகள் பெற்றாள்,
தப்பு..தப்பாக..
எனக்கும் கம்ப்யூட்டரைப் பிடிக்கவில்லை. என்ன செய்வது?
அதற்காக ‘கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவன் முட்டாள்..அதைப் பரப்புகிறவன் காட்டு மிராண்டி ’என்று
ஏதாவது குட்டி சுவற்றில் கரிக்கட்டையால் எழுத முடியுமா என்ன?

'பரிவை' சே.குமார் said...

நல்ல நகைச்சுவை பதிவு.