Saturday, May 15, 2010

பள்ளித் தலமனைத்தும் ...

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று பாரதியார் சொன்னாலும் சொன்னார், கோவில் மாதிரியே பள்ளியும் காசுள்ளவனக்கென்றாகிப் போச்சு.

கடந்த சில நாட்களாக பள்ளிக் கட்டண நிர்ணயிப்பு சரிதான் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னரும், சண்டைக்கோழிகளாக மண்டையாட்டிக் கொண்டு பள்ளி நிர்வாகம் ஒரு புறம், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அரசு ஒரு புறம், புள்ள படிப்பு என்னாகுமோ என்ற அர்த்தமற்ற கவலையுடன் ஃபீஸ் கட்டாத பெற்றோர், ஃபீஸ் கட்டிய இறுமாப்பில் பள்ளிக்கு ஆதரவாக ஒரு சில பெற்றோர் என படிப்பு மார்கட் பரபரவென்றாகிவிட்டது.

பிள்ளைகளை ஃபெயிலாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர் வாய் திறக்கமாட்டார்கள் என்ற திமிர் ஒரு புறம், வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம், உச்சநீதி மன்றத் தீர்ப்பை எள்ளும் நரித்தனம் ஒரு புறம் என்று சகல முஸ்தீபுகளுடன் பள்ளி நிர்வாகிகள் விடும் அறிக்கை இவர்களா எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

அசைக்க முடியாது என்ற இறுமாப்பில் தங்கள் ஆட்சேபணைகளை அல்லது கருத்துக்களை குழுவிடம் சமர்ப்பிக்க  மறுத்து, அரசு திடமான நடவடிக்கை எடுப்பது தெரிந்தவுடன் நீதி முன்றிலுக்கு ஓடி, பாதகமான தீர்ப்பு வந்ததும், பள்ளியைத் திறக்க மாட்டார்களாம். பெற்றோருக்கு அச்சுறுத்தலாக இந்த அறிக்கை. நீதிமன்ற வழிகாட்டலில், தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.

இவர்களுக்கென்று ஒரு அமைப்பாக நீதிமன்றத்தை நாடுவார்களாம். நீதி மன்றம், 15 நாட்களில் உங்கள் தரப்பு நியாயத்தை குழுவிடம் சமர்ப்பியுங்கள் என்றவுடன், தனித்தனியாக கொடுப்பார்களாம். அத்தனைப் பள்ளிகளின் எதிர்ப்பை குழு பரிசீலிக்க கண்டிப்பாய் இந்த வருடம் ஆகிவிடும். தாமதத்தைக் காரணம் காட்டி, மீண்டும் நீதிமன்றத்திடம் அரசாணையை முடக்கும் அப்பீல், பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற முதலைக் கண்ணீருடன் மறைமுகமான அச்சுறுத்தலுக்கான குள்ள நரித்தனம் இது.

இந்த அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, அரசு தாமதியாமல் நீதிமன்றத்தை அணுகி, தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் தனித்தனியாக 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த காரணமின்றி ஒரே மாதிரியான ஆட்சேபணைகள் கொண்ட மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்ற எச்சரிக்கையோடு மேலதிக வழிகாட்டலைப் பெறும் சாத்தியக் கூற்றை பரிசீலிக்க வேண்டும்.

மெட்ரிகுலேஷன் பள்ளி பிழைக்குமா என்ற நிலையில் இருந்த காலம் போய் விட்ட அறிக்கை இருக்கிறதே! அபாரம். பள்ளிக்கட்டணங்கள் வசூலித்து விட்ட நிலையில் மாறுபட்ட கட்டணத்தை நடைமுறப் படுத்த முடியாதாம்.

மாதா மாதம் சம்பளத்துக்கு ஏங்கி உழைக்கும் வர்க்கம், இவர்கள் இழவெடுக்க சேர்த்து வைத்து இரண்டு பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட 25ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியிலிருந்து உருவினால் எச்சூஸ் மீ. வரி கட்டுங்க ப்ளீஸ் என்று வரும் வருமான வரித்துறை ஒரே ஒரு பிரபல பள்ளியையாவது ரெய்ட் செய்திருக்கிறதா? குறைந்த பட்சம் அவர்கள் சமர்ப்பிக்கும் கணக்கையாவது ஒன்னும் ஒன்னும் ரெண்டு சரியா இருக்கு எனப் பாராமல் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறதா?

ஹி ஹி. அவங்களுக்கு பிள்ளைகள் இல்லையா என்ன. ஆனால் மூக்கால் அழுது பணம் கட்டுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும். இதிலும் சிஸ்டம் வந்துவிட்டது. கேட்கிற டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி ஆள் அம்பு பிடித்து வருமான வரித்துரை (அல்லோ நசரேயன் பிழையில்லை. அதிகாரியை துரைன்னு சொன்னேன்:))) ரெகமெண்டேஷன் பிடித்தால் கொடுத்த காசில் கொஞ்சம் திரும்பும். மற்றபடி மந்திரியானாலும் பெப்பேதான்.

இந்தக் கல்வி முறையைப் பாருங்கள் சாமிகளா:

ஐந்து அல்லது ஆறு வருடத்துவக்கம் பாலர் பள்ளி. சத்தியமாக ஹேண்ட்ரைட்டிங், ட்ராயிங்,அரிச்சுவடி, வாய்ப்பாடு டார்ச்சர் எல்லாம் இல்லை. அமைதியாக உட்கார்ந்திருத்தல், ஆசிரியர் சொல்வதைக் கேட்டல், தன் வேலையைப் பார்த்துக் கொள்ள பயிற்சி, மற்ற பிள்ளைகளுடன் பழகுதல், பகிர்தல், அவசர காலத்தில் தற்காப்பு வழிகள், காவலர், மருத்துவ உதவி கோரல் போன்ற பயிற்சிகள் மட்டுமே.

ஏழு வயது தொடக்கம் அடிப்படைப் பள்ளிக் கல்வி. அது பெரும்பாலும் அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கவேண்டும். ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி. ஆறாம் வகுப்பில் பொதுத் தேர்வின் மூலம்  திறமையுள்ள மாணவர்கள் ஆறரை வருடம் மேனிலைக் கல்விச் சாலையில் சேரலாம். அல்லது 7லிருந்து 9ம் வகுப்புவரை  நடுனிலைக் கல்வி கற்றபின் நான்கரை வருட மேனிலைக் கல்வி அல்லது தொழிற்பயிற்சியுடன் கூடிய கல்வி படிக்கலாம். இந்தத் தொழிற்பயிற்சிக் கல்வியின் போது நிறுவனங்களின் கூட்டோடு அவர்கள் நிறுவனங்களில் செயல் முறைப் பயிற்சியோடு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளியில் படித்தல் அவசியமாகிறது.

இதனை முடித்த பின்னர், மேனிலைப் பள்ளி முடித்தவர் பட்டப் படிப்புக்கும், தொழிற்கல்வி படித்தவர் மாலைக் கல்லூரி, தொழிற்பயிற்சிக் கல்லூரி அல்லது மேனிலைப் பள்ளிக்குச் சமமான பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியும்.

ஆக ஒன்பது வருடக் கட்டாயப் படிப்பில், உதவாத கேஸ் என்று படிப்பை நிறுத்தும் வாய்ப்பே இல்லை. ஏட்டுச் சுரைக்காய் வரவில்லையா ஏதோ ஒரு தொழில் கற்றுக் கொள். உன் சாமர்த்தியம் பின்னாளில் உணர்ந்து படிக்கிறாயா படித்துக் கொள் என்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட தனியாக பரிட்சை என்ற ஒரு முறையின்றி ஆண்டு முழுதும் நிரவிய தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள், வகுப்பில் நடவடிக்கை, மற்றவர்களுடனான பரிமாற்றம் ஆகிய அனைத்தும் கருத்தில் கொண்டு மாணவரைத் தரப்படுத்தல். படிக்கச் சிரமப்படும் மாணவர்களுக்கு ஏற்ற நீடித்தக் கல்வி முறை, ஒரு கட்டத்தில் ஆர்வம் கொண்டு சிறப்பாகப் படித்தால் மற்ற திறம்பட்ட மாணவர் பள்ளிக்குத் திரும்ப வாய்ப்பு.

இப்படியல்லவா இருக்க வேண்டும் ஒரு கல்வி அமைப்பு. பாடத்திட்டங்கள் பார்த்தாலோ ஏங்கிப் போகும் மனது. பிள்ளைகளுக்கு அழுத்தமின்றி படிப்புடன் அவர்கள் விரும்பிய கூடுதல் படிப்பு இசையோ, நடனமோ, கைவினையோ அத்தனைக்கும் வழிவகை செய்யும் ஒரு கட்டமைப்பு.

எப்படி முடிகிறது இது? மக்களால், மக்களுக்கு மக்களே என்ற முழுமையான அர்த்தம் புரிந்த, அதற்கு மதிப்பளிக்கும் ஸ்விட்சர்லாந்தில் இது சாத்தியம். கேள்வியா கேட்கிறாய்? உன் பிள்ளை எப்படி பாஸாகிறான் பார்க்கிறேன் என்று மிரட்டாமல், குறையிருக்கிறதா வந்து பேசுங்களேன் என்று நட்புடன் அழைக்கும் பள்ளிகள், எம்புள்ள தங்கம் என்ற கனவில் இருக்கும் பெற்றோருக்கு அழைத்து குறைச் சுட்டி அதைத் தங்கமாக ஆக்கும் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்காம், எதுக்குன்னு நமக்கா தெரியாது? ரூ 10000 கொடுங்கள். பள்ளி முடித்துத் திரும்பும்போது திருப்பித் தருவோம் என்று திரட்டி, காசு திருப்பிக் கேட்டால் காண்டக்ட் சர்டிஃபிகேட்டில் சுமார் என்று தரப்படுத்துவேன் என மிரட்டுவார்கள் என்ற எண்ணமற்ற பெற்றோர்களும் பள்ளிகளும் எப்படிச் சாத்தியமாகின்றன?

மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர். அரசும், நீதிமன்றமும் ஒரு சரியான திசையில் அடியெடுத்து வைத்திருக்கின்றன. உண்மையான கோரிக்கைகளை கூடிய வரை ஏற்று, முறையற்ற பேராசைக் கோரிக்கைகளை முற்றாய் எதிர்த்து, மேல் முறையீடு என்ற பேச்சுக்கே வழியின்றி முழுமையாய் ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

நோக்கம் மாணவர்களுக்கு முழுமையான முடியக்கூடிய கல்வி என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

~~

48 comments:

Subankan said...

எல்லாமே வியாபாரம்தான். வேறென்ன?

ஜெட்லி... said...

நீங்க கேக்குறது ரைட்தான்....இது வரைக்கும் எந்த பள்ளிக்கும்
நம்ம ஆளுங்க ரெய்ட் போனதே இல்லையே...
ஒரு வேளை பசங்க படிக்கிற இடம்னு ப்ரீயா விட்டுருப்பாங்க....

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மாற்றுவழிகள் சிந்திக்கப்பட்டு வருகிறது ,அதுவரை இப்பாடியான அவலங்களில் நாளைய தலைமுறைகள் அவஸ்தைப்படுவது மிகவும் கவலையளிக்கிறது .ம்....

சைவகொத்துப்பரோட்டா said...

//வருமான வரித்துறை ஒரே ஒரு பிரபல பள்ளியையாவது ரெய்ட் செய்திருக்கிறதா?//

நியாயமான கேள்வி.

settaikkaran said...

இன்னும் சில காலம் போனால், மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி போல, எல்.கே.ஜிக்கும் நுழைவுத்தேர்வு எழுதித்தொலைக்க வேண்டும் போலிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க சட்டத்தை இயற்றுவதோடு நின்றுவிடாமல், கடுமையாக அமல்படுத்துகிற துணிச்சலும் அரசுக்கு வரவேண்டும். வருமா? :-(

எம்.எம்.அப்துல்லா said...

//மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர்.

//

சபாஷ்.

ஸ்ரீராம். said...

இது மாற இன்னும் பல காலமாகும். அரசாங்கமும் நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன்..நீ அழற மாதிரி அழு டைப் நடவடிக்கைகள்தான்..அந்தக் காலத்துல நான் படிச்சப்போ என்ன ஃபீஸ் கட்டினேன்னு நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கும்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

அன்புடன் நான் said...

”காசே”தான்.... கல்வியடா

காமராஜ் said...

பாலா சார்.. மிகத்தெளிவான கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள்.
கல்வி மட்டுமல்ல,நடுத்தரம் புழங்குகிற எல்லா வற்றிலும் இதுமாதிரியான
ஒழுங்கீனம் மேலோங்கி வருகிறது.அரசு ஊழியர் ஸ்ற்றைக் என்று சொன்னால்
குய்யோ முறையோவென்று அலறும் ஊடகங்கள்.இப்போது கள்ள மௌனம் காக்கிறது.

நாடோடி said...

க‌ல்வித்துறையில் ல‌ஞ்ச‌ம் கோடிக‌ளில் புர‌ளுகிற‌து...‌ அப்புற‌ம்‌ எங்க‌ இவ‌ங்க‌ ந‌ல்ல‌ க‌ல்வியை த‌ர‌ போகிறார்க‌ள்..

அருமையான‌ சிந்திக்க‌ வேண்டிய‌ ப‌திவு

இராகவன் நைஜிரியா said...

கல்வி என்பது வியாபாரமாகிப் போயிடுச்சு அண்ணே. என்ன பண்ணாலும், யாரும் துணிந்து கேள்விக் கேட்க மாட்டங்கன்னு ஆடறாங்க...

Paleo God said...

யாருக்கும் வெட்கமில்லை! :(

ஈரோடு கதிர் said...

//படிப்பு என்னாகுமோ என்ற அர்த்தமற்ற கவலையுடன்//

இந்தக் கவலைதான் நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை கல்வியென்ற பெயரில் தின்று கொழுக்கிறது.

//அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர்//

இந்தத் திமிர்தானே வென்று வருகிறது

VISA said...

இதை பத்தி எல்லாம் நம்மளால மனசு வெந்து எழுதத்தான் முடியுது வேறென்ன செய்ய சொல்ல....:(

க.பாலாசி said...

ஒண்ணும் சொல்லறதுக்கில்ல...

எத்த சொல்லி ஏத உரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலல்ல இருக்குது...

இருக்கும் வயல்களனைத்திலும் பள்ளிகட்டுவோம், இல்லாதவன் வயிற்றிலே கட்டணமென்று எட்டிமிதிப்போம்.... ‘இதுதான்’ எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்..........

க ரா said...

எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்ன்மெண்ட் ஸுகூல்ல சேக்கறோமா ? எல்லாரும் துட்டு புடுங்கற ஸுகூல்லதான் படிப்பு நல்லா சொல்லி தறாங்கன்னு அங்கதான போறோம். இப்படியே எல்லாரும் போறதாலதான் இவனுங்களுக்கு திமிர் அதிமாகிடிச்சு. மக்களுக்கு வேற வலி இல்ல. எப்படியும் நம்ம கிட்டதான் வரனும்னு ஒரு மிதப்பு. கவன்மென்ட் ஸ்கூல்ல வேல பாக்கற வாத்தியாருங்களுக்கும் எப்படியும் நம்ம கிட்ட படிக்கறதுக்கு யாரும் வரப்போறதில்ல. அதுனால நம்ம எதுக்கு வேல பாக்கனும்ட்னு தோணிப்போச்சு. என்னத்த சொல்ல.

Unknown said...

முதலில் அரசு ஊழியர்களின்,
மந்திரிமார்களின் பிள்ளைகள் எல்லோரும் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று கடுமையான
சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும். தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும். இதன்மூலம்தான் பொது மக்கள் அரசு பள்ளிகளை ஆர்வமுடன் தேடி வருவார்கள். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மேற்கண்ட சட்டத்தை இயற்றுமா?

சிநேகிதன் அக்பர் said...

சல்யூட் சார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்ச நாள் முன்னாடிதான் இதைப் பத்தி வருத்தப்பட்டு எழுதி இருந்தேன் பாலா சார்.. நாம வேறென்ன செய்ய முடியும்.. பொலம்புறத தவிர..:-(((

Unknown said...

பாலா...

இந்த ஒரே ஒரு விஷயத்தைப் பக்கத்து நாட்டிலிருந்து கற்றுக்கொள்ளலாம். ஆகக் குறைந்தது 13ம் வகுப்பு வரைக்காவது அரசாங்கம் ஒரு பொதுவான பாடத்திட்டம் எல்லாம் போட்டு இலவசமாகக் கல்வி தருகிறார்கள். பல்கலைக் கழக அனுமதியில் இன ரீதியான ஓரவஞ்சனையை விடுத்துப் பார்த்தால் இலங்கைக் கல்வி முறை எவ்வளவோ மேல். (பாடத்திட்டத்தை விட்டுவிடுங்கள்). இந்தியாவின் மக்கள் தொகை இலங்கையை விடப் பலமடங்கு அதிகம் என்பதால் அந்த நடை முறையைப் பின்பற்ற முடியாது என்பதெல்லாம் சப்பைக்கட்டு. கொஞ்சம் வாயைக் கட்டி வவுத்தைக் கட்டி (அரசாங்கம்) எதிர்காலச் சந்ததியின் கல்விக்கு கை கொடுப்பதால் வல்லரசு ஒன்றும் நொள்ளையாகிவிடாது.

பெசொவி said...

nice post!

But, as one person has asked, how many of us will dare go to Govt. Schools for our children. (Honestly, I won't).

We can not expect the Government to take a good decision as the Governors (i mean administrators) will encash the situation and a bulk sum would be received from Matric School owners.

As usual, yet another day will come when the same thing will arise from the crash.

Long Live, the so-called Democracy!

Unknown said...

அமெரிக்கக் கல்வி முறையும் கிட்டத்தட்ட ஸ்விட்சர்லாந்து மாதிரிதான்.

என்ன இங்கே பள்ளிக்கல்வி இலவசம். இதைப் பற்றி விரிவாகக் கனவுதேசத்தில் (தொடர்ந்தால்?!!) எழுதுகிறேன்.

Thenammai Lakshmanan said...

மெக்காலெ கல்வி முறையின்குளறுபடிகள் இவை..
மேலும்.. கல்லூரிகளும் இந்தக் கொள்ளைக்கு விலக்கல்ல..

Jerry Eshananda said...

இப்ப தான் நல்ல காலம் பொறந்திருக்கு ........

ராஜ நடராஜன் said...

//வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம்,//

இப்படியும் வேற நடக்குதா?வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டிய விசயமாச்சே!

செ.சரவணக்குமார் said...

உங்கள் ஆதங்கத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் பாலா சார். நன்றி.

Ahamed irshad said...

க.பாலாசி said...
ஒண்ணும் சொல்லறதுக்கில்ல...

எத்த சொல்லி ஏத உரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலல்ல இருக்குது...

இருக்கும் வயல்களனைத்திலும் பள்ளிகட்டுவோம், இல்லாதவன் வயிற்றிலே கட்டணமென்று எட்டிமிதிப்போம்.... ‘இதுதான்’ எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்..........///

ரிப்ப்பீபீபீபீபீபீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட

ராஜ நடராஜன் said...

//எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்ன்மெண்ட் ஸுகூல்ல சேக்கறோமா ? //


சமூகத்துடன் ஒட்டு உறவாடல்களுக்கு படிப்பினையாகவும்,இலவசமாகவும் அரசு பள்ளிகள் நன்றாகத்தானே போய்கிட்டிருந்தது.எங்கே தவறவிட்டோம்?

சத்ரியன் said...

//பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்று பாரதியார் சொன்னாலும் சொன்னார், கோவில் மாதிரியே பள்ளியும் காசுள்ளவனக்கென்றாகிப் போச்சு. //

பாலா,

பச்சை மொளகாய ஒரைச்சி ... வெச்சி மாதிரியில்ல ஆரம்பிக்குது?

சத்ரியன் said...

//நீதிமன்ற வழிகாட்டலில், தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.//

படிக்காதவங்க மட்டுந்தானே இந்தியாவுல “செண்ட்ரல் மினிஸ்ட்ராக” முடியும்!

இதுக்கு மேல படிச்சி என்ன கத்துக்கனும்னு எதிர்ப்பாக்குறீங்க?

சத்ரியன் said...

//பிள்ளைகளை ஃபெயிலாக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர் வாய் திறக்கமாட்டார்கள் என்ற திமிர் ஒரு புறம், வேலை போய் விடுமோ என்ற பயத்தில் எட்டாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருபதாயிரத்துக்கு கையெழுத்து போடும் ஆசிரியர்களும் என்ன கிழித்துவிட முடியும் என்ற இறுமாப்பு ஒருபுறம், உச்சநீதி மன்றத் தீர்ப்பை எள்ளும் நரித்தனம் ஒரு புறம் என்று சகல முஸ்தீபுகளுடன் பள்ளி நிர்வாகிகள் விடும் அறிக்கை //

ம.பி.யில் இந்தியா வல்லரசாகிடும்.

(அப்துல் கலாம் ஐயா, தயவு செஞ்சி முழிச்சிக்குங்க. இனி கனவெல்லாம் வேணாம். நீங்களுந்தான் விஞ்ஞானியா இருந்தீங்க.“அதிபரா இருந்தீங்க. எந்த மெட்ரிக்குலேசன்ல, எத்தன லட்சம் குடுத்து படிச்சீங்க..?)

பாலா அண்ணா

“ம.பி”-ன்னா மத்திய பிரதோஷம் இல்லை. ”மனிதர்கள் எல்லாம் மாண்ட பின்” என்று பொருள்.

சத்ரியன் said...

//பள்ளிகளின் கொட்டத்தை அடக்க சட்டத்தை இயற்றுவதோடு நின்றுவிடாமல், கடுமையாக அமல்படுத்துகிற துணிச்சலும் அரசுக்கு வரவேண்டும்.

வருமா? //

சேட்டை,

வரும் வரும். உம் வீடு தேடி ஆட்டோ.

பிரபாகர் said...

அய்யா!

தாமதமாய் படிக்கிறேன்! சொல்லியிருக்கும் எல்லாம் சரிதான்.ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//மோசடியிலிருந்து தீவிரவாதி வரை அப்பீலிலேயே தள்ளிப் போடலாம் என்ற அமைப்பு தரும் உத்திரவாதம் இந்தத் திமிர். //

அதனால் தான், பயமேயில்லாம தப்பு பண்ணுகிறார்கள் அய்யா...

Cable சங்கர் said...

அது சரி

ரிஷபன் said...

ம்ம்.. தங்கள் தரப்பு நியாயத்தை பரிசீலனைக்கு அனுப்புவதில் காட்டிய நரித்தனம் இருக்கிறதே. அரசியல்வாதிகள் இவர்களிடம் படிக்கப் போகலாம்.
அவங்க படிச்சுட்டா இன்னும் கோளாறுதான்

நேசமித்ரன் said...

தேவையான இடுகை!

விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் குறைந்தபட்ச செயல்

vasu balaji said...

@@நன்றி சுபாங்கன்
@@நன்றி ஜெட்லி
@@நன்றி நண்டு
@@நன்றிங்க சை.கொ.ப.
@@இப்பவே நுழைவுத் தேர்வு உண்டு சேட்டை சில பள்ளிகளில். நன்றி.
@@நன்றிங்க அப்துல்லா.
@@நன்றி ஸ்ரீராம். காமராஜர் புண்ணியத்துல நான் 11ம் வகுப்பு S.S.L.C. புத்தகத்துக்கு ரூ1.50 பரிட்சை ஃபீஸ் 15ரூ கட்டினேன். அவ்வளவுதான்.
@@நன்றிங்க அருணா
@@நன்றிங்க கருணாகரசு
@@ஆமாங்க காமராஜ். ஊடக சுதந்திரத்தை அடமானம் வைத்தது மிகக் கவலையளிக்கிறது.
@@நன்றிங்க நாடோடி
@@ராகவண்ணே பிஸினஸ் தாண்டி இப்போ ப்ளாக்மெயிலுக்கு போய்ட்டாங்கண்ணே.
@@நன்றி ஷங்கர்.
@@நன்றி கதிர்.
@@நன்றி விசா. ஆமாம்.
@@நன்றி பாலாசி.

vasu balaji said...

@@நன்றிங்க இராமசாமி கண்ணன். சென்னையில் அரசுக் கல்விச் சாலைகளில் சிறப்பாகவே இருக்கிறது. இடம் கிடைப்பது கடினம். ஒரு சில ஆசிரியர்களால் ஒட்டு மொத்தமாக இப்படி. மற்றது அடிப்படை வசதியின்மை. கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாகக் கொண்டு வர முடியும்.

vasu balaji said...

@@சரியான கருத்து மாயக்கிருஷ்ணன். செய்யும் என எதிர்ப்பார்ப்போம். முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

vasu balaji said...

@@நன்றி அக்பர்
@@நன்றி கார்த்தி. படித்தேன்.
@@நன்றி கிருத்திகன்.
@@Thank you பெயர் சொல்ல விருப்பமில்லை.
@@நன்றி முகிலன். எழுதணும்.
@@இது மெக்காலே பிரச்சினையில்லைங்க. இது காசு பிரச்சினை:)
@@நன்றி ஜெரி. ஆசிரியர்களும் பெற்றோர் பக்கம் இருப்பது மிக அவசியம்.
@@ஆமாண்ணே. அந்தக் கொடுமை வேற.
@@நன்றி சரவணக்குமார்.
@@நன்றி இர்ஷாத்

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

//எல்லாரும் சொல்றோம்தான். ஆனா நம்ம புள்ளைங்கள கவர்ன்மெண்ட் ஸுகூல்ல சேக்கறோமா ? //


சமூகத்துடன் ஒட்டு உறவாடல்களுக்கு படிப்பினையாகவும்,இலவசமாகவும் அரசு பள்ளிகள் நன்றாகத்தானே போய்கிட்டிருந்தது.எங்கே தவறவிட்டோம்?//

அண்ணே சென்னையில் சிறப்பாகவே இருக்கிறது. சீட் கிடைப்பது கடினம். தேர்வு விகிதமும், மார்க்குகளும் சோடை போவதில்லை. ஆசிரியர்களின் உழைப்பு சொல்லத் தரமன்று.முக்கிய தயக்கம் பழைய கட்டிடங்கள், சக மாணவர்களின் ஒழுங்கீனத்தால் பாதுகாப்பற்ற நிலை, கழிப்பறை வசதியின்மை, பரிசோதனைக்கூடங்கள் இல்லாமை ஆகியன. சரியாகிவிடும்.

vasu balaji said...

@@நன்றி கண்ணன்
@@நன்றி பிரபா
@@நன்றி பட்டா. என்ன சிங்கப்பூர் ஆளெல்லாம் ஒன்னா வந்திருக்கீங்க:))
@@நன்றி கேபிள்ஜி
@@நன்றி ரிஷபன்
@@நன்றி நேசன்.

தாராபுரத்தான் said...

சரியான நேரத்தில் ஆரோக்கியமான பதிவுங்க..

KANNAA NALAMAA said...

மாதா மாதம் சம்பளத்துக்கு ஏங்கி உழைக்கும் வர்க்கம், இவர்கள் இழவெடுக்க சேர்த்து வைத்து இரண்டு பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட 25ஆயிரம் ரூபாய்க்கு மேல்.

ENADHU IRANDU PERAPPILLAIKALUKKUM RS.25,000/-

நான் படிச்சப்போ என்ன ஃபீஸ் THERIYUMA RS.316/- PER SEMESTER FOR ENG.COLLEGE STUDIES.

ELLORUKKUM ANAITHU NALLAVAIKALAIYUM SEIDHU VARUM MAANBUMIGU DR.KALAIZHAR AVARGAL IDHUPATRI ORU NALLA MUDIVU EDUKKA VENDUM.
Er.Ganesan/Coimbatore

thiru selvam said...

EN GIRAMATHU KALVI APPO IRRUNDADADU POL IPPO EN MAGANUKKU RS 25000 KATTIUM ILLE!!! ENNA SEIYA???

Radhakrishnan said...

//நோக்கம் மாணவர்களுக்கு முழுமையான முடியக்கூடிய கல்வி என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.//

நம்மூரில் சாத்தியப்படட்டும்.