Tuesday, April 20, 2010

பாலே நடனக்காரன்..

தொடர்ந்தாற்போல் கதிர் இரண்டு மூன்று ஒளகப் படங்களைப் பார்த்து இடுகை போட்டதோடன்றி தொலைபேசியிலும், சிலாகிப்பதைக் கேட்டு ஒருமாதிரியான குற்றவுணர்வு இருந்துக் கொண்டேயிருந்தது. என்னையறியாமலே என் கை முகத்துக்கு நேராகப் போவதும், ஒரு விரல் நெற்றியைச் சுட்டிக் காட்டும் நேரம் மனதுக்குள் ஒளகப்படம் பார்காத நீயெல்லாம் பதிவரா என்ற மனசாட்சியின் டார்ச்சர் வேறு. 

கூகிளாரை வேண்டியதில் பக்கம் பக்கமாக சுட்டிகள் வந்தாலும், என்னையுமறியாமல் பார்க்கத் தோன்றியது ஒரு ரஷ்யமொழித் திரைப்படம்.

Балерина

‘பாலே நடனக்காரன்’ என்ற ரஷ்ய மொழித் திரைப்படத்தைக் காணும் பேறு எதிர்பாராமல் கிட்டியது. அமோரோவ்ஸ்கியின் மிகச் சிறந்தபடம் என கூகிளார் சர்டிஃபிகேட்டும். கொடுத்திருந்தார். சப்டைட்டில் இல்லாத குறையேயின்றி அருமையான நடிப்பினால் கட்டிப் போட்டு விடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டம் அது. உக்ரைனின் ல்விவ் என்ற ஊரில் ரஷ்யாவின் மிகச்சிறந்த பாலே நடனக் கலைஞர் சான்ட்ரோவ்ஸ்கி. அவரின் பாலே பள்ளியில் பயில உலகெங்குமிருந்தும் மாணவர்கள் ஏங்குவார்கள். அவர் மகள் கடென்கா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவளும் மிகச் சிறந்த பாலே நடனக்காரி.  சாண்ட்ரோவ்ஸ்கி திடீரென பள்ளிப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முடங்கிப் போகிறார். மகளின் முன்னேற்றமும் புகழுமே அவருக்கிருக்கும் ஒரே ஆறுதல். 

இன்னோரு ஊரான வின்னிட்சாவில் சற்றேறக் குறைய இதே அளவு பிரசித்தமான பள்ளியின் நடன ஆசிரியை கந்திச்சா. அவள் மகன் ரெமோஸ்கியும் சிறந்த பாலே நடனக்காரன். 

ல்விவ்வில் நடக்கும் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஆட ரெமோஸ்கி குழுவுடன் செல்கிறான். நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக ஆடியமைக்காக அவனுக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கிறது. குழுவினருடன் குஷியாக கிளம்பும் ரெமோஸ்கி கடென்காவைச் சந்திக்கிறான். முதல் பார்வையிலேயே மனதைக் கொள்ளையிட்ட கடென்கா ரெமோஸ்கியின் நடனம் குறித்து நக்கலடிக்கிறாள்.

அவள் தோழிகளும், ரெமோஸ்கியின் குழுவினரும் அவரவர் குழுவை சிலாகித்துப் பேச இறுதியில் ரெமோஸ்கியும் கடென்காவும் போட்டியாக நடனமாடி எவர் பள்ளி சிறந்தது என்று தீர்மானிக்க முடிவாகிறது.

கடென்கா அவமானப் படுத்தினாலும், அவளின் துடுக்கும், அழகும் ரெமோஸ்கியை நிலைகுலைய வைக்கிறது. விரைவிலேயே கடென்காவும் தான் ரெமோஸ்கியை காதலிப்பதை உணருகிறாள். 

சாண்ட்ரோவ்ஸ்கியின் அழைப்பினை ஏற்று டின்னருக்குச் செல்லும் ரெமோஸ்கி உணவுக்குப் பிறகு பேசிக் கொண்டிருக்கையில் கந்திச்சாவை பற்றி அறிகிறார். ரெமோஸ்கியின் பர்சிலிருக்கும் புகைப்படத்திலிருந்து சண்டைக்காலத்தில் காணாமல் போன தன் தங்கை என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.

கடென்காவின் சகோதரியின் கணவனுக்கு கடென்காவின் மீது காதல். அவனுக்கு கடென்கா ரெமோஸ்கியை காதலிப்பது தெரியவந்ததும் கொதித்துப் போகிறான். அவளை எப்படியும் அடைந்தே தீருவதென திட்டம் தீட்டுகிறான்.

கடென்கா ரெமோஸ்கி காதல் வெற்றி பெற்றதா, அவர்களிடையேயான நடனப் போட்டி, அவள் அக்காள் கணவரின் சதி என்னவானது என்றெல்லாம் முழுக்கதை சொல்லி ஒரு சிறந்த படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக, இயற்கைச் சூழலில் மனித மனப் போராட்டம், காதல், சதியென்று கதையை நகர்த்திச் செல்லும் விதம் சொல்லத் தரமன்று. பொதுவாக ஒளகத் திரைப்படம் என்றாலே சீரியஸ் என்ற முத்திரையைத் தகர்த்தெரிந்து, ரெமோஸ்கியின் குழுவில் இருக்கும் கந்தர், மண்டோவாஸ்கி, சரல்யேவோ ஆகியோரின் முக்கோணக் காதல், அவர்கள் அடிக்கும் லூட்டி வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும். 

அருமையான நடனக் காட்சிகளும், மனதை மயக்கும் இசையும் டைரக்டர் அமரோவ்ஸ்கியின் கைவண்ணத்திலேயே என்பது நம்மை இன்னும் வியப்புக்குள்ளாக்குவது நிச்சயம். 

அனைவரும் பார்க்கவேண்டிய படம். பார்க்க விழைவோருக்கான சுட்டி இதோ.

(டிஸ்கி:இல்ல தெரியாம கேக்கறேன், முதல் ரெண்டு பாரா படிச்சதுமே இது கரகாட்டக்காரன் மாதிரி இருக்கேன்னு தெரியாம இவ்வளவு தூரம் படிச்சிட்டு சுட்டிய வேற அமுக்குறீங்களே. உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல. அப்புறம் ஒளகப்படம் பார்க்கலாம். ச்ச்ச்செரியா. ஆட்டோ அனுப்பற வேலையெல்லாம் வேணாம். )

Post a Comment