Tuesday, April 20, 2010

கேடு வரும் பின்னே..மதி கெட்டு வரும் முன்னே...

மதிப்பிற்குரிய (?) டோண்டு அவர்களுக்கு,

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் என்னும் உங்கள் விஷத்தைப் படிக்க நேர்ந்தது என் துர்பாக்கியம். முதன்முறையாக உங்களுக்கு பின்னூட்டமும் மைனஸ் ஓட்டும் போட்டேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தாகிவிட்டது என்று மட்டு மட்டாக நான்கு மணி நேரம் இருந்து பார்த்தேன். முடியவில்லை.

சோவுடன் கை கோர்த்து எங்கே பிராமணன் என்று அப்புறம் தேடலாம். அதைப் பார்த்தும், இப்படி ஒரு வக்கிரமான இடுகை எழுதி என்ன கண்டீர்கள்?  ஒரு பசுமாடு வயலில் மேய்வதை தடுக்கக் கூடாது என்று சொல்லும் அதே மனுஸ்ம்ருதி எப்போது அதைத் தடுப்பது பாவம் இல்லையென்றும் சொல்லியிருக்கிறது.

/அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்./

இது உங்கள் பிரமாணம். நம்பியிருப்பீர்கள் இதில் ஒவ்வொரு வார்த்தையையும் என நம்புகிறேன். அப்படியானால் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்வினைக்கு இப்போதே கவலைப் படுங்கள்.

/புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்./

இப்போது நீங்கள் சொல்லும் ஆதரவாளர்கள் ப்ரஸ்மீட் வைப்பதே இல்லையா சார்? ஒரு தனிப்பட்ட மனுஷிக்கு மருத்துவ உதவி தேவை எனில் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? கார்கிலில் சண்டை துவக்கிய முஷாரஃப் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்றா இங்கு வரவிட்டீர்கள்?

சீக்கியர்கள் ப்ரஸ்மீட் வைப்பதில்லையா? இந்திராவைக் கொலைசெய்தது தவறில்லை என வாதிடும் சீக்கிய மதத்தினருக்கு இந்தியாவில் வைத்தியம் கிடையாது என்றா சொல்லுவீர்கள்?

/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்/

உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.

/அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்./

ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு. பிள்ளையார் ஊர்வலம் என இல்லாத ஒரு சம்பிரதாயத்துக்கு எத்தனை கோடி செலவாகிறது. சொல்லுங்களேன் உங்கள் ராமகோபாலனுக்கு.

/ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்./

அனுமதியோடு வந்தவரை மறுக்க முடியும். அனுமதிகாலம் முடிந்த பிறகு அனுப்புவதா கடினம்? இல்லை அடைக்கலம் கேட்டால் மறுக்க என்ன காரணம் வைத்திருக்கிறீகள். அதைச் செய்ய யார் தடுக்க முடியும்? ஊகத்தால் ஒரு அவமானத்துக்கு சப்பை கட்டு கட்டப் பார்க்காதீர்கள்.

/எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்./

இப்போதைய அரசியல் தலைவர் யாருமே வேண்டாமா? யாருக்குதான் சம்பந்தமில்லை. தெரியாமல் கேட்கிறேன், உங்களுக்கு யார் சார் இந்த அதிகாரம் கொடுத்தது?

/நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்./

இவ்வளவு வக்கிரம் பிடித்தவரா நீங்கள்? ஒரு படிப்பறிவில்லாத, நாகரீகம் அறியாத மனிதன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு உயிரினம் கூட சத்தியமாக இப்படி நினைக்காது.

/இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்./

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் சார். நினைவாலயம் வைக்க குறைந்த பட்ச தகுதி எதுசார்? நினைவாலயம் இருக்கிறவர்கள் எல்லாம் அதற்குட்பட்டவர்கள் என்று சொல்லுவீர்களா? எந்த விதத்தில் அந்த மனிதன் நினைவாலயத்துக்கு தகுதியில்லாமல் போனார்? இத்தனை வெறுப்புக்கு காரணம் என்ன சார்?

/ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்./

இது உங்கள் ஊகமா சார். விசா கொடுக்குமுன்னர் இந்த ஞானம் இல்லையா? உங்கள் எழவு நியாயம் நியாயமாகவே இருக்கட்டுமே. அலைக்கழிக்காமல் இருந்திருக்கலாமில்லையா? ரொம்ப சாமர்த்தியமாக இது பற்றி வாயே திறக்கவில்லையே நீங்கள்?

/மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது./

பாருங்கள் சார். உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால் , முதல்வர் இது குறித்து தனக்கோ தன் அரசுக்கோ தெரியாது என்று சொன்னதை நம்பித் தொலைத்திருப்போம். அதென்ன சார் அசம்பாவிதம். எனக்குத் தெரிந்து இதில் நடந்த பெரிய அசம்பாவிதம் இப்படி ஒரு அரைவேக்காட்டு விஷம் கக்கினதுதான். இல்லை இது சம்பாவிதமோ? ஓரளவு துணிச்சலான, உண்மைக்கு போராடும், ஒரு மனிதன் என்று நினைத்திருந்த ஒருவருக்குள் எவ்வளவு வக்கிரம் இருக்கிறது என வெளிக்காட்டியது இச்சம்பவம்.

/சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்./

உண்ணாவிரத நாடகம் நடந்தபிறகு நீங்கள் இப்படி கொண்டாடியோ கண்டித்தோ எழுதினது கவனமில்லை சார். நாடகமில்லாத அரசியல் இருக்கா சார்?

கொஞ்சம் யோசித்தால், அந்தம்மணியை திருப்பி அனுப்பியதற்கு காரணம் நீங்கள் சொன்னபடியே பார்த்தாலும் அவர்கள் இல்லை. நாம்தான் இல்லையா சார். இதற்கு அவர்களைத் திருப்பி அனுப்பியதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டுமா இல்லை வெட்கப்பட வேண்டுமா?

ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.

பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது.

மனுசனா இருக்கப் பார்க்கலாமே சார். இடுகை போட எவ்வளவோ விஷயம் இருக்கு. இந்தப் பிழைப்பு ஏன்? சத்தியமாக உங்கள் வாரிசுகள் படித்தால் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை கொஞ்சமாவது காணாமல் போயிருக்கும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் மனிதம் கற்றிருக்கிறார்கள் சார். நாம் அதை நாசம் செய்யாமலாவது இருப்போமே. இந்த அற்ப சிந்தனை நம்மோடு போகட்டுமே!

வருத்தத்துடன்

வானம்பாடிகள். 
Post a Comment