வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!
ஒரு நம்பிக்கையின் மரணமும்
இன்னொரு நம்பிக்கையின் ஜனனமும்
இடைவெளியின்றி நடந்தபடியே இருக்கின்றன.
ஒரு நம்பிக்கையின் இறப்பும்
மறு நம்பிக்கையின் சூலும்
தொடர்புடனோ இன்றியோ அமைகிறது..
நம்பிக்கைக் கருச் சுமக்கும் காலங்கள்
வலி நிறைந்ததாகவே அமைந்து போகிறது..
கருவுக்கு தடைபோடத் தெரிந்த மனதுக்கு
நம்பிக்கைக் கருவைத் தடைசெய்ய மனதில்லை...
நாடி விரும்பியே கரு சுமக்கிறது
கூடவே வலியும்..
சின்னச் சின்னத் தலைக் கோதலில்
பெரியதாய் கோட்டை கட்டி
இடிந்து சிதிலமாவதைத்
துடிக்கத் துடிக்கப் பார்த்தும்
தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..
என்றோ ஒருநாள்
மரணம் அழைக்கும் தருணம்
ஒரு நம்பிக்கையின் மரணமாகவோ
ஜனனமாகவோ அமைவதைப் பொறுத்தே
மரணம் வலியாகவோ
சுகமாகவோ அமையக்கூடும்!
~~~~~~~~~~~~~
