Monday, March 22, 2010

கேரக்டர்-எட்ஜா.

சார். உனுக்கு மூல கொத்தளம் தெர்மா சார்? பேசின் பிரிட்ஜ் எறக்கத்துல பீச்சாங்கை பக்கம் கீதே அதான் சார். பக்கிங்காம் காவா ஓரமா கொத்து கொத்தா பெரிய சேரி சார் அது.
எட்ஜா தெர்மா சார்? நம்ம மூல கொத்தளம் எட்ஜா சார். அங்கிந்துதான் சார் வந்தான். கொய்ந்த மனசு சார் அவனுக்கு. எஸ்ஸெல்ஸி பெயிலு சார். ஆனா எய்துவான் பாரு எய்த்து. வெள்ளக்காரன் கோத்து கோத்து எய்துவானே. அப்டி எய்துவான் சார்.
வேலைக்கு வரசொல்லவே கல்யாணம் ஆய்ட்டிருந்துது சார் அவனுக்கு. அட போ சார். சேரின்றேன் அப்புறம் எப்புடின்னா என்னா சொல்ல. லவ் மேரேஜ்தான் சார். அப்பா ரயில்வேல வேல மேல செத்துட்டார் சார். இவனுக்கு வேல குட்தாங்க சார். மொத நாளே சரக்கு கப்போட வந்து மேனேஜர டரியாலாக்கிட்டான் சார். கேட்டா நேத்து சாப்ட சரக்குன்னு சொல்லி கிக்கிக்கின்னான் சார்.
மத்யானம் அல்லாருமா டூம்ல குந்திக்கினு சாப்டுவோம் சார். நானும் வர்ட்டான்னு வந்தான் சார். டூமுக்கா வந்தான். அல்லார் மனசுக்குள்ளயும் வந்துக்கினான் சார். ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணி சிரிக்க வைப்பான் சார். எம்ஜிஆர் மாதிரி கலர் கலரா ட்ரெஸ் பண்ணுவான் சார். ப்ளாட்ஃபார்ம்ல குப்பையா போட்டு விப்பாங்களே, சிந்தடிக் துணி கனமா. அந்த பேண்டு, அதே மெடீரியல்ல டி சர்ட்டு சார்.
ஏன்யா இப்படி காசு வேஸ்ட் பண்ற, நல்லதா துணி வாங்கி தைன்னு சொன்னா ஒரு மாதிரி வாய வெச்சினு சிரிப்பான் சார். நீங்க இருக்கப்பட்ட ஆளுபா. தைய கூலி 100ரூ குடுப்பீங்க பேண்டுக்கு. நா பார், அம்பரா பேண்டு, முப்பரா சட்டு, இருவரால சரக்கு, மீனு, சிசரு. மேட்டரு ஓவருன்னு சிரிப்பான் சார். கல்யாணத்துக்கு போவுணுமா. அல்சி உதறி போட்டுக்குனு போனா போறதுக்குள்ள காஞ்சிடும். இஸ்திரி செலவே இல்ல தெர்மான்னு அலட்டுவான் சார்.
ஒரு மேரியா சிர்ச்சிகினு வருவான். காது மடல புட்சிக்கினு நிமிண்டுவான். ஹிஹி பத்துருவா குடுபா. கை கால் தட்தட்னுது. ஒரு நூறு உட்டுக்கினு வந்துடுறேன். நெர்யா கவர் கீது டிஸ்பாச் பண்ண. கெய்வனுங்க வந்து ஒரே பேஜார் பண்றானுங்க. பாவமா கீதுன்னுவான். இல்ல போடான்னா, யோவ், சொம்மாவா தர. சம்பளம் வந்ததும் குடுக்கல. குடுப்பா வேல நிக்குதுபான்னு நம்மள வேல பாக்க உடமாட்டான் சார்.
ஜம்ப்ரா தோட்டத்துல போய் நூறு உட்டுட்டு வந்து அரை மணில அம்பது அறுவது பென்ஷன் ஆர்டர் ஒட்டி கொண்டு போய் சார்டிங் ஆஃபீஸ்ல குடுத்துட்டு வருவான். சொம்மா குடிகாரன்னு சொல்லிடுறோமே. அவனுக்கு வர்த்தம் சார். ரூல்ஸ் சொல்லுவான் பாருங்க, சாராயக்கட மேனர்ஸ். ஆச்சரியமா இருக்கும் சார்.
கட்சிக்க ஒன்னுமில்லன்னா தலைய குடுப்பான்னா குடுக்கணுமாம் சார். உச்சில பரபரன்னு தேச்சி மோந்துக்குவாங்களாம். கொஞ்சம் ஊர்க்கா, இல்ல மீனு கேக்கறது அசிங்கமாம். ஆனா கேட்டா மாட்டேன்னு சொல்ல கூடாதாம். சொல்றது கேவலமாம்.  சரக்கு அடிக்க சொல்ல, சித்தப்பா, பெரியப்பா, மாமானு பெர்ய மன்சால் வந்தா டபாய கூடாதாம். காசு கீதோ இல்லயோ சாப்ட்ரியான்னு கேக்கணுமாம். இர்ந்தா வாங்கி குடுத்துட்டு ஓரமா போயிடணுமாம்.
சரக்கோ, சாப்பாடோ, தண்ணியோ, டீயோ ப்ளெஸ் பண்ணி க்ராஸ் போடாம சாப்ட மாட்டான் சார் எட்ஜா. நைட்ல எங்கனா தனியா போவணும்னா ஒரு வத்தி பொட்டி வச்சிக்க. பயமானா ஒரு வத்தி குச்சி கீச்சி புட்சிகினு நட. பேய் புடிக்காதுன்னு சொல்லுவான் சார். ராவுல தனியா போஸொல்லோ யார்னா ஃபாலோ பண்றாமாதிரி இருந்தா, கால் கட்ட விரல்ல ஒன்னுக்கு உட்டுக்குனு நட்ந்தா எதுவும் புடிக்காதுன்னு சொல்லுவான் சார்.
அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன். டிக்கி டிக்கின்னு. ஒன்னா குட்சிக்குவாங்க, அட்சிக்குவாங்க. அடுத்த நாள் வந்து இன்னா டிக்கின்னுவான். அவன் மொற்சிக்கினு பதில் சொல்லமாட்டான். அய்ய! போத பண்ணிக்கினு சண்ட போட்டா பொம்பள மாதிரி மூஞ்சி தூக்கிக்கிற. இன்னாய்யா குடிகாரன் நீன்னு சத்தமா சொல்லி சிரிப்பான். அப்புறமும் எப்புடி சார் கோவமா இருக்க முடியும்?
அவங்கப்பா இன்னோரு சம்சாரம் கட்டியிருந்தாரு போல சார். அவங்களுக்கு ஒரு பொண்ணு. இவங்க கூட அவ்வளவு பேச்சு வார்த்த இல்லை. அந்த பொண்ணு பெரியவளாச்சின்னு தகவல் வந்திச்சாம் சார். எங்கயோ கடன் வாங்கி தங்கச்சின்னு முடிஞ்சத செஞ்சிட்டு வந்தான் சார். அம்மாவும் இல்லை. அப்பாவும் போய்ட்டாரு. இந்த அம்மா பாவம் வருமானத்துக்கு இல்லாம தங்கச்சி வேறன்னு நென்ச்சான் சார்.
பென்ஷன் இல்லாம செத்து போனவங்க பொண்டாட்டிக்கு ஒரு பென்ஷன்னு ரூல் வந்திச்சி சார். என்னமோ டகால்டி பண்ணான். கடன் வாங்கி (அவங்களுக்கு சொல்லிட்டுதான்) செலவு பண்ணி கோர்ட்ல இந்தம்மா மனைவிதான்னு ஒரு சர்டிஃபிகேட் வாங்கி, பென்ஷன் வாங்கி குடுத்துட்டான் சார். கிட்ட கிட்ட அம்பதாயிரம் ரூபாய் அரியர்ஸ் வந்திருந்துச்சு போல. பேங்க்ல போட்டு, வக்கீல் செலவு வகையறா ஒரு 1500 ஆச்சி, குடுக்கணும், அப்டியே சரக்குக்கு எதுனா கவனின்னு கேட்டுக்குறான் சார்.
சித்தி கிட்ட உதவுனதுக்கு லஞ்சம் கேக்கறியா? இன்னாடா மனுசன் நீன்னு திட்டிச்சாம் சார். இப்டி பேசிட்சி பாலு, மன்ஸே சரியில்ல. மாசம் 150ரூ வட்டி கட்றம்பான்னு அழுதுட்டு, சரி, ஒரு முப்பரா குடுப்பா, மனசு நோக்காடு தாங்கல, சரக்கடிக்கணும்ன்னான். 
வயசாய்னே போவுதே. புள்ள குட்டி வேணாமா? டாக்டர போய் பாருய்யான்னா, அட போப்பா, கடனில்லாம மாசம் ஓட மாட்டுது. இதுல கொய்ந்திங்க வேறவா. தானா வந்தா சரி. வேணான்ன போறதில்ல. இதுக்கு செலவு பண்ற நெலமையிலயா இருக்குறன் நானுன்னு போய்டுவான்.
காலப் போக்கில டிக்கி ஊழியனாகி, போதகனாகி, பாதிரியாராய்ட்டான் சார். குடிக்காத எட்ஜா. அது சாத்தான். தினம் சர்ச்சுக்கு போ. டைம் இருக்கும் போதெல்லாம் பைபிள் படி. நல்ல சிந்தனை வளர்த்துக்கோ. ஆண்டவரோட இரு.  ஆண்டவர் கிட்ட வேண்டு. நான் உனுக்காக ப்ரார்த்தன பண்றேன்னான் சார் ஒரு நாள். சிர்ச்சான் சார் எட்ஜா. வயத்த புட்சிக்கின்னு சிர்ச்சான்.
சிர்ச்சிட்டு சொல்றான், பைபிள்ள எங்கனா டெய்லி சர்ச்சுல வந்து ப்ரார்த்தன பண்ணுன்னு போட்டுகுதாபா? மன்சாள்ளயே நம்ம பையம்பா, பார்த்து எதுனா செய்ன்னா, அவன் வய்த்து வலிக்கு அவந்தான் மருந்து துன்னணும். நீ என்னா ஏஜண்டான்னுவாங்க. இதுல நீ எனுக்காக ஏசுவண்ட கேட்டா குடுக்கப் போறாரா. நானே கேட்டுக்குவேன். நீ வுடுப்பான்னுட்டான் சார்.
ஒரு நாள் ஆஃபீஸ் வந்து டிக்கியாண்ட அட்டண்டன்ஸ் போய்டுச்சான்னான் சார். கையில ராணி புக்கு நடுவில சாப்பாடு பொட்டலம். டிக்கி டேபிள்ள வெச்சிட்டு, ஆபீஸர் ரூமுக்கு போக போனான் சார் கையெழுத்து போட. டிக்கி ஒரே கத்து. இங்க வைக்காத இந்த புக்க, எடுய்யான்னு. ஒரே ஓட்டமா போய் கையெயுத்து போட்டு வந்தான் சார். ஏம்பா? புக்குதான வெச்சேன், ஏன் கத்துறன்னான். என் டேபிள்ள இந்த மாதிரி படம் போட்ட புக்கு வச்சா பாக்கறவங்க இன்னா நெனிப்பாங்க? அறிவில்ல உனுக்குன்னுட்டான் சார்.
யோவ் புக்க புக்கா பாக்கலைல்ல நீ? அந்த பொம்பள படம்தான் தெர்தில்ல உனுக்கு. உன் மனசு சுத்தம்னா மத்தவன் இன்னா நெனிப்பான்னு ஏன்யா குத்துது. பாக்க கண்டிதான அது இன்னா படம்னு தெர்து உனுக்கு. நீயெல்லாம்...போய்யான்னு மொத தபா கோவப்பட்டான் சார்.
கொஞ்ச மாசம் போயி, ஒரு ரெண்டு மூணு நாள் வேலைக்கு வரல சார். அப்புறம் யாரோ சொன்னாங்க. வயித்து நோவுன்னு வேலைக்கு வரலியாம். சரக்கு சாப்டு, வந்து சாப்பாடு சாப்டு படுத்தானாம். அப்டியே போய்ட்டானாம் சார். அந்தம்மாக்கு ஆபீசுக்கு சொல்லி அனுப்பக்கூட தெரியல சார்.

இப்போ கூட நென்ச்சா, யோவ் அம்பரா குடுய்யா, கட்டிங் ஓணும். வேல குமிஞ்சி போச்சி. இன்னா பாக்கற? சம்பள்தன்னிக்கு கரீட்டா வாங்கி உட்டுக்கறல்ல? எடு எடுப்பா. வேல கெடக்குதுன்னு காத உருவராமாதிரி கீது சார்.

64 comments:

பழமைபேசி said...

சென்னை செந்தமிழ்ல பிச்சு உதர்றீங்க சார்!

பா.ராஜாராம் said...

இப்பல்லாம் கேரக்டர் போட்டாச்சா என ஓடி வரும்படி இருக்கு பாலா சார்.என்ன தத்ரூபம்!!

பா.ராஜாராம் said...

எவ்வளவு விதமான மனிதர்கள் பாலா சார்!

தாராபுரத்தான் said...

கேட்ட வார்த்தை களை எழுத்தாக்கி பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்குதுங்க..

Chitra said...

சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் character அடையாளம் கண்டு கொள்ளுவதே பெரிய கலை, சார். பதிவை வாசிக்கும் எங்களுக்கும், சுவாரசியம் குறையாமல் நீங்கள் சொல்லும் விதமே அருமை. பாராட்டுக்கள்.

புலவன் புலிகேசி said...

கொடுமை ஐயா...மிக தத்ரூபமா சொல்லிருக்கீங்க. எட்ஜா மாதிரி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க..

Seemachu said...

//ராவுல தனியா போஸொல்லோ யார்னா ஃபாலோ பண்றாமாதிரி இருந்தா, கால் கட்ட விரல்ல ஒன்னுக்கு உட்டுக்குனு நட்ந்தா எதுவும் புடிக்காதுன்னு சொல்லுவான் சார்//

ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே.. இனிமேல் ட்ரைப் பண்ணிப் பார்க்கலாம் போல்ருக்கே..

முகிலன் said...

அருமை சார்..

அப்பிடியே என் காதை வருடி அம்பரா குடு சார்னு கேக்கிற மாதிரி இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுகள்.

பிரபாகர் said...

எட்ஜா - இதுபோன்ற கேரக்டர்களை கண்டிப்பாய் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்...

நீங்கள் சொன்னவிதம் அருமை, வழக்கம்போல். இறுதியில் மனதை பாரமாக்குவதாய் இருந்தது.

பிரபாகர்.

ஜெட்லி said...

நானும் இது போல் உள்ளவர்களை சந்தித்துள்ளேன்.....!!

றமேஸ்-Ramesh said...

ஐயா... சென்(னை)தமிழா ...ம்ம் ஹா எப்படி முடியுது உங்களால மட்டும்

க.பாலாசி said...

//கால் கட்ட விரல்ல ஒன்னுக்கு உட்டுக்குனு நட்ந்தா எதுவும் புடிக்காதுன்னு சொல்லுவான் சார். //

அது எப்டின்னு விசாரிச்சிங்களா ???

சூப்பர் தமிழுங்க இது... ரசிக்கமுடியுது எல்லாத்தையும் இப்டி எழுதுறப்ப....

இப்டி ‘மௌனமா’ நம்மக்கூட கடந்துபோற மனுஷங்களோட பிரிவுதான் எவ்வளவு கொடிது...

மணிஜீ...... said...

மெட்ராஸ் பாஷை...தூள் மாமு...

கலகலப்ரியா said...

நைனா சூப்பராகீது நைனா... நம்ப ஊரு பாச கேட்டு வர்சக்கனக்காச்சுபா.... வூடு வந்த பீலு நைனா... எட்ஜா நென்ச்சா அழுவாச்சியா வர்து நைனா... பீலிங் ஆய்டிச்சிபா...

ஸ்ரீராம். said...

மனிதர்கள்...

ராஜ நடராஜன் said...

//சரக்கோ, சாப்பாடோ, தண்ணியோ, டீயோ ப்ளெஸ் பண்ணி க்ராஸ் போடாம சாப்ட மாட்டான் சார் எட்ஜா.//

நம்ம கைல ஒரு எட்ஜா இருக்கான் சார்!குள்ச்சு,சாமி கும்ட்டா அப்பால தீர்த்தோம் மாரி தெள்ச்சிகினுதான் தீர்த்தமே சார்!

நீ இன்னாபா சாமி கும்ட்ட உடனே தீர்த்தம் குட்க்கிறேன்னா வந்தியா!ஓசுல குட்ச்சியா போய்க்கினே இருங்றான் சார்.

ராஜ நடராஜன் said...

//எட்ஜா - இதுபோன்ற கேரக்டர்களை கண்டிப்பாய் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்...//

அப்ப டிக்கி மாதிரி!

ராஜ நடராஜன் said...

//சென்னை செந்தமிழ்ல பிச்சு உதர்றீங்க சார்!//

உங்களுக்கு போட்டிங்ண்ணா!

ராஜ நடராஜன் said...

முப்பரா,அம்பரான்னுதும் மூளைக்கு கரண்டு கட்டாயிப் போச்சு 10 வினாடி.

ராஜ நடராஜன் said...

//நைனா சூப்பராகீது நைனா... நம்ப ஊரு பாச கேட்டு வர்சக்கனக்காச்சுபா.... வூடு வந்த பீலு நைனா... எட்ஜா நென்ச்சா அழுவாச்சியா வர்து நைனா... பீலிங் ஆய்டிச்சிபா...//

இது!இதுவும் சூப்பராகீது!பின்னூட்ட அண்ணாத்தக பேஜாருபா.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நெத்தி அடி போங்க . இன்னும் எத்தனையோ பேர் இப்படியே இருக்காங்க . பகிர்வுக்கு நன்றி !

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணாத்தே! இன்னாமா பீல் பண்ணி கத சொல்லிக்கிறீங்க! அட்த கேடக்டர் இன்னான்னு எக்ஸ்பெட் பண்ண வச்சிட்டீங்க. சோக்கா எய்திகிறீங்க. ஆனா கால் கட்டவெரலாண்ட ஒன்னுக்கு மேட்டர் எப்டிபா????

thenammailakshmanan said...

எட்ஜா கண்கலங்க வைத்துவிட்டான் அருமை பாலா சார் ...இது தினம் நாம் பார்க்கும் பல காரக்டர்களில் ஒன்றுதான் பகிர்ந்த விதம் அருமை

Mrs.Menagasathia said...

எழுத்துநடை சூப்பர்ர் சார்!! எட்ஜா கேரக்டர் அருமை,கண்கலங்க வைத்துவிட்டது...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எட்ஜா எட்ஜா எட்ஜா எட்ஜா எட்ஜா ...

கார்த்திகைப் பாண்டியன் said...

மொழியை பயன்படுத்தி இருக்கும் விதத்தில் கலக்கி விட்டீர்கள் பாலா சார்.. பட்டாசு..:-))))

Madurai Saravanan said...

சென்னைத்தமிழ் ஜோரா வரிகிதுப்பா...நம்க்கு தான் புரியாம போன்போட்டு கேட்டுத்ரிஞ்சுகிட்டேன்ல..அப்பல நம்மல நல்லா டபாக்கிரப்பா...வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//கலகலப்ரியா
March 22, 2010 1:35 PM
நைனா சூப்பராகீது நைனா... நம்ப ஊரு பாச கேட்டு வர்சக்கனக்காச்சுபா.... வூடு வந்த பீலு நைனா... எட்ஜா நென்ச்சா அழுவாச்சியா வர்து நைனா... பீலிங் ஆய்டிச்சிபா..///

மறுக்கா ௬விக்கிறேன் அண்ணாத்த

~~Romeo~~ said...

பட்சி முடிகாண்டிகுள்ள தாவு தீந்துடுச்சுபா. இம்மாம் பெருசா எய்துடியே தலிவா

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தப்பா நென்சிக்காத நைனா அம்பறபா தா பட்ச்டி மெர்சலாயிடிச்சி... ஒரு உற போட்னு வந்துர்றேன்.

--

பா.ராஜாராம் said...
இப்பல்லாம் கேரக்டர் போட்டாச்சா என ஓடி வரும்படி இருக்கு பாலா சார்.என்ன தத்ரூபம்!!//

அதேதான்..!!

மங்குனி அமைச்சர் said...

//டரியாலாக்கிட்டான்
அம்பரா பேண்டு, முப்பரா சட்டு
மெர்சலாயிடிச்சி
கொய்ந்திங்க
கரீட்டா//

ஏன்னா சுப்பர் வார்த்தைங்க சார்

Han!F R!fay said...

ஏ நைனா..உன்கு மட்டும் எப்டி இப்டிலாம் எய்த வர்து....சோக்காகீது பா..... எட்ஜா நம்ம பேஜார் பண்டாம் பா...

வானம்பாடிகள் said...

/ பழமைபேசி said...

சென்னை செந்தமிழ்ல பிச்சு உதர்றீங்க சார்!/

டாங்க்ஸ் சார்!:))

வானம்பாடிகள் said...

//பா.ராஜாராம் said...

இப்பல்லாம் கேரக்டர் போட்டாச்சா என ஓடி வரும்படி இருக்கு பாலா சார்.என்ன தத்ரூபம்!!//

நன்றி பா.ரா.

// எவ்வளவு விதமான மனிதர்கள் பாலா சார்!//

ஆமாங்க பா. ரா.

வானம்பாடிகள் said...

தாராபுரத்தான் said...

கேட்ட வார்த்தை களை எழுத்தாக்கி பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்குதுங்க..//

ஆமாங்கண்ணா. அந்த நேரம் அவங்க கூட இருக்கிற உணர்வு.

வானம்பாடிகள் said...

Chitra said...

சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் character அடையாளம் கண்டு கொள்ளுவதே பெரிய கலை, சார். பதிவை வாசிக்கும் எங்களுக்கும், சுவாரசியம் குறையாமல் நீங்கள் சொல்லும் விதமே அருமை. பாராட்டுக்கள்.//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

கொடுமை ஐயா...மிக தத்ரூபமா சொல்லிருக்கீங்க. எட்ஜா மாதிரி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க..//

நன்றி புலிகேசி.

வானம்பாடிகள் said...

Seemachu said...

// ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே.. இனிமேல் ட்ரைப் பண்ணிப் பார்க்கலாம் போல்ருக்கே..//

:)). நன்றி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

அருமை சார்..

அப்பிடியே என் காதை வருடி அம்பரா குடு சார்னு கேக்கிற மாதிரி இருக்கு//

நன்றி முகிலன்

வானம்பாடிகள் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுகள்.//


நன்றி சார்.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

எட்ஜா - இதுபோன்ற கேரக்டர்களை கண்டிப்பாய் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்...

நீங்கள் சொன்னவிதம் அருமை, வழக்கம்போல். இறுதியில் மனதை பாரமாக்குவதாய் இருந்தது.//

நன்றி பிரபா.

வானம்பாடிகள் said...

ஜெட்லி said...

நானும் இது போல் உள்ளவர்களை சந்தித்துள்ளேன்.....!!//

பின்ன. முதல் நால் முதல் ஷோவில நிறைய பேரு எட்ஜா வருவாங்களே!:))

வானம்பாடிகள் said...

றமேஸ்-Ramesh said...

ஐயா... சென்(னை)தமிழா ...ம்ம் ஹா எப்படி முடியுது உங்களால மட்டும்//

:)

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//கால் கட்ட விரல்ல ஒன்னுக்கு உட்டுக்குனு நட்ந்தா எதுவும் புடிக்காதுன்னு சொல்லுவான் சார். //

அது எப்டின்னு விசாரிச்சிங்களா ???

சூப்பர் தமிழுங்க இது... ரசிக்கமுடியுது எல்லாத்தையும் இப்டி எழுதுறப்ப....

இப்டி ‘மௌனமா’ நம்மக்கூட கடந்துபோற மனுஷங்களோட பிரிவுதான் எவ்வளவு கொடிது...//

விசாரிக்காம? பாடிகாட் ரோட்ல 12 மணிக்கு போய் பாருன்னான். பாடியாய்ட்டு காட் கிட்ட போய்ட்டா என்ன பண்றது?

நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

மணிஜீ...... said...

மெட்ராஸ் பாஷை...தூள் மாமு...//

:)). டாங்க்ஸ் மாமே!

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

நைனா சூப்பராகீது நைனா... நம்ப ஊரு பாச கேட்டு வர்சக்கனக்காச்சுபா.. வூடு வந்த பீலு நைனா... எட்ஜா நென்ச்சா அழுவாச்சியா வர்து நைனா... பீலிங் ஆய்டிச்சிபா...//

யம்மா! இன்னா நீ இந்த போடு போட்டுக்கின? நம்ம பொய்ப்புல மண்ணு போட்டுடும்பா இது. உசாரா இந்துக்கணும் போல:)). டாங்க்ஸ்மா!

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

மனிதர்கள்...//

ம்ம்

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

// நம்ம கைல ஒரு எட்ஜா இருக்கான் சார்!குள்ச்சு,சாமி கும்ட்டா அப்பால தீர்த்தோம் மாரி தெள்ச்சிகினுதான் தீர்த்தமே சார்!

நீ இன்னாபா சாமி கும்ட்ட உடனே தீர்த்தம் குட்க்கிறேன்னா வந்தியா!ஓசுல குட்ச்சியா போய்க்கினே இருங்றான் சார்.//

இன்னா பக்தி பார் சார். போதைல கூட பெர்சாதம் குடுக்குறாரு பாருங்க

வானம்பாடிகள் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நெத்தி அடி போங்க . இன்னும் எத்தனையோ பேர் இப்படியே இருக்காங்க . பகிர்வுக்கு நன்றி !//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

// அண்ணாத்தே! இன்னாமா பீல் பண்ணி கத சொல்லிக்கிறீங்க! அட்த கேடக்டர் இன்னான்னு எக்ஸ்பெட் பண்ண வச்சிட்டீங்க. சோக்கா எய்திகிறீங்க. ஆனா கால் கட்டவெரலாண்ட ஒன்னுக்கு மேட்டர் எப்டிபா????//

டாங்ஸ் அண்ணாத்தே! அதான் புர்ல அண்ணாத்த! கேட்டா ஒரு கத சொன்னான்.

வானம்பாடிகள் said...

thenammailakshmanan said...

எட்ஜா கண்கலங்க வைத்துவிட்டான் அருமை பாலா சார் ...இது தினம் நாம் பார்க்கும் பல காரக்டர்களில் ஒன்றுதான் பகிர்ந்த விதம் அருமை//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

Mrs.Menagasathia said...

எழுத்துநடை சூப்பர்ர் சார்!! எட்ஜா கேரக்டர் அருமை,கண்கலங்க வைத்துவிட்டது...//

நன்றிங்க:)

வானம்பாடிகள் said...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எட்ஜா எட்ஜா எட்ஜா எட்ஜா எட்ஜா ..//

அஹா. கிரிக்கட் எஃபெக்டா கிருஷ்ணா?:))

வானம்பாடிகள் said...

Madurai Saravanan said...

சென்னைத்தமிழ் ஜோரா வரிகிதுப்பா...நம்க்கு தான் புரியாம போன்போட்டு கேட்டுத்ரிஞ்சுகிட்டேன்ல..அப்பல நம்மல நல்லா டபாக்கிரப்பா...வாழ்த்துக்கள்//

நன்றிங்க சரவணன்.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

/
மறுக்கா ௬விக்கிறேன் அண்ணாத்த//

நட்த்து அண்ணாத்த//

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

மொழியை பயன்படுத்தி இருக்கும் விதத்தில் கலக்கி விட்டீர்கள் பாலா சார்.. பட்டாசு..:-))))//

நன்றிங்க கார்த்தி

வானம்பாடிகள் said...

~~Romeo~~ said...

பட்சி முடிகாண்டிகுள்ள தாவு தீந்துடுச்சுபா. இம்மாம் பெருசா எய்துடியே தலிவா//

தண்ணில இருக்குறவன் பேசாம இருப்பானா? அவன் கதையும் அப்டிதான தலீவா.

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தப்பா நென்சிக்காத நைனா அம்பறபா தா பட்ச்டி மெர்சலாயிடிச்சி... ஒரு உற போட்னு வந்துர்றேன்.//

ஒர கண்டி இர்ந்தா, தோ இன்னிக்கி ஒரு பாக்டரி புட்சானாமே. டுபாக்குரு டாஸ்மாக்கு. அதுக்கு போணியாய்ருக்குமா?

வானம்பாடிகள் said...

மங்குனி அமைச்சர் said...

//டரியாலாக்கிட்டான்
அம்பரா பேண்டு, முப்பரா சட்டு
மெர்சலாயிடிச்சி
கொய்ந்திங்க
கரீட்டா//

ஏன்னா சுப்பர் வார்த்தைங்க சார்//

:)). நன்றி.

வானம்பாடிகள் said...

Han!F R!fay said...

ஏ நைனா..உன்கு மட்டும் எப்டி இப்டிலாம் எய்த வர்து....சோக்காகீது பா..... எட்ஜா நம்ம பேஜார் பண்டாம் பா...//

டாங்க்ஸ் வாஜ்யாரே:))

பித்தனின் வாக்கு said...

சென்னைத் தமிழில் நல்லா சொல்லியிருக்கீங்க. சால்ட் கோட்டர்ஸ்ஸில் வேலையா?.

என்னங்க அய்யா, மூலகொத்திரத்தைச் சொல்லும் போது, போனாலே மூக்கை அடைக்கும் அந்த கருவாட்டுக் கடைகளைப் பத்தி ஒன்னும் சொல்லவில்லை.

அருமை நன்றி.

ரோஸ்விக் said...

ஒவ்வொரு முறையும் இந்த கேரக்டர் பதிவுகளைப் படிக்கும்போது நான் அவங்களோட வாழ்ந்துட்டுப் போறேன் பாலா அண்ணே.... அவ்வளவு சுவாரஸ்யமான கேரக்டர்களை... ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க... சான்சே இல்ல... சூப்பர்.

நாடோடித்தோழன் said...

சில சமயம் இத்தகைய மனிதர்களாக இருந்தாலே வாழ்கையை அனுபவம்
நிறைந்த முழுமையான மனிதராக வாழ்ந்திடலாம் போலிருக்கிறது எனத்
தோன்றுகிறது..
வானம்பாடிகள் அவர்களே... உங்களை தொடர்ந்து வருவேன்...
அந்த சித்தியின் நன்றியில்லாத தன்மையை எட்ஜா நொந்து கொண்டு சொல்லுவது
அனைவர்க்கும் கிடைக்கும் அனுபவம்...