Monday, March 8, 2010

காதலை எண்ணிக் களிக்கின்றேன்..

சென்ற இடுகையின் தொடர்ச்சி:

டோமினிக் ஆல்வாவுடன் பேசுவதான காட்சியில் அவளைப் பற்றி ஓரளவு அறிய முடிந்தாலும், அதன் ஆழமும் ஆசிரியர் அந்தப் பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக வியாபிக்கச் செய்கிறார் என்பதும் ஒரு முறையல்ல பல முறை வாசித்து அறிய வேண்டிய அனுபவம். எத்தனை முறை படித்தாலும் அவளை முழுதாகப் புரிந்துக் கொள்ளாத ஒரு முழுமையற்ற உணர்வும், பிரமிப்பும் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும்.

ஆல்வாவுடன் பேசுகையில் அவள் சொல்கிறாள்

//“என்னால் அப்படித்தான் உணர முடியும். அல்லது உணர்ச்சியற்று இருக்கலாம்.”//

//“மற்றவர்களின் பார்வை குறித்த எண்ணமும் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதும் எனக்கு மிக வேதனையைத் தரும். அம்மாதிரியான சிறந்த ஒன்று  இம்மாதிரியான மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கல்ல. ”//

இவையிரண்டும் புத்தகத்தின் ஆரம்பத்தில் வந்தாலும் இதனுடைய முழு ஆழம், இதன் பின்னான அவளின் உண்மையான மனம் கதையோட்டத்தில் உணருகையில் மனதில் எழும் உணர்ச்சிக்கு வார்த்தைகளால் வடிகால் தேடவியலாது.

டோமினிக் எடுக்கும் இரண்டு முடிவுகள் அவளை எங்கோ கொண்டு நிறுத்தி விடுகிறது. ஒன்று சுயமரியாதை என்ற ஒன்றைப் பற்றி ப்ரக்ஞையே இல்லாத பீட்டர் கீட்டிங்கை மணப்பது.

ரோர்க்கை அழிக்கத் துடிக்கும் எல்ஸ்வொர்த் டூஹேயினோடு பான்னர் என்ற பத்திரிகையில் தானும் ஒரு கட்டிடக் கலை விமரிசகராகச் சேருவது.

ரோர்க்குக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்களை திசைதிருப்பி கீட்டிங்கிடம் அனுப்பி வைக்கிறாள். வியப்பாய் இருக்கிறதல்லவா? ரோர்க்கை விரும்புபவளா இப்படி? அவனைப் பட்டினி போடவா? அவனுக்கு தடைக்கல்லாக்கவா இப்படி? தன் கணவனுக்கு பேரும் புகழும், பணமும் கிடைப்பதற்காகவல்லவா செய்கிறாள் என்றல்லவா நினைக்கத் தோன்றும்?

உண்மை அதுவல்ல! ரோர்க்கை, அவன் திறனை உண்மையில் விரும்புவார்களேயானால் எந்தச் சக்தி அவர்களை மாற்ற முடியும்? அவனும் அதைத்தானே சொன்னான். என்னை விரும்புபவர்கள் என்னிடம் வருவார்கள் என்று. உண்மையான புரிதல் இன்றி, ரசனையற்று, ரோர்க்கின் கனவை மதிக்கத் தெரியாதவர்கள் ஏதோ ஒரு உந்துதலில் அவனிடம் போய், ஒரு மிகச் சிறந்த படைப்பை மற்றவர்களின் ரசனைக்காக சிதைத்து விடமாட்டார்களா?

இத்தகைய ஆட்கள்தானே இவளின் கருத்துக்கு செவி சாய்த்து கீட்டிங்கிடம் போவார்கள்? ரோர்க்குக்கு புரியாதா என்ன? ஆனால் அதற்கு அவள் கொடுக்கும் விலையிருக்கிறதே! கீட்டிங்குடனான இந்த உரையாடல் சொல்லும் அந்த நரகத்தை. நரகம் என்ற வார்த்தை கூட இதற்குப் பொருந்தாது. அது உணர்ச்சி சம்பந்தப் பட்டது. இவளோ உணர்வற்றல்லவா இருக்கிறாள்:

//“என் உண்மையான ஆன்மாவா பீட்டர்? அது சுயமாக இருக்கும்போது மட்டுமே உண்மையாக இருக்க முடியும் -- நீ கண்டு பிடித்துவிட்டாயல்லவா? அது திரைச்சீலைகளையும், டெஸ்ஸர்டுகளையும் தேர்ந்தெடுக்கும் போது மட்டுமே உண்மையாயிருக்கிறது -- சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய் -- திரைச்சீலைகள், டெஸ்ஸர்டுகள் மற்றும் மதம், பீட்டர், அதனோடு கட்டிடங்களின் பரிமாணமும். ஆனால் அது உனக்குத் தேவையாயிருக்கவில்லையே?

உனக்குத் தேவையாயிருந்ததெல்லாம் ஒரு நிலைக் கண்ணாடியல்லவா? மனிதர்களுக்கு அவர்களைச் சுற்றி நிலைக் கண்ணாடி மட்டுமே தேவையாயிருக்கிறது. அவர்கள் பிரதிபலிப்பது போலவே அவர்களையும் பிரதிபலிக்க. தரக் குறைவான விடுதிகளின் குறுகிய பாதையில் இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் நிலைக் கண்ணாடிகளில் ஒன்றுக்குள் ஒன்றாக எண்ணற்ற பிம்பங்கள் தெரியுமல்லவா? பிம்பங்களின் பிம்பங்கள். எதிரொலியின் எதிரொலிகள். ஆரம்பமோ முடிவோ அற்றவை. மையமோ நோக்கமோ அற்றவை. உனக்கு வேண்டியதைத் தந்தேன். உன்னைப் போலவே, உன் நண்பர்களைப் போலவே, இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள் எப்படி இருக்க  போட்டியிடுகிறார்களோ அப்படி மாறிவிட்டேன். 

புத்தக விமரிசனம் குறித்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, அது குறித்தான ஒரு தெளிவின்மையை மறைத்து வளைய வரவில்லை. அது குறித்த எந்த முடிவும் என்னிடமில்லை என்று சொன்னேன்.  என்னுடைய படைப்பாற்றலற்ற வெறுமையை மறைக்க மற்றவர்களின் படைப்பை கடன் வாங்கவில்லை. நான் எதையும் உருவாக்காமல் இருந்தேன். நான் மனித இனத்துக்கு சமத்துவம் ஒரு உயர்ந்த சிந்தனை என்றோ ஒற்றுமை அதன் தலையாய குறிக்கோள் என்றோ சொல்லவில்லை -- நான் அனைவர் கருத்தினையும் ஏற்றுக் கொண்டேன்.

இதை நீ மரணம் என்கிறாயா பீட்டர்?அத்தகையதோர் மரணத்தை உனக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் உணரச் செய்தேன் நான். ஆனால் நீ--நீ அவ்வாறு செய்யவில்லையே? உன்னுடன் இருந்தவர்கள் இயல்பாக இருந்தார்கள், உன்னை விரும்பினார்கள், உன்னுடன் இருப்பதை மகிழ்வாய் உணர்ந்தார்கள். அவர்களுக்கு நீ அளித்தது வெறும் மரணம். ஏனெனில் நீ அதை உனக்கு விதித்துக் கொண்டாய்”//


எத்தனை உன்னதமான பெண். என்ன ஒரு தவம் இது?

//“அவள் ரோர்க்கின் மீதான அவளின் ஆளுமையை வெளிக்காட்ட விரும்பினாள். அவனை விட்டு விலகியே இருந்தாள்; அவன் அவளைத் தேடி வருவதற்காகக் காத்திருந்தாள். அவன் வெகு விரைவில் அவளைத் தேடி வந்து அவளின் ஆளுமையைத் தகர்த்தான்; உடனடியாக அவளைத் தேடி வந்து, அவன் விருப்பத்துக்கு மாறாக திண்டாடிக் காத்திருந்த தவிப்பை அவளுக்கு உணர்த்த மறுத்தான். அவள் “ என் கையை முத்தமிடு ரோர்க்” என்பாள். அவனோ மண்டியிட்டு அவள் காலில் முத்தமிடுவான். அவள் சக்தியை அங்கீகரித்ததன் மூலம் அவளைத் தோற்கடித்தான்.

அவளால் அவளின் ஆளுமைச் சக்தியை பிரயோகிக்க முடியாமல் செய்தான். அவள் காலடியில் படுத்தபடி சொல்லுவான் “கண்டிப்பாய் நீ எனக்கு வேண்டும். உன்னைப் பார்க்கையில் சித்தமிழந்து போகிறேன். உன்னால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் தெரியுமா? இதைத்தானே நீ கேட்க விழைகிறாய்? அனேகமாக டோமினிக். உன்னால் என்னைச் செய்ய வைக்க
முடியாதவற்றுக்காக -- அவற்றைக் கேட்பதன் மூலம் என்னை நரகத்தில் ஆழ்த்தினாலும் நான் மறுக்கத்தான் முடியும். சொல்லவொணா நரகத்தில் இருந்து கொண்டு மறுப்பேன். இப்போது உனக்குத் திருப்தியா டோமினிக்?

நான் முற்று முழுதாக உனக்கு மட்டுமே சொந்தமானவனா என்று ஏன் அறிய விரும்புகிறாய். அது மிக எளிது. சந்தேகமின்றி என்னிடம் எதெல்லாம் உன்னால் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமோ அத்தனைக்கும் சொந்தக்காரி நீதான். அதைத் தவிர நீ வேறெதுவும் கேட்கப் போவதில்லை.
ஆனாலும் என்னை வதைக்க முடியுமா என்றறிய விழைகிறாய். முடியும்! அதனால் என்ன?

அந்த வார்த்தைகள் அடிபணிந்து போவதைப் போல் இல்லை, ஏனெனில் அவை வெகு இயல்பாக, எளிமையாக சற்றும் தயக்கமின்றி வந்தன. அவனை வென்றுவிட்டதாக அவளால் உணர முடியவில்லை; முன்பெப் பொழுதும் விட, இப்படிச் சொல்லக் கூடிய ஒருவன், அவை சத்தியமென்று உணர்ந்த ஒருவன், ஆனாலும் ஒரு சுய கட்டுப்பாட்டோடு அவளை ஆளுமைப்படுத்தக் கூடிய ஒருவன், அவன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியிருப்பதன் மூலம் அவளை முழுமையாக சொந்தமாக்கிக் கொண்டதாகவே உணர முடிந்தது அவளால்”//


இப்படி ஒரு காதல் வேறெங்காவது படித்திருக்கிறோமா?

ஸ்டாட்டர்ட் கோவில் என்ற ஒன்றைக் கட்டி முடித்த ரோர்க், டூஹேயின் சதியால்,  ஏமாற்றியதாக வழக்குக்கு உள்ளாக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.  ரோர்க்குக்கு எதிராக சாட்சி சொல்கிறால் டோமினிக். பதைத்துப் போகும் நமக்கு. அவள் பேச பேச ஆரம்பத்தில் அவள் சிலையை உடைத்த காரணம் புரியும். ரோர்க்கின் திறன் மீதான அவளின் மதிப்பு, அதை ஏன் தடுக்க நினைக்கிறாள் என்ற விளக்கம் அத்தனையும் பேசப் படாமலேயே புரியும்.

//“ஹோவர்ட் ரோர்க் மனித ஆன்மாவுக்காக ஒரு கோவில் கட்டினார். அவர் மனிதனை ஒரு வலுவானவனாக, பெருமை மிக்கவனாக, சுத்தமானவனாக, புத்திசாலியாக, பயமற்றவனாகக் கண்டார். அவனை ஒரு நாயகனாகக் கருதினார். அவனுக்காக அந்தக் கோவிலைக் கட்டினார். கோவில் என்பது ஒரு மனிதன் கண்ணியமானவனாக உணரும் இடமாகும். அத்தகையதோர் கண்ணியம், பிழையற்றவனாக இருப்பதை உணர்வதன் மூலம், உண்மையை உணர்வதன் மூலம், அதைத் தேடி அடைய முயல்வதன் மூலம், தன்னால் அதிகபட்சமாக முடிந்த அளவு தூய்மையாக வாழ்வதன் மூலம், அவமானம் என்பதை அறியாமல், அவமானத்துக்கு இடம் கொடாமல் இருத்தல் மூலம், முழுமையான சூரிய வெளிச்சத்தில் அம்மணமாக நிற்க இயலும் பக்குவத்துடன் இருப்பதன் மூலம் அடைய முடியும் என நம்பினார். மனிதனுக்கு அடையாளமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் புனிதமானது என நினைத்தார். மனிதனையும் அவன் கண்ணியத்தையும் குறித்த ஹோவார்ட் ரோர்க்கின் கண்ணோட்டம் இது.

நான் ரோர்க்கைக் கண்டிக்கிறேன். ஒரு கட்டிடம் அது இருக்கும் சூழலை ஒப்ப அமைய வேண்டும். எத்தகைய உலகில் ரோர்க் இந்தக் கோவிலைக் கட்டினார். எத்தகைய மனிதருக்காக? சுற்றிப் பாருங்கள். உங்களால் திரு ஹாப்டன் ஸ்டாட்டர்டுக்கோ, திரு ரால்ஸ்டன் ஹால்கோம்புக்கோ, அல்லது பீட்டர் கீட்டிங்குக்கோ கட்டப்பட்ட ஒரு புனிதமான இடமாக இதைச் சொல்ல முடியுமா? அவர்களைக் காண்கையில் நீங்கள் டூஹேயை வெறுக்கிறீர்களா? -- அல்லது இத்தகைய சொல்லவொணா அவமரியாதையை அந்தக் கோவிலுக்கு செய்தமைக்காக ரோர்க்கைப் பழிக்கிறீர்களா? அந்தக் கோவிலின் புனிதத்தக் கெடுத்து விட்டதாக டூஹே சொன்னது அவர் நினைத்த அர்த்தத்தில் அல்லவெனினும் மிகச் சரியானது. அது டூஹேயும் அறிவார் என நினைக்கிறேன். ஒருவன் விலை மதிப்பற்ற முத்துக்களை ஒரு பன்றிக் கறித் துண்டைக்கூட விலையாகப் பெறாமல் வீசுவானேயானால் பன்றியின் மீது உங்களுக்கு சினம் தோன்றாது. தன்னுடைய முத்துக்களின் மதிப்பறியாமல் அதனை சேற்றில் வீசியெறிந்து, அந்தப் பன்றிகளின் கத்தலை நீதிமன்ற அலுவலர் பதியும்படி செய்தானே அந்த மனிதன் மீதல்லவா சினம் தோன்றும்?’’


“ஸ்டாட்டர்ட் கோவில் அழிக்கப்பட வேண்டும். மனிதர்களை அதனிடமிருந்து காப்பதற்கல்ல. அதை மனிதர்களிடமிருந்து காக்க. ஆனால் அதை ஒரு சிறந்த பண்பான செயலாக நாம் உருவகப் படுத்திக் கொண்டு அழிக்க வேண்டாம். நாம் மலையை எதிர்க்கும் சிறு குன்றுகள் எனக் கொள்வோம். அல்லது நீந்தத் தெரியாமல் நீரில் மூழ்கி தன்னை அழித்துக் கொள்ளுமே ஒரு வகை எலிகள் அப்படிக் கருதிக் கொள்ளுவோம்”//


மனிதனின் உயர்வறியாத மனிதர்களுக்கு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிய ரோர்க்கின் மீதா சீற்றம்? அதனை அனுபவிக்கத் தெரியாத சமுதாயத்தின் மீதல்லவா? அந்தச் சிலைக்கு நேர்ந்த கதிதான் இந்தக் கோவிலுக்கும்.

இப்படி பிரமிக்க வைக்கிறாளே டோமினிக். அப்படி அவள் கொண்டாடும் ரோர்க் எப்படிப் பட்டவன்? ஏன் அவன் மீது இவ்வளவு காதல்?
 
இறுதிக் கட்டத்தில் ஏழைகளுக்கான குறைந்த முதலீட்டில் மிகப் பெரிய குடியிருப்பை வடிவமைத்து, அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது, வடிவமைத்தது தாந்தான் என்பதும் தெரியக்கூடாது என்ற உடன் படிக்கையின் பேரில் வேறெந்த பயனும் எதிர்பாராமல் வடிவமைத்த வீடுகள், மாற்றம் செய்யப்பட்டு கட்டியதை பொறுக்க முடியாமல் டோமினிக் உதவியுடன் அழிக்கிறான். ஓடி ஒளியாமல் கைதாகி, நீதிமன்றத்தில் தன் தரப்பைக் கூறும் காட்சி சொல்லும் ரோர்க் மனிதனை எப்படி நேசித்தவன் என்று.

18 comments:

Chitra said...

உனக்குத் தேவையாயிருந்ததெல்லாம் ஒரு நிலைக் கண்ணாடியல்லவா? மனிதர்களுக்கு அவர்களைச் சுற்றி நிலைக் கண்ணாடி மட்டுமே தேவையாயிருக்கிறது. அவர்கள் பிரதிபலிப்பது போலவே அவர்களையும் பிரதிபலிக்க.

.........அசத்தல்.

பிரபாகர் said...

எதற்காகாவும் தங்களது இயல்பை விட்டுக்கொடுக்காதாமல் மாற்றிக்கொள்ளாத பாத்திரங்கள்... பிரமிப்பை ஏற்படுத்துகிறது அய்யா!

பிரபாகர்,

ஈரோடு கதிர் said...

வாசித்தேன்...

ரசித்தேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Super bala

எம்.எம்.அப்துல்லா said...

அட்டெண்டென்ஸ்

:)

நிஜாம் கான் said...

வீடியோ சூப்பரண‌ணே!

Jerry Eshananda said...

பாலாண்ணா மிரட்டல் பதிவு.

நசரேயன் said...

என்னாண்ணே நடக்குது இங்கே ?

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... அழகான மொழிபெயர்ப்பு....

மேலோட்டமா பார்த்தது... இன்னொரு தடவை படிக்கறேன் நிதானமா...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழ்ந்து படிக்கணும்.. இன்னொரு வாட்டி படிப்பேன்..:-)))

புலவன் புலிகேசி said...

அருமை...:)

கே.என்.சிவராமன் said...

Keep Rocking sir :)

With Love
Paithiyakkaran

Thenammai Lakshmanan said...

//உன்னைப் போலவே, உன் நண்பர்களைப் போலவே, இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள் எப்படி இருக்க போட்டியிடுகிறார்களோ அப்படி மாறிவிட்டேன்.
//

எந்த ஒரு பெண்ணுமே இதைத்தவிர வேறேதும் சொல்ல முடியும் பாலா சார் மிக அருமை பாலா சார் ஒவ்வொரு வார்த்தையும் விட்டுப்போய் விடாமல் படித்துக்கொண்டே இருக்கிறேன் அற்புதம் ..பெண்ணின் மன உணர்வுகள் இதை விட அற்புதமாக யாராவது வடித்து இருப்பார்களா என்பது சந்தேகமே

Thenammai Lakshmanan said...

i like the words
INDIVUDUAL AGAINST COLLECTIVENESS
AND THE VIRTUE OF SELF RESPECT...

ஸ்ரீராம். said...

படித்தேன்...

ரசித்தேன்..

பனித்துளி சங்கர் said...

அருமையான புனைவு வாழ்த்துக்கள் !

thiyaa said...

மிகவும் அருமையாக இருக்கு நண்பா
இன்னொருமுறை படிக்க வேணும் போல் இருக்கு...

vasu balaji said...

@@ நன்றிங்க சித்ரா
@@ நன்றி பிரபா
@@நன்றி கதிர்
@@ நன்றி சார்
@@ வாங்க அப்துல்லா
@@ நன்றி நிஜாம்
@@ நன்றி ஜெர்ரி
@@ நசரேயன் அண்ணே துண்டு போடுறாங்க பாருங்க எப்புடி கஷ்டபட்டு
@@ ரொம்ப சந்தோஷம்மா. நன்றி
@@ நன்றி கார்த்தி
@@ நன்றி புலிகேசி. ஆமாம் இப்ப அருமையாத் தெரியும்:)
@@ நன்றி சிவராமன் சார்:)
@@ நன்றிங்க தேனம்மை. she is great
@@ நன்றி ஸ்ரீராம்
@@ நன்றி சங்கர்
@@ நன்றி தியா