Tuesday, March 30, 2010

கேரக்டர் - காமாச்சி

காமாச்சி ஒரு தனி மனுஷியல்ல. ஊருக்கு ஊர் நிறைய காமாட்சிகள் இருப்பார்கள். நகரத்தில் அரிதாகி விட்ட தேவதைகள் இவர்கள். 

இந்தக் காமாச்சி இரண்டு பசு, ஐந்து ஆறு எருமையுடன் மணிக்கோனாருக்கும் சொந்தக்காரி. மணிக்கோனார் முட்டியை மடக்கி முதுகில் குத்தினாலும் வாலால் திருப்பி அடிக்கும் எருமை கூட, தே! ஒத்து என்ற காமாச்சியின் குரலுக்கு ஒதுங்குமெனில் மணிக்கோனாரைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? 

ஐந்தடி உயரமிருப்பாளா சந்தேகம். பருத்த உடல்வாகு. கணீரென்ற குரல். மஞ்சள் பூசிய முகத்தில், அகலக் குங்குமப் பொட்டும், அகன்ற கண்களும், சீராக வாரிப் போட்ட பிச்சோடாக் கொண்டையும், நத்தை நத்தையாய் மூக்குத்தியும் தோடும், நகைகளும், வெற்றிலைக் குதப்பி அடக்கிய வாயும், சற்றே சரிந்தார்போல் நிற்கையில் கையெடுத்துக் கும்பிடும் காமாட்சிதான். நடக்கையில் சுவாமி ஊர்வலத்தில் பல்லக்குத் தூக்கிகள் அலைபோல் ஆடி வருவார்களே அப்படித்தான் இருக்கும். ஒரு கால் குட்டையாகி விரல்களால் ஊன்றி ஆடி ஆடி நடப்பாள். 

அவள் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. மணிக்கோனாரின் பால் வருமானத்திலேயே அவள் அணிந்த நகைகளை அவள் வேலை செய்யும் வீட்டு அம்மணிகள் ஒரு புகைச்சலோடு பார்க்க வேண்டியிருக்கும். மாசம் முப்பது ரூபாய் சம்பளம். விரும்பி வற்புறுத்தினால் காஃபி குடிப்பாள். 7.30 முதல் 10 மணிவரை டூட்டி வீடு வீடாக. கரார் பேர்வழி. சம்பளம் என்று நீட்டி விட முடியாது. வெற்றிலைப் பாக்கில் தாம்பூலமாக வைத்துத் தரவேண்டும். 

பிரசவத்துக்கு வந்த பெண்கள், அதற்கு வழியற்று இரண்டாவது மூன்றாவது பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் நிறைமாதம் வந்ததும் காமாச்சியக்காவைத் தேடுவார்கள். கைத்தடவலில் அவள் சொன்ன நாளில் வலியெடுக்கும். பெருஞ்சோம்புக் கஷாயம் போட்டுக் கொடுத்து மகராசியா போய்வாம்மா என்று வாழ்த்தி அனுப்புகையில் நேசமாக கண்கலங்க கைபற்றிக் கொள்ளுவார்கள். 

குழந்தை பிறந்ததும் காமாச்சியின் செக்கப் இருக்கும். தயாராக கழுதைப் பாலுடன் போய் பார்ப்பாள். காமாச்சி செவ்வாப்பு போட்டிருக்கு குழந்தைக்கு என்று சொல்லி, கழுதைப்பால் புகட்டி தடுத்த மருத்துவர் இல்லை. வீம்புக்கு கழுதைப்பாலாவது மண்ணாங்கட்டியாவது என்று எகிறி குழந்தையைப் பறிகொடுத்த ஒன்றிரண்டு உண்டுதான். 

அப்போது ஏன் என்று தெரியாமல், பச்சைக் குழந்தையை காலை இள வெயிலில் கண்ணில் துணி போர்த்தி வெயிலில் கிடத்துவதைப் பார்த்திருக்கிறேன். பின்னாளில், கருவில் மஞ்சள்காமலை என்று சன்லேம்பில் குழந்தைகளைப் பார்க்கும்போது இவளின் உத்தியை நினைத்து வியந்தும் போயிருக்கிறேன். (வாரி வெய்யிலில் போட என வைவது இதுதான் போலும்) 

தாயும் சேயும் வீடு வந்ததும், குழந்தை குளுப்பாட்டுவதுதான் காமாச்சியின் டூட்டி. இன்னா சொல்றான் என் மருமகனென்றோ, இன்னாடி சக்காளத்தி என்றோ கொஞ்சி குழந்தையை தூக்கி அணைத்த வாகிலேயே, வயிற்றில் ஒரு நோட்டம் விடுவாள். சில நேரம் மெதுவே தட்டுவாள். ஏற்கனவே அகன்ற விழியை இன்னும் அகலமாக்கி ஏம்மா? மாம்பழம் சாப்டியா? மாந்தம் புடிச்சிகிச்சி பாரு என்பாள். மறுக்கவே முடியாது. 

ஜல்ப் புட்சினுக்குதும்மா. இன்னிக்கு ஒடம்ப தொடச்சி விட்டுடலாம் என்றால் மறுபேச்சு பேச முடியாது. வரும் நேரம் சரியாக வென்னீர் இருக்க வேண்டும். ஆகா! அவள் கையால் குளித்த குழந்தைகள் கடவுள் என்றால் மிகையாகாது. மணை போட்டு கால் நீட்டி, குழந்தையைப் போட்டு, கொஞ்சியபடி எண்ணெய் தடவுவாள். சுவாமிக்கு எண்ணெய்க்காப்புகூட அப்படிப் பார்த்திருக்க முடியாது. அங்கம் அங்கமாகத் தடவி, உருவி, குப்புறப் போட்டு கையை நன்றாகப் பின்னுக்கு மடக்கி, காலை முதுகை அழுத்தியபடி பின்னுக்கு மடக்கி அவள் தேய்க்கும் போது பரம சுகமாக சத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகள். 

விளாத்தி வைத்த வென்னீரில் வேப்பிலைத் தழை இருக்க வேண்டும். மறந்தால் திட்டு விழும். அதெப்படித்தான் குழந்தைக்கு பிடித்த சூடு தெரியுமோ. தண்ணீர் விட்டதும் அலறிப் பார்த்ததேயில்லை. பயத்தமாவு குழைத்து உடலுக்குப் பூசி, முகம் கழுவ வருகையில் அவர்கள் விளையாட்டு ஆரம்பமாகும். தே! முயிக்காத! கண்ணுல அப்புவேன். மூடு என்றால் லேசாக மூடி போக்குக் காட்டி கண்ணருகே வர பளிச்செனத் திறக்கும் பிஞ்சு. கொய்ப்ப பாரேன் என்றபடி இமைக்கு மேல் விரலால் அப்புவாள். 

யாராவது தண்ணீர் விட இரண்டு கையாலும் வாங்கி பின்மண்டையில் அறைந்தாற்போல் வீசுவாள். மாங்கா மண்ட மாதிரி ஆய்ட கூடாது. சொம்பு மாதிரி வட்டமா இருக்கணும் என்பது அவளது சட்டம். அது எப்படியோ அப்படி ஆகும். எண்ணெய் போகக் குளிப்பாட்டி, ஒரு விரல் மடித்து நாக்கு உருவி, இரண்டு விரலால் அண்ணத்தை மூடி, பதமாக ஒரு முறை இந்த மூக்குத் துவாரம், மறுமுறை அந்த மூக்குத் துவாரத்தில் ஊதி, சளியெடுப்பாள். 

அதற்குள் சாம்பிராணி ரெடியாக இருக்க வேண்டும். துண்டு வாங்கி தோளில் போட்டு, பூமாதிரி அதில் சாய்த்து, விழுந்துவிடுவது போல் எழுந்து துவட்டி, புகை காட்டி, கண்மை பூசி, பவுடர் போட்டு, திருஷ்டிப் பொட்டிட்டு நெற்றியில் விரலால் சொடுக்கி, தாயிடம் நீட்டி, 10 நிமிஷம் கொஞ்சிட்டு அப்புறம் பால் கொடு என்று போவாள். 

ஆம்பள புள்ள என்னா என்னமோ எலிக்குஞ்சு மாதிரி அயுவுது? நாளைக்கி கோரோஜனை ஊத்தணும்மா என்பாள். பெரும்பாலும் கை வைத்தியம். சில நேரம் ஓயாமல் அழும் குழந்தைகள். எங்கிருந்தோவெல்லாம் தேடி வருவார்கள். இன்னா இன்னாடா பண்ணுது கண்ணுக்கு என்றபடி வாங்கி வயிற்றைத் தடவி, உரம் விழுந்திருக்கும்மா என்பாள். எப்போ ஊட்டின என்ற கேள்வியைப் பொறுத்து வைத்தியம் இருக்கும். 

அதென்ன மாயமோ? பெற்றவளுக்கு பதைத்துப் போகும். இரண்டு காலையும் ஒரு கையால் பிடித்தபடி தலை கீழாக மூன்று விசிறு. அப்படியே கைவாங்கி மார்பில் அணைத்து சரியாப் போச்சுடி எனும்போது அழுகை காணாமல் போயிருக்கும். ஏதோ சுளுக்குக்கு முறத்தில் போட்டுப் புடைப்பாள். படியுருட்டுவாள். சரியாப் போகும் அவ்வளவுதான். வெற்றிலைப்பாக்கில் வைத்துக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் ஒரே ட்ரீட்மெண்ட்தான். 

கை தொடுதலிலேயே குழந்தை ஆரோக்கியம் எங்கு படித்தாளோ. வைத்தியர் வீட்டுக்கு அலைந்தவை வெகுசில.  பெரீ டாக்குட்டருட்ட இட்டும்போம்மா. கொயந்த சரியில்லை என்ற ஒன்று இருதயத்தில் துவாரம் எனக் கண்டு பிடிக்கப்பட்டது. அதிகபட்சம் ஐந்து மாதங்கள் குளிப்பாட்டுவாள். நான்காம் மாதமே சொல்லியும் கொடுப்பாள். 

அம்மை வந்தால் ஆம்பிளைக்கும் கேட்கும்படி, மனுசத்தனமா இருந்துக்குங்கன்னு சொன்னால் அதற்கு மேலும் வேண்டுமா? அவள் வாயில் யார் விழுந்து எழுவது? ஆடிமாதம் பொங்க வைக்க காசு கொடுத்தால் போறாது. கோவிலுக்கு வந்து குழந்தைக்கு அவள் கையால் துன்னூரு வைக்கணும். தாய்ப்பால் இல்லையேல் பசும்பால். அப்புறம் நேராக பருப்புச் சோறுதான் அவள் ப்ரிஸ்கிருப்ஷன். 

ஃபாரக்ஸ், செரிலாக் வகையறா அவளுக்கு இளக்காரம். உங்குளுக்கு பொசு பொசுன்னு இருந்தா போதுண்டியேய் என்று சிரித்தபடி போவாள். அவளுக்கு பெருங்குறை. அவளோடு இந்தக் கலை முடிந்து போகிறதேயென்று. பாவம் இரண்டும் ஆண் பிள்ளை அவளுக்கு. என்றாவது மணிக்கோனார் சரக்கடித்து, சவுண்ட் விட்ட படி வருவார். 

இடுப்பில் கைவைத்தபடி, கேவலமும் கோவமும், சிரிப்புமாய் ஒரு பார்வை. இந்த நாய்ப் பொயப்புக்கு சத்தம் வேற. போய் திண்ணைல கெட. உள்ள போய் வாந்தி எடுத்து வெச்ச வெளக்குமாறு பிஞ்சிடும். த்த்த்த்தூ என்று குதப்பிய வெற்றிலை உமிழ்ந்த பிறகு சத்தம் கேட்டால்தானே. 

ஒரு முறை பால் காசு கொடுக்கப் போனபோது, முகம் துடைத்து புள்ளைங்க வளர்ந்துடுச்சுங்க, இப்போ இந்த எழவு வேற தேவையா? துன்னுய்யா என்று சோறூட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கோனார் போய்ச்சேர்ந்த பின், மாடுகள் மட்டுமே உறவாகி, ,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள். ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை.

Friday, March 26, 2010

கலாய்க்கப்போவது யாரு லாஸ்ட்

ஓஜாரே ஒஜா. ரே..ரே..ஓஜா.

பொன்னாத்தா; வெல்கம் பேக் டு கலாய்க்கப் போவது யாரு. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம செறப்பு விருந்தினர கொஞ்சம் கலாய்க்கலாம். என்ன சார்? நிகழ்ச்சிய பத்தி என்ன நினைக்கிறீங்க?

அதுசரி: wot da bloody hell. யாருங்க தயாரிப்பாளர்? இப்படி சூட்டுல பொறிச்ச மீன் மாதிரி உக்கார வச்சிருக்கீங்க. அட்லீஸ்ட் ஒரு கோல்ட் பீராவது தரணும்னு தெரியாது?

பொன்னாத்தா: கருப்பு சாம்பார் ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ராசா?

அதுசரி: அதுக்கு நான் விஷமே குடிச்சிப்பேன்.

பொன்னாத்தா:அது சரி அதுசரி. வரும்போதே பார்த்தேன். அந்த ஜோல்னா பை. வந்தும் அத இறக்கி வைக்காம அப்புடியே வெச்சிருக்கீங்களே. அதுக்குள்ள என்ன இருக்கு?

அதுசரி:  :O)))

பொன்னாத்தா: யோவ்! கேட்டா பதில் சொல்லுமைய்யா. சின்னப்புள்ள மாதிரி பீப்பீ ஊதிக்கிட்டு.

அதுசரி: அது சொல்ல முடியாது. தாளம் எப்படி சொல்லுதோ அப்படி. நீங்க இந்த எழவ முடியுங்க மேடம். இப்பவே என் ஷூ கழல ஆரம்பிக்குது:))

பொன்னாத்தா: அடுத்ததாக கலாய்க்க போறவரு அமெரிக்கால ஆணிபுடுங்க போனாலும், மதுரையில மல்லாட்ட வறுத்தவரு, பாண்டியரு..தினேஷ்..

ஓஜாரே ஓஜா..ரே..ரே..ஓஜா..

பொன்னாத்தா: வாங்க தினேஷ். இன்னைக்கு என்ன கான்ஸெப்ட் பண்ணப்போறீங்க.

தினேஷ்: மிரள மிரள பார்த்தபடி வந்து வந்து..தங்கமணிகாமெடிங்க.

பொன்னாத்தா: என்னது? தங்கமணி காமெடியா?

தினேஷ்: ஏங்க ஏங்க கத்துறீங்க. ஆமாங்க.

பொன்னாத்தா: சரி அசத்துங்க தினேஷ்.

தினேஷ்: முந்தின எபிசோட்ல தங்கமணி ரெயின்செக்ல ஒரு போன் பார்த்தாங்கன்னு சொன்னென்லங்க. அப்புறம் அத பத்தி பேச்சே இல்ல. நானும் மறந்துட்டான்னு எடுத்த வெச்ச கேஷ ஷேர்மார்கட்ல போட்டுட்டு கமுக்கமா இருந்தன். ஒரு நாள் ஆஃபீஸ்ல வழக்கத்த விட அதிகமா ஆணிபுடுங்க வேண்டியிருந்திச்சி.

(வா.பா:ம்கும். பிரபா கூட தொடர் இடுகை பத்தி சாட் பண்ணிட்டு அலம்பல பாரு)

தினேஷ்: அவர குறுக்க பேசாம இருக்க சொல்லுங்க மேடம்.

பொன்னாத்தா: அல்லோ! அப்புறம் புடிச்சிட்டிருக்க ஒன்னுமிருக்காது.

வா.பா: நீங்க அளங்க ராசா.

தினேஷ்: வீடு போய் கராஜ்ல கார் பார்க் பண்ணும் போதே உருளைக்கிழங்கு பொரியல் வாசன தூக்குச்சு. ஒரே ஓட்டமா வீட்டுக்கு ஓடினா கிச்சன்ல தங்கமணி சாம்பார் வெங்காயம் உரிச்சிக்கிட்டிருந்தாங்க. கண்ணுல தண்ணி ஆறா ஊத்துது. எனக்கு புடிக்குமேன்னு எவ்வளவு கஷ்டம்னு உருகிட்டேன். அருமையான சாம்பார் வெங்காயம் சாம்பார்

அதுசரி: கருப்பா இருந்திச்சா? :O))))

பொன்னாத்தா: யோவ்!

தினேஷ்: உருளைக்கிழங்கு பொறியல், சிப்ஸ். வளைச்சி வளைச்சி கட்டிட்டு, பதிவு படிக்கலாம்னு பி.சி.ல உக்காந்தங்க. தங்கமணி வந்தாங்க. என்னங்க வேலை அதிகமா இன்னைக்கின்னாங்க. க்க்க்க்க்கொஞ்சம்..லைட்டான்னேன் உசாரா. இல்ல. கழுத்து புடிச்சா மாதிரி விரைப்பா வெச்சிருக்கீங்களேன்னாங்க.

சத்தியமா எனக்கு அப்புடி இல்லவே இல்ல. தங்கமணி சொன்னப்புறம் இல்லைன்னு சொல்ல முடியுங்களா? அட! ஆமாம்னேன். மெதுவா ஏங்க அந்த ரெயின்செக் கவனமிருக்கான்னாங்க.

சாப்புட்ட சாம்பார் சாதம் மெதுவா கலக்க ஆரம்பிச்சது. இருக்கு சொல்லும்மா. வாங்கிடலாமான்னேன்.

இல்லைங்க. அதுக்கு பதில் அந்த ரெயின்செக் உங்களுக்கு ட்ரேன்ஸ்ஃபர் பண்ணிடுரேன்னாங்க.

எனக்கு புரியாம, என்னம்மா சொல்றீங்கன்னேன்.

இல்லைங்க. ஃபோனுக்கு எதுக்கு காசு வேஸ்ட்.குடுகுடுப்பை வேற அது தண்டமுங்கறாரு. அதுக்கு பதில் அந்த வேல்யூக்கு நீங்க ரெய்ன்செக் ஆஃபர் பண்ணுங்கன்னாங்க.

நம்ம ஊருன்னா அது புடவையாகவோ, சினிமாவாகவோ, வெளிய டின்னராகவோ உருமாறுமே. இங்க அதுக்கு சான்ஸ் இல்லையேன்னு கலக்கம் அதிகமாச்சி.

அவங்களே சொன்னாங்க. இல்லங்க! எனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா ரெயின்செக்னு சொல்லுவேனாம். நீங்க பண்ணுவீங்களாம். நீங்களே கணக்கு வச்சிக்கோங்க. அந்த வேல்யூ கழியற வரைக்கும் பண்ணா போதும்னாங்க.

அப்பாடா. ஷேர் ஊத்திக்கினா கூட பதில் சொல்ல வேணாம்னு சரின்னுட்டேன். நான் தூங்கப்போறேன். நீங்க முகிலன் கூட விளையாடிட்டு தூங்க வச்சிடுறீங்களான்னாங்க. இருங்கம்மா. ப்ளாக் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரேன்னேன். ரெய்ன்செக்னு போய்ட்டாங்க.

இப்போ ஐ.பி.எல் மேச் பாக்குறப்போ ஒரு காஃபின்னா கூட ரெயின்செக்னு சொல்றாமாதிரியே பழகிப்போச்சுங்க. நானே போய் போட்டுக்குறேன்.

அதவிட கொடுமைங்க. அந்த வாண்டு முகிலனுக்கு தெரிஞ்சி போச்சு ட்ரிக். ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணி, டாட்...கக்கா வருது ரெயின்செக்னு ஃபோன வெச்சிட்டான். அடிச்சி புடிச்சி ஓடிவரதா போச்சி.

பொன்னாத்தா: அடப்பாவமே. கணக்கு எழுதலையா தினேஷ்

தினேஷ்: எழுதி நீட்டும்போதெல்லாம் குறுக்கால கோடு கிழிச்சி 0/100னு போட்டு குடுத்துடுறாங்க. 

பொன்னாத்தா: வா.பா. சார், கேபிள்ஜி நீங்க என்ன சொல்றீங்க. பெர்ஃபார்மன்ஸ் எப்புடி இருந்திச்சி?

வா.பா. கேபிள் (ஒரே குரலில்): ரெயின்செக்

பொன்னாத்தா: செறப்பு! நீங்க சொல்லுங்கன்னா ஜோல்னாப் பைக்குள்ள என்னத்தையா பார்க்குறீரு.

அதுசரி: சொல்றது என்ன இருக்கு. இந்த பாண்டியருங்க இப்புடித்தான். சோழன் குடுமி இப்புடி சும்மா ஆடுமா? எப்புடீஈஈஈ

ஓஜாரே ஓஜா..ரே..ரே ஓஜா..

வணக்கம் வந்தனம் அடுத்தா நாம நிகழ்ச்சியின் கடைசி பார்ட்டுக்கு வந்திருக்கோம். அடுத்ததா கலாய்க்க வரவர் யாருன்னு பார்க்கலாம். அட நம்ம கதிர் ஈரோடு. வாங்க கதிர். நீங்க என்ன பண்ணி அசத்த போறிங்க.

கதிர்:ம்கும். அசந்து போய் வந்திருக்கேன். அசத்தவேற செய்யணுமாக்கு. நானும் அதே தங்கமணி கான்ஸப்ட்தான்.

பொன்னாத்தா: அட! ரொம்ப தைரியமா சொல்றீங்க?

கதிர்: நாமதான் வீட்டுல டிஷ் கேபிள் எல்லாம் கட்பண்ணிட்டமுள்ள. ஹி ஹி..

பொன்னாத்தா: சரி சரி அசத்துங்க.

கதிர்: சாதாரணமா எல்லா ஊட்டுலயும் தங்கமணி கோவமா இருந்தா பேசமாட்டாங்க. ஆனா சட்டி சாமான்லாம் சொட்டயாவும். ரங்கமணிங்க உசாராய்டுவாங்க. நம்ம தங்கமணி சத்தமே போடமாட்டாங்க.

தலவலிக்குதும்மா காஃபி ப்ளீஸ்னா, பதிலே வராது. கொஞ்சம் மெதுவா காஃபி கேட்டனம்மான்னா கண்ணாலயே கதவு பக்கம் பாக்குமுங்க. மெதுவா எழுந்து போய் பார்த்தா, பால் தீந்து போச்சி. வாங்கிட்டு வந்தா காஃபின்னு எழுதி ஒட்டியிருக்கும். பல நேரங்கள்ள இந்த மவுனத்தால கண்ணு கலங்கிடும்.

பொன்னாத்தா: ஆஹா. இப்பதான் புரியுது கசியும் மௌனம்னா என்னான்னு. ரைட்டு:))

கதிர்: அட சும்மாருங்காத்தா. ஒரு நாள் ராத்திரி வேலையிருந்திச்சி. லேட்டாதான் தூங்கப் போனேன். எவ்வளவு லேட்டானாலும் காலையில 8 மணிக்கெல்லாம் ஆபீஸ்.

வா.பா: பின்ன! ஊட்டுல உக்காந்து காலைல எட்டுமணிக்கு தமிழ்மணம், தமிழிஷ்னு குத்திட்டு பின்னூட்டம் போடமுடியுமாக்கு

கதிர்: அட நீங்க வேறங்ணா. குளிக்கலாம்னு பாத்ரூம்ல போனனுங். விக்ஸ் மாத்திர சைசுக்கு சோப்பு இருந்திச்சி. முசுக்குன்னு ஏம்மா சோப்பு இல்லன்னு சொல்லத் தெரியாதான்னேன். ம்யூட் போட்றுச்சுங்க. விறுவிறுன்னு போய் சட்ட பாக்கட்டுல இருந்து ஒரு கடுதாசி, பேண்ட் பாக்கட்டுல மூனு, லேப்டாப் கவர்ல அஞ்சு, பர்ஸ்ல ரெண்டு, கதவு பின்னாடி, கார் ஸ்டீரிங்க்லன்னு ஒரு வண்டி குப்பைய சேர்த்து போட்டு மொகத்த ஒரு வெட்டு வெட்டி டிவி பொட்டிய பார்த்துச்சி.

மெதுவா ஒன்னொன்னா பார்த்தா, ஏங்க சோப்பு வாங்கணும்னு எழுதி வச்சிருக்கு. நம்ம கெரகம் அது கைக்கு சிக்கல. சரி டி.வி.பொட்டியாண்ட என்னான்னு பார்த்தா எனக்கு தலவலிக்குது. வெளிய சாப்டுக்குங்கன்னு எழுதியிருக்கு. உள்குத்து புரியாம தெம்பா போனா கடையெல்லாம் சாத்தியிருக்கு. அப்புறம்தான் கவனம் வந்திச்சி. டிவியில நாளைக்கு பந்த்னு செய்தி கேட்டது.

என்னா குசும்பு பாருங்க. சாப்பாட்டுக்காக கொங்குமன்னன் மானமிழப்பதான்னு வீம்பா உக்காந்து தண்ணிய குடிச்சிட்டு 6 மணிக்கு எப்புடியும் கடைய தொறந்துடுவாங்க. ஒரு கட்டு கட்டிக்கலாம்னு இருந்தேன். சரி கடைய தொறந்து சமைக்க வேணாமா. எட்டு மணிக்கா சாப்டுக்கலாம்னு, வேலையில முழுகிட்டேன். மணி பார்த்தா 11.

இனி இவ்வளவுதான்னு வீட்டுக்கு போய் பாப்பாக்கு வெச்சிருந்த பிஸ்கட்ட ஆட்டய போடலாம்னு பார்த்தா அது தூங்காம டிவி பாக்கலாமாங்குது. பசிமயக்கத்துல அப்புடியே தூங்கிப் போய், காலையில எழுந்து குளிச்சிட்டு (சோப்பு வாங்கி வச்சிட்டாங்க), சமயகட்டுல பார்க்குறேன்.

இட்டிலி சட்டில இருந்து இட்டிலிய எறக்குனாங்க. அந்த புகை நடுவில அவங்க, கையில இட்டிலி புகைய புகைய வேணும்னே வெறுப்பேத்த ஸ்லோ மோஷன்ல வந்தாலும் எனக்கு பாரதிராஜா படத்துல கனவு சீன் கவனம் வந்துச்சு. ஒரு ஈடு இட்டிலியும் பறக்க பறக்க தின்னுட்டு ஓடியாந்து எழுதுனது தான் அந்தக் கவிதை. சாயந்திரம் போய் இது உனக்குதான் டெடிகேட் பண்ணேன்னு சொல்லி ம்யூட் எடுத்து வுட்டம்ள..

கூட்டத்தில் இருந்து பாலாசி: ஏண்ணே! இப்புடி ஏதோ பண்ணி ராச்சோத்துக்கு சிங்கியடிச்சதாலதான் 11 மணிக்கு மேல கவிதை எழுதுனீங்களோ..

(அரங்கம் முழுதும் வெடிச்சிரிப்பு)

பொன்னாத்தா: (சிரிப்படக்க முடியாமால் ஏய் நீ சொல்லேன். ஏய் நீ சொல்லென்னு வா.பாக்கும் கேபிளுக்கும் கை நீட்டுது. அவங்களும் கண்ணீர் வழிய சிரித்தபடி முடியாதுன்னு கையாட்டுறாங்க). கிக்கீக்கீ.. செறப்பு.. கிக்கீ.. அம்மா..கீக்கீ..முடியலா..நீராச்சும்..

அதுசரி: (எழுந்து வந்து பைக்குள் கைவிட்டு ஒரு எவர்சில்வர் தட்டு எடுத்து பரிசளிக்கிறார்). இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சோகத்தையும் காமெடியாக்கிய கதிருக்கு அன்புப் பரிசு. ஒரு ஒருத்தரும் பெர்ஃபார்ம் பண்ணப்புறம் இந்த தட்டப் பார்த்தேன். வேதாளம் உதட்ட பிதுக்கிச்சி. கதிரோட பெர்ஃபார்மன்ஸ் முடிஞ்சதும் பார்த்தா எவர்சில்வர் தட்டுல ஆவி கசிஞ்சிருச்சி.  இன்றைய கலக்கப் போவது யாரு ஹீரோ கதிர் ஈரோடு..

ஓஜாரே ஓஜா...ரே...ரே ஓஜா...


Thursday, March 25, 2010

கலாய்க்கப்போவது யாரு -2



வந்துடுங்க!!
நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
6. முனுசாமி சாலை, 
மேற்கு கே.கே.நகர். 
சென்னை: 

தொடர்புக்கு 
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308 
நர்சிம் ; 9841888663 
பொன்.வாசுதேவன் : 9994541010

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓஜாரே ஓஜா...ரே ரே. ஓஜா..

பொன்னாத்தா:
வணக்கம் அடுத்ததாக வந்து கலக்கப் போறவரு பிரபாகர்.

பிரபா: வணக்கம் தங்கச்சி..

பொன்னாத்தா: அண்ணா நீங்களா..

பிரபா: பாசமான என் அன்பு தங்கச்சி
              கேட்டுபுட்டாலே நீங்களான்னு அண்ணாச்சி..

வா.பா:
தோ. அதெல்லாம் இடுகையில. இது ப்ரோக்ராம். டி.ஆர். மாதிரி நடிச்சி காட்ரீங்களா என்னா? என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

பிரபா: வணக்கங்கைய்யா. ஸ்டாண்டப் காமெடிதான்யா. வழக்கமா பாத்திங்கன்னா எல்லாரும் ஜோக் படிச்சிட்டு வந்து துண்டு துண்டா சொல்லுவாங்கைய்யா. இது அப்படி இல்லங்கைய்யா. ஒரே ஃப்ளோல அப்பிடியே வருங்கைய்யா. யோசிக்கவே இல்லங்கைய்யா. பேரு கூப்டதும் டக்னு இந்த ஐடியா வந்ததுங்கைய்யா. நிகழ்ச்சிக்குள்ள போலாங்களாய்யா?

பொன்னாத்தா:
இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்களேண்ணா. ஆரம்பிங்க.

பிரபா: அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம். சங்க காலத்துல காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல. என்னடா இப்படி சொல்லிபுட்டான்னு கலவரமாயிடிச்சி. வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான  சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.

சரின்னு நான், வேல்முருகன்,ராஜு, எல்லாம் ஆத்துக்கு போனோம். அங்க ஒரு பொண்ணு லவ் ஃபெய்லூய்ர்ல தண்ணில முழுகிடிச்சி. நான் காப்பாத்துங்கன்னு கத்தி, அக்கம்பக்கதுல எல்லாருமா சேர்ந்து கரைல போட்டாங்க. நான் சினிமால பார்த்தத கவனம் வெச்சி, வயத்த அமுக்கி தண்ணிய வெளிய எடுங்கன்னேன்.

இதாண்டா சாக்குன்னு வயசு பசங்க அத்தன பேரும் பாஞ்சி அமுக்குனதுல அதுக்கு மூச்சு நின்னு போச்சு. வாயோட வாய் வெச்சி ஊதுனா மூச்சு வரும்னேன். நீ செய் பிரபான்னாங்க. இல்ல! மாமா பொண்ண லவ் பண்ணாதவங்கதான் பண்ணனும்னேன். நாந்தான் நாந்தான்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டதுல அந்த பொண்ணு செத்து போச்சு.

ஃப்ரெண்ட்ஸ்ங்கெல்லாம் ஓட்டிடாங்க. ஊர்க்காரங்கள்ளாம் சேர்ந்து என்னாலதான்னு என்ன மரத்துல கட்டி போட்டுடாப்ல , சாவு எடுக்கற வரைக்கும். அப்புறம் ஆத்துக்குள்ள அளைஞ்சி ஒரு பாம்ப புடிச்சிட்டு மாமா பொண்ணு எனக்குதான்னு தெம்பா போனேன். எனக்கு முன்னாடி சித்தப்பா பையன் ஒரு ரப்பர் பாம்ப காட்டி மடிச்சிட்டாப்ல. அதாவது பரவாயில்ல நான் கொண்டு வந்தது மண்புழுன்னு போட்டு குடுத்துட்டாப்ல. அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.

கேபிள்ஜி: கொர்..கொர்ர்..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

பொன்னாத்தா: கேபிள்ஜி. அண்ணாவோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லுங்க. அங்க என்ன பண்றீங்க கொரட்ட விட்டுகிட்டு?

கேபிள்ஜி: அவ்வ்வ். கொரட்ட இல்லம்மா. சிங்கப்பூர் போனப்ப ராத்திரி 3 மணிக்கு எழுப்பி இத இடுகையா போடட்டா அங்கிள்னு கேட்டாரும்மா... பயங்கர தமாஷ்

பொன்னாத்தா:
நீங்க சொல்லுங்க சார்.

வா.பா. நல்லா இருந்திச்சி ப்ரபா. எப்ப நடந்தது இது?

பிரபா: நான் மூணாவது படிக்கும் போதுய்யா. மாமா பொண்ணுக்கு வயசு ஒண்ர. 5 நிமிஷத்துக்கு அரங்கம் அதிர்கிறது.

பொன்னாத்தா:
யோவ் செறப்பு. ஒரு ஒரு வாட்டியும் கேக்கணுமா. உங்க ஒபினியன் சொல்லுங்க.

அதுசரி: நமப் பார்வதீ! குழந்தாய்! என் பாம்ப காணோம்! நீர்தான் பிடித்துக் கொண்டு போனீரோ? :o)))

ஓஜாரே ஓஜா..ரே.ரே..ஓஜா..


பொன்னாத்தா:
அடுத்ததாக கலாய்க்க வருபவர் பாலாசீ. வாங்க பாலாசீ. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க.

பாலாசீ
: ஜட்ஜ் செலக்‌ஷன் சரியில்ல.

பொன்னாத்தா
: என்னது? யோவ். நிகழ்ச்சி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்கன்னா இதென்னா வில்லங்கம்?

பாலாசீ:
ஆமாங்க! பின்ன என்ன. 8 வரி நடக்கற சாங்கியம் கூட 2 வரி சொந்த பிட்ட சேர்த்துவிட்டு கல்லா கட்டுறவன் நானு. இப்பல்லாம் யாரும் இடுகைய படிக்கறதே இல்ல. பாலாசீ பின்னூட்டம் இல்லீன்னா சப்ப இடுகைன்னு போய்டுறாங்க. என்ன போய் இவங்க ஜட்ஜ் பண்ணாங்கன்னா பரிசா குடுப்பாங்க. பொறாம..

பொன்னாத்தா:
சரி சரி அதெல்லாம் இருக்காது. நீங்க சொல்லுங்க. என்ன பண்ண போறீங்க?

பாலாசீ:
பின்னூட்ட காமெடின்னு ஒரு அய்ட்டம்

பொன்னாத்தா: சரி அசத்துங்க..

பாலாசீ: இப்புடித்தாங்க ஒரு நாள் வழக்கம் போல தமிழ்மணம் தொறந்து வெச்சிக்கிட்டு இடுகை வருமான்னு உக்காந்திருந்தேன். ரொம்ப நேரமா ஒண்ணும் காணோம். சரின்னு எதிர்ல நாயர் டீ கடையில டீ சொன்னேன். அவன் டீ கொண்டு வந்துட்டு எதுக்கோ  ‘நன்னாயி’  ன்னு சொன்னான்.

போரடிச்சதா. கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்ல மலையாளம் செலக்ட் பண்ணி, நன்னாயின்னு அடிச்சனா. அது மலையாளத்துல வந்திச்சி. சரின்னு அப்படியே ஒரு பொண்ணு பேர மலையாளத்துல டைப் பண்ணி ஸர்ச் பண்ணேன். ப்ரொஃபைல் வந்திச்சி. பார்க்க அழகா இருக்கவும் அதோட ப்ளாக்ல போய் ஒரு இடுகைய செலக்ட் பண்ணி, அழகா தெரிஞ்ச ஒரு வரிய கட் அண்ட் பேஸ்ட் போட்டு கீழ  ‘நன்னாயி’ பேஸ்ட் பண்ணேன். போட்டு 2 நிமிஷத்துல பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் வந்திச்சி.

பர பரன்னு ஆய்ட்டேன். நாயர் கடையில இன்னோரு டீ தெம்பா சொல்லிட்டு, நாயரே இத படிச்சி காண்பின்னேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். சொல்லிட்டு சிரிய்யான்னா, இல்ல விளக்கு மாத்தால அடிப்பேன் ஓடிப்போயிருன்னு போட்டிருக்குன்னு சிரிச்சான்.

நான் அப்பாவியா, என்னாங்க அனியாயம்? அந்த பொண்ணு எழுதுனததானே நான் பேஸ்ட் பண்ணி  ‘நன்னாயி’ போட்டேன். எதுக்கு திட்டுதுன்னேன்? அத படிச்சீட்டு தரையில பொரண்டு பொரண்டு சிரிச்சான். அப்புறம் சொல்றான், அந்த பொண்ணோட லவ்வர் அவள விட்டுட்டு இன்னோருத்திய லவ் பண்றத பத்தி இடுகை போட்டிருக்கு அந்தம்முனி. என் கெரகம்,   “என்ன இப்படி மோசம் பண்ணிட்டானே அவன் உருப்படுவானான்னு” எழுதி இருந்தத வெட்டி ஒட்டி அதுக்கு பின்னூட்டம் நன்னாயின்னு போட்டுட்டேன். ஆனா இதுக்கெல்லாம் அசந்துடுவானா இந்த பாலாசீ. நாம பார்க்காத வெளக்குமாத்தடியா? டெய்லி அங்க போய் ஒரு வரி வெட்டி ஒட்டி நன்னாயி போட்டுட்டிருக்கேன். எப்புடீஈஈஈ.  சனியம்புடிச்சவனுங்க மலையாளமணம், மலையாலிஷ் ஓட்டுபட்டி வைக்கல.

பொன்னாத்தா: அய்யோஓஓ. சாமி முடியல. நீ திருந்தவே மாட்டியா பாலாசீ..

(வா.பா., கேபிள், அதுசரி எல்லாரும் தரையில் உருண்டு சிரிக்கிறார்கள். அரங்கம் முழுசும் ஸ்டேண்டிங்க் ஒவேஷன்)

பொன்னாத்தா: யப்பா ராசா! போப்பா! அவங்க பதில் சொல்ற நிலைமையில இல்ல.

பாலாசீ: யக்கா! கவிதைதான் புரிய மாட்டீங்குது. பரிசாவது கிடைக்குமான்னு புரியரா மாதிரி சொல்லுக்கா..அவ்வ்வ்.

பொன்னாத்தா: வணக்கம் பதிவர்களே. ஒரு சின்ன இடைவேளைக்கு பின் மீண்டும் சந்திப்போம்..கலாய்க்கப் போவது

மொத்த கும்பலும்: யாஆஆஆஆரூ!!

ஓஜாரே ஓஜா..ரே ரே ஓஜா.. 

(தொடரும்)

Wednesday, March 24, 2010

கலாய்க்கப்போவது யாரு -1

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா: வணக்கம்! வந்தனம்! புண்ணாக்கு டிவியின் கலாய்க்க போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்க அனைவருக்கும் பொன்னாத்தா வணக்கம். இடுகை, பதிவு, ஓட்டு, பின்னூட்டம், மூக்குல குத்த சொல்லி மிரட்டல்,  இவ்வளவு டென்ஷன்லயும் பதிவுலகத்த புடிச்சி தொங்கோ தொங்குன்னு தொங்குற நாம சிரிக்கறதுக்காக தாங்க இந்த நிகழ்ச்சியே. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம ஜட்ஜஸ வரவேற்போம்.

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா
: இன்றைய நிகழ்ச்சிக்கான நம்ம ஜட்ஜஸ் வரப்போராங்க. முதலில் வானம்பாடிகள்.

வா.பா: வணக்கம்மா.

பொன்னாத்தா: சாஆஆர். இது நிகழ்ச்சி சார். என்னமோ கச்சேரி ரோட்டுல காலார வாக்கிங்க் போறா மாதிரி டப்பாகட்டு வேஷ்டியோட வந்திருக்கீங்க.

வா.பா.:
நீ கூடத்தான் தல வாராம அப்புடியே வந்துருக்க. நான் கேட்டனா?

பொன்னாத்தா:
அய்யோ. இது ஹேர் ஸ்டைல் சார். சரி விடுங்க. உக்கார்ரப்ப சரி. அதென்ன நடக்கறப்ப கூட பேரிச்சம்பழம் விக்கிறவன் மாதிரி காதுமேல கை.

வா.பா:
அது முடி பறக்காம.. (த்த்த்தோடா) நீ கூடத்தான் அப்பப்ப முடிய தள்ளி விடுற நாங்கேட்டனா!

பொன்னாத்தா:
கலாய்ச்சாச்சா! சரி போய் உக்காருங்க அடுத்தவர அறிமுகம் பண்ணனும்.

வா: பா
: இல்லம்மா அவரு வரட்டும்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா.

பொன்னாத்தா:
நம்ம அடுத்த ஜட்ஜ் கேபிள்ஜி. வணக்கம் கேபிள்ஜி. இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி...

வா: பா.
இரும்மா இரும்மா. (ஓடிப்போய் ஒரு சேர் கொண்டு வந்து கேபிள்ஜியை அமுக்கி உட்கார வச்சாச்சு)

பொன்னாத்தா:
சார். இங்க ப்ரோக்ராம் நடத்தறது நானு. நீங்க என்ன சார் பண்றீங்க.

வா.பா:
நீ கேளும்மா.

பொன்னாத்தா:
(என்ன எழவோ) இன்னைக்கு நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு ஜோக்கோட கலகலப்பா ஆரம்பிங்க கேபிள்ஜி.

வா.பா:
(பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே.  இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி

பொன்னாத்தா:
சாரி சார். மறந்துட்டேன். ஜோக்கில்லாம சிங்கப்பூர் போனத பத்தி சொல்லுங்க ஜி.

கேபிள்:
டைகர் ஏர்வேஸ்ல போனேம்மா. எனக்குன்னே இப்படி நடக்குமா?

வா.பா: தலைவரே!

கேபிள்:
இருங்க தலைவரே! தெரியும். முதல் வாட்டியா போறேனா? சீட்டு வால் பக்கம் மாட்டிக்குமா? தூக்கி தூக்கி போடுமேன்னு கலவரமாவே இருந்துச்சு! புலித்தோல் மாதிரி யூனிஃபார்ம்ல புலித்தோல் மாதிரி இடுப்புல பெல்ட் கட்டி..சரி சரி.. ஏர் ஹோஸ்டஸ் அம்முனிட்ட சீட்டு எங்கன்னு கேட்டேன். நம்ம அதிர்ஷ்டம் சரியா ஏரோப்ளேன் மார்புல..

வா.பா: படுபாவி! ஏரோப்ளேன்ல கூட விடமாட்டீரா..

கேபிள்: இல்ல தலைவரே. விங் பக்கத்துலன்னு சொன்னேன்.

பொன்னாத்தா: போரும் சாமிகளா!  போய் உக்காருங்க. சிறப்பு விருந்தினர் வந்துட்டாரு.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

பொன்னாத்தா:
இன்றைய நிகழ்ச்சியின் நமது சிறப்பு விருந்தினர் யாருன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருப்பீங்க. கடவுளுக்கே கத்தி சொருவின வல்லவரு, மரங்கொத்திய மனுசனக் கொத்தவிட்ட நல்லவரு அதுசரி அவர்கள்! வெல்கம் டு த ஷோ!

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

அதுசரி:
வணக்கம் பொன்னாத்தா.

பொன்னாத்தா: வணக்கம் அதுசரி. நம்ம வ்யூவர்ஸ்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

அதுசரி: இஃப் யூ கேண்ட் கால் ஷிட் ஆஸ் ஷிட் ப்ளீஸ் கெட் அவுட்.

பொன்னாத்தா:
அட சாமி! போய் உக்காருங்க ராசா. ஆளுல்லாத கடையில யாருக்கு ஷோ காட்றது. போம்மா. போ.

ஹி ஹி. இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக நம்மள அசத்த போறவரு அண்ணாச்சி நசரேயன்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா

நாலா பக்கமும் கும்பிட்ட படி நசரேயன் எண்டர்.

பொன்னாத்தா:
வாங்க நசரேயன். அர்மானி சூட்டும் ஹஷ் பப்பி ஷூவுமா அமக்களமா வந்திருக்கீங்க சரி! அதென்னா மூஞ்சில தோச மாவு?

நசரேயன்:
அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.

பொன்னாத்தா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல. சரி போட்டும். இவ்ளோ ஹீரோ மாதிரி

நசரேயன்: மாதிரியெல்லாம் இல்லாஆஆஆஆஆஆஆ.

பொன்னாத்தா:
சரி சரி. அதென்ன தோள்ள துண்டு.

நசரேயன்: அத அவ்வளவு சாதாரணமா சொல்லிடாதிய ஆத்தா. போலீசுக்கு லட்டி, கண்டக்டருக்கு பிகிலு, நமக்கு துண்டு. தொழில் பாருங்க. சரி நிகழ்ச்சிக்குள்ள போலாமா.

பொன்னாத்தா: ம்கும். இப்போ தெருவிலயா நிக்கறீங்க. அதுக்கு முன்னாடி ஜட்ஜுக்கும், சிறப்பு விருந்தினருக்கும் ஒரு ஹலோ சொல்லிட்டு அசத்துங்க.

நசரேயன்: வண்...அட போம்மா நான் இந்த ஆட்டைக்கு வரல.

பொன்னாத்தா:
ஏன் என்னாச்சு?

நசரேயன்: பின்ன என்னாம்மா. சும்மாவே இடுகைய படிச்சமா, போனமான்னு இல்லாம அது தப்பு இது தப்புன்னு சொல்லுவாரு இந்த வானம்பாடி. இதுல ஜட்ஜு வேற. போறாததுக்கு சோழன் சிறப்பு விருந்தினர். எங்களுக்கு ஏற்கனவே வரப்பு தகராரு இருக்கு. இதுல எனக்கு எங்க பரிசு. நான் போறேன்.

பொன்னாத்தா:
அதெல்லாம் நடக்காது. நான் பார்த்துக்கறேன். நீங்க என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

நசரேயன்:
ஸ்டேண்டப் காமெடிதான். நான் துண்டு போட போய் நொண்டியடிச்ச வரலாறு.

பொன்னாத்தா: நீங்க அசத்துங்க..

(வழக்கம் போல பிழை பிழையா துண்டு போட்டு தோல்வியைத் தழுவினத சொல்றாரு. அரங்கம் சும்மா அதுருதுல்ல)

பொன்னாத்தா
: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! முடியல. சரி. அந்த துண்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே.

நசரேயன்
: தோ! அங்கிட்டு ஒரு வடக்கூர்க்காரி இருக்கால்லா! அவக்கு வீசத்தான்.

பொன்னாத்தா
: யோவ்! அது ப்ரோட்யூசர் சேட்டு பொண்டாட்டி. நல்லா கெளப்புரீருய்யா பீதிய.

நசரேயன்
: வட போச்சே! அவ்வ்வ்வ்வ்வ்

பொன்னாத்தா
: வானம்பாடி சார் நீங்க சொல்லுங்க.

வா.பா
: இவரு துண்டு போட்டு எப்படியோ ஒரு அம்முனிய மடக்கி யூ ஆர் மை லவ்னு லெட்டர் குடுக்கப் போய், வழக்கம் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல யூ ஆர் மை பவ்னு எழுதி குடுக்க, அது நாய வுட்டு கடிக்க வுட்ட காமெடி அருமை. அண்ணாச்சி! அசத்திட்டீங்க.

பொன்னாத்தா
: ஆண்டவா! நீங்க சொல்லுங்க அதுசரி. நீங்க என்ன நினைக்கிறீங்க இதபத்தி.

அதுசரி: பக்கத்துல டாஸ்மாக் கட எங்க இருக்கு?

ஒரு ச்ச்ச்சின்ன இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சிய பார்க்கலாம் நேயர்களே..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா!

அடுத்ததாக நம்மள கலாய்க்க வந்திருக்காரு குடுகுடுப்பை.

பொன்னாத்தா:
வாங்க குடுகுடுப்பை! எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம். இன்னைக்கு என்ன பண்ணி கலாய்க்க போறீங்க.

குடுகுடுப்பை:
எதிர்க்கவுஜ!

பொன்னாத்தா: இங்கயுமா? ஆண்டவா. சரி கலாய்ங்க.

குடுகுடுப்பை: (பேசாமல் நிற்கிறார்)

பொன்னாத்தா: சார். லைவா போய்ட்டிருக்கு சார். ஒன்னும் பேசாம இருந்தா எப்படி?

குடுகுடுப்பை:
என்னாம்மா காம்பியர் நீ. எதிர்கவுஜங்குறேன். கவுஜ சொல்லு.

பொன்னாத்தா
: தோடா! அதெல்லாம் முடியாது. நீங்களேதான் பண்ணனும்.

குடுகுடுப்பை:
சரி சரி!

நிமுத்தி வெச்ச பானை மேல்
கமுத்தி வெச்ச பானை வழி
 வடிந்த பாத்திரத்தில் 
மூடாமல் விட்டதால்
ஆவியாகிப் போன சாராயம்..
தண்ணீர் பாக்கட் கடித்துக் குடித்தபடி
காற்றில் சாராய மணமருந்தி
கடிச்சிக்க கருவாடும்
உறிஞ்சிக்க பீடியும் மறந்த நான்...

(இறங்கி ஓடிபோய் ஆடியன்சில் ஒரு அம்மணியைக் குட்டி விட்டு ஓடி வருகிறார்)

மிஸஸ் தேவ்: ஏன் சார் என்ன குட்டினீங்க?

குடுகுடுப்பை: சாரிம்மா. ஆஃபீஸ்ல ஆணி புடிங்கிட்டு நேர இங்க வந்து எதிர்கவுஜ ரெடி பண்ணி, நசரேயன யோவ்! அசலை இங்கே சுட்டவும்னு டைப் பண்ணுய்யா. ஷோவுக்கு ரெடியாய்க்கிறேன்னு சொன்னா குட்டவும்னு டைப்பண்ணிட்டாரு போல. நானும் அவசரத்துல குட்டிட்டேன்.

பொன்னாத்தா: கேபிள் ஜீ! குடுகுடுப்பையோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க

கேபிள்ஜீ:
ரெண்டு ஷாட் டக்கீலா.

பொன்னாத்தா: சேர்ந்தாய்ங்கய்யா எல்லாரும் ஒண்ணா! யோவ்! செறப்பு விருந்தினர். மண்ணு லாரில சரக்கடிச்சி சாய்ஞ்சா மாதிரி உக்காந்தா எப்புடி? நீர் என்ன சொல்றீரு.

அதுசரி: கள்ள சாராய ஊழல்ல சம்பாதிச்சதுக்கு கணக்கு எங்க? கட்டிங் எவ்வளவு..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

(தொடரும்)

(டிஸ்கி: ஹி ஹி.. நீஈஈஈஈளமா ஒரே இடுகை போடாம இப்புடி பிரிச்சி போட்டு கல்லா கட்டலாமின்னு..வர்ட்டா. )

பொன்னாத்தா: ம்கும்! இது நீளமில்ல பாரு.

வா.பா. தோ! என்னாம்மா பி.ப. நீய்யி. எங்கனா டிஸ்கிக்கு அப்புறம் ஒரு எழுத்து வரலாமா?

Monday, March 22, 2010

கேரக்டர்-எட்ஜா.

சார். உனுக்கு மூல கொத்தளம் தெர்மா சார்? பேசின் பிரிட்ஜ் எறக்கத்துல பீச்சாங்கை பக்கம் கீதே அதான் சார். பக்கிங்காம் காவா ஓரமா கொத்து கொத்தா பெரிய சேரி சார் அது.
எட்ஜா தெர்மா சார்? நம்ம மூல கொத்தளம் எட்ஜா சார். அங்கிந்துதான் சார் வந்தான். கொய்ந்த மனசு சார் அவனுக்கு. எஸ்ஸெல்ஸி பெயிலு சார். ஆனா எய்துவான் பாரு எய்த்து. வெள்ளக்காரன் கோத்து கோத்து எய்துவானே. அப்டி எய்துவான் சார்.
வேலைக்கு வரசொல்லவே கல்யாணம் ஆய்ட்டிருந்துது சார் அவனுக்கு. அட போ சார். சேரின்றேன் அப்புறம் எப்புடின்னா என்னா சொல்ல. லவ் மேரேஜ்தான் சார். அப்பா ரயில்வேல வேல மேல செத்துட்டார் சார். இவனுக்கு வேல குட்தாங்க சார். மொத நாளே சரக்கு கப்போட வந்து மேனேஜர டரியாலாக்கிட்டான் சார். கேட்டா நேத்து சாப்ட சரக்குன்னு சொல்லி கிக்கிக்கின்னான் சார்.
மத்யானம் அல்லாருமா டூம்ல குந்திக்கினு சாப்டுவோம் சார். நானும் வர்ட்டான்னு வந்தான் சார். டூமுக்கா வந்தான். அல்லார் மனசுக்குள்ளயும் வந்துக்கினான் சார். ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணி சிரிக்க வைப்பான் சார். எம்ஜிஆர் மாதிரி கலர் கலரா ட்ரெஸ் பண்ணுவான் சார். ப்ளாட்ஃபார்ம்ல குப்பையா போட்டு விப்பாங்களே, சிந்தடிக் துணி கனமா. அந்த பேண்டு, அதே மெடீரியல்ல டி சர்ட்டு சார்.
ஏன்யா இப்படி காசு வேஸ்ட் பண்ற, நல்லதா துணி வாங்கி தைன்னு சொன்னா ஒரு மாதிரி வாய வெச்சினு சிரிப்பான் சார். நீங்க இருக்கப்பட்ட ஆளுபா. தைய கூலி 100ரூ குடுப்பீங்க பேண்டுக்கு. நா பார், அம்பரா பேண்டு, முப்பரா சட்டு, இருவரால சரக்கு, மீனு, சிசரு. மேட்டரு ஓவருன்னு சிரிப்பான் சார். கல்யாணத்துக்கு போவுணுமா. அல்சி உதறி போட்டுக்குனு போனா போறதுக்குள்ள காஞ்சிடும். இஸ்திரி செலவே இல்ல தெர்மான்னு அலட்டுவான் சார்.
ஒரு மேரியா சிர்ச்சிகினு வருவான். காது மடல புட்சிக்கினு நிமிண்டுவான். ஹிஹி பத்துருவா குடுபா. கை கால் தட்தட்னுது. ஒரு நூறு உட்டுக்கினு வந்துடுறேன். நெர்யா கவர் கீது டிஸ்பாச் பண்ண. கெய்வனுங்க வந்து ஒரே பேஜார் பண்றானுங்க. பாவமா கீதுன்னுவான். இல்ல போடான்னா, யோவ், சொம்மாவா தர. சம்பளம் வந்ததும் குடுக்கல. குடுப்பா வேல நிக்குதுபான்னு நம்மள வேல பாக்க உடமாட்டான் சார்.
ஜம்ப்ரா தோட்டத்துல போய் நூறு உட்டுட்டு வந்து அரை மணில அம்பது அறுவது பென்ஷன் ஆர்டர் ஒட்டி கொண்டு போய் சார்டிங் ஆஃபீஸ்ல குடுத்துட்டு வருவான். சொம்மா குடிகாரன்னு சொல்லிடுறோமே. அவனுக்கு வர்த்தம் சார். ரூல்ஸ் சொல்லுவான் பாருங்க, சாராயக்கட மேனர்ஸ். ஆச்சரியமா இருக்கும் சார்.
கட்சிக்க ஒன்னுமில்லன்னா தலைய குடுப்பான்னா குடுக்கணுமாம் சார். உச்சில பரபரன்னு தேச்சி மோந்துக்குவாங்களாம். கொஞ்சம் ஊர்க்கா, இல்ல மீனு கேக்கறது அசிங்கமாம். ஆனா கேட்டா மாட்டேன்னு சொல்ல கூடாதாம். சொல்றது கேவலமாம்.  சரக்கு அடிக்க சொல்ல, சித்தப்பா, பெரியப்பா, மாமானு பெர்ய மன்சால் வந்தா டபாய கூடாதாம். காசு கீதோ இல்லயோ சாப்ட்ரியான்னு கேக்கணுமாம். இர்ந்தா வாங்கி குடுத்துட்டு ஓரமா போயிடணுமாம்.
சரக்கோ, சாப்பாடோ, தண்ணியோ, டீயோ ப்ளெஸ் பண்ணி க்ராஸ் போடாம சாப்ட மாட்டான் சார் எட்ஜா. நைட்ல எங்கனா தனியா போவணும்னா ஒரு வத்தி பொட்டி வச்சிக்க. பயமானா ஒரு வத்தி குச்சி கீச்சி புட்சிகினு நட. பேய் புடிக்காதுன்னு சொல்லுவான் சார். ராவுல தனியா போஸொல்லோ யார்னா ஃபாலோ பண்றாமாதிரி இருந்தா, கால் கட்ட விரல்ல ஒன்னுக்கு உட்டுக்குனு நட்ந்தா எதுவும் புடிக்காதுன்னு சொல்லுவான் சார்.
அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன். டிக்கி டிக்கின்னு. ஒன்னா குட்சிக்குவாங்க, அட்சிக்குவாங்க. அடுத்த நாள் வந்து இன்னா டிக்கின்னுவான். அவன் மொற்சிக்கினு பதில் சொல்லமாட்டான். அய்ய! போத பண்ணிக்கினு சண்ட போட்டா பொம்பள மாதிரி மூஞ்சி தூக்கிக்கிற. இன்னாய்யா குடிகாரன் நீன்னு சத்தமா சொல்லி சிரிப்பான். அப்புறமும் எப்புடி சார் கோவமா இருக்க முடியும்?
அவங்கப்பா இன்னோரு சம்சாரம் கட்டியிருந்தாரு போல சார். அவங்களுக்கு ஒரு பொண்ணு. இவங்க கூட அவ்வளவு பேச்சு வார்த்த இல்லை. அந்த பொண்ணு பெரியவளாச்சின்னு தகவல் வந்திச்சாம் சார். எங்கயோ கடன் வாங்கி தங்கச்சின்னு முடிஞ்சத செஞ்சிட்டு வந்தான் சார். அம்மாவும் இல்லை. அப்பாவும் போய்ட்டாரு. இந்த அம்மா பாவம் வருமானத்துக்கு இல்லாம தங்கச்சி வேறன்னு நென்ச்சான் சார்.
பென்ஷன் இல்லாம செத்து போனவங்க பொண்டாட்டிக்கு ஒரு பென்ஷன்னு ரூல் வந்திச்சி சார். என்னமோ டகால்டி பண்ணான். கடன் வாங்கி (அவங்களுக்கு சொல்லிட்டுதான்) செலவு பண்ணி கோர்ட்ல இந்தம்மா மனைவிதான்னு ஒரு சர்டிஃபிகேட் வாங்கி, பென்ஷன் வாங்கி குடுத்துட்டான் சார். கிட்ட கிட்ட அம்பதாயிரம் ரூபாய் அரியர்ஸ் வந்திருந்துச்சு போல. பேங்க்ல போட்டு, வக்கீல் செலவு வகையறா ஒரு 1500 ஆச்சி, குடுக்கணும், அப்டியே சரக்குக்கு எதுனா கவனின்னு கேட்டுக்குறான் சார்.
சித்தி கிட்ட உதவுனதுக்கு லஞ்சம் கேக்கறியா? இன்னாடா மனுசன் நீன்னு திட்டிச்சாம் சார். இப்டி பேசிட்சி பாலு, மன்ஸே சரியில்ல. மாசம் 150ரூ வட்டி கட்றம்பான்னு அழுதுட்டு, சரி, ஒரு முப்பரா குடுப்பா, மனசு நோக்காடு தாங்கல, சரக்கடிக்கணும்ன்னான். 
வயசாய்னே போவுதே. புள்ள குட்டி வேணாமா? டாக்டர போய் பாருய்யான்னா, அட போப்பா, கடனில்லாம மாசம் ஓட மாட்டுது. இதுல கொய்ந்திங்க வேறவா. தானா வந்தா சரி. வேணான்ன போறதில்ல. இதுக்கு செலவு பண்ற நெலமையிலயா இருக்குறன் நானுன்னு போய்டுவான்.
காலப் போக்கில டிக்கி ஊழியனாகி, போதகனாகி, பாதிரியாராய்ட்டான் சார். குடிக்காத எட்ஜா. அது சாத்தான். தினம் சர்ச்சுக்கு போ. டைம் இருக்கும் போதெல்லாம் பைபிள் படி. நல்ல சிந்தனை வளர்த்துக்கோ. ஆண்டவரோட இரு.  ஆண்டவர் கிட்ட வேண்டு. நான் உனுக்காக ப்ரார்த்தன பண்றேன்னான் சார் ஒரு நாள். சிர்ச்சான் சார் எட்ஜா. வயத்த புட்சிக்கின்னு சிர்ச்சான்.
சிர்ச்சிட்டு சொல்றான், பைபிள்ள எங்கனா டெய்லி சர்ச்சுல வந்து ப்ரார்த்தன பண்ணுன்னு போட்டுகுதாபா? மன்சாள்ளயே நம்ம பையம்பா, பார்த்து எதுனா செய்ன்னா, அவன் வய்த்து வலிக்கு அவந்தான் மருந்து துன்னணும். நீ என்னா ஏஜண்டான்னுவாங்க. இதுல நீ எனுக்காக ஏசுவண்ட கேட்டா குடுக்கப் போறாரா. நானே கேட்டுக்குவேன். நீ வுடுப்பான்னுட்டான் சார்.
ஒரு நாள் ஆஃபீஸ் வந்து டிக்கியாண்ட அட்டண்டன்ஸ் போய்டுச்சான்னான் சார். கையில ராணி புக்கு நடுவில சாப்பாடு பொட்டலம். டிக்கி டேபிள்ள வெச்சிட்டு, ஆபீஸர் ரூமுக்கு போக போனான் சார் கையெழுத்து போட. டிக்கி ஒரே கத்து. இங்க வைக்காத இந்த புக்க, எடுய்யான்னு. ஒரே ஓட்டமா போய் கையெயுத்து போட்டு வந்தான் சார். ஏம்பா? புக்குதான வெச்சேன், ஏன் கத்துறன்னான். என் டேபிள்ள இந்த மாதிரி படம் போட்ட புக்கு வச்சா பாக்கறவங்க இன்னா நெனிப்பாங்க? அறிவில்ல உனுக்குன்னுட்டான் சார்.
யோவ் புக்க புக்கா பாக்கலைல்ல நீ? அந்த பொம்பள படம்தான் தெர்தில்ல உனுக்கு. உன் மனசு சுத்தம்னா மத்தவன் இன்னா நெனிப்பான்னு ஏன்யா குத்துது. பாக்க கண்டிதான அது இன்னா படம்னு தெர்து உனுக்கு. நீயெல்லாம்...போய்யான்னு மொத தபா கோவப்பட்டான் சார்.
கொஞ்ச மாசம் போயி, ஒரு ரெண்டு மூணு நாள் வேலைக்கு வரல சார். அப்புறம் யாரோ சொன்னாங்க. வயித்து நோவுன்னு வேலைக்கு வரலியாம். சரக்கு சாப்டு, வந்து சாப்பாடு சாப்டு படுத்தானாம். அப்டியே போய்ட்டானாம் சார். அந்தம்மாக்கு ஆபீசுக்கு சொல்லி அனுப்பக்கூட தெரியல சார்.

இப்போ கூட நென்ச்சா, யோவ் அம்பரா குடுய்யா, கட்டிங் ஓணும். வேல குமிஞ்சி போச்சி. இன்னா பாக்கற? சம்பள்தன்னிக்கு கரீட்டா வாங்கி உட்டுக்கறல்ல? எடு எடுப்பா. வேல கெடக்குதுன்னு காத உருவராமாதிரி கீது சார்.

Friday, March 19, 2010

கிரிக்கட் (தொடராப் பதிவு)

திரு நர்சிம் அவர்கள் கிரிக்கட் பற்றிய தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். (இப்பதான் ஓஞ்சது! ஆரம்பிச்சிட்டான்னு யாரோ முனகுறது கேக்குது!) . சின்ன வயதில் பள்ளியில் அறிமுகமான கிரிக்கட், வீதியில் பழகின கிரிக்கட், ராஜ்குமார் என்ற நண்பனைச் சார்ந்தது. காரணம் அவனிடம் மட்டுமே கிரிக்கட் பேட், டென்னிஸ் பால் இருந்தது. மேலதிகமாக அவன் வீட்டில் மட்டுமே வால்வ் ரேடியோவும் இருந்தது. புரியாத ஆங்கிலம்,மற்றும் பஹூத் சுந்தர் ஷாட் கமெண்டரியை விட ரன்களும், விக்கட்டுகளும் வெற்றி தோல்வியும் மட்டுமே முக்கியமானது.

அவன் சொல்லும் கிரிக்கட் தொகுப்பைக் கேட்காவிட்டால் அவன் விக்கட் போன பிறகு பேட்டும் பாலும் கிடைக்காது என்பதால், அவனுடைய கிரிக்கட் ஹீரோக்களே எங்களுக்கும் ஹீரோக்கள் என்ற ஆதிக்கத்துக்கும் அடிமையானோம். ஆனாலும், கண்டிராத ஒரு விளையாட்டின் வீரர்களின் பெயர்கள், அவர்களின் சிறப்பு (அது என்னவென்றே தெரியாமல்) குறித்த ஓர் இண்டர்நேஷனல் நாலட்ஜூக்கு வித்திட்டவன் அவன்.

விளையாடக் கிடைத்த பள்ளி மைதானம் (ரயில்வேயில் கட்டப்படாமல் காலியாக விட்டிருந்த பள்ளியின் அருகாமையில் இருந்த இடம்) பல டீம்களால் கைப்பற்றப்படும். முளையடித்த முருங்கை ஸ்டம்புகள் கூட்டத்துக்கு ஏற்ப விக்கட் நீளத்தைக் குறைக்கும். யாரோ அடித்த பந்தை மற்ற டீம் ஆள் பிடிப்பதால் உண்டாகும் மோதல்களும், காயங்களும் வெகு சுவாரசியம்.

ஆட்டத்தை விட வெகுவாக ரசித்த விடயம், ஒன்று உண்டென்றால் நாலுகால் ரசிகர்கள். சூழ இருந்தவை ரயில்வே குவார்ட்டர்ஸ்கள். அதிலும் எஞ்சின் ட்ரைவர்களும், வொர்க்‌ஷாப் சூப்பர்வைசர்களும் ஆங்கிலோ இந்தியர்கள் என்பதால் பெரும்பாலும் நாய் வளர்ப்பவர்கள். ஆடுபவர்களில் அவர்கள் வாரிசுகளும் இருப்பார்கள் என்பதால் இந்த ரசிகர்களை தடுக்க முடியாது.

சமயத்தில் இவர்களும் ஆட்டத்தில் பங்கேற்பதுதான் பெரிய கூத்து. பவுண்டரிக்கு (அப்படி என்று ஒன்று இருந்தால்தானே?) போக வேண்டிய பந்தைக் கவ்விக் கொண்டு ஓடுவதும், பந்தைத் தடுக்க ஓடுபவனை துரத்துவதும் அதனைத் துரத்தும் அதன் எஜமானனும் என்று சிரித்து மாளாது.

நேரிலும் பாராமல், டிவியும் இல்லாத காலத்தில் சக்கரை தெரியாதா தித்திக்குமே மாதிரி அறிந்தவைதான் கூகிள், லெக்ஸ்பின், ஆஃப்ஸ்பின், ஃபுல் டாஸ், பவுன்சர், எட்ஜ் எல்லாம். ஆனால் இந்தக் காலத்து சிறுவர்களுக்கு கிடைக்காத ஒரு அனுபவம், செண்ட்ரல் ஸ்டேஷனில் டிவி வரிசையாக வைக்கப்பட்டு, ட்ரெயின் புறப்படும் நேரம் வந்து சேரும் நேரம் போடாத தருணங்களில் ஒளிபரப்பப்பட்ட உலக கோப்பை மற்றும் ஒர்ல்ட் சீரீஸ் கப் லைவ் மேட்சுகளில் முதல் முறையாக பார்த்த அனுபவம்.

உலகின் மிகச்சிறந்த கமெண்டேட்டர்களான போர்ட்டர்கள், கூலிக்கும் போகாமல் மேட்ச் பார்த்த படி சென்னை பாஷை கெட்ட வார்த்தையில் செய்த வருணனைகள், ஓரளவு ஸ்பின் என்றால் என்ன, கட் ஷாட் என்பது என்ன, ஸ்கொயர்லெக், மிட் ஆஃப், மிட் ஆன் என்பவை போன்ற விவரணைகளை அறியச் செய்தன.

ஆனாலும் எனக்குப் பிடித்த கிரிக்கட்டரின் சாதனையைச் சொல்லாமல் விட முடியாது. ஆடியது லெதர்பாலில் ஒரு பந்து. கண்ணை மூடிக்கொண்டு விளாசியதில் சரியாக மட்டையின் நடுவில் பட்டு மைதானம் தாண்டி பறந்தது. கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்க, பெரிய அலுமினிய டேக்ஸாவில் பயறு விற்றுத் திரும்பிய வியாபாரியின் காலி (நல்ல காலம்) பாத்திரத்தைத் தாக்கி விழுத்தி சொட்டையாக்க, அவன் அதுதான் சாக்கு என புது டேக்ஸாவுக்கு ஆட்டையப் போடப் பார்த்தான். கும்பலாக மிரட்டி, பேட் பிடியால் சொட்டை நிமிர்த்திக் கொடுத்த ஒரே பேட்ஸ்மேன். அதற்குள் இருட்டிவிட இதுவரை 6 நாட் அவுட்டில் இருக்கும் வானம்பாடிகள்.ஹெ ஹெ.

சரி சரி. கிரிக்கட் பத்தி சொல்ல வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.

1. பிடித்த கிரிக்கட் வீரர்கள்: சோபர்ஸ், க்ளைவ் லாயிட், கவாஸ்கர், அஸாருதீன்

2. பிடிக்காத கிரிக்கட் வீரர்:காம்ப்ளி

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர்: ஆண்டி ராபர்ட்ஸ்,கார்னர்,போதம், இம்ரான் கான்


4. பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர்: யாருமில்லை (ஏன் பிடிக்கலைன்னா சொல்ல தெரிய வாணாமா?)

5. பிடித்த  சுழல் பந்து வீச்சாளர்: சந்திரசேகர், பிரசன்னா, ஷேன் வார்ன்


6. பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்: யாருமில்லை (அதே ரீசன் தான்)

7. பிடித்த வலது கைத் துடுப்பாட்ட வீரர்: கவாஸ்கர்

8. பிடிக்காத வலது கைத் துடுப்பாட்டக் காரர்: யாருமில்லை

9. பிடித்த இடது கைத் துடுப்பாட்ட வீரர்: காரி சோபர்ஸ், லாயிட்

    

10. பிடிக்காத இடது கைத் துடுப்பாட்ட வீரர்: தெரியலை.

11. பிடித்த தடுப்பாளர்: ஜாண்டி ரோட்ஸ்

12. வர்ணனையாளர்: ராமமூர்த்தி

13. அம்பயர்: டிக்கி பேர்ட்

அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.

சுபம்.

Wednesday, March 17, 2010

கேரக்டர் - அலமேலு

படைப்பு பல நேரம் தன் படைப்பில் சிலரைத் தான் ஆடிப்பார்க்கவென்றே படைக்கும் போலும். வாழ்க்கை முழுதும் சோதனை மட்டுமே என்று பிறந்தவர்களில் பலர் பலியானாலும், ஒரு சிலர் பார்க்கலாம் ஒரு கை என்று அதையும் மீறி வாழ்ந்து காட்டுகையில் பிரமிப்பாய் இருக்கும்.  அப்படி ஒருவள்தான் அலமேலு.

அலமேலுவுக்கு திருமணமாகி சித்தியாய் புக்ககம் வந்தபோது அவளின் வயது பதின்மூன்று. திருமணமான அடுத்த நொடியில் எட்டு, ஐந்து மற்றும் 3 வயது குழந்தைக்குத் தாயானாள். அவளுடைய அவரின் மூத்த மகள் (15 வயது) திருமணமாகிச் சென்றுவிட்டதால், மற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இந்தக் குழந்தை மணமுடிக்கப்பட்டது. எட்டு வயது பெண்ணும் 13 வயது சித்தியும் நட்பாக இருக்க வேண்டிய வயதில் சித்தியும் மகளுமாய் விதித்தது.

அதோடு விட்டால் விதிக்குதான் என்ன மதிப்பு? அவளுக்கும் குழந்தைகள் பிறந்தது. ஒன்றல்ல இரண்டல்ல. பன்னிரண்டு. எல்லாம்  ஆண்.  வளர்ந்து, அதிலும் இரண்டு வேலைக்கும் போன காலத்தில் ஒன்றொன்றாய் பல நோவுகளுக்கு பலி கொடுத்த பிறகும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன பிடிப்பிருக்க முடியும்.

அத்தனையும் தாங்கிய அவளுக்கு இறந்த குழந்தைகளின் வயசெல்லாம் சேர்த்து கணவனுக்கு கொடுத்தது இயற்கை. இந்தக் குழந்தையெல்லாம் வளர்த்தவளுக்கு இன்னுமொரு குழந்தையா கஷ்டமென்று நினைத்தது போல் கணவனைக் குருடாகவும் ஆக்கி, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக்கியும் விட்டது. தொன்னூற்றியெட்டு வயதில் கணவனும் போய்விட வந்துக் கொண்டிருந்த பென்ஷன் காணாமல் போனது.

13 வயதில் திருமணமானவளை திருமண அத்தாட்சி கேட்டால் என்ன செய்வாள்? எப்படியோ அரசு உதவித் தொகையிலும், மூத்தார் பிள்ளைகள் அனுப்பும் சொற்பக் காசிலும் தனியே வாழ்வது விதிக்கப்பட்டதாயிற்று. ஆனாலும் வாழ்வாங்கு வாழ்ந்தாள் அவள்.

அவல்காரத் தெரு, தென்னமரத் தெரு,  குயத் தெரு, மண்டித் தெரு எங்கு அவளோடு போனாலும் சாமி ஊர்வலம்தான். கச்சலான உருவத்துடன், அவள் எடைக்குப் பாதியில் 16முழம் புடவை மடிசாரணிந்து பொக்கைவாய் சிரிப்போடு வீதியிறங்கினால் போதும் மகராசி. எங்க சித்தி? எப்படி இருக்க? ஆளைக் காணோம்? மறந்துட்டல்ல சித்தியென்று கை பிடித்துக் கொள்ளுவார்கள்.

நின்று நின்று குசலம் விசாரித்து, அவர்களிடம் வாசு புள்ள! என் பேரன் என்று அறிமுகப் படுத்தியபோது அவளின் பெருமை புரியாத வயது. வேலூர் மார்கட் அருகில் போய்க் கொண்டிருக்க டங் டங் என்று மணியடித்தபடி ஒரு ரிக்‌ஷா, கெய்வீ ஓரம் போவென்ற குரல், என்ன நடந்ததென்றே புரிவதற்குள், கட் பனியன் சித்தியின் கைக்குள் பிடி பட்டிருக்க, பாதி ரிக்‌ஷாவிலும் பாதி தரையிலுமாக தொங்கிக் கொண்டிருந்தான் ரிக்‌ஷா ஓட்டி!

மடித்த மஞ்சள் பை அக்குளுக்குள் வைத்தபடி அந்தக் கையை ஒரு இடுப்பிலும், மறுகையில் ரிக்‌ஷாக்காரனையும் பிடித்தவாறு, பொக்கை வாயைக் கடித்த படி, எப்டி எப்டி, கெய்வியா என்றவளை அய்யோ சித்தி, உடு சித்தி! நீன்னு தெரியாம சொல்லிட்டேன் என்றவனுக்கு விழுந்தது ரெண்டு அறை. அத்தனையும் வாங்கிக் கொண்டு, குந்து சித்தி உட்டுட்டு போறன். எங்க போற என்றான் அவன். அவள்தான் சித்தி!

படிப்பதில் கொள்ளைப் பிரியம். புத்தகம் வாங்க எங்கே போவாள்? தினத்தந்தி வாங்க 96 வயதில் சாகும் வரை தானே கடைக்குப் போனவள் அவள். எதிரில் இருந்த பேப்பர் கடைக்குப் போனாளாம். ஏம்பா? ஒரு குமுதம் வித்தா உனக்கு என்ன கமிஷன் கிடைக்கும்? நாலணா கிடைக்குமா? குமுதம், கல்கண்டு, ராணி,  தேவி, கலைமகள், கல்கி, அமுதசுரபி, மஞ்சரி, தினமணிக்கதிர் என்னல்லாம் உண்டோ கொடு. ஒரு புக்குக்கு நாலணா தரேன். முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.

எப்படி எப்படியோ விடா முயற்சியுடன் போராடி, இருந்த ஆதாரங்களைக் குடைந்து தனி மனுஷியாய், கோர்டில் ஆர்டர் வாங்கி தான் இளையதாரம் என நிரூபித்து குடும்ப பென்ஷன் வாங்குவதற்குள் 19 ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. பென்ஷன் என்றால் கோபம் வரும் அவளுக்கு. சம்பளம் என்பாள். மாதம் கடைசிநாள் சம்பளம் வாங்கியே ஆகவேண்டும்.

அங்கேயும் அலப்பரை தாளாது.

பாட்டிம்மா! அடுத்தமாசம் சர்டிபிகேட் தரணும் பாட்டிம்மா?

எதுக்குப்பா?

நீ கலியாணம் பண்ணலை. விடோதான்னு கெஜட்டட் ஆபீசர் சர்டிபிகேட் வேணும் பாட்டிம்மா?

எந்த பேமானிய்யா ரூல் போட்டான். 92 வயசுல கலியாணம் பண்ணலைன்னு சர்டிஃபிகேட் கேக்க? இந்த சம்பளத்துக்குன்னாலும் பிச்சக்காரன் கூட கட்டமாட்டானேய்யா? என்று ஆரம்பித்தாலே போதும். போஸ்ட்மாஸ்டர் வந்துவிடுவார். பாட்டி! அவரு புதுசு. தெரியாம கேட்டுட்டாரு. நீ சம்பளம் வாங்கிட்டு போ என்று முதலில் கொடுத்தனுப்புவார்.

காலை எழுந்ததும் இருக்கும் ஒற்றைப் பல்லை பேஸ்ட் போட்டு ஓட்டி ஓட்டித் தேய்ப்பாள். குட்மார்னிங் சொல்லும் ஸ்டைலில் எலிசபத் ராணி பிச்சை வாங்க வேண்டும். காஃபி சாப்பிட்டு, மஞ்சள் பை இடுக்கிக் கொண்டு போய் தினத்தந்தியும் ஹிந்துவும் வாங்கி வருவாள். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் என்று அரைமணி நேரம் போகும்.

அய்ய. குளிக்காம என்ன இது என்றால், குளிச்சப்புறம் சொல்ல உசிர் இருக்குமோ தெரியாது. இருக்கும் போதே நாலு ஸ்லோகம் சொன்னா என்ன போச்சு? முருகன் ரிஜக்ட் பண்ணிடுவானா? போய்யா என்று சிரிப்பாள்.

அவளுக்குப் பிடித்த முருகனின் சஷ்டி ஒரு நாளில் எழுந்தாள், பேப்பர் வாங்கினாள், ஸ்லோகம் சொன்னாள், தலைக்குக் குளித்தாள் (போகி பண்டிகை அன்று). தலை உலர்த்திக் கொண்டிருந்தவள், மார்ல என்னமோ பண்ணுதுடா. கூப்பிட்டுட்டான் போல முருகன். ஆசுபத்திரி மண்ணாங்கட்டின்னு காச கரியாக்காதே. இன்னும் விதிச்சிருந்தா எழுந்துக்குவேன். இல்லைன்னா குட்பை என்றாள்.

ஆசுபத்திரி போய், அழைப்புத்தான் எனத்தெரிந்து ஏதும் செய்யமாட்டாமல் அட்மிட் செய்து, சருகுபோல் படுத்திருந்தவளைப் பார்க்கையில் பீஷ்மர் மாதிரி தோன்றியது. எப்போது மூச்சு நின்றதோ? இதழோரம் ஒரு சிரிப்பு நாந்தானே ஜெயிச்சேன் என்பதுபோல்.

Sunday, March 14, 2010

காய் வலி -2



லேபர் வார்டை ஒட்டியிருந்த நீண்ட அறையில் இரண்டு பக்கமும் இருந்த கம்பியைப் பிடித்தபடி வலி தாங்காமல், முனகல், அழுகை, அலறல் என்று வகை வகையாய்க் குரல்களின் நடுவே, இடியாய் ஒலித்தது மேரியின் குரல். தே. கத்தாதீங்கடி. இன்னா கத்தினாலும் அதே வலிதான். பெரிய ரோதனயா போச்சி இதுங்ககிட்ட, என்றபடி, பெனாயில் கலந்த நீரில் முக்கி, தரையில் ஒழுகியிருந்த ரத்தம், பனிக்குடநீர் எல்லாம் சுத்தம் செய்தபடி, எப்புடியாச்சும் ரெண்டாயிரம் தேத்தி இங்க இருந்து மாறணும் என்று சலித்த படி, தோ! இன்னாமே? கொஞ்சம் நின்னு போ. தண்ணில வழுக்கி உழுந்து தொலைக்க போற என்றபடி அசுத்த நீரைக் கொட்டி மாற்றப் போனாள்.
-----------------------------------------------------------------------
எனக்கு பயமா இருக்கு ராம். பெய்ன் அதிகமாயிண்டிருக்கு. அத்தைக்கு ஃபோன் பண்ணியா? என்ன சொன்னாங்க என்றாள் ரம்யா. ரெண்டு மணி வரைக்கும் நாள் நல்லால்லையாம். டாக்டர முடிஞ்ச வரைக்கும் கேட்டு பார்க்க சொன்னாங்க. அப்புறம் எதுனாலும் பரவால்ல. நம்ம கையில என்ன இருக்குன்னாங்க. ஐ ஸெட் டாக்டர் வில் கம் அரௌண்ட் 2.30. பார்க்கலாம்னேன். கார் அனுப்பியிருக்கேன். அத்தையை சாப்பிட்டு விட்டு உனக்கும் லஞ்ச் கொண்டு வர சொல்லியிருக்கேன். அஸிஸ்டண்ட் நீ சாப்பிட கூடாதுங்கறாங்க. ஐ வில் கோ டு ஏ.டி.எம். அண்ட் பி பேக் இன் டென் மினிட்ஸ். இஃப் யூ நீட் மி கிவ் எ கால் என்று போனான் ராம்.
-----------------------------------------------------------------------
ஏ.டி.எம். க்யூவில் திட்டிக் கொண்டு உள்ளே நுழைய, செல் அடித்தது. ராம், ஐ திங்க் இட் ஹேஸ் ப்ரோகன். ஐ கால்ட் த அஸிஸ்டண்ட் டாக்டர். என்ன பண்ற நீ. ஐ நீட் யு ஹியர் மேன் என்றாள் ரம்யா. க்கே. ஐம் ரஷிங் தேர், என்று கட் செய்து ஓட்டமும் நடையுமாக வந்தான் ராம். என்ன சொன்னாங்க என்றான்.
ஷி செட் ஷி வில் கால் டாக்டர் மேனகா. லெட்ஸ் வெயிட். முடியலடா. இட்ஸ் சோ பெயின்ஃபுல் என்றாள்.
மிஸ்டர் ராம். டாக்டர் ஈஸ் ஆன் லைன் என்று செல்லை நீட்டினாள் ட்யூட்டி டாக்டர். ஹேய் ராம். ஐ செக்ட் அப் வித் த ட்யூட்டி டாக்டர். நதிங் டு வர்ரி. ஐல் பி தேர் பை 2.30 தென் வி வில் ஸீ என்றாள் டாக்டர் மேனகா.
-----------------------------------------------------------------------
சுவற்றுக் கட்டையில் கால் பதித்து கம்பி வலையில் விரல் கோர்த்து தொங்கியபடி, சுமதி எப்டி கீதுமா என்றாள் பாக்கியம். ரொம்ப நோக்காட கீது அத்த. ரத்தம் வேற போய்க்கினு கீது. நர்ஸம்மா அரைமணில ஆயிடும்னுது. மூணு பேரு போய்க்கிறாங்கோ. நிக்க கூட முடியல அத்தை என்றாள். லேபர் ரூமிலிருந்து, அய்ய்ய்யய்ய்ய்யம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, முடியலயே. உயிர் போவுதே. பாயா போனவன் வரட்டும். எட்டி மூஞ்சி மேல ஒதிக்கிறேன். யம்மாஆஆஆ என்ற அலரல் கேட்டது. 

கத்தாதடி. நாலு மாசத்தில குழந்தைய கூட்டிட்டு வரும்போது வயித்த சாச்சிட்டு வருவ. மூஞ்சில உதைப்பாளாம். முக்குடி. ரீனா! பக்கதுல இரு, நான் நெக்ஸ்ட் லேபர்ல பார்த்துட்டு வரேன், என்று நகர்ந்தாள் டாக்டர்.
-----------------------------------------------------------------------
ராம் டைம் என்ன என்றாள் ரம்யா. பன்னெண்டரைடா, ஜஸ்ட் டூ அர்ஸ். டாக்டர் வந்துடுவாங்க என்றான். 

இட்ஸ் கெட்டிங் வர்ஸ் ராம், தாங்க முடியல. டெல் ஹர் அண்ட் ஹாவ் யுர் லஞ்ச் என்றாள். 

மணி ரெண்டே முக்கால். ஹாய் ரம்யா. என்னம்மா பயந்துட்டியா? என்று சிரித்தபடி, ராம் வில் யூ ப்ளீஸ் வெய்ட் அவுட்சைட். ஐ ஹாவ் டு செக் ஹர் என்றார் டாக்டர். பத்து நிமிடத்தில் வெளியில் வந்தவர், ஒரு ஸ்கேன் பாத்துடலாம், ஒண்ணும் சீரியஸ் இல்லை என்றவாரே ஸ்கேனிங் ரூமிற்கு ரம்யாவை அழைத்து வரச் சொல்லிவிட்டுச் சென்றார்.
-----------------------------------------------------------------------
மீண்டும் கட்டைச்சுவற்றில் கட்டைவிரல் ஊன்றி, கம்பி வலைக்குள் எட்டிப்பார்த்து சுமதி என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள் பாக்கியம். அய்யய்யோ யம்மாக்கிடையே ஒரு குரல், லேபர் ரூமுக்கு இட்டுனு போய்ட்டாங்கம்மா என்றது. 

பரபரப்பாக இறங்கி ஓடி, கிசோரு என்றாள் கதவின் பின்புறம் நின்றவாரு. இன்னாச்சிம்மா என்றபடி ஓடிவந்தான். காசு வெச்சிகிறியாடா? லேபர் ரூமுக்கு இட்டுனு போய்ட்டாங்கடா. டெலிவரி ஆச்சின்னா பேரு கூவுவாங்க. துட்டு குட்தாதான் சொல்லுவாங்க இன்னா கொய்ந்த, எப்டி கீதுன்னு. எர்னூரு ரூபா குடுடா என்றாள். 

வெளாட்றியா. காலைல இருந்து சவாரி போல. இங்கயே குந்தினுகுறேன். துட்டுக்கு நான் எங்க போக. அம்பது ரூபா கீது அவ்ளதான் என்றான். குடிக்கறதுக்கு மட்டும் எங்கனாலும் வரும் உனுக்கு துட்டு. என்ன செய்வியோ, துட்டு ஒரு ஐனூறாவது பொர்ட்டிகினு வா. 5 ரூபாக்கி காபி வாங்கியாந்தா அவளுக்கு குடுக்க 10ரூ கேப்பாளுங்கோ என்றாள் பாக்கியம்.
-----------------------------------------------------------------------
எவ்ரிதிங் ஈஸ் ஆல்ரைட் ராம். ஐ வில் அரேஞ்ச் ஃபார் த அனஸ்தடிஸ்ட். வி வில் ஹாவ் இட் அரௌண்ட் ஃபைவ் ஆர் சோ. அவ கிட்ட ப்ரோசீஜர் இன்னோரு வாட்டி எக்ஸ்ப்ளெயின் பண்ணியிருக்கேன். ஹாவ் எ டிஸ்கஷன் இஃப் யூ வாண்ட். நார்மல்னா வெயிட் பண்ணலாம். இட்ஸ் யுர் சாய்ஸ். அப்புறம், இஃப் யு டிசைட் டு கோ அஹட் சைன் த பேப்பர்ஸ் என்றார் டாக்டர். ட்யூட்டி டாக்டரிடம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

ஐந்துக்கு வந்து பேப்பர்ஸ் சரி பார்த்து, அனஸ்தடிஸ்ட் ஓ.டி.யில் இருக்கிறார் என்றதும், ஓ.கே. லெட்ஸ் கோ அஹட் என்றவாறு, கிளம்பினார். உலகக் கவலை மொத்தமும் முகத்தில் தாங்கி ராம் குட்டி போட்ட பூனையாய் நடந்து கொண்டிருக்க, ஃப்ளோரின் ஒரு கோடியில் மாட்டப்பட்டிருந்த, ஏசு, மக்கா படங்களுக்கு நடுவே கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன் அமர்ந்து கண்மூடி உட்கார்ந்திருந்தார் ரம்யாவின் அம்மா. 

அரை மணி பறந்ததே தெரியவில்லை. வெளியே வந்த டாக்டர், ராம் இட்ஸ் எ ப்யூடிஃபுல் கேர்ல், கங்க்ராஜுலேஷன் என்ற வார்த்தையைக் கேட்டதும் வாவ் என்று கண் பனிக்க அவர் கையைப் பிடித்துக் கொண்டான். ஹவ் ஈஸ் ரம்யா? பார்க்கலாமா டாக்டர் என்றான். முதல்ல உன் பெண்ணைப் பாரு யங் மேன், அனதர் 15 மினிட்ஸ். ரம்யா ஆப்ஸர்வேஷன்ல வர இன்னும் ஒன் அவர் ஆகும், அப்புறம் பார்க்கலாம் என்றபடி தன் அறைக்குள் போனார். 

அடுத்த பதினைந்து நிமிடம் நாள் கணக்காகத் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டு, அழகான கிஃப்ட் பேக் மாதிரி முகம் மட்டும் தெரிய அவன் குழந்தையைப் பார்த்ததும் சொல்லவொணா உணர்ச்சிகளுடன் மிக மெதுவாக ஒரு விரலால் அதன் கன்னத்தைத் தொட்டு, ரம்யா மாதிரியே இருக்கால்ல அத்தை என்றான்.
-----------------------------------------------------------------------
கட்டைசுவர், கம்பியில் கோர்த்த விரல் என்று தொங்கிய பாக்கியத்தின் காதில் கேட்ட சுமதியின் அலறலும், படார் எனத் தொடையில் விழும் அடியும், சில நொடி அமைதியும், ஹாஆஆ என்ற குரல் தொடர்ந்த சிற்றிடைவெளியில் கேட்ட குவா குவாவும் ஒரு புன்னகையையும், வயிற்றில் பசி உணர்வையும் தந்தது. பரபரவெனெ கதவிடம் ஓடி கிசோரு கிசோரு என்றாள் பதிலில்லை. நடக்கச் சக்தியற்று, மரத்தடியில் உட்காருவதும், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கதவருகில் வந்து கிசோருவுமாக அரைமணி பறந்தது. அடுத்த கிசோருக்கு, இன்னாச்சிம்மா என்றவனை துட்ட குடுடா முதல்ல இன்னா கொயந்த, இவ எப்டி கீறா கேட்டுகுனு வரேன். நீ போய் அதுக்குள்ள காபி வாங்கியாந்துடு என்று ஓடினாள். 

கெஞ்சி கூத்தாடி, இருனூரு ரூபாய் கொடுத்தபின் ஒரு ஆயா அம்மா பேரு சுமதி, அப்பா பேரு கிசோருதானே. ஆம்பளபுள்ள. நெல்லா கொயு கொயுன்னு கீது, ஆத்தாகாரி ரொம்ப வீக்கா கீறா, மவளா என்றாள். இல்லம்மா மருமவ, ஒரு நிமிசம் உடும்மா பாத்துட்டு போய்டுறேன் என்றாள். அதெல்லாம் இப்போ பார்க்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரமாவும் பெட்டுக்கு வர. நீ போய் காபி டீ எதுனாலும் எடுத்துனு வா என்றாள். சரிம்மா என்று வாய் கொள்ளா சிரிப்புடன் கதவருகே ஓடி, கிசோரு பேரன் பொறந்துகுறாண்டா, எங்கடா காபி என்றவளிடம், யம்மா நீ எதும் சாப்டலையே, இந்தாம்மா தோசை என்று காஃபியுடன் ஃப்ளாஸ்கை நீட்டிய போது குரல் உடைந்தது கிசோருக்கு.
-----------------------------------------------------------------------
விசிட்டிங் அவரில் பரபரவென ஓடி, கிழிந்த நாராய்க் கிடந்த சுமதியின் கை பிடித்து எப்படி இருக்கமே, ரொம்ப நோவுச்சா? அம்மா சொல்லிச்சி. எங்க என் பையன் என்று அருகிலிருந்த தொட்டிலில் எட்டிப் பார்த்தான். சுமதியின் பழைய புடவைப் பொதிக்குள் இருந்து தெரிந்த குழந்தையைப் பார்த்து, அய்ய இன்னாமே இப்பிடி கீது என்றபடி சிரித்தான்.

களைத்த முகத்துடன் வந்த டாக்டர், என்ன சுமதி என்ன சொல்றான் பையன்? இவர் தான் அப்பாவா? சுமதி வீக்கா இருக்காய்யா. டிஸ்சார்ஜ் ஆகி போகும்போது எழுதித் தர மருந்தெல்லாம் ஒழுங்கா வாங்கிக் கொடு. ஒரு அட்டை தருவாங்க. அந்தந்த தேதிக்கு தவறாம குழந்தையை கொண்டு வந்து காட்டி ஊசி, மருந்து எல்லாம் போடணும். நல்லா சாப்புடும்மா சுமதி. முக்கியமா நீ சொன்னா மாதிரி கிட்ட வந்தா, இந்தாளு மூஞ்சி மேலயே உதை என்று சிரித்தபடி நகர்ந்த டாக்டரின் முதுகை கை கூப்பி வணங்கினார்கள் மூவரும்.
-----------------------------------------------------------------------
ஹாய் ரம்யா. இன்னைக்கு வீட்டுக்கு போலாம். அம்மா, பத்தியம் பிள்ளை பெத்தவள்னு திணிப்பாங்க. கீப் யுர் செல்ஃப் ஃபிட். எக்ஸர்சைஸ் பண்ணு. ஃபிஃப்டீன் டேஸ் கழிச்சி ஒரு வாட்டி செக்கப் பண்ணீடலாம். போகும்போது சைட் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட காண்பிச்சிட்டு போங்க. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு. அப்புறம் பேர் வைக்கிற ஃபங்க்‌ஷனுக்கு இன்விடேஷன் உண்டா என்று சிரித்தபடி போனவளை பார்த்த மூவரின் முகங்களிலும் கடவுளாகத்தான் தெரிந்தார். 
------------------------------------------------------------------------
காரில் போகும்போது ரம்யா, சுமதிக்கு என்னாச்சிம்மா என்று கேட்டாள். இந்தக் களேபரத்தில் அவளை சுத்தமா மறந்தே போச்சுடி.  முன்னாடியே காசு வாங்கினா புருஷன் குடிச்சே தீத்துடுவாரும்மா, ஆஸ்பிடல் போக முன்ன அத்தைய அனுப்பறேம்மா. ஒரு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வேணும்னு சொன்னாள். அவளையும் காணோம். பக்கத்து ப்ளாக்ல அவள் வீட்டு கிட்டேயிருந்து ஒரு பொண்ணு வேலைக்கு வரான்னு சுமதி சொல்லியிருக்கா கேட்கலாம் என்றார்.
----------------------------------------------------------------------- 

Friday, March 12, 2010

காய் வலி -1

(டிஸ்கி:
  1.  முகிலனோட பூவலிக்கு இது எதிர் இடுகை அல்ல. 
  2.  இண்டியன் வெர்ஷன்னு வெச்சிக்கலாம். 
  3. முகிலன் கிட்ட நேத்தே சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டேன்.  )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கரையோரக் குடிசைகளும், பாழடைந்த பங்களாக்களும், பளபளக்கும் அடுக்கு மாடி வீடுகளும் என்று வகைப்படுத்த முடியாத ஒரு ஏரியா.

யோவ். எந்திரிய்யா. மணி ஏழாய்ட்சி போல. போய் ஒரு டீயும் பன்னும் வாங்கியாந்துடு. நான் ரெடியாவுரேன். அந்தம்மா கூவிகினுருக்கும். இன்னாமோ முடியலய்யா எனுக்கும். எந்திரிய்யா என்றாள் சுமதி. முதல் நாள் ஏற்றிக் கொண்ட டாஸ்மாக் மப்பு தெளியாமல் முனகியபடி புரண்டு படுத்தான் கிசோரு. திரும்பவும் உலுக்கினாள்.

..த்தா. எய்ந்தேன். இடுப்பு மேல ஒதிப்பேன். புள்ளதாச்சின்னு பாக்குறேன். மப்புல பட்தா இப்டி எய்ப்பாதன்னு எத்தினி வாட்டி சொல்லிகிறேன் போமே, என்று திரும்பப் படுத்தான். யோவ். நேரமாயிட்சிய்யா. நீ வண்டி எடுக்க தேவல? எப்பப்பாரு குட்சிகினு வந்து பட்தா பூவாக்கு எங்க போக? 

நீ ஓணா பாரு. புள்ள பெக்க யார்னா அனாதி மாதிரி என்ன இட்டும்போய் சேர்த்தா உண்டு. இல்லாங்காட்டி, தோ! அங்க பன்னி குட்டி போட்டுகுதே. அப்டிதான் நான் பெத்து போட்டு கெடக்க போறேன். நீ குட்சிகினு குசாலா சாவு என்று குரல் உடைந்தாள்.

...ம்மால. சனியன கட்டிக்கினு சாவரதா கீது. கெளம்பிகினு முருகனாண்ட அங்க ட்ராப் பண்ண சொல்லி எறங்கிகமே. போ சொல்லவே ஆயா கடைல ரெண்டு இட்லி துண்ட்டு கெளம்பு. நான் இட்டாந்து ஊட்ல உட்டு  சவாரி போய்க்கிறேன் என்று சொல்லியபடியே உறங்கிப் போனான்.

--------------------------------------------------------------------------------------
ஹேய்! ராம். ராம். கெட்டப் மேன். அம்மாவ எழுப்பாம ஒரு டீ போட்டு குடுய்யா என்றாள் ரம்யா.

குட் மார்னிங். ஏண்டா? தூங்கலையா? யூ லுக் சோ டயர்ட். என்னாச்சி. என்னை எழுப்பக் கூடாதா என்றபடி எழுந்து போய் அதே வேகத்தில் வந்தவன், ஷிட்! சர்வெண்ட் மெய்ட் மில்க் கொண்டு வரல மேன். ப்ளேக் டீ ஓகேயா என்று கொண்டு வந்தான்.

ப்ளேக் டீ யா. க்கே. ஸீ ராம். ஐ ஃபீல்ஸ் சோ அன்காம்ஃபி. என்னமோ பண்றது. சிவியர் பெயின் இல்ல. பெட்டர் லெட்ஸ் ஹேவ் அ செக்கப் வித் அர் டாக்டர் என்றாள்.

யா. ஐ வில் மேக் அன் எமெர்ஜென்ஸி அப்பாயின்மெண்ட். நீ டீ சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ரெடியாய்டு என்றபடி குளிக்கக் கிளம்ப டோர்பெல் அடித்தது. கதவைத் திறந்தபடி என்னம்மா இவ்வளவு லேட் என்று சொல்ல வந்ததை, ரம்யாவை விட பெரிய வயிற்றுடன் நோஞ்சானாய் நின்ற சுமதியைக் கண்டதும் விழுங்கியபடி ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.

இரண்டு நாள் முன்னாடியே டாக்டரிடம் பேசியாகிவிட்டது. எப்படியும் இரண்டே குழந்தைகள். நார்மல் டெலிவரி, டென்ஷன், ரிஸ்க், பெயின் எல்லாம் எதுக்கு? பேபி ஈஸ் ஹெல்தி. இந்த வீக்ல எப்போ வேணா பிறக்கலாம். சோ. சிசேரியன் பண்ணா ஈசி என்று முடிவெடுத்திருந்தார்கள் இருவரும்.

டோண்ட் சூஸ் என் ஆஸ்பிஷியஸ் மொமெண்ட் மேன். ஜாதகம் எழுதிட்டு வந்து அந்த நேரம்னு கேட்டா ஈவன் ஐ காண்ட் அர்ரேஞ் இட். சூஸ் அ குட் டே இஃப் யா விஷ் அன் டெல் மீ. வி வில் கெட் ஹெர் அட்மிட்டட் ஒன் டே பிஃபோர் என்றிருந்தாள். அதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

பெரியம்மா எய்ந்துக்கலியா சார்? தப்ச்சேன். அக்கா எப்டி கீது, ஏந்துட்சா? ஏந்ததும் டீ கேக்கும். தோ போட்னு வந்துடறேன் என்று நகர்ந்தாள் சுமதி.
--------------------------------------------------------------------------------------

வீடு பெருக்கும் போதே பளிச்சென்று சுண்டியிழுத்தது சுமதிக்கு. ஹூக்ம் என்றபடி நிமிர்ந்து ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு பெருக்கத் தொடங்கினாள். பர பரவென்று வேலை செய்யச் செய்ய களைப்பும் வலியுமாய்த் தவித்தாள்.

குளித்து விட்டு வந்த ராம் டாக்டருக்கு ஃபோன் செய்தான். குட்மார்னிங் டாக்டர். ராம் ஹியர். ரம்யா வான்ன டாக் டு யூ டாக்டர் என்று ஃபோனைக் கொடுத்தான். டாக்டரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி போனைக் கொடுத்தாள்.

ராம். ஐ ஹாவ் டு அட்டெண்ட் எ கான்ஃபரன்ஸ். இட்ஸ் இம்பார்டண்ட். ஐல் பீ ஃப்ரீ பை டூ, ஆஃப்டர் த லஞ்ச் ஈஸ் ஓவர். யூ ப்ரிங் ஹர் டு த நர்ஸிங் ஹோம் ஷார்ப் பை நைன். ஐ வில் ஸீ ஹர் அண்ட் அட்மிட் ஹர் இஃப் நெஸஸரி. மோஸ்ட் ப்ராபப்ளி இட்ஸ் ஃபால்ஸ் பெய்ன். எனி ஹவ் யூ ஹேவ் டிசைடட் டு ஹேவ் சிசேரியன். டேக் மை வர்ட். நத்திங் டு வர்ரி என்று சொல்லி வைத்தாள்.

எழுந்திரும்மா. நான் அம்மாவை எழுப்புறேன். வி ஹேவ் டு லீவ் இன் 45 மினிட்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னாச்சுடா என்றபடி வந்தாள் ரம்யாவின் அம்மா. மட மடவென்று டாக்டர் சொன்னதைச் சொல்லி, அவளை ரெடி பண்ணுங்க அத்தை. நான் டாக்டர் கிட்ட போய்ட்டு தேவைன்னா ஃபோன் பண்ணிட்டு கார் அனுப்பறேன் என்றான் ராம்.

உன் மாமியார் ஸ்பெசிஃபிக்கா இன்னைக்கு கூடாதுன்னு சொன்னாளேம்மா. டாக்டர்ட கேளு என்ற படி அவளை பாத்ரூமுக்கு நகர்த்திக் கொண்டு போனாள் ரம்யாவின் அம்மா.

--------------------------------------------------------------------------------------

யம்மா. நோவு கண்டுட்சி போலம்மா. ஒரு ஃபோன் பண்ணிக்கிறேம்மா என்றவளிடம், அதுக்குள்ளயாடி? நீ ரெண்டு வாரம் ஆகும்னு சொன்னியே? இன்னைக்குன்னு பார்த்தா உனக்கு வலி வரும். சரி போன் பண்ணுடி. உங்க மாமியார வரச் சொல்லு என்றபடி ரமாவைக் கவனிக்கச் சென்றாள்.

இரண்டு மூன்று முயற்சிக்குப் பின் போதை+தூக்க கலக்கத்தில் செல்லை எடுத்தான் கிசோர். யோவ். நோவு கண்டுட்சி போலய்யா. வண்டியெடுத்துனு அத்தைய இட்டுனு, ஆஸ்பத்திரி சீட்டு சரவணா கவர்ல கீது, அப்டியே தூக்கினு,  ஃப்ளாட்டண்ட வாய்யா. ஆஸ்பத்திரி போகணும் என்றவளை, இன்னாடி இது? சரி வரேன் என்றபடி முகம் கழுவி வண்டியெடுத்தான்.

--------------------------------------------------------------------------------------
ஐ டோன் திங்க் ஐ கான் வாக் என்றவளை கை பிடித்து இறக்கி, வீல் சேரில் அமர்த்தி தள்ளிக் கொண்டுபோய் ஹாய்! டாக்டர் குட்மார்னிங் என்றான் ராம். சிரித்தபடி, வாட் ரம்யா. காண்ட் வெயிட் டு சீ யூர் பேபி ரைட்? நர்ஸ். டேக் ஹர் டு லேபர் ஐ வில் கம் என்று அனுப்பிவிட்டு,  யூ வெயிட் ஹியர் ராம்.,நதிங் டு வர்ரி என்றபடி நகர்ந்தாள் டாக்டர்.
--------------------------------------------------------------------------------------
யோவ் சொன்னா கேளுய்யா. சீஃப் டாக்டர் வர நேரம். ஆம்பளைங்க நாட் அலவ்ட். அந்தம்மா இட்னு போவாங்க என்று விரட்டினான் அரசு மகப்பேறு மருத்துவமனைக் காவலன். போதை முற்றிலும் இறங்கியிருக்க, அண்ணாத்த, 2 வாரம் ஆவும்னு சொன்னாங்க அண்ணாத்த, ரொம்ப நோவுதுன்றா. டாக்டர்ட காட்டிட்டு எகிறிடுவேன். பாரு அண்ணாத்த என்றபடி 20ரூ நோட்டை மடித்து கைக்குள் அழுத்தினான். கைத்தாங்கலாய், சுமதியை இறக்கினாள் அவள் மாமியார். டேய். பனிக்குடம் ஒட்ஞ்சிட்சிடா. வீல் சேர் எட்தாடா. நர்ஸ கூப்ட்டு பாரு என்றாள்.

உள்ளே நுழைந்து ஒருவரையும் காணாமல், ஓரமாய் இருந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்து அமர வைத்து வழியில் வந்த நர்சிடம் கடிபட்டு, கை காட்டப்பட்ட இடத்தில் சென்ற போது, இவளை மாதிரியே துடித்தபடி பத்து பதினைந்து பேர் இருந்தார்கள்.  ஆம்பிளைங்கள்ளாம் இருக்கக் கூடாது வெளிய போய்யா என்று விரட்டியபடி வந்தவனை, அப்ப நீ யாரு என்று கேட்கத் தோன்றியும், யம்மா! கேட்டாண்ட குந்தினுக்குறேன். எதுனா வேணும்னா வந்து கொரலுடு என்றபடி போனான் கிசோரு.
--------------------------------------------------------------------------------------
ஓக்கே ராம். பெட்டர் அட்மிட் ஹர். வீட்ல போய் என்ன பண்ணப் போறா? யூ டேக் தட் டபுள் ஏ.சி.ரூம். இட்ஸ் நியரர் டு த ஓ.டி. ஐ.வி கொடுத்து பார்க்கலாம். ஒரு வேளை நார்மல் டெலிவரின்னா வி ஷூட்ண்ட் இண்டர்ஃபியர். ஐ டோல்ட் மை அஸிஸ்டண்ட் டு கான்ஸ்டண்ட்லி மானிடர். ஷி வில் கால் மி இஃப் நெஸசரி. ஹேவ் யூ கம் ப்ரிபேர்ட்? ஐ வில் பி ஹியர் பை 2.30. லெட்ஸ் ஸீ, என்றாள் டாக்டர் மேனகா. மடமடவென தாழ்ந்த குரலில் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து, சத்தமாக எனி டைம் யூ ஃபீல் மை அட்வைஸ் ஈஸ் நீடட், கிம்மி எ கால். வைப்ரேஷன்ல வெச்சிருப்பேன். சோ நோ ப்ராப்ஸ் என்ற படி பறந்தாள் டாக்டர்.
--------------------------------------------------------------------------------------
மூடியிருந்த கதவின் பின்புறமிருந்து கிசோரு கிசோரு என்றாள் பாக்கியம். இன்னாம்மா? இன்னா சொன்னாங்க என்று ஓடி வந்தான். நோவுதானாம். இன்னும் ரெடியாவலையாம். நடக்க சொல்லி ரூம்ல உட்டுக்குறாங்க. சில்ற குட்றா. அல்லாத்துக்கும் துட்டு துட்டு துட்டுதான். நாஷ்டா வாங்கியாந்துட்டு, ஊட்ல போய் அவ பழைய பொடவ துணி, ஒரு லோட்டா, ஒரு ப்ளேட்டு எட்தாந்துடு. நான் போய் அவள பார்த்துட்டு வந்துடுறேன் என்று போனாள்.
--------------------------------------------------------------------------------------
(மீதி நாளை)

Wednesday, March 10, 2010

எளக்கியம் விக்கலாம் வாங்கப்பா...

ஹூம். அது ஆச்சிங்க ஒரு வருசத்துக்கு மேல. சோத்துக்கு லாட்டரி அடிச்சிகிட்டு என்னடா பண்ணலாம்னு உக்காந்திருந்தேன்.  யாரோ சொன்னாய்ங்க. யாவாரம் பண்ணுப்பா. பரபரன்னு பெரீஈஈஈஈய ஆளாயிரலாம்னு. அட! இதானே நமக்கு வேணும்னு, கைய கால புடிச்சி அய்யா, சாமி அது என்னா யாவாரம் சொல்லுங்கப்பான்னேன்.

முதல்ல சொல்ல மாட்டேன்னுட்டாய்ங்க. விடாம கெஞ்சினதுல ஓட்டு யாவாரம்பான்னாங்க. பொசுக்குன்னு ஆயிருச்சி. அட போய்யா. எலக்சன் எப்பவோ வருது. இதுல இந்த யாவாரத்த பண்ண நான் எங்க போகன்னேன். அட பன்னாட. பதிவுலகம் பதிவுலகம்னு ஒன்னு இருக்கு. அங்க இதான் யாவாரமே. கடைய தொறந்தியா, யாவாரத்த பெருக்கினியா, பி.ப. ஆனியான்னு போய்க்கேயிருக்கலாம்டான்னாய்ங்க.

கூகிளான் கடையில போயி ஓசில ஒரு இடத்தப் புடிச்சிட்டேன். சரக்கு போட வேணாமா? நொறுக்கு தீனி  போட்டேன். டேஸ்ட் பார்த்துட்டு போய்க்கிட்டிருந்தாங்க. ஒன்னு ரெண்டு பேரு நல்லாருக்குப்பா. கொஞ்சம் உப்பு போறாது. காரம் கூடன்னு சொல்லவும் திருத்திக்கிட்டேன். பசி அடங்கலைன்னாலும் குடிக்க தண்ணி கிடைச்சது. அப்புறம்தான் தெரிஞ்சது, கம்பராமாயணம் மாதிரி எழுதினாலும் கவட்டிக்குள்ள வெச்சிருந்தா யாவாரம் ஆவாது. கடைய போடணும். விளம்பரம் பண்ணனும். ஓட்டு வித்து ஓட்டு வாங்கணும்னு.

அட்றா சக்கன்னு மும்முரமா எறங்கிட்டேன். தமிழ்மணம் மால்ல ஒரு ப்ரேஞ்ச், தமிழிஷ் மால்ல ஒரு கடை தொறந்தேன். ஆரம்பிக்கறது ஆரம்பிக்கிறோம், எதுக்கு லோகல் யாவாரம். க்ளோபலா ஆரம்பிக்கலாம்னு முடிவு கட்டீட்டேன். அசத்தலா லண்டனு, ஸ்விஸ்ஸூ, அமெரிக்கான்னு டீலிங் போட்டேன். ஒரே மாசம். அமெரிக்காகாரருக்கு நான் போட்ட ஓட்டுக்கு ஒரு பென்ஸ் கார் வாங்கி குடுத்தாரு. நானு அவரு போட்ட ஓட்டுக்கு கடல முட்டாய் வாங்கி அனுப்புனேன்.

அப்புறம் லோகல் டீலர்ஷிப் தொறக்கலாம்னு அக்கம் பக்கம் விசாரிச்சி, மெதுவா வியாவாரம் விருத்தியாச்சி. திடீர்னு ஒரு நாள் தமிழிஷ் கடையில நீ நல்லா யாவாரம் பண்றப்பான்னு ஒரு மெயிலுட்டாங்க. தல கிறுகிறுத்துப் போச்சி.ஆஆஆஆஆங். சொல்ல மறந்துட்டனே. இதுக்குள்ள மதியம் ஒரு நேரம் ஃபுல் சாப்பாடு, ராத்திரி பரோட்டா கடையில 4 பரோட்டா அடிக்கிற வருமானம் வந்துச்சு.

என்னன்னாலும் பென்ஸ் கார்ல போய் பரோட்டா கடையில சாப்புடறது கேவலம்டான்னு யோசிச்சேன். சரி. கூட்டு களவாணி அட சை! கூட்டா பிசினஸ் பண்ணாதான் சரின்னு களத்துல எறங்குனேன். கோயமுத்தூரு, ஈரோடு, சேலம், துபாய், ஃப்ரான்ஸ், இலங்கைன்னு கடை கப கபன்னு பத்திகிச்சி.

சும்மா சொல்லக்கூடாதுங்க. இந்த ஓட்டு குத்தி ஓட்டு வாங்கற யாவாரம் இருக்கே. என்னா த்ரில்லுங்கறீங்க. வெட்டி ஒட்டி பின்னூட்டம், என்னன்னாலும் எழுதட்டும் நமக்கு தேவை ஓட்டுன்னு அருமை, அபாரம், கொன்னுட்டீங்கன்னு சொல்லிட்டு குத்திட்டு வந்தேன். சிங்கப்பூர், இந்தோனேசியா, அது இதுன்னு பேரு தெரியாத நாட்ல இருந்தெல்லாம் யாவாரம் பெருகிச்சி.

மூணு வேள ஃபுல்லா சாப்பாடு, போக வர பென்ஸ் காரு, துபாய், சவுதில 2 பெட்ரோல் கிணறு சொந்தத்துல வாங்கிட்டதால பெட்ரோல் செலவும் இல்லை. கல்லாக்கட்டி மாளலை. தமிழ்மணத்துல மக்கள்ளாம் சேர்ந்து மகுடம் சூட்டிட்டாங்களா. தல காலு புரியலைங்க எனக்கு. நடுவுல மைனஸ் ஓட்டு வேற போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிரபலமாக்கிட்டாங்க.

அப்புறம் என்னாங்க வேணும் எனக்கு. நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு ஒருத்தருக்கு ஓடி ஓடி ஓட்டு குத்துறேன். இருக்கிற காசுக்கு சினிமா எடுக்க உதவுமான்னு ஒருத்தருக்கு ஓட்டு குத்துறேன். கொஞ்சம் காடு கழனி வாங்கலாம்னு மாவட்ட வாரியா குத்துறேன். நல்லா போய்க்கிருந்திச்சி.

நேத்துல இருந்து ஒரு புது ரூலு சொல்லிக்கிறாங்க சில இலக்கிய வாதிங்க. அதாவது மொக்க எழுத கூடாதாம். ஃபாலோ பண்றவங்க இடுகைய படிக்க கூடாதாம். தமிழ்மணத்துல 6 ஓட்டுக்கு மேல வாங்க கூடாதாம். நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நாம ஓட்டு போட கூடாதாம்.

ஒரு இடுகை எழுதினா, அவங்களுக்கு அனுப்பி, அது தரமானதா இல்லையான்னு சொன்னப்புறம் இடுகை போடணும். அங்க ஒளிஞ்சிருந்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாரு. யார் இடுகையாச்சும் படிச்சா அவரு கிட்ட போணும். அவரு என்ன மனநிலைன்னு சோதிச்சி சர்டிஃபிகேட் குடுப்பாரு. அப்புறம்தான் பின்னூட்டம் போடணும்.

ங்கொய்யால அப்படியும் பரிந்துரைக்கு வந்து, பாப்புலர் பக்கம்னு ஆச்சோ இன்னோரு முகமூடி உக்காந்து யாரு ஓட்டு போட்டிருக்காங்கன்னு புட்டு புட்டு வைப்பாரு. அதெல்லாமும் மீறி நியாயமா, எளக்கிய சேவை பண்ணி கல்லா கட்டுங்க மக்கா. பதிவர் கூட்டம், பையனுக்கு பொறந்த நாளு, எங்கூரு திருவிழான்னு ஃபோட்டோல்லாம் போட்டு ஓட்டு கேட்டிங்களோ! கிழிச்சி தொங்க விட்டுடுவாய்ங்க.

ஓட்டு போடுங்கன்னு கேட்டா தூக்கு மேடைதான்.  நாலு முகமூடி ஒன்னா சேர்ந்து பதிவுலகம் ஃபுல்லா ஃப்ராடுன்னு சர்டிபிகேட் குடுத்துட்டாய்ங்கப்பா. புக்கர் ப்ரைஸ் போச்சே. புலிட்சர் ப்ரைஸ் போச்சே. எத்தனை பதிவருங்க கதை சினிமாவாகிருந்தா கிடைக்கிற ஆஸ்கார் போச்சே. கவுஜ எழுதுனவங்களுக்கு சாகித்திய அகாதமி விருது போச்சே. வயத்துல அடிச்சிட்டு அழாம என்ன பண்றது.

வசதியா வாழ்ந்து பழகியாச்சி. திரும்ப பசியோட எப்புடி இருக்கிறது. நம்ம வேலைய நாம பார்ப்பம். மொக்கைய எளக்கியம்னு படிச்சிட்டு குப்பைன்னு கத்துனா யாரு தப்பு?

அங்க ஒரு பன்னாட கேட்டுருந்திச்சி. இது ஒரு பதிவான்னு. மனசாட்சிய தொட்டு சொல்லணுமாம். ஆத்தா தீர்க்கதரிசி. எனக்குன்னே எழுதிச்சி போல.

/தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா /


புத்தி கெட்டுப் போய் யாருகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியாம நளன் கிட்ட சொல்ல வேண்டியத தமயந்தி கிட்ட சொல்லி, தமயந்திக்கு சொல்ல வேண்டியத நளனுக்கு சொல்லி

/தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... /

கூமுட்ட கேள்விக்கு விளக்கம் சொல்ல போயி

/வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... /


நல்ல இடுகையா நாலு படிச்சி பின்னூட்டம் போடாம விட்டு போட்டு, அந்த குப்பையில போய் விளக்கம் சொல்லி வாங்கி கட்டிக்கிட்டு

/அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு... /


அந்த குப்பைங்க கூட பேசி எனர்ஜியெல்லாம் வேஸ்டாக்கிகிட்டு

/சுண்டக் காய்ச்சுது பால.. /

இப்புடி ஒரு அருமையான மொக்கைய எழுதுது பாரு

/பன்னாட.../

கள்ளு கலயத்துல விழுந்த ஈ, எண்ணெயாட்டுறப்ப வர கசடு எல்லாம் வடிகட்ட பயன் படுத்துவாங்கள்ள தென்னமரத்துல வலை மாதிரி இருக்குமே பன்னாட அது..என்னியத்தான்.

//பன்னாட.../

வேலய விட்டுபோட்டு பூனைய சரைச்சதுக்கு திட்டு.

இத விட அருமையா ஒரு கவிதை எழுத முடியுமா?

போங்க போங்க. போய் மொக்கைய போட்டு ஓட்டு தேத்துற வழிய பாருங்க மக்கா. திருடன் திருடன்னு கத்திகிட்டே செயினறுத்துட்டு ஓடிட்டாய்ங்களப்பா:))

(டிஸ்கி: என்னாடா ஆச்சு இந்தாளுக்குன்னு பார்க்கறீங்களா. 2 நாளா பைத்தியங்க கூட்டத்துல சிக்கிட்டேன். இப்புடி ஆகிப்போச்சுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Monday, March 8, 2010

காதலை எண்ணிக் களிக்கின்றேன்..

சென்ற இடுகையின் தொடர்ச்சி:

டோமினிக் ஆல்வாவுடன் பேசுவதான காட்சியில் அவளைப் பற்றி ஓரளவு அறிய முடிந்தாலும், அதன் ஆழமும் ஆசிரியர் அந்தப் பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக வியாபிக்கச் செய்கிறார் என்பதும் ஒரு முறையல்ல பல முறை வாசித்து அறிய வேண்டிய அனுபவம். எத்தனை முறை படித்தாலும் அவளை முழுதாகப் புரிந்துக் கொள்ளாத ஒரு முழுமையற்ற உணர்வும், பிரமிப்பும் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும்.

ஆல்வாவுடன் பேசுகையில் அவள் சொல்கிறாள்

//“என்னால் அப்படித்தான் உணர முடியும். அல்லது உணர்ச்சியற்று இருக்கலாம்.”//

//“மற்றவர்களின் பார்வை குறித்த எண்ணமும் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதும் எனக்கு மிக வேதனையைத் தரும். அம்மாதிரியான சிறந்த ஒன்று  இம்மாதிரியான மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கல்ல. ”//

இவையிரண்டும் புத்தகத்தின் ஆரம்பத்தில் வந்தாலும் இதனுடைய முழு ஆழம், இதன் பின்னான அவளின் உண்மையான மனம் கதையோட்டத்தில் உணருகையில் மனதில் எழும் உணர்ச்சிக்கு வார்த்தைகளால் வடிகால் தேடவியலாது.

டோமினிக் எடுக்கும் இரண்டு முடிவுகள் அவளை எங்கோ கொண்டு நிறுத்தி விடுகிறது. ஒன்று சுயமரியாதை என்ற ஒன்றைப் பற்றி ப்ரக்ஞையே இல்லாத பீட்டர் கீட்டிங்கை மணப்பது.

ரோர்க்கை அழிக்கத் துடிக்கும் எல்ஸ்வொர்த் டூஹேயினோடு பான்னர் என்ற பத்திரிகையில் தானும் ஒரு கட்டிடக் கலை விமரிசகராகச் சேருவது.

ரோர்க்குக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்களை திசைதிருப்பி கீட்டிங்கிடம் அனுப்பி வைக்கிறாள். வியப்பாய் இருக்கிறதல்லவா? ரோர்க்கை விரும்புபவளா இப்படி? அவனைப் பட்டினி போடவா? அவனுக்கு தடைக்கல்லாக்கவா இப்படி? தன் கணவனுக்கு பேரும் புகழும், பணமும் கிடைப்பதற்காகவல்லவா செய்கிறாள் என்றல்லவா நினைக்கத் தோன்றும்?

உண்மை அதுவல்ல! ரோர்க்கை, அவன் திறனை உண்மையில் விரும்புவார்களேயானால் எந்தச் சக்தி அவர்களை மாற்ற முடியும்? அவனும் அதைத்தானே சொன்னான். என்னை விரும்புபவர்கள் என்னிடம் வருவார்கள் என்று. உண்மையான புரிதல் இன்றி, ரசனையற்று, ரோர்க்கின் கனவை மதிக்கத் தெரியாதவர்கள் ஏதோ ஒரு உந்துதலில் அவனிடம் போய், ஒரு மிகச் சிறந்த படைப்பை மற்றவர்களின் ரசனைக்காக சிதைத்து விடமாட்டார்களா?

இத்தகைய ஆட்கள்தானே இவளின் கருத்துக்கு செவி சாய்த்து கீட்டிங்கிடம் போவார்கள்? ரோர்க்குக்கு புரியாதா என்ன? ஆனால் அதற்கு அவள் கொடுக்கும் விலையிருக்கிறதே! கீட்டிங்குடனான இந்த உரையாடல் சொல்லும் அந்த நரகத்தை. நரகம் என்ற வார்த்தை கூட இதற்குப் பொருந்தாது. அது உணர்ச்சி சம்பந்தப் பட்டது. இவளோ உணர்வற்றல்லவா இருக்கிறாள்:

//“என் உண்மையான ஆன்மாவா பீட்டர்? அது சுயமாக இருக்கும்போது மட்டுமே உண்மையாக இருக்க முடியும் -- நீ கண்டு பிடித்துவிட்டாயல்லவா? அது திரைச்சீலைகளையும், டெஸ்ஸர்டுகளையும் தேர்ந்தெடுக்கும் போது மட்டுமே உண்மையாயிருக்கிறது -- சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய் -- திரைச்சீலைகள், டெஸ்ஸர்டுகள் மற்றும் மதம், பீட்டர், அதனோடு கட்டிடங்களின் பரிமாணமும். ஆனால் அது உனக்குத் தேவையாயிருக்கவில்லையே?

உனக்குத் தேவையாயிருந்ததெல்லாம் ஒரு நிலைக் கண்ணாடியல்லவா? மனிதர்களுக்கு அவர்களைச் சுற்றி நிலைக் கண்ணாடி மட்டுமே தேவையாயிருக்கிறது. அவர்கள் பிரதிபலிப்பது போலவே அவர்களையும் பிரதிபலிக்க. தரக் குறைவான விடுதிகளின் குறுகிய பாதையில் இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் நிலைக் கண்ணாடிகளில் ஒன்றுக்குள் ஒன்றாக எண்ணற்ற பிம்பங்கள் தெரியுமல்லவா? பிம்பங்களின் பிம்பங்கள். எதிரொலியின் எதிரொலிகள். ஆரம்பமோ முடிவோ அற்றவை. மையமோ நோக்கமோ அற்றவை. உனக்கு வேண்டியதைத் தந்தேன். உன்னைப் போலவே, உன் நண்பர்களைப் போலவே, இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள் எப்படி இருக்க  போட்டியிடுகிறார்களோ அப்படி மாறிவிட்டேன். 

புத்தக விமரிசனம் குறித்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, அது குறித்தான ஒரு தெளிவின்மையை மறைத்து வளைய வரவில்லை. அது குறித்த எந்த முடிவும் என்னிடமில்லை என்று சொன்னேன்.  என்னுடைய படைப்பாற்றலற்ற வெறுமையை மறைக்க மற்றவர்களின் படைப்பை கடன் வாங்கவில்லை. நான் எதையும் உருவாக்காமல் இருந்தேன். நான் மனித இனத்துக்கு சமத்துவம் ஒரு உயர்ந்த சிந்தனை என்றோ ஒற்றுமை அதன் தலையாய குறிக்கோள் என்றோ சொல்லவில்லை -- நான் அனைவர் கருத்தினையும் ஏற்றுக் கொண்டேன்.

இதை நீ மரணம் என்கிறாயா பீட்டர்?அத்தகையதோர் மரணத்தை உனக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் உணரச் செய்தேன் நான். ஆனால் நீ--நீ அவ்வாறு செய்யவில்லையே? உன்னுடன் இருந்தவர்கள் இயல்பாக இருந்தார்கள், உன்னை விரும்பினார்கள், உன்னுடன் இருப்பதை மகிழ்வாய் உணர்ந்தார்கள். அவர்களுக்கு நீ அளித்தது வெறும் மரணம். ஏனெனில் நீ அதை உனக்கு விதித்துக் கொண்டாய்”//


எத்தனை உன்னதமான பெண். என்ன ஒரு தவம் இது?

//“அவள் ரோர்க்கின் மீதான அவளின் ஆளுமையை வெளிக்காட்ட விரும்பினாள். அவனை விட்டு விலகியே இருந்தாள்; அவன் அவளைத் தேடி வருவதற்காகக் காத்திருந்தாள். அவன் வெகு விரைவில் அவளைத் தேடி வந்து அவளின் ஆளுமையைத் தகர்த்தான்; உடனடியாக அவளைத் தேடி வந்து, அவன் விருப்பத்துக்கு மாறாக திண்டாடிக் காத்திருந்த தவிப்பை அவளுக்கு உணர்த்த மறுத்தான். அவள் “ என் கையை முத்தமிடு ரோர்க்” என்பாள். அவனோ மண்டியிட்டு அவள் காலில் முத்தமிடுவான். அவள் சக்தியை அங்கீகரித்ததன் மூலம் அவளைத் தோற்கடித்தான்.

அவளால் அவளின் ஆளுமைச் சக்தியை பிரயோகிக்க முடியாமல் செய்தான். அவள் காலடியில் படுத்தபடி சொல்லுவான் “கண்டிப்பாய் நீ எனக்கு வேண்டும். உன்னைப் பார்க்கையில் சித்தமிழந்து போகிறேன். உன்னால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் தெரியுமா? இதைத்தானே நீ கேட்க விழைகிறாய்? அனேகமாக டோமினிக். உன்னால் என்னைச் செய்ய வைக்க
முடியாதவற்றுக்காக -- அவற்றைக் கேட்பதன் மூலம் என்னை நரகத்தில் ஆழ்த்தினாலும் நான் மறுக்கத்தான் முடியும். சொல்லவொணா நரகத்தில் இருந்து கொண்டு மறுப்பேன். இப்போது உனக்குத் திருப்தியா டோமினிக்?

நான் முற்று முழுதாக உனக்கு மட்டுமே சொந்தமானவனா என்று ஏன் அறிய விரும்புகிறாய். அது மிக எளிது. சந்தேகமின்றி என்னிடம் எதெல்லாம் உன்னால் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமோ அத்தனைக்கும் சொந்தக்காரி நீதான். அதைத் தவிர நீ வேறெதுவும் கேட்கப் போவதில்லை.
ஆனாலும் என்னை வதைக்க முடியுமா என்றறிய விழைகிறாய். முடியும்! அதனால் என்ன?

அந்த வார்த்தைகள் அடிபணிந்து போவதைப் போல் இல்லை, ஏனெனில் அவை வெகு இயல்பாக, எளிமையாக சற்றும் தயக்கமின்றி வந்தன. அவனை வென்றுவிட்டதாக அவளால் உணர முடியவில்லை; முன்பெப் பொழுதும் விட, இப்படிச் சொல்லக் கூடிய ஒருவன், அவை சத்தியமென்று உணர்ந்த ஒருவன், ஆனாலும் ஒரு சுய கட்டுப்பாட்டோடு அவளை ஆளுமைப்படுத்தக் கூடிய ஒருவன், அவன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியிருப்பதன் மூலம் அவளை முழுமையாக சொந்தமாக்கிக் கொண்டதாகவே உணர முடிந்தது அவளால்”//


இப்படி ஒரு காதல் வேறெங்காவது படித்திருக்கிறோமா?

ஸ்டாட்டர்ட் கோவில் என்ற ஒன்றைக் கட்டி முடித்த ரோர்க், டூஹேயின் சதியால்,  ஏமாற்றியதாக வழக்குக்கு உள்ளாக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.  ரோர்க்குக்கு எதிராக சாட்சி சொல்கிறால் டோமினிக். பதைத்துப் போகும் நமக்கு. அவள் பேச பேச ஆரம்பத்தில் அவள் சிலையை உடைத்த காரணம் புரியும். ரோர்க்கின் திறன் மீதான அவளின் மதிப்பு, அதை ஏன் தடுக்க நினைக்கிறாள் என்ற விளக்கம் அத்தனையும் பேசப் படாமலேயே புரியும்.

//“ஹோவர்ட் ரோர்க் மனித ஆன்மாவுக்காக ஒரு கோவில் கட்டினார். அவர் மனிதனை ஒரு வலுவானவனாக, பெருமை மிக்கவனாக, சுத்தமானவனாக, புத்திசாலியாக, பயமற்றவனாகக் கண்டார். அவனை ஒரு நாயகனாகக் கருதினார். அவனுக்காக அந்தக் கோவிலைக் கட்டினார். கோவில் என்பது ஒரு மனிதன் கண்ணியமானவனாக உணரும் இடமாகும். அத்தகையதோர் கண்ணியம், பிழையற்றவனாக இருப்பதை உணர்வதன் மூலம், உண்மையை உணர்வதன் மூலம், அதைத் தேடி அடைய முயல்வதன் மூலம், தன்னால் அதிகபட்சமாக முடிந்த அளவு தூய்மையாக வாழ்வதன் மூலம், அவமானம் என்பதை அறியாமல், அவமானத்துக்கு இடம் கொடாமல் இருத்தல் மூலம், முழுமையான சூரிய வெளிச்சத்தில் அம்மணமாக நிற்க இயலும் பக்குவத்துடன் இருப்பதன் மூலம் அடைய முடியும் என நம்பினார். மனிதனுக்கு அடையாளமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடம் புனிதமானது என நினைத்தார். மனிதனையும் அவன் கண்ணியத்தையும் குறித்த ஹோவார்ட் ரோர்க்கின் கண்ணோட்டம் இது.

நான் ரோர்க்கைக் கண்டிக்கிறேன். ஒரு கட்டிடம் அது இருக்கும் சூழலை ஒப்ப அமைய வேண்டும். எத்தகைய உலகில் ரோர்க் இந்தக் கோவிலைக் கட்டினார். எத்தகைய மனிதருக்காக? சுற்றிப் பாருங்கள். உங்களால் திரு ஹாப்டன் ஸ்டாட்டர்டுக்கோ, திரு ரால்ஸ்டன் ஹால்கோம்புக்கோ, அல்லது பீட்டர் கீட்டிங்குக்கோ கட்டப்பட்ட ஒரு புனிதமான இடமாக இதைச் சொல்ல முடியுமா? அவர்களைக் காண்கையில் நீங்கள் டூஹேயை வெறுக்கிறீர்களா? -- அல்லது இத்தகைய சொல்லவொணா அவமரியாதையை அந்தக் கோவிலுக்கு செய்தமைக்காக ரோர்க்கைப் பழிக்கிறீர்களா? அந்தக் கோவிலின் புனிதத்தக் கெடுத்து விட்டதாக டூஹே சொன்னது அவர் நினைத்த அர்த்தத்தில் அல்லவெனினும் மிகச் சரியானது. அது டூஹேயும் அறிவார் என நினைக்கிறேன். ஒருவன் விலை மதிப்பற்ற முத்துக்களை ஒரு பன்றிக் கறித் துண்டைக்கூட விலையாகப் பெறாமல் வீசுவானேயானால் பன்றியின் மீது உங்களுக்கு சினம் தோன்றாது. தன்னுடைய முத்துக்களின் மதிப்பறியாமல் அதனை சேற்றில் வீசியெறிந்து, அந்தப் பன்றிகளின் கத்தலை நீதிமன்ற அலுவலர் பதியும்படி செய்தானே அந்த மனிதன் மீதல்லவா சினம் தோன்றும்?’’


“ஸ்டாட்டர்ட் கோவில் அழிக்கப்பட வேண்டும். மனிதர்களை அதனிடமிருந்து காப்பதற்கல்ல. அதை மனிதர்களிடமிருந்து காக்க. ஆனால் அதை ஒரு சிறந்த பண்பான செயலாக நாம் உருவகப் படுத்திக் கொண்டு அழிக்க வேண்டாம். நாம் மலையை எதிர்க்கும் சிறு குன்றுகள் எனக் கொள்வோம். அல்லது நீந்தத் தெரியாமல் நீரில் மூழ்கி தன்னை அழித்துக் கொள்ளுமே ஒரு வகை எலிகள் அப்படிக் கருதிக் கொள்ளுவோம்”//


மனிதனின் உயர்வறியாத மனிதர்களுக்கு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிய ரோர்க்கின் மீதா சீற்றம்? அதனை அனுபவிக்கத் தெரியாத சமுதாயத்தின் மீதல்லவா? அந்தச் சிலைக்கு நேர்ந்த கதிதான் இந்தக் கோவிலுக்கும்.

இப்படி பிரமிக்க வைக்கிறாளே டோமினிக். அப்படி அவள் கொண்டாடும் ரோர்க் எப்படிப் பட்டவன்? ஏன் அவன் மீது இவ்வளவு காதல்?
 
இறுதிக் கட்டத்தில் ஏழைகளுக்கான குறைந்த முதலீட்டில் மிகப் பெரிய குடியிருப்பை வடிவமைத்து, அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது, வடிவமைத்தது தாந்தான் என்பதும் தெரியக்கூடாது என்ற உடன் படிக்கையின் பேரில் வேறெந்த பயனும் எதிர்பாராமல் வடிவமைத்த வீடுகள், மாற்றம் செய்யப்பட்டு கட்டியதை பொறுக்க முடியாமல் டோமினிக் உதவியுடன் அழிக்கிறான். ஓடி ஒளியாமல் கைதாகி, நீதிமன்றத்தில் தன் தரப்பைக் கூறும் காட்சி சொல்லும் ரோர்க் மனிதனை எப்படி நேசித்தவன் என்று.

Friday, March 5, 2010

பதிவர்களை டரியலாக்கும் ஜூனியர்கள்....

ஜூனியர் முகிலன்: அம்மாவ வம்புக்கிழுத்தா அடி விழுகுதுன்னு என்னிய தோச திங்கவிடாம, டேன்ஸ் ஆட விடாம பண்ணி இடுகை போட்டது கூட பரவால்ல. ஸ்னோக்குள்ள இறக்கிவிட்டு ஃபோட்டோ புடிச்சி போட்டு இதுக்கு நான் அலையறேன்னு இடுகை போட்டாரு பாருங்க..அவ்வ்வ்வ்...என்னா குளிரு!..குடுகுடுப்பை அங்கிள் எதிர் கவுஜ போட்டா இவரு எதிரெதிர் கவுஜ போட்டாரு சரி. அதுக்காக அந்தக்காவ ஸ்னோல இறக்கி அவரு போட்ட ஃபோட்டோக்கு எதிர் ஃபோட்டோ போடுறாரே..சொல்லி வைங்க.. நல்லால்ல இதெல்லாம்.

ஜூனியர் ஆருரன்
: பாவி மனுசன் பாண்டிச்சேரி போலாமுடா. இந்த கண்ணாடிய தூக்கி கடாசிடலாம்னு சொன்னாரேன்னு நம்ம்ம்ம்ம்பி போனேன். இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா!

ஜூனியர் நசரேயன்: அல்ல்ல்லோ! இந்த மனுசன் மனசுல பெரிய துண்டாலங்கிடி ஈரோன்னு நெனப்பு. போட்டோ போடமாட்டாரு. என் ஃபோட்டோ போட்டா என்ன? என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. பின்னாடி நின்னு என்ன்ன்ன்ன்னாஆன்னேன்! ச்ச்ச்ச்ச்சும்மான்னு அப்புடியே டெயில் பீச மாத்தி காமெடி பீசாயிட்டாரு!

குடுகுடுப்பையார் வூட்டு சின்னம்முனி
: எதிர் கவுஜ எழுத தெரிஞ்ச எங்கப்பாக்கு எதிர் ஸ்னோமேன் பண்ண தெரியாது தெரியுமா? யார் ஊட்டு ஸ்னோமேன் ஃபோட்டோவோ போட்டுட்டு அசல்னு தொடுப்பு குடுக்காத ஊழல அதுசரி அங்கிள் கூட கண்டு புடிக்கல. அதெல்லாமாவது பரவால்லைங்க. இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.

கதிரூட்டு சின்னம்முனி
: ஒரு நா ராத்திரி நல்லா தூங்கிட்டிருந்தேனா? கிக்கிக்கினு சிரிப்பு சத்தம். எழுந்து பார்த்தா சத்தமில்லாம டி.வி. வெச்சிட்டு டேன்ஸ் பார்த்துகிட்டு சிரிப்ப கசிய விடுறாரு எங்கப்பா. நீங்களே சொல்லுங்க, நடுராத்திரில காரணமில்லாம ஒருத்தரு கிக்கிக்கின்னா சிரிப்பு வருமா வராதா? நானும் சிரிச்சிட்டு தூங்கிட்டேன். அடுத்த நாள் பார்த்தா என்னையும் சேர்த்துகிட்டு செம பில்டப்போட இடுகை போட்டுட்டாரு எங்கப்பா!  அப்புறம் கார்ல தூங்கிட்டிருந்த என்னய வெச்சு காமிரா இடுகையில காமெடி பீசாக்கிட்டாரு. கொஞ்சம் ஏத்தமாதான் போச்சு அய்யாக்கு. அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா.

பழமையூட்டு சின்னம்முனி: தாத்தாக்கு பல்லு விழுந்து போச்சின்னு எவ்ளோ ரகசியமா சொன்னேன் அப்பாட்ட. ஊரு பழமை பேசுற மனுசனுக்கு பல்லு விழுந்தத சத்தமா சொன்னாலோ, வானத்துக்கு காட்டினாலோ பல்லு மொளைக்காதுன்னு தெரியாது? இதப் போயி இடுகையா போட்டு, இப்ப பாருங்க தாத்தாக்கு பல்லே முளைக்கல. பர்கர் கேட்டேன்னு இடுகைய போட்டு மானத்த வாங்கீட்டு இவரு ஃபாண்டு சாப்புட்டதுமில்லாம படம் புடிச்சி போட்டு வெறுப்பேத்துறாரே..இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.

ஜூனியர் பாலாசி: அட இருங்க இருங்க. ஈரோடு பதிவர் குழுமத்துல இருந்து மொத்தமா அடிக்க பொறப்டா எப்புடி. இவ்ளோ பெரிய மனுசங்க இருக்கீங்க. எங்கள அழகழகா படம் புடிச்சி போட்டுட்டு நாங்க பிறக்க வழி பண்ணாம தமிழ்மணத்துல கவிதை வருமா, கட் பேஸ்ட் போடலாமான்னு இருக்கானே மனுசன். அதுக்கும் ரெண்டு சேர்த்து போடுங்க சொல்றேன்.


ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த காசுல சூனியம் வெச்சுக்கலாமா? ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!

Wednesday, March 3, 2010

அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை

பத்து வயதில்
வீதியிலிருந்து எடுத்து வந்த
நாய்க்குட்டியை
அருவெறுத்து விரட்டி
கடன் வாங்கி
ஐந்நூறு ரூபாய்க்கு பாமரேனியன்
வாங்கிக் கொடுத்த அப்பா..
பத்து வருடம் கழிந்தும்
என் காதல் வெறுத்து
கடன் வாங்கி கட்டி வைக்க
அவசரமாய் மாப்பிள்ளை தேடுகிறார்..

அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சயன்ஸ் பிடிக்கவில்லை
சங்கீதம் படிக்க விருப்பமென்றேன்
கடற்கரையில் துண்டு விரித்து
பிழைக்கவா?
கணிணி படி என்றார் அப்பா!
படித்துப் பின் வேலை
கிடைத்துப் பின்
கழித்துக் கட்டிய ஓர் நாளில்
கவலை மறக்க கடற்கரை சென்றேன்
ஆர்மோனியம் வாசிப்பவன்
துண்டு நிறைய காசு

அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை.