Saturday, November 21, 2009

மதச் சுதந்திரம் சுற்றுச் சூழலின் எதிரியா?



தசரா பண்டிகை விழாவின்போது சாமி சிலைகளை ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி டெல்லியைச் சேர்ந்த சலேக் சந்த் ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜே.எம். பஞ்சால் அகியோர் அடங்கிய பெஞ்ச் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவுக்கு எதிரானது என்ற அடிப்படையில், தடை விதிக்க தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுதாரர் இந்த பிரச்சனையை சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதாக இன்றைய செய்தி கூறுகிறது.

தீர்ப்பை விமரிசிப்பது நமது நோக்கமல்ல. அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவு சொல்வதென்ன?

பிரிவு 25(1)ன்படி ஓவ்வொருவரும் சிந்தனைச் சுதந்திரத்துடன், சட்ட ஒழுங்கு, சுய கட்டுப்பாடு,மக்கள் நலன் மற்றும் இந்தப் பிரிவின் இதர பகுதிகளுக்குட்பட்டு தங்கள் மதக் கோட்பாடுகளை பரப்பவோ, அதன் படி நடக்கவோ, விளக்கவோ உரிமையுண்டு

பிரிவு 25(2)ன்படி இந்தப் பிரிவில் கண்டுள்ள விதிகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றவோ அல்லது அரசு புதியதாய்

(அ)பொருளாதாரம் , நிதி, அரசியல்,  மற்றும் ஒற்றுமை குறித்த மத சம்பந்தமான நடைமுறைகளை நெறிப்படுத்தல் அல்லது மட்டுப் படுத்தல்;

(ஆ)சமுதாய நலன் மற்றும் சமுதாயச் சீரமைப்பை உருவாக்குதல் அல்லது பொது மக்கள் சம்பந்தமான இந்து மத அமைப்புக்களில் எல்லாத் தரப்பு இந்துக்களுக்கும் அனுமதியளித்தல்

ஆகியவை குறித்த சட்டங்களையோ, நெறி முறைகளையோ உருவாக்குவதைத் தடுக்காது.

இன்றைய காலக் கட்டத்தில் உலகம் முழுதும் சுற்றுப்புறச் சூழல் கேடு குறித்த விழிப்புணர்ச்சியும் அதை மீட்டெடுக்க நடக்கும் பகீரதப் பிரயத்தனமும் முக்கியமே ஒழிய, மதத்தின் எந்தக் கோட்பாடும் பின்பற்றப் படாத ஒரு நடைமுறையை அனுமதித்தல் சரியா என என்ற கேள்வி சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட ஓவ்வருவருள்ளும் எழுவது இயல்பே.

அரசுக்கு இது குறித்த முழு அதிகாரமும் இருப்பினும், வாக்கும், அரசியலுமே பிரதானமாக இருக்கும் பட்சத்தில் எந்த அரசும் இதற்கான சட்ட ஒழுங்கைக் கொண்டு வரும் சாத்தியம் இல்லை.

பணம் சம்பாதிக்கவும், பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும், பாதுகாப்புக்கு மிக முக்கியம் வாய்ந்த இந்த வேளையில் காவலர்களின் சேவை இதற்கு விரயமாவதும், சில பல நேரங்களில் சமூகக் கலவரத்துக்கு வழிகோலுவதாகவும் அமையும் இந்தக் காலக் கட்டத்தில் இந்தத் தீர்ப்பு அரசின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டாமா?

சுற்றுப்புற மாசை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள், வண்ணங்களைப் பயன் படுத்த எந்த மதக்கோட்பாடு அனுமதிக்கிறது?

விநாயகர் சிலை என்ற பெயரில், கிரிக்கட் வீரராகவும், ஜீன்ஸ் பிள்ளையார் என்று வித விதமாக மதத்துக்கு அப்பாற்பட்ட வகைகளில் வைக்கப்படும் பிரம்மாண்டமான சிலைகள் காசு சம்பாதிப்பதற்கேயன்றி, அரசியலுக்கேயன்றி சட்டப் பிரிவு 25ன் கீழா வருகிறது?


இந்தக் கூத்தெல்லாம் சமீபத்தில்தானே பெரிய அளவில் நடக்கிறது? குறைந்த பட்சம் அரசுக்கு இதற்கான நடைமுறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து சமுதாயத்துக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பேற்படாத வகையில் ஒரு மறு சீரமைப்புச் சட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விவாதம் மற்றும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற உத்தரவாவது ஓரளவுக்கு பலன் தந்திருக்காதா?

சுப்ரீம் கோர்டின் ஃபுல் பெஞ்ச் சமுதாய நலனை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமா? அல்லது அரசாவது சுயமாக எதிர் சந்ததியினரின் நலன் கருதி ஏதாவது செய்யுமா?

குறைந்த பட்சம் சிலைகளின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலித்து அவற்றை சுற்றுச் சூழலுக்கு மாசில்லா வண்ணம் கரைப்பதற்கும், சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும் பொருட்களைத் தடை செய்வதற்கும் அரசு வழி செய்தாலே இந்தக் கேடு பெரிய அளவில் மட்டுப்படும்.


44 comments:

கலகலப்ரியா said...

பிள்ளையார் என்ற பெயர்ல எந்த நீதிபதியும் இல்லீங்களா..? அட்லீஸ்ட் அட்வகேட்...?... பாருங்க... என்னத்த சொல்லுறது...!

கலகலப்ரியா said...

'2012' is da only solution.. hihi..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/பிள்ளையார் என்ற பெயர்ல எந்த நீதிபதியும் இல்லீங்களா..? அட்லீஸ்ட் அட்வகேட்...?... பாருங்க... என்னத்த சொல்லுறது...!/

அப்படி அவரே வந்து சொன்னாலும் எதிரி முத்திரை குத்தி அடிப்பாங்கம்மா. அவ்வளவு வெறி.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/'2012' is da only solution.. hihi../

=)). அதாஞ்செரி.

பழமைபேசி said...

இஃகி... சுற்றுச்சூழலின் நண்பனா அப்படின்னு மாத்தணும்....

எதிரியான்னா நீங்க வேற கட்சின்னு ஆயிடாது? இஃகி!!

vasu balaji said...

பழமைபேசி said...

/இஃகி... சுற்றுச்சூழலின் நண்பனா அப்படின்னு மாத்தணும்....

எதிரியான்னா நீங்க வேற கட்சின்னு ஆயிடாது? இஃகி!!/

விஷயம் நேர்மாறா இருக்குறப்ப தலைப்பு இப்படி வெச்சாதான் சரின்னு நினைச்சேன். மாத்தி வெச்சா வந்து திட்டிட்டு போவாங்கள்ள இஃகிகி

S.A. நவாஸுதீன் said...

நல்ல இடுகை சார்.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/நல்ல இடுகை சார்./

நன்றிங்க.

நாகா said...

சுற்றுச் சூழலப் பத்தி நம்ம ஊருல என்ன கூவுனாலும் எவனும் கண்டுக்க மாட்டானுக. இதெல்லாம் ஜெனடிக்கலாவே இருக்கணும் இல்லைன்னா மத்த நாட்டுல இருக்கற மாதிரி மக்களுக்கு கடுமையான சட்டங்கள் மூலமா பயத்த ஏற்படுத்தணும். ஆனா நம்ம ஜனநாயகம் அதுக்கெல்லாம் ஒத்துக்காதே.

நாளக்கி வெளியூரு கெளம்பறேன். போயிட்டு வந்து உங்களோட இடுகைகளப் படிக்கறேன் ஐயா.

vasu balaji said...

நாகா said...

/சுற்றுச் சூழலப் பத்தி நம்ம ஊருல என்ன கூவுனாலும் எவனும் கண்டுக்க மாட்டானுக. இதெல்லாம் ஜெனடிக்கலாவே இருக்கணும் /

அது இருந்தா எவ்வளவோ நல்லா இருப்போமே.

/இல்லைன்னா மத்த நாட்டுல இருக்கற மாதிரி மக்களுக்கு கடுமையான சட்டங்கள் மூலமா பயத்த ஏற்படுத்தணும். ஆனா நம்ம ஜனநாயகம் அதுக்கெல்லாம் ஒத்துக்காதே./

ஆமாங்க. ஏப்ரல்1,2009 ல இருந்து குப்பை போட்டா, எச்சில் துப்பினா 100ரூ தண்டம்னு ரூல் வந்திச்சி. அதோட சரி.

/நாளக்கி வெளியூரு கெளம்பறேன். போயிட்டு வந்து உங்களோட இடுகைகளப் படிக்கறேன் ஐயா./

சரிங்க நாகா. பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே...

இவங்களுக்கு ஓட்டு ஒன்னுதான் குறி...

சுற்று புழ சூழல் மாசு அடைந்தா என்ன.. மனுஷன் செத்தா என்னா..

இவங்களுக்கு தேவை எல்லாம் பணம், பதவி, அதிகாரம்..

அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள்..

இராகவன் நைஜிரியா said...

// குறைந்த பட்சம் சிலைகளின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலித்து //

அண்ணே ஊழல் செய்வதற்கு வழி நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே..

இவங்க இதிலேயும் ஊழல் பண்ணுவாங்க...

சுடுகாட்டுலேயே பண்ணவங்கத்தான் நம்ம அரசியல்வியாதிகள்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள்..//

இல்லண்ணே. செய்யாமலிருக்கத் தயங்காதவர்கள்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே ஊழல் செய்வதற்கு வழி நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே..

இவங்க இதிலேயும் ஊழல் பண்ணுவாங்க...

சுடுகாட்டுலேயே பண்ணவங்கத்தான் நம்ம அரசியல்வியாதிகள்../

இல்லண்ணே. பணம் குடுத்தாதான் சிலை வைக்கலாம்னா பக்தி வீட்டோட நின்னுடும். =))

பழமைபேசி said...

சிலையா? எனக்கா?? இப்ப வேணாம்ண்ணே... செருப்பு மாலை எல்லாம் போட்டு அசிங்கப்படுத்துவாய்ங்க... உங்க ஆசை அதுதான்னு எனக்கு தெரியுமே? இஃகிஃகி!!

vasu balaji said...

பழமைபேசி said...

/சிலையா? எனக்கா?? இப்ப வேணாம்ண்ணே... செருப்பு மாலை எல்லாம் போட்டு அசிங்கப்படுத்துவாய்ங்க... உங்க ஆசை அதுதான்னு எனக்கு தெரியுமே? இஃகிஃகி!!/

அய்ய இதென்னா புதுக்கதை! இதுல நம்ம ஆசை வேற தெரியுதாக்கு. லொல்லு.

ப்ரியமுடன் வசந்த் said...

(நகைச்சுவைக்கு)

ஏம்பா கடவுள் நீங்க இது மாதிரி பண்றீங்க பேசுறீங்கன்னுதான தற்கொலை பண்ணிட்டார் பின்ன ஏன் திரும்பவும் அவர இழுத்துப்போட்டு டான்ஸ் ஆடுறீங்க...

விடுங்கப்பா தினமும் பால்ல குளிச்சு சளிச்சு போயிருக்கும் அதான் தண்ணியில குளிக்கணும்ன்ற ஆசையில வந்துருப்பாரு இதுக்கு போய்..நாமதான் குளிக்குறதில்ல அவராவது குளிச்சு ஆரோக்யமா இருக்கட்டும்...

கடற்கரை காற்று வாங்க வந்தவர நீங்கதான் சாரி நாம்தான் தள்ளிவிட்டு சாகடிக்கிறோமே..

(மனசார)

உள் நெஞ்சிலிருந்து பாராட்டுக்கள்
நைனா

U F O said...

////பிரிவு 25(1)ன்படி ஓவ்வொருவரும் சிந்தனைச் சுதந்திரத்துடன், சட்ட ஒழுங்கு, சுய கட்டுப்பாடு,மக்கள் நலன் மற்றும் இந்தப் பிரிவின் இதர பகுதிகளுக்குட்பட்டு தங்கள் மதக் கோட்பாடுகளை பரப்பவோ, அதன் படி நடக்கவோ, விளக்கவோ உரிமையுண்டு//// --- அய்யா, இதில் "மக்கள் நலன்" என்று ஒரு அம்சம் வருகிறதே....? 'சுற்றுப்புறச் சூழல் கேடு' என்பது மக்கள் நலனுக்கு உகந்தது, என்று நினைத்து, 'அவர்கள்' இந்த மாதிரி தீர்ப்பு அளித்து விட்டார்களோ?

சமூக விழிப்புணர்வு இடுகை தந்த வானம்பாடிகளுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//குறைந்த பட்சம் சிலைகளின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலித்து அவற்றை சுற்றுச் சூழலுக்கு மாசில்லா வண்ணம் கரைப்பதற்கும், சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும் பொருட்களைத் தடை செய்வதற்கும் அரசு வழி செய்தாலே இந்தக் கேடு பெரிய அளவில் மட்டுப்படும்.//

நம்மகிட்ட இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை என்னன்னா எதை எடுத்தாலும் பொருளாதாரம் என்ற அடிப்படையில் பலருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு வழி வகுக்கிறது என்று சுற்றுப் புற சூழல்களை அசிங்கப் படுத்துகிறோம்.உதாரணத்திற்கு சினிமா வால்போஸ்டர்,தனி வழிபாடுக்கு வழி வகுத்த ஆளுயரக் கட்டமைப்புகள்.

உலகத்திலேயே ஒரு பயலும் செய்யாத வினோதங்களையெல்லாம் செய்து விட்டு நமக்குன்னு ஒரு கலாச்சார முத்திரையைக் குத்திக் கொள்கிறோம்.

பிள்ளையார் அவர் பாட்டுக்கு ரோட்டோரமா உட்கார்ந்துகிட்டிருந்தாரு.அவரையும் தண்ணிக்குள்ள முங்க வச்சிட்டாங்க பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பின்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/(மனசார)

உள் நெஞ்சிலிருந்து பாராட்டுக்கள்
நைனா/

ரொம்ப நன்றி வசந்த்.

vasu balaji said...

U F O said...

/சமூக விழிப்புணர்வு இடுகை தந்த வானம்பாடிகளுக்கு நன்றி./

நன்றிங்க.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/எதை எடுத்தாலும் பொருளாதாரம் என்ற அடிப்படையில் பலருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு வழி வகுக்கிறது என்று சுற்றுப் புற சூழல்களை அசிங்கப் படுத்துகிறோம்.உதாரணத்திற்கு சினிமா வால்போஸ்டர்,தனி வழிபாடுக்கு வழி வகுத்த ஆளுயரக் கட்டமைப்புகள்./

வால் போஸ்டர் இல்லை சார் இப்போல்லாம்.

கட் அவுட்டுக்கும் ஹொர்டிங்சூக்கும் தடை வந்துட்டுது. மாநாடு நடக்கும் இடம், கட்சி அலுவலகம் தவிர.

அப்படியானால் பிழைப்புன்னு தானே சார் கள்ளுக்கடை திறக்கணும்னு போராடுறாங்க. பண்ணலாமே.

/உலகத்திலேயே ஒரு பயலும் செய்யாத வினோதங்களையெல்லாம் செய்து விட்டு நமக்குன்னு ஒரு கலாச்சார முத்திரையைக் குத்திக் கொள்கிறோம்./

இதெல்லாம் கூட இந்த 10-15 வருஷத்தில தானே சார்.

எம்.எம்.அப்துல்லா said...

ஆத்தி நான் தெரியாம வந்துட்டேன்.
அப்பீட்டு :)))

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/ஆத்தி நான் தெரியாம வந்துட்டேன்.
அப்பீட்டு :)))/

ஆஹா. நான் காலையில பழமை இடுகையில இப்படித்தான் ஒடி வந்தேன்.:)))

ரோஸ்விக் said...

படிச்சவன் பாட்டை கெடுத்தான்...எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்னு தான் இன்னும் நிலைமை இருக்கு.

அரசியல் வியாதிகள் தான் ஓட்டுக்கு அலையுதுங்கன்னா... நீதிபதிகள் எதுக்கு இப்படி இருக்காங்கன்னு தெரியல...

நீதிபதிகள் இன்னும் சட்டத்தையே சொல்லிகிட்டு இருந்தா...எப்போ தான் நீதிய சொல்லப் போறாங்களோ...?

அருமையா எழுதீருக்கீங்க...வாழ்த்துக்கள் அண்ணாச்சி....:-)

அய்யயோ...நம்மளும் தெரியாம வந்துட்டேன்னு ஓடிருக்கலமோ? :-))

vasu balaji said...

ரோஸ்விக் said...

/அருமையா எழுதீருக்கீங்க...வாழ்த்துக்கள் அண்ணாச்சி....:-)/

நன்றி ரோஸ்விக்.

/அய்யயோ...நம்மளும் தெரியாம வந்துட்டேன்னு ஓடிருக்கலமோ? :-))/

=))

Prasanna said...

//கிரிக்கட் வீரராகவும், ஜீன்ஸ் பிள்ளையார் //
போன தடவை AK47 பிள்ளையார் டாப்பு :)

//இந்தக் கூத்தெல்லாம் சமீபத்தில்தானே பெரிய அளவில் நடக்கிறது?//
ஆமா ஆமா.. இவ்ளோ பெரிய கணபதிகளை கொஞ்ச வருஷம் முன்னாடி எல்லாம் நான் பார்த்ததே இல்ல..

//வழி செய்தாலே இந்தக் கேடு பெரிய அளவில் மட்டுப்படும்.//
இனிமேல் மட்டு படுத்த முடியாது என்று தான் நினைக்கிறேன்..

Prasanna said...

இந்த Background கலரும் font கலரும் ஒரே மாதிரி இருக்கறதால சரியா படிக்க முடியல.. எனக்கு மட்டும் தான் அப்டி தெரியுதா..?

vasu balaji said...

பிரசன்ன குமார் said...

/இனிமேல் மட்டு படுத்த முடியாது என்று தான் நினைக்கிறேன்../

ஆறெல்லாம் தூர்ந்து போன பிறகு?

/இந்த Background கலரும் font கலரும் ஒரே மாதிரி இருக்கறதால சரியா படிக்க முடியல.. எனக்கு மட்டும் தான் அப்டி தெரியுதா..?/

ஆமாங்க. ஒரு காரணம் ஒரு வேளை அட்மின் jpg ஃபைல்களை தடுத்திருக்கலாம் அல்லது photobucket social தளம் என்று தடுத்திருக்கலாம். பின்புலம் Photobucketல் உள்ள jpg ஃபைல்கள்.

sathishsangkavi.blogspot.com said...

சுற்றுச்சூழலா அப்படின்னா???

இது தான் ஒவ்வொரு பாமரனின் பதில்......

அன்புடன் மலிக்கா said...

பிரியமான சகோதரனின் கருத்துக்களோடு
நானும் இணைந்துகொள்கிறேன்

நல்லதொரு இடுகை..

vasu balaji said...

Sangkavi said...

/சுற்றுச்சூழலா அப்படின்னா???

இது தான் ஒவ்வொரு பாமரனின் பதில்....../

வாஸ்தவம்.முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/பிரியமான சகோதரனின் கருத்துக்களோடு
நானும் இணைந்துகொள்கிறேன்

நல்லதொரு இடுகை/

நன்றி மலிக்கா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.இதுபோல மதம் என்கிற பெயரால் நடக்கும் கூத்துகள் ஏராளம். எந்தப் பிள்ளையார் டான்ஸ் ஷோவும்,ராத்திரி நேரத்துப் பூஜையில் பாடலும் கேட்கிறார் என்று தெரியவில்லை.எல்லாம் நம்ம மக்கள் அடிக்கிற கூத்து.சுற்றுப்புற சூழல் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத ஆட்டு மந்தைகள்நாம்.

vasu balaji said...

ஸ்ரீ said...

/நல்ல பதிவு.இதுபோல மதம் என்கிற பெயரால் நடக்கும் கூத்துகள் ஏராளம். எந்தப் பிள்ளையார் டான்ஸ் ஷோவும்,ராத்திரி நேரத்துப் பூஜையில் பாடலும் கேட்கிறார் என்று தெரியவில்லை.எல்லாம் நம்ம மக்கள் அடிக்கிற கூத்து.சுற்றுப்புற சூழல் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத ஆட்டு மந்தைகள்நாம்./

நன்றி ஸ்ரீ.

ஹேமா said...

சாமி,கோயில்,திருவிழா என்கிற பெயரில் நடக்கும் அட்டகாசங்களும் அநியாயங்களும் !நல்லாவே சொல்லியிருக்கிறீங்க பாமரன் அண்ணா.யார் காதிலயாச்சும் ஏறணுமே !

சரி ஊர்லதான்னா பாத்தா இங்கயுமில்ல இந்த அட்டகாசம் நடக்குது.வெள்ளைக்காரன் ஒருசிலர் முகம் சுழிக்கக் காணிவேல்ன்னு வேடிக்கை பாக்கிறான்.

vasu balaji said...

ஹேமா said...

//சாமி,கோயில்,திருவிழா என்கிற பெயரில் நடக்கும் அட்டகாசங்களும் அநியாயங்களும் !நல்லாவே சொல்லியிருக்கிறீங்க பாமரன் அண்ணா.யார் காதிலயாச்சும் ஏறணுமே !

சரி ஊர்லதான்னா பாத்தா இங்கயுமில்ல இந்த அட்டகாசம் நடக்குது.வெள்ளைக்காரன் ஒருசிலர் முகம் சுழிக்கக் காணிவேல்ன்னு வேடிக்கை பாக்கிறான்.//

நன்றி ஹேமா.

உங்கள் ராட் மாதவ் said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

பின்னோக்கி said...

ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ்ல செய்யுறது. கரையாது. அதுவும் பிள்ளையார காலால அழுத்தி, அத அடிச்சு..கரைக்க ரொம்ப முயற்சி பண்ணுவாங்க. கூத்து.. வேறென்ன சொல்ல.

ஐயோ ! உங்களுக்கு சட்டமெல்லாம் தெரியும் போலயிருக்கு. எதாவது தப்பா சொல்லியிருந்த மன்னிச்சுக்கோங்கோவ்வ்வ்வ்வ்.

vasu balaji said...

பின்னோக்கி said...

/ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ்ல செய்யுறது. கரையாது. அதுவும் பிள்ளையார காலால அழுத்தி, அத அடிச்சு..கரைக்க ரொம்ப முயற்சி பண்ணுவாங்க. கூத்து.. வேறென்ன சொல்ல.//

அதான். இதில போகாத பக்தி சிலை வைக்க கூடாதுன்னா போய்டுமா?

//ஐயோ ! உங்களுக்கு சட்டமெல்லாம் தெரியும் போலயிருக்கு. எதாவது தப்பா சொல்லியிருந்த மன்னிச்சுக்கோங்கோவ்வ்வ்வ்வ்.//

ஆமாம். இந்த ஃபோடோ சட்டமெல்லாம் நல்லா தெரியுமே.

ஈ ரா said...

வீட்டுக்குள் கொண்டாடப்பட்ட விழாவை பொது எதிரியான வெள்ளைக்காரர்களை எதிர்ப்பதற்காக மக்களை ஒருங்கிணைத்து வீதிக்கு கொண்டு வந்தது பால கங்காதர திலகர். இன்றைக்கு பொது எதிரி என்பது சுட்டுப் புற சீர்கேடும், நீர் மாசுபடுதலும், பாதுகாப்புக் குறைபாடும்தான். எனவே அதற்க்கேற்றார்ப் போல் விழா முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றபடி நீங்கள் கூடியிருப்பதுபோல் ரசாயன பொருட்களை தவிர்ப்பதோடு நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படும் பொருட்களைக் கொண்டு பிள்ளையார் செய்யலாம்..

cheena (சீனா) said...

ம்ம்ம் சிந்திக்க வேண்டிய இடுகை - ஆனா நம்மால ஒண்ணும் செய்ய முடியாது - பிள்ளையார ஒதெக்கத்தான் முடியும் - கடற்கரையிலே அடிச்சு ஒடச்சு காலால மிதிச்சி - அய்யொ - கண்றாவிக் காச்சி எல்லாஅம் டிவிலே விலாவாரியா காட்றானூங்களே

நல்வாழ்த்துகள் பாலா

vasu balaji said...

ஈ ரா said...

/மற்றபடி நீங்கள் கூடியிருப்பதுபோல் ரசாயன பொருட்களை தவிர்ப்பதோடு நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படும் பொருட்களைக் கொண்டு பிள்ளையார் செய்யலாம்../

அப்படியல்ல ஈ.ரா. மதநம்பிக்கை என்று வருமேயானால் களிமண் தவிர வேறு எதிலும் செய்ய முடியாது. அதையும் விட, இதனால் சமுதாயத்திற்கு என்ன பலன்.

இருக்கிற நீர்நிலைகளும் நீரைத் தேக்கிவைக்காமலல்லவா போகும்.

விழா முடிந்ததும் அதை அழிக்க புல்டோசர், கால், கட்டை என்று அடிக்கும் கண்ராவிக்கா இவ்வளவு செலவும் போராட்டமும்?

vasu balaji said...

cheena (சீனா) said...

//ம்ம்ம் சிந்திக்க வேண்டிய இடுகை - ஆனா நம்மால ஒண்ணும் செய்ய முடியாது - பிள்ளையார ஒதெக்கத்தான் முடியும் - கடற்கரையிலே அடிச்சு ஒடச்சு காலால மிதிச்சி - அய்யொ - கண்றாவிக் காச்சி எல்லாஅம் டிவிலே விலாவாரியா காட்றானூங்களே

நல்வாழ்த்துகள் பாலா//

சார். இந்தக் கூத்துக்கு செக்யூரிடிக்கு எவ்வளவு செலவு? அவ்வ்வ்வ்வ்வ்வ்