Sunday, November 8, 2009

தங்கமணி காமெடி பீஸா?

தமிழ் சினிமா பார்ப்பதில் உள்ள ரிஸ்கினாலும், அலுவலகத்திலிருந்து அவசர வேலை என்று சொல்லி போய்வரும் தூரத்தில் இருந்த திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களே ஓடியதாலும், அரை வாக்கியம் முழுதாய்ப் புரியாவிட்டாலும், சிரிப்பவர்களோடு சிரித்து, சீட்டியடிப்பவர்களோடு அடித்து ஒரு மார்க்கமாக ஆங்கிலப் படங்களின் ரசிகனானேன்.

ப்ரொமோஷனில் கர்நாடக வனப்பகுதியான சக்லேஷ்பூரில் பணியிலிருந்தபோது ரங்கமணியாக நேர்ந்தது. வெள்ளிக்கிழமை இரவில் கிளம்பி சனி மாலை வந்து, ஞாயிறு மதியம் கிளம்பும் மாதம் ஒரு முறை விசிட்டில் வீட்டுத் தேவைகளை கவனிக்கவும், 2 வேளை வீட்டுச் சாப்பாடு சாப்பிடவும் தவிர வேறொன்றுக்கும் நேரமில்லாமல் போனது.

ஒன்பது மாதத்திற்குப் பிறகு மாற்றலில் சென்னை வந்த பிறகு மெதுவாய்த் தங்கமணியின் நச்சரிப்பு துவங்கியது.வீடு ஆஃபீஸ்னே இருந்தா எப்படி. வெளிய வாசல்ல கூட்டிட்டு போகமாட்டிங்களான்னு. அதுக்கென்னாம்மா வாக்கிங் போகலாம்னு ஒரு நாள் கூட்டிட்டு போனப்பதான் வாசல்லன்னா சினிமா, பீச் இத்யாதிங்கற ரகசியம் புரிஞ்சது.

கேள்வி, கெஞ்சலாகி, கெஞ்சல் கோபமாகி, கோபம் அழுகையாகி ஒரு கட்டத்தில் தப்பாது என்ற நிலையில், சரி சினிமா போகலாமா என்று கேட்டே விட்டேன். இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரைக்கும் வாய் நீள என்.டி.ஆர், ஸ்ரீதேவி நடித்த வேடகாடு போகவேண்டும் என்ற விருப்பத்தை கிட்டத்தட்ட மிரட்டலாகவே சொன்னார் தங்கமணி.

ஒரு போறாத நாளில் டிக்கட் ரிஸ்ர்வ் செய்து கொண்டு சத்யம் தியேட்டரில் அந்தப் படத்துக்கு போனோம். நான் பார்க்கும் முதல் தெலுங்குப்படம் என்பதாலும், மொழியறிவு போதாது என்பதாலும், கொஞ்சம் டென்ஷனிருந்தாலும், ஆங்கிலப் பட உத்தி கை கொடுக்கும் என்ற தைரியமும் இருந்தது.

என் நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குவது போல் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்.டி.ஆர் வசனம் பேசும்போது மேல் பல் செட் அவிழ்வதும், பொறையைக் கவ்விப்பிடிப்பது போல் அவ் என்று கவ்விக் கொண்டு அதே ஃப்ளோவில் அவர் வசனம் பேசுவதும் பார்த்ததும் சிரித்து விட்டேன்.

ஹக் என்ற சத்தத்தோடு என் சிரிப்பு நிற்கவும்தான் தங்கமணி முழங்கையால் இடுப்பில் இடித்ததையும் சுற்றி இருப்பவர்கள் ஏன் சிரிச்சான் லூசு என்று பார்ப்பதையும் உணர்ந்தேன். சின்னத்தம்பி கவுண்டர் மாதிரி சிரிக்கக் கூடாத இடத்தில் சிரிப்பதும் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காமலும் இருந்தேன். அப்புறம் காமெடி சீன் வர இன்னொரு இடி. எல்லாரும் சிரிக்கவும் நானும் சிரித்தேன். ஆஹா, இனிமேல் இடிச்சா சிரிக்கணும்னு இருக்க, இடிச்ச இடத்துலயே பொக்கு பொக்குன்னு இடி விழவும் கையை மறைவாக வைத்து உட்கார்ந்தேன்.

அந்த இருட்டிலும் திரையை விட்டு கண்ணெடுக்காமல், எப்படித்தான் விலாவில் இடித்தாள் என்று எனக்கு இன்னும் பிடி படவில்லை. ஒரு சீனில் ஸ்ரீதேவியை கொஞ்சிக் கொண்டு பேசும்போது மூன்றுமுறை பல்செட் அவிழ்ந்ததும், கவ்வியதும் அதைப் பார்த்து ஸ்ரீதேவியே சிரித்தது போல் தோன்ற அடக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்.

ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்த படி ஸ்ரீதேவியும் என்.டி. ஆரும் ஆட அந்தம்முணி ஆடினா மாதிரி அடுத்த வரியில் என்.டி. ஆர் சற்றே குனிந்த படி ஆடுவதை பின்புறம் காட்ட, யானை அன்டர்வேர் போட்டுக் கொண்டு நடப்பது போல் எனக்கு கற்பனை விரிய மனுசன் சிரிக்காம இருக்க முடியுமா?

இன்டர்வெலில் அத்தனை ரசிகர்களும் கொலை வெறியோடு என்னைப் பார்க்க, தங்கமணி கோபமாய் ஏன் சிரிச்சீங்க எனக் கேட்க சொல்லியே விட்டேன். வேணும்னுதான் பண்றீங்கன்னு சண்டைக்கு வரவும், இனிமே சினிமான்னு கேட்டா பாருங்கன்னு எகிறவும், என்.டி. ஆருக்கு தேங்க்ஸ் சொன்னேன்.

பிறகு வீட்டில், டி.வியில் சினிமா பார்க்கும் போது காமெடி சீன் வந்தால் பளார் பளார் என்று தொடை முதுகு என்று அறை கொடுத்தபடி தங்கமணி சிரிக்கவும் மெதுவாக சந்தேகம் வந்தது. அடிக்கிறதுக்கு சாக்குன்னு அடிக்கிறாளா, இல்லை ரசிக்கிற அழகா என்று. டிவி பார்க‌ற‌த‌ நிப்பாட்டிட்டு ப‌டிக்க‌ற‌ ப‌ழ‌க்க‌த்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.

காமெடிக்கெல்லாம் ர‌சிச்சி அடிச்சி சிரிக்கிற‌ ஆளாச்சே. காமெடி பீஸ்னு நினைச்சு ஒரு முறை குமுத‌த்தில் ஒரு ஜோக் ப‌டிச்சிட்டிருக்கிற‌ப்ப‌ கூப்பிட்டு சொன்னேன். இங்க‌ பாரு, ஒருத்த‌ன் கேக்குறான், 2 டாக்ட‌ர் பார்த்து நான் பூட்ட‌ கேஸுனு சொல்லியும் நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி டாக்ட‌ர் வைத்திய‌ம் ப‌ண்றீங்க‌ன்னா, அவ‌ரு அவ‌ங்க ஹாஸ்பிட‌ல் க‌ட்ட‌ல‌யேங்குறாருன்னு சொல்லி சிரிச்சா, ம‌ர‌ம் மாதிரி நிக்குது.

என்னாம்மான்னேன். இதில‌ எங்க‌ ஜோக் இருக்குன்னுச்சி. கிட்ட‌த் த‌ட்ட‌ கோனார் நோட்ஸ் மாதிரி விள‌க்கியும், என்ன‌மோ என‌க்கு சிரிப்பு வ‌ர‌லைன்னு நொடிச்சிகிட்டு போனா என்ன‌ ப‌ண்ண‌? அப்புற‌ம் ஒரு இர‌ண்டு மூன்று முறை அரைநிமிட‌ ஜோக்குக்கு அரை ம‌ணி விள‌க்க‌ம்னு ஆக‌ இது எப்புடின்னு பிடிப‌ட‌வே இல்லை.

சும்மா சொல்ல‌க் கூடாது. கொஞ்ச‌மும் சிரிக்காம‌ த‌ங்க‌ம‌ணி சில‌ ச‌ம‌ய‌ம் போடுற‌பிட்டு இருக்கே. உல‌க‌ம‌கா காமெடிங்க‌.

என‌க்கே பேர் த‌க‌றாரிருக்க‌, கோவில்ல‌ அர்ச்ச‌னைக்கு பேரு கேட்க‌, என் பேரு ம‌ற‌ந்து போய் ம‌க‌ள்ட‌ உங்க‌ப்பா பேரு சொல்லுடின்னு சொல்ல‌, அர்ச்ச‌க‌ர் சீரிய‌ஸா இந்த‌க் கால‌த்துல‌ புருச‌ன் பேரு சொல்ல‌மாட்டேன்னு இருக்கியேம்மா, க்ரேட்னு ச‌ர்டிஃபிகேட் கொடுத்த‌த‌ சொல்லுற‌தா?

ஒக‌ன‌க்க‌ல் போய் ச‌றுக்கி விழுந்து கை ஃப்ரேக்ச‌ர் ஆகி டாக்ட‌ர் எங்க‌ம்மா எப்ப‌டி விழுந்தீங்க‌ன்னா ஒக‌ன‌க்க‌ல்ல‌  தொப்புன்னு ஊந்துட்டேன்னு சொன்ன‌த‌ கேட்டு அந்தாளு சிரிச்ச‌த‌ சொல்ற‌தா?

மின‌ர‌ல் வாட்ட‌ர் தீந்து போச்சின்னு க‌டைக்கார‌னுக்கு ஃபோன் ப‌ண்ணி அந்தாளு திங்க‌க் கிழ‌மை போடறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க் கிழ‌மை வ‌ர‌, என்ன‌ங்க‌ ம‌ண்ட‌ய‌ போட்டுடுவேன்னீங்க‌ன்னு சொல்ல‌ அந்தாளு அடுத்த‌ அடி வைக்காம‌ சிலையா நிக்க‌, இன்னைக்கு செவ்வாய்க் கிழ‌மை வ‌ந்தும் நான் சொல்ற‌ வ‌ரைக்கும் போட‌ல‌யேன்னு சொன்ன‌ப்புற‌ம் உசிர் வ‌ந்து ந‌ட‌ந்த‌த‌ சொல்ற‌தா?

எப்புடியோ வடிவேலு ஜோக் மட்டும் சரியா புரிஞ்சிடும். டைமிங்கறது இதுதானோ?
Post a Comment