Thursday, November 5, 2009

பெயர் வினை..

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்னார். குழந்தை பிறந்தால் கடனை உடனை வாங்கி ஊரைக்கூட்டி, பஞ்சாங்கம் பார்த்து அல்லது பெரியவர் விருப்பப்படி அழகாக ஒரு பெயரை வைக்கிறீர்கள்.

ஆனால் அந்தப் பெயர் வைத்து நீங்கள் கூப்பிட்டால் அது  உணர்ந்து செயல்படும் வயது அதாவது இரண்டு அல்லது மூன்று வயதில் அந்தப் பெயரை விட்டு, ஏ சனியனே அங்க போகாத, ஏ எருமை சீக்கிரம் சாப்பிடு, ஏ மூதேவி தண்ணி கொண்டுவா என்றுதான் பெரும்பாலும் அழைக்கிறீர்கள்.

இதுக்கெதுக்கு அவ்வளவு செலவு என்று கூறி நல்ல சொற்களை பேசுவது குறித்த வள்ளுவனின் குறளைக் கூறி அதற்குமுன் இப்படி ஒவ்வாத பெயர் கூறி குழந்தைகளை அழைப்பதை நிறுத்தத் தொடங்குவோம் என்றார்.

அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானேன்னு சலிக்காதீங்க. முனுசாமி அய்யா சொன்னது கவனம். அதாவது கூப்புடுற ஒரு பேரே சரியா கூப்புடுறதில்லை. இதுல நம்ம வீட்டு வழமுறைன்னு மூணு பேரு காதுல சொல்லி பேரு வைப்பாங்களாம்.

பத்து நாள் குழந்தைக்கு எங்க கவனமிருக்கும் காதுல சொன்ன பேரு. ஆக ஜாதகத்தில் பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தை சுப ஜனனம்னு எழுதிட்டாங்க. அப்புறம் திருப்பதி போனபோது யாரோ வடக்கத்தி சிறுமி பாலாஜின்னு கூப்பிட அதுவே நிலைச்சிப் போச்சி எனக்கு.

எங்கத இப்புடின்னா எங்கப்பாருக்கு வச்ச பேரு விஸ்வநாதனாம். அதேனோ வாசுதேவமூர்த்தின்னு ஒரு பேரு வந்து அதையும் இவரு வி.வி.மூர்த்தின்னு சுருக்கி, கூப்புடுறவங்க வாசுன்னு கூப்பிட்டு ஏக குழப்பம்.

எங்கப்பாரு தங்கமணி அதாங்க எங்கம்மா பேரு நிஜமாவே தங்கமணிதான். அது ஏனோ தங்கம்மாள்னு மருவிப்போச்சு. (அட இருங்க வெண்ணெய் சங்கத் தலைவரே. சொல்லுவம்ல. வெண்ணைக்கும் கணபதி சுப்பிரமணியம் என்கிற ரவிசங்கர்தான் பேரு).

ரேஷன் கார்டுல வி.வி.மூர்த்தி, தங்கம்மாள், பாலாஜின்னு இருக்கும். வேற ஒண்ணில வாசுதேவ மூர்த்தி, தங்கம், பாலசுப்பிரமணின்னு இருக்கும். எதுக்கு என்ன பேரு குடுத்தோம்னே தெரியாம போச்சி.

வேலைக்கு ஆர்டர் வந்து வெரிஃபிகேஷன் போனப்ப வெடிச்சது முதல் குண்டு. S.S.L.C புத்தகத்தை பார்த்துட்டு அந்த எழுத்தர் உதட்ட பிதுக்கி உம்பேரு பாலாஜின்னு இருக்கு, அப்பா பேரு வி.வி.மூர்த்தின்னு இருக்கு. பெற்றோர் கையெழுத்தில தங்கம்மாள்னு இருக்கு. அலுவலக ஆவணப்படி வி.வாசுதேவ மூர்த்தி, மனைவி தங்கமணி, பையன் பாலசுப்பிரமணியன். அதனால நீ அவனில்லைன்னுட்டாரு.

அரண்டு போய் அய்யா இதோ அம்மாவோட பென்ஷன் ஆர்டர். இதில பாருங்க தங்கமணி, மறைந்த திரு வி.வி. மூர்த்தியின் மனைவின்னு இருக்குன்னு நீட்டுனேன். சளைக்காம சொறிஞ்சிகிட்டு சரி, வி.வி. மூர்த்தி பொண்டாட்டி தங்கமணின்னு நான் ஒத்துக்குறேன். உன் சர்டிஃபிகேட்ல தங்கம்மாள், உன் பேரு பாலாஜின்னு இருக்கேன்னு பிட்ட போட்டாரு.

குழம்பிப் போயி, நான் எங்கப்பாரு அலுவலகத்தில கேட்டு பாக்குறங்கன்னு வந்து அம்மாகிட்ட எகுறுனேன். ஜாதகத்த நீட்டுச்சி.அதுல அடுத்த லிங்கு வாசுதேவ மூர்த்திக்கு பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தைன்னு இருந்திச்சி.

எனக்கு அழுறதா சிரிக்கிறதா தெரியல.அப்பாரு அலுவலகத்தில் போய் அவர் நண்பரிடம் விஷயம் சொன்னதும் இருந்த ரிகார்ட் எல்லாம் பார்த்தாரு. நல்ல காலத்துக்கு இறந்ததும் கொடுத்த குடும்ப உறுப்பினர் பட்டியல்ல பாலாஜின்னு பெயர் இருந்தது.

இருடான்னு போய் ஒரு சான்றிதழ் அடிச்சி கொண்டு வந்து கொடுத்தாரு இப்படி:

This is to certify that Sri V. Balaji is also known as Sri V. Balasubramanian. He is s/o  late Sri V. Vasudevamoorthy alias V.V. Moorthy and Mrs V. Thangamani who is also known as Thangammal as per official records. He is not related to me.

அதக் கொண்டு வந்து நீட்டி ஒரு மாதிரியா  பொழைச்சிப் போன்னு வேலையக் குடுத்தாங்க.  அப்பயின்மென்ட் ஆர்டரக் குடுக்குறப்ப அந்த எழுத்தர் சொன்னாரு,இப்புடி வேற எதுக்காவது கேட்டா ஜாதகத்த நீட்டாத. அதில உன் பிறந்த தேதி 29 செப்டம்பர்னு இருக்கு, சர்டிஃபிகேட்ல 10 ஜூன்னு இருக்கு, வில்லங்கமாயிரும்னு. சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி ஏன் நைனா? பேருலதான் கொழப்பிட்டீரு. வயசுலயுமான்னு புலம்புனேன்.

இந்தப் பெயர் குழப்பம் அப்பப்ப தலையக்காட்டி படுத்துற பாடு இருக்கே. படுறவனுக்குதாங்க தெரியும். அப்பாக்கு திதி குடுக்குறப்ப வழக்கமா வர புரோகிதர்னாலும் எப்போ தேவையோ அப்போ, அப்பா பேரு சொல்லும்பாரு. அதனால குழப்பமில்ல. அப்புறம் தாத்தா பேரு சொல்லு, கொள்ளுத் தாத்தா பேரு சொல்லுன்னு நடத்துவாங்க.

ஒரு வாட்டி புதுசா ஒருத்தர் வந்தாரு. எல்லாம் ரெடி பண்ணிகிட்டே யாருக்கு ஸ்ராத்தம்னாரு. எங்கப்பாக்குன்னேன்.  ஹோமத்துக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டே ஊரு கத பேசிட்டு,  பேரு என்னன்னாரு. எம்பேர சொன்னேன் பாலசுப்புரமணியன்னு. சரி ஆரம்பிக்கலாமான்னாரு. சரிங்கன்னேன்.

அப்புறம் ஆரம்பிச்சி மந்திரம் சொல்லச் சொல்லத் திரும்ப சொல்லி, ஒரு வழியா முடியுறப்ப மனசுக்குள்ள ஒரு நமைச்சல். என்னாங்கடா. அப்பாக்கு திவசம், அவரு பேரே கேக்காம பண்ணி முடிச்சிட்டானே இந்தாளுன்னு மெதுவா ஏங்க,எங்கப்பாரு பேரு கேக்கவே இல்லையேன்னேன். அந்தாளு மிரண்டு போய் யோவ் பேரு கேட்டா பாலசுப்புரமணின்னியேன்னாரு.

ஏங்க அது எம்பேருன்னேன். எனக்கெதுக்குடா உம்பேருன்னு எகிறி, சரி, ஹோமம்லாம் பண்ணியாச்சி. இனிமே ஒன்னும் பண்ண முடியாது. போய் குளிச்சிட்டு வான்னு சொல்லி, திரும்ப ஏதோ மந்திரம் சொல்லி விஸ்வநாதன் அப்பா பேருதானேன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லச் சொல்லி ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.

எங்கம்மா அழுதுகிட்டு இப்புடி ஒரு தருவிசில்லாம புள்ள இருக்குமா. திவசம் பண்றப்போ தன் பேரு வருதே தனக்கு தானே பண்ரோமேன்னு தெரியாதான்னு எகிற, நீ பார்த்துக்கிட்டிருந்தியே,  எம்புருசன் பேரு ஏன்டா சொல்லலைன்னு கேக்க கூடாதான்னு நான் எகிற அதுக்கப்புறம், திவசம்னா ஒரு பேப்பர்ல பேருங்க ரெடியா எழுதி வெச்சி வந்ததும் நீட்டிடுவேன். எதுக்கு குழப்பம்?

(டிஸ்கி: ஆமாம் ஒருத்தரு டிக்கட் வாங்கிட்டா லேட்னு போடுறமே.  எப்பவோ போயிருக்க வேண்டியது, லேட்டாதான் செத்ததுன்னு நக்கலா சொல்றா மாதிரியில்லை? )
Post a Comment