Tuesday, September 8, 2009

கனவாய்ச் சில நினைவுகள்..

ஒன்றும் செய்ய இயலாமல்
ஓய்ச்சலாய் இருந்த ஓர் தினம்
கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமான
ஓர் மவுனப் போராட்டம்.

ஏங்கத் தொடங்கியதென் மனது.
இழந்தவர்களைத் தேடி அல்லலுற்றது!
கிடைக்காதெனத் தெரிந்தும்
கிளர்ந்தெழுந்தடிக்கும் வேகம் தாங்கவில்லை.

சிறுவயதில் இழந்த என் அப்பனை
வேண்டியதென் உள்ளம்.
இப்போதிருந்தால் என்ன செய்திருப்பேன்?
செய்திருப்பேன் என்பதை விட‌

இந்த நொடி என்ன செய்யத் துடிக்கிறது என் மனம்?
வெளியே கொஞ்சம் நடக்க அழைக்கலாம்.
முடியாதென்பவரை நான் பிடித்துக் கொள்கிறேன்
வாருங்கள் என்று அழைக்கலாம்.

கொஞ்ச தூரம் எனக் கெஞ்சலாம்.
தவிர்க்கமாட்டாமல் வரும் என் தகப்பனை
பாதி வழியில், எனக்கு ஆசையாய் இருக்கிறதென்று
சிறுவயதில் கை பிடித்து நடந்த‌ மாதிரி நடக்கலாம்.

மகிழ்ந்து போகமாட்டானா என் தகப்பன்?
வம்படியாய் மிட்டாய் வேண்டுமெனலாம்.
கதை சொல்லிக் கூட்டிப் போகச் சொல்லலாம்.
கால் வலிக்கிறது தூக்கு எனச் சொல்லிச் சிரிக்கலாம்.

முடியாமல் ஆங்காங்கே நிற்கும் போது
பராக்குப் பார்க்காமல் வா எனலாம்.
ரயில் பாதையோரம் நின்று
ரயில் காட்டலாம்

சாலையோர ஜவுளிக் கடை நுழைந்து
சேலம் குண்டஞ்சு வேட்டி எடுத்து
வெள்ளைச் சட்டை வாங்கி
அங்கேயே போட வைக்கலாம்.

எனக்கொரு சட்டை என
அடிக்கிற நிறத்தில் எடுக்கலாம்.
முகம் சுளித்து அழகாய்
எடுத்துக் கொடுக்கும் சட்டையில் மகிழலாம்.

களைத்திருக்கும் தகப்பனின்
தோளில் கை போட்டணைத்து
ஆட்டோ பிடித்து
வீடு சேரலாம்.

கால் எடுத்து மடி வைத்து
இதமாய்ப் பிடிக்கலாம்.
கண்மூடிக் கிடக்கையில்
நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிடலாம்.

பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.

யூத்ஃபுல் விகடன் குட்ப்ளாக் பகுதியில்: http://youthful.vikatan.com/youth/index.asp

_________________________

20 comments:

Jerry Eshananda said...

பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலரி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு மாதிரி விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.//
நெஞ்சில் நிற்கும் வரிகள்.

vasu balaji said...

ஜெரி ஈசானந்தா.
/நெஞ்சில் நிற்கும் வரிகள்./

நன்றிங்க

ஈரோடு கதிர் said...

//கால் எடுத்து மடி வைத்து
இதமாய்ப் பிடிக்கலாம்.
கண்மூடிக் கிடக்கையில்
நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிடலாம்.//

ஹய்யா!!!!

//பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு மாதிரி விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.//

அய்யோ!!!

கனவும் யதார்த்தவும்
இரண்டு பத்திகளுக்கிடையே
கிழிந்து தொங்குகிறது...

வேறேன்ன சொல்ல... இதுதான் வாழ்க்கை

கவிதை அருமையோ அருமை

vasu balaji said...

நன்றி கதிர்.

பழமைபேசி said...

இன்னும் ஒருவாட்டி சாயுங்காலம் வந்து படிக்கணும்!

vasu balaji said...

வாங்க பழமை. அதுக்குள்ள நான் ஒரு வாட்டி பார்த்து பிழையில்லாம வைக்கணும்.

இராகவன் நைஜிரியா said...

படித்தேன், ரசித்தேன், மனம் கனத்தேன்.

என்ன அருமையா எழுதியிருக்கீங்க பாலாண்ணே. எழுத்து ஓவ்வொரு நாளும் மெருகேரிக்கிட்டே போகுதுண்ணே...

எல்லாம் நல்லா இருக்கும் போது, தனியாக எதை பற்றி இது நல்லா இருக்கு என்று சொல்லுவது..

ஒரே ஒரு வார்த்தையில் .... அருமை

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/ஒரே ஒரு வார்த்தையில் .... அருமை/

வாங்க இராகவன் சார். நன்றி.

க.பாலாசி said...

//மகிழ்ந்து போகமாட்டானா என் தகப்பன்?
வம்படியாய் மிட்டாய் வேண்டுமெனலாம்.
கதை சொல்லிக் கூட்டிப் போகச் சொல்லலாம்.
கால் வலிக்கிறது தூக்கு எனச் சொல்லிச் சிரிக்கலாம்.//

ஓரு தகப்பன் ஸ்தானத்தில் உங்களது தந்தை இதை பார்க்கவேண்டும்...இன்னும் பெருமைப்படுவார்...

எல்லாமே தந்தைக்காக இழைக்கப்பட்ட உணர்வுகள்...ஏக்கங்கள்...வலிகள்...எப்படி புகழ்வது என்றுதான் தெரியவில்லை...

குட்பிளாக்கில் வந்த இந்த பதிவுக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

ஹய்யா...

குட்பிளாக் இடுகை

வாழ்த்துகள்

vasu balaji said...

க.பாலாஜி
/குட்பிளாக்கில் வந்த இந்த பதிவுக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.../

நன்றி பாலாஜி.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/ஹய்யா...

குட்பிளாக் இடுகை

வாழ்த்துகள்/

நன்றி கதிர்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்.//

ப்ச் இந்த நிலை எப்போ மாறும் சார்? :(

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/ப்ச் இந்த நிலை எப்போ மாறும் சார்? :(/

அந்த ஒரு நொடி தவிர்த்துவிட்டால். அது தான் முடியறதில்லை. :((

கலகலப்ரியா said...

வாழ்த்துக்கள்.. சாரே

vasu balaji said...

கலகலப்ரியா

/வாழ்த்துக்கள்.. சாரே/

:>. நன்றிம்மா.

ஆரூரன் விசுவநாதன் said...

"பள்ளி விட்டு வந்து அப்பாவென்றலறி
அடுத்த நொடி மடியில் விழும் மகனை
மாடு போல் மடியில் விழாதே என்றதில்
வென்றது இன்றைய யதார்த்தம்".

யதார்த்தங்கள் நிஜமென்றாலும், கணவுகளும் கற்பனைகளும், தரும் மகிழ்ச்சிக்கு இணையேதுமில்லை..

அன்புடன்
ஆரூரன்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/யதார்த்தங்கள் நிஜமென்றாலும், கணவுகளும் கற்பனைகளும், தரும் மகிழ்ச்சிக்கு இணையேதுமில்லை../

ஆமாங்க ஆரூரன். அதுமட்டும் இல்லைன்னா வாழ்க்கை நரகமாயிடும். நன்றிங்க.

Radhakrishnan said...

பிரமாதம். இருக்கும்போது இதெல்லாம் செய்திட நேரமில்லாமல் இருப்பவர்களே பலர். இல்லாதபோது ஏற்படும் ஏக்கங்கள் பூர்த்தியடைய வழியில்லாதவை. அற்புதம்.

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன்

/பிரமாதம். இருக்கும்போது இதெல்லாம் செய்திட நேரமில்லாமல் இருப்பவர்களே பலர். இல்லாதபோது ஏற்படும் ஏக்கங்கள் பூர்த்தியடைய வழியில்லாதவை. அற்புதம்./

நன்றிங்க வெ.இரா.