Saturday, September 19, 2009

வாத்தி வேலைக்குப் போறதுக்கு வாத்து மேய்க்கலாம்.

காலையில் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். வெளியில் தொங்கிய போஸ்டரிலேயே வெடிகுண்டு மாதிரி செய்தி. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் டீச்சர் திட்டியதால் தற்கொலைன்னு. பக்கத்துலயே டீக்கடை. அங்க நிக்கிறவங்க முன்னாடியே பேப்பர் வாங்கி படிச்சிகிட்டு அதுல ஒரு ஆளு திட்டுன திட்டு இருக்கே. செய்தி படிக்காததால அப்பொழுது கோபம் வந்தாலும், பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு தற்கொலை பண்ற தைரியம் எப்படி வந்தது?

வீட்டுக்கு வந்ததும் முதல்ல செய்தியைப் படித்தேன். 4வது முடிந்து இப்போது தான் காலாண்டு பரீட்சை முடிந்திருக்கிறது.  ஆசிரியை சொன்னாராம் சரியாகப் படிக்கவில்லை என்றால் திரும்ப நான்காவது வகுப்புக்கே அனுப்பிவிடுவேன் என்று. பயபுள்ள அழுதுகிட்டே மதியம் வீட்டில் வந்து சொன்னானாம். அம்மாக்காரி நான் ஆசிரியை கிட்ட கேக்குறேன்னாங்களாம் எப்படி அப்படி சொல்லலாம்னு. இவருக்கு சாப்பாடு வாங்க(?) கடைக்குப் போக இவரு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்து விட்டாராம். ஆசிரியை தற்கொலைக்குத் தூண்டினார்னு அம்மாக்காரி போலீசில் புகார் கொடுத்தார்களாம். அதன் அடிப்படையில் ஆசிரியர் கைதாம்.

மேலோட்டமாக ஏதோ என்று விடும் விஷயமாகத் தோன்றவில்லை எனக்கு. சரியாக படிக்காத ஒரு சிறுவனை இதை விடக் குறைந்த பட்சமாக என்ன சொல்லிவிட முடியும்? எந்த விதத்தில் இது தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்? ஆசிரியர் ஊக்குவித்திருக்க வேண்டும் என ஒரு கட்சி வாதிடலாம். பொறுங்கள். அந்தக் குழந்தை வந்து இப்படிச் சொல்கிறார்கள் எனக் கூறியதற்கு தாய் கூறிய பதில் என்ன? நான் ஆசிரியையைக் கேட்கிறேன் என்றால், தன் பிள்ளை படிக்காதது பெரிய விடயமில்லை என்றுதானே அர்த்தம்?

ஆசிரியை மிரட்டியது தவறு என்ற எண்ணம் அல்லவா அந்தப் பிஞ்சு நெஞ்சில் பதிந்திருக்கிறது. நீ ஏன் படிக்கவில்லை? படிக்கவில்லை என்றால் என்னாகும், நன்றாகப் படித்தால் ஏன் நான்காவது வகுப்புக்கு அனுப்பப் போகிறார்கள். இனிமேலாவது கவனமாகப் படிக்க வேண்டும் என்று அந்த அம்மா ஏன் சொல்லவில்லை? தற்கொலைக்குத் தூண்டியதாக யாரையாவது சுட்ட வேண்டுமானால் அந்த அம்மாவைத்தான் சுட்ட வேண்டும்.

ஐந்தாவது படிக்கும் மாணவனுக்கு தற்கொலை என்பதோ அதன் விளைவோ தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருக்கும் என்றால், தீக்காயம் எவ்வளவு கொடுமை என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்து திரும்ப நான்காவது போவதை விட சாவது மேல் என அவன் தீர்மானம் செய்யுமளவுக்கு தெளிவானவனா? அப்படியானால், சரியாகப் படித்தால் போதும் என்றல்லவா தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆக, நான் பள்ளியில் சேர்ப்பேன். கட்டணம் செலுத்துவேன். என் குழந்தை படிக்கிறதோ இல்லையோ. கண்டிக்கக் கூடாது. அப்படி ஒரு வேளை ஃபெயிலாகி விட்டால் அப்பொழுதும் ஆசிரியரைத்தான் கிழிப்பார்கள். சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்று. மறு புறம் பள்ளிக்கு அழுத்தம். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கைது செய்வது; பிறகு தான் பொறுப்பில்லை என விடுதலை ஆனாலும், எந்த பத்திரிகையும் ஆசிரியை நிரபராதி என செய்தி வெளியிடப் போவதில்லை. அந்த ஆசிரியைக்கு மாணவர் மேல் என்ன அக்கறை இருக்கும்? என்ன வேண்டுமானாலும் எழுது. நீ பாஸ் என்று தானே இருப்பார்கள்?

எழவெடுத்த சீரியலும் அதை உட்கார்ந்து பார்க்கும் வீட்டுப் பெரியவர்களும் தான் தூண்டியவர்கள். கலகலப்ரியா வாயிலாக குழந்தை வளர்ப்புக்கான பெற்றோருக்கு அயல் நாட்டினர் வெளியிட்ட (தமிழில்!) ஒரு கையேடு காண நேர்ந்தது. வயது வாரியாக குழந்தைகளை ஊடகங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று. வன்முறைக் காட்சிகளே நீண்ட நாள் நினைவில் குடிகொள்ளும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் இங்கே, அத்தை சாப்பாட்டுத் தட்டை எறிந்து திட்டினாள் என்ற சொத்தைக் காரணத்துக்காக மருமகள் சமையலறையில் மண்ணெண்ணெய் டின்னை பார்ப்பதில் தொடர் முடியும்.

பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் கொளுத்திக்கப் போறா என்று அத்தையை திட்டுவதும், மாட்டாள் என்று மாறாகவும் வாதம் செய்துக் கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் காத்திருந்து விலேவாரியாக  மண்ணெண்ணெய் எப்படி ஊற்றிக் கொள்ள வேண்டும், யாரும் காப்பாற்றி விடாமல் சன்னல், கதவு எல்லாம் எப்படி தாளிட வேண்டும், எப்படிக் கொளுத்திக் கொள்ள வேண்டுமென செய்முறை விளக்கம் காணலாம். ஒரு க்ராஃபிக்ஸில் நெருப்பும், மற்றவர்கள் பதறி கதவைத் திற என அலறுவதும் மட்டுமே காண்பிக்கப் படும்.

பார்ப்பவர்களுக்கு, எரிகிற உயிரின் வலியோ அவஸ்தையோ மறைக்கப் படும். அதைப் பார்க்கும் அந்த வயது சிறுவனுக்குப் புரிதல் எந்த அளவில் இருக்கும்? நான் கொளுத்திக் கொண்டால் மற்றவர்கள் பதறுவார்கள். எனக்காக அழுவார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். இது ஒரு மிரட்டலாக பின்விளைவை அறியாமல் செய்யத் தூண்டி இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியாக இருக்கிற மனநிலை உள்ளவன் இப்படி எழவெடுத்த அழுகை சீரியல் பார்க்கப் போவதில்லை. மனம் குமைந்துக் கொண்டிருப்பவர்களும் என் கதையே பெரிய எழவாப் போச்சு. இதுல இத வேற பார்த்து அழணுமா என்று பார்க்கும் மன நிலையில் இருக்கப் போவதில்லை. இதிகாச படங்கள், நாடகங்கள், காலட்சேபங்கள் இருந்த நாட்களிலும் மக்கள் போய் பார்த்து பிழியப் பிழிய அழுது கொண்டு வந்தாலும், கடவுளுக்கே இவ்வளவு கெரகம் புடிச்சி ஆட்டி இருக்கு. நாம எம்மாத்திரம்? சரியாயிடும் என்ற மனோநிலை இருந்தது. இப்போதோ சின்ன மனத் தாங்கலுடன்  தொலைக்காட்சி சீரியல் பார்த்தாலுமே இப்படித் தூண்டுதலாக அமையுமோ எனத் தோன்றுகிறது.

சீரியலுக்கு ஏன் தணிக்கை இல்லை? வன்முறை என்பது மிகப் பரந்த வட்டத்துக்குள் வந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் ஊடகத் தணிக்கை மிக அவசியமென்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம், எழவு என்று எவனாவது கிளம்பினால், குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். விளம்பரக் காசிலேயே குறியாய் இருக்கும் நாய்களுக்கு தன் வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் இது உறைக்கப் போவதில்லை. ஒட்டு மொத்தமாக அத்தனை உயிர்கள் போனதை எதிர்க்கத் துணிவில்லாத, கைக்கூலி ஊடகங்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசஎன்ன தகுதி இருக்கிறது?

இப்படியே போனால், வாத்தி வேலைக்குப் போகிறத விட வாத்து மேய்த்து பிழைக்கலாம் என்று ஆகி விடும். விவசாயம் போயாச்சு. கல்வியும்  கடனே என்றானால் விளங்கிடும் எதிர்கால சந்ததி. 

31 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//ஒட்டு மொத்தமாக அத்தனை உயிர்கள் போனதை எதிர்க்கத் துணிவில்லாத, கைக்கூலி ஊடகங்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசஎன்ன தகுதி இருக்கிறது?//

சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவிற்கு இருந்த துணிவு கூட இவர்களுக்கு இல்லாமல் போனது கேவலமான, அருவருக்கத்தக்க உண்மை!

நல்ல இடுகை தலைவா!
(மற்றவர்கள் உங்களை பாலா சார்! என்றழைக்கும் பொழுது, நான் தலைவா! என்பதில் தவறேதும் உண்டா? தலைவா! )

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்
/சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தாவிற்கு இருந்த துணிவு கூட இவர்களுக்கு இல்லாமல் போனது கேவலமான, அருவருக்கத்தக்க உண்மை!/

சரியாச் சொன்னீங்க.
/நல்ல இடுகை தலைவா!
(மற்றவர்கள் உங்களை பாலா சார்! என்றழைக்கும் பொழுது, நான் தலைவா! என்பதில் தவறேதும் உண்டா? தலைவா! )/

நன்றி. :)). எப்படி வேணுமானாலும் கூப்பிடுங்க.நானும் உங்களை அப்படித்தானே அழைக்கிறேன்.

க.பாலாசி said...

//விளம்பரக் காசிலேயே குறியாய் இருக்கும் நாய்களுக்கு தன் வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் இது உறைக்கப் போவதில்லை//

இதே போன்று நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என் நண்பனொருவன் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்துவிட்டான். என்ன காரணம் என்று விசாரித்தால் அன்று காலை எதோ ஒரு நாடகத்தில் அதே போன்றதொரு காட்சியை குடும்பமே உட்கார்ந்து பார்த்திருக்கிறார்கள். அந்த தொடர் அத்தோடு முடிந்திருக்கிறது. மாலையில் அவன் இப்படி செய்துவிட்டான்.

இதை பார்க்கும் போது எட்டாம் வகுப்பு படிக்கும் பையனே இவ்வாறான ஊடக நிகழ்ச்சிகளால் தன் முடிவை எடுத்துக்கொள்கிறான் என்றால் 4ம் வகுப்பு படிக்கிற பையன் ஏன் இந்த நிலைக்கு போகமாட்டான்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் ஆசிரியை கண்டித்ததால்தான் பையன் தற்கொலைக்கு முயன்றான் என்று சொல்வது உண்மையாக இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது. இதில் பலிகடா ஆக்கப்படுவது என்னவோ ஆசிரியர்கள்தான். இதைபோன்ற நிகழ்வுகள் இப்போது அதிகம் நடக்கிறது. சிறுவர்களின் தற்கொலை நோக்கம் எதுவாக இருந்தாலும் பழி என்னவோ ஆசிரியர்கள் மேல்தான் விழுகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் மாணவனை கண்டிக்கிற உரிமையே ஆசிரியர்களுக்கு கிடையாது என்று ஆகிவிடும் போலிருக்கிறது. இதில் ஊடகங்கள்தான் ஒரு செய்தியை ஊதி பெரிதாக்கி குற்றம் ஆசிரியர்கள் மேல்தான் என்று வாதிடுகின்றன. எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.

நல்ல சிந்தனை அன்பரே...

ஈரோடு கதிர் said...

//வயது வாரியாக குழந்தைகளை ஊடகங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று. வன்முறைக் காட்சிகளே நீண்ட நாள் நினைவில் குடிகொள்ளும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று போட்டிருந்தார்கள்.//

எல்லோரூம் பிஸி புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரமிருக்கு

//ஒரு க்ராஃபிக்ஸில் நெருப்பும், மற்றவர்கள் பதறி கதவைத் திற என அலறுவதும் மட்டுமே காண்பிக்கப் படும். பார்ப்பவர்களுக்கு, எரிகிற உயிரின் வலியோ அவஸ்தையோ மறைக்கப் படும்//

எவன் எக்கேடு கெட்டுப்போனால் இவனுங்களுக்கென்ன

மனிதனுக்கு ஊடகங்கள் பண்ணும் கெடுதல் கொஞ்சம் நஞ்சம் அல்ல,

கொதித்த மனநிலையோடு கொட்டியிருக்கும் உங்கள் அக்கரை மிகுந்த வார்த்தைகளோடு நான் முழுதும் ஒத்துப்போகிறேன்

vasu balaji said...

க.பாலாஜி
/போகிற போக்கைப் பார்த்தால் மாணவனை கண்டிக்கிற உரிமையே ஆசிரியர்களுக்கு கிடையாது என்று ஆகிவிடும் போலிருக்கிறது. இதில் ஊடகங்கள்தான் ஒரு செய்தியை ஊதி பெரிதாக்கி குற்றம் ஆசிரியர்கள் மேல்தான் என்று வாதிடுகின்றன. எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.

நல்ல சிந்தனை அன்பரே.../

ஆமாங்க பாலாஜி. ஆசிரியகளை மிரட்டுவதாகவே அமையும். நன்றி.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/எல்லோரூம் பிஸி புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரமிருக்கு/

/எவன் எக்கேடு கெட்டுப்போனால் இவனுங்களுக்கென்ன

மனிதனுக்கு ஊடகங்கள் பண்ணும் கெடுதல் கொஞ்சம் நஞ்சம் அல்ல,/

/கொதித்த மனநிலையோடு கொட்டியிருக்கும் உங்கள் அக்கரை மிகுந்த வார்த்தைகளோடு நான் முழுதும் ஒத்துப்போகிறேன்/

நன்றி கதிர்.

பழமைபேசி said...

அந்த காலத்துல எல்லாம், நாம வீட்ல போயி எதனா பிராது சொன்னா, என்ன ஏதுன்னு கேட்காம விழும் அடி நமக்கு... ‘நீ என்ன செய்த, அதைச் சொல்ற மொதல்ல’ன்னு.....

நான், என், தனதுன்னு எல்லாமே சுருங்கிப் போச்சுங்கண்ணே, சுருங்கிப் போச்சுங்க....

நான் ஆசிரியர் பணிக் காப்பீட்டு வியாபாரம் நடத்தலாம்ன்னு இருக்கேன்...காப்பீடு இருந்தா, இந்த அக்கப்போர்களுக்கான செலவை நிறுவனம் பாத்துகிடும்... அதனால, இப்பிடி இடுகை எல்லாம் போட்டு, யாவாரத்தைக் கெடுக்க வேணாஞ் செரியா?

பழமைபேசி said...

//மனிதனுக்கு ஊடகங்கள் பண்ணும் கெடுதல் கொஞ்சம் நஞ்சம் அல்ல,//

அட மாப்பு... என்ன இதெல்லாம்? நம்மள்ல எத்துனை பேர் அதுகளைப் புறக்கணிக்க தயாரா இருக்கோம்?? அவ்வ்வ்வ்.........

பழமைபேசி said...

//நன்றி. :)). எப்படி வேணுமானாலும் கூப்பிடுங்க.நானும் உங்களை அப்படித்தானே அழைக்கிறேன்.//

ஓகோ... எல்லாருமே தலைவருங்க அப்ப? இதென்ன பேராயக் கட்சியோ?? இஃகிஃகி!

vasu balaji said...

பழமைபேசி
/அந்த காலத்துல எல்லாம், நாம வீட்ல போயி எதனா பிராது சொன்னா, என்ன ஏதுன்னு கேட்காம விழும் அடி நமக்கு... ‘நீ என்ன செய்த, அதைச் சொல்ற மொதல்ல’ன்னு...../
அதேதான். அங்கயும் வாங்கிட்டு இங்கயும் வேற வாங்கணுமான்னு ஒழுங்கு மருவாதியா இருந்தமா இல்லையா?
/நான் ஆசிரியர் பணிக் காப்பீட்டு வியாபாரம் நடத்தலாம்ன்னு இருக்கேன்...காப்பீடு இருந்தா, இந்த அக்கப்போர்களுக்கான செலவை நிறுவனம் பாத்துகிடும்... அதனால, இப்பிடி இடுகை எல்லாம் போட்டு, யாவாரத்தைக் கெடுக்க வேணாஞ் செரியா?/

அதுஞ்செரிதான். யாராவது இப்புடி ஏதாவது செஞ்சாதான் உண்டு.
நன்றி பழமை.

vasu balaji said...

பழமைபேசி
/அட மாப்பு... என்ன இதெல்லாம்? நம்மள்ல எத்துனை பேர் அதுகளைப் புறக்கணிக்க தயாரா இருக்கோம்?? அவ்வ்வ்வ்........./

இல்லன்னா பக்கத்தூட்ல போய் பாக்கறேன்னு நிப்பாங்களே.

vasu balaji said...

பழமைபேசி
/ஓகோ... எல்லாருமே தலைவருங்க அப்ப? இதென்ன பேராயக் கட்சியோ?? இஃகிஃகி!/

இஃகிஃகி. அதும் நல்லது தானே.

அன்புடன் அருணா said...

இதுபற்றி நானே ஒரு பதிவு போடவேண்டும் என நினத்தேன்.....

மாயாவி said...

ஆசிரியர் பிள்ளைகளை அடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் வார்த்தைகளால் கண்டிப்பதில் எந்த தவறும் இல்லை. வெறுமனே ஆசிரியரை மட்டும் குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை. மாதமொருமுறையாவது தனது பிள்ளைகளின் வகுப்பாசிரியரை சந்தித்துப் பேசி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

Unknown said...

வீட்டிற்குள்ளேயே வந்து விஷம் விற்கும் சீரியல்ககளை தணிக்கை செய்வதை விட தவிர்ப்பதே மேல். எப்படிச் செய்வார்கள் தணிக்கை?.. கள்ளத்தொடர்புக்கு கால நிர்ணயம், கொலை திட்டமிடுதலில் மென்மை, பெண்களைச் சீரழிப்பதற்கு வரைமுறைகள், கூட்டுக்குடும்பத்தைக்க் கலைக்க பரிந்த்துறைக்கப்பட்ட கையேடு என்றா?.. திட்டிக்கொண்டாவது தினமும் பார்ப்பவர்கள் நிறுத்தாதவரை, ஈழம் அல்ல பக்கத்து வீட்டில் கற்பழிப்பு நடந்தால் கூட விளம்பர இடைவெளியில் எட்டிப்பார்த்து விட்டுத் திரும்பி விடுவார்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

//மனிதனுக்கு ஊடகங்கள் பண்ணும் கெடுதல் கொஞ்சம் நஞ்சம் அல்ல,//

நாம் அதை புறக்கணிக்க தயாரில்லையே!

:~(

vasu balaji said...

அன்புடன் அருணா
/இதுபற்றி நானே ஒரு பதிவு போடவேண்டும் என நினத்தேன்...../

ஆசிரியராக உங்கள் கருத்து இன்னும் பலமாக இருக்கும். போடுங்க. நன்றி

vasu balaji said...

மாயாவி
/ஆசிரியரை மட்டும் குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை. மாதமொருமுறையாவது தனது பிள்ளைகளின் வகுப்பாசிரியரை சந்தித்துப் பேசி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்வது நல்லது./

ஆமாங்க கருத்துக்கு நன்றி.

vasu balaji said...

rajesh
/திட்டிக்கொண்டாவது தினமும் பார்ப்பவர்கள் நிறுத்தாதவரை, ஈழம் அல்ல பக்கத்து வீட்டில் கற்பழிப்பு நடந்தால் கூட விளம்பர இடைவெளியில் எட்டிப்பார்த்து விட்டுத் திரும்பி விடுவார்கள்/

அதுதான் யதார்த்தம். எத்தனை திருட்டு போனாலும் இதை விட முடியாது

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/நாம் அதை புறக்கணிக்க தயாரில்லையே!

:~(/

வாங்க வசந்த். :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய இந்தப் பதிவினைப் படித்துவிட்டீர்களா? தலைவரே

vasu balaji said...

SUREஷ் (பழனியிலிருந்து)
/குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய இந்தப் பதிவினைப் படித்துவிட்டீர்களா? தலைவரே/

ஆமாங்க. இப்பொழுதுதான் படித்தேன். முழுமையான அர்த்தமுள்ள கேள்விகள்.

Anonymous said...

for me it looks like a organised crime to prevent education to masses.Some how i feel the politicians are behind this kind of conspiracy. Just attack teachers. They will never guide the pupils properly. So , politicians will get half minded mean voters to vote them based on caste/ regional reasons.
If these people were too get educated or started thinking , These politicians will lose.
This is the main reason , and they pressurising teachers that , teachers should promote a child even if he/she gets 15%. Suppose the teacher is not promoting the kid, All sort of nonsence, right from the local councilers to the political minions will ask questions in PTA meetings.

Parents lost their conscience basically. They dont recognize that they too are part of educating the kid. If teachers cannot even say,to prepare well, God save this country.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

A good article. Well done.

vasu balaji said...

Anonymous
Thank you sir for your views

vasu balaji said...

ஜெஸ்வந்தி
/A good article. Well done./

Thank you sister

SUBBU said...

:((((((((((((

ராஜ நடராஜன் said...

ஐந்தாம் வகுப்புக்கும் தற்கொலைக்கும் லாஜிக் இடிக்குதே!ஐந்தாம் வகுப்பு பையனுக்கு தற்கொலை உணர்வு வருமா? பள்ளி அவர்சன் போன்ற வில்லங்கமே எட்டாவது வகுப்பு ஒண்பது போல இல்ல ஆரம்பிக்கும்?அதுவும் பள்ளி போகும் ஸ்ட்ரைக்காக அல்லவா துவங்கும்?

vasu balaji said...

ராஜ நடராஜன்

வாங்க சார். நல்லா இருக்கீங்களா.
/ஐந்தாம் வகுப்புக்கும் தற்கொலைக்கும் லாஜிக் இடிக்குதே!ஐந்தாம் வகுப்பு பையனுக்கு தற்கொலை உணர்வு வருமா? /

அதான் சார் நம்ப முடியலை.

cheena (சீனா) said...

அன்பின் வானம்பாடி

இது மாதிரி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கூறும் பலவித குற்றச்சாட்டுகளுக்கு நடவடிஉக்கை எடுக்கப்படுகிறது. அதனை ஊடகங்கள் தேவை இல்லாமல் பெரிது படுத்துகின்றன. என்ன செய்வது .......

ஆசிரியப்பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி
என்ற கொளகை தற்போதைய ஆசிரியர்களிடம் மறைந்து வருகிறது.

காலம் தான் மாற்ற வேண்டும்.

நட்புடன் .... சீனா

vasu balaji said...

cheena (சீனா) said...
/ஆசிரியப்பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி
என்ற கொளகை தற்போதைய ஆசிரியர்களிடம் மறைந்து வருகிறது.

காலம் தான் மாற்ற வேண்டும்.

நட்புடன் .... சீனா/

அய்யா வாங்க. ஆமாங்கையா. இந்தப் புரிதல் வந்தாலே ஒழிய எதிர் வரும் சந்ததிக்கு வழிகாட்டியில்லாமல் போய்விடும்.. நன்றி.