Wednesday, September 16, 2009

ஃபேனு வாங்கப் போனேன்...

பத்தொம்பது வயசு கைப்புள்ளைக்கு வந்த சோதனை இது.அட சிரிக்காதீங்க. கோழி மாதிரி றக்கைக்குள்ள வெச்சி காப்பாத்தி திடீர்னு வேலைக்கு போற புள்ளை. வெளி உலகம்னா என்னான்னே தெரியாது. 20ம் நம்பர் பஸ்ல ஏறி சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி மூர்மார்கட் ஃப்ராடுங்களுக்கு தப்பி அலுவலகம் போகத் தெரியும். நர்ஸ் விடுதியில் இறங்கினா பக்கம்னாலும், நிறுத்தாம பாரீஸ் போய்ட்டா என்ன பண்றதுன்னு பயம்.

ஓட்டு வீட்டுல வெயில் காலத்துக்கு கோணிய போட்டு 2 மணிக்கு ஒரு தடவை தண்ணீர் தெளிச்சி ஏர்கண்டிஷன் பண்ணி இருந்த பய. ராவில வீட்டுக்கு வெளிய படுத்து இயற்கையா வாழ்ந்த பய. எமெர்ஜென்ஸி முடியவும், பிடிப்பிலிருந்த அகவிலைப் படியை பட்டுவாடா செய்ய இந்திரா அம்மையார் கருணை புரிந்த நேரம். சுளையா 578 ரூபாய் கையில. கண்ணு முழி பிதுங்க இத வெச்சி என்ன பண்ணுறதுன்னு அம்மாட்ட நீட்ட அத வாங்கிகிட்டு கட்டி புடிச்சி அழுதுச்சி அம்மா.

கைல காச குடுத்தா வாங்கிட்டு என்னமோ பண்ணலாம் தானே?  ஃபேன் வாங்கலாம்டான்னுச்சி. அன்னைக்கு புடிச்சது சனியன். சரின்னு சொல்லிட்டேன். மனசு கெடந்து தவிச்ச தவிப்பிருக்கே. அம்மாக்கு புள்ள சிங்கம்னு நினைப்பு. எனக்குல்ல தெரியும் என் மனப் போராட்டம். எப்புடி வாங்கறது ஃபேன்? கடைல போய் ஒரு கிலோ வெல்லம்னு கேக்குறா மாதிரி ஒரு ஃபேன் குடுங்கன்னா? அவன் மேக்கொண்டு ஏதாச்சும் கேப்பானோ? தெரியாம பேந்த பேந்த விழிச்சா என்ன விட அம்மாக்கு என் புள்ள மக்குன்னு மனசுல விழுந்துடுமோ? சரி ஆபீஸ்ல யாரையாவது கேக்கலாமான்னா அதுவும் கூச்சம். இது கூட தெரியாத ஒரு புண்ணாக்காடா நீன்னு கேவலமா ஆயிடுமே. அந்த வாரம் முழுசும் திருவிழால காணாம போனா மாதிரியே அலைஞ்சேன். மனசுக்குள்ள நானே கடைக்காரன், நானே வாங்க வந்தவன். எப்பவும் கடைக்காரனே கோக்கு மாக்கா கேள்வி கேட்டு விளுத்தறான்.

வெள்ளிக்கிழமை ராத்திரி தூங்கப் போக, அம்மா குண்ட போட்டுச்சி. நாளைக்குப் போய் ஃபேன் வாங்கலாம்டான்னு. தூங்கவா முடியும்? கடவுளே ராத்திரி விடியாமலே இருக்காதான்னெல்லாம் தவிச்சாலும் தவிர்க்கவா முடியும் ? விடிஞ்சிடுச்சி. S.S.LC.  பரிட்சை முதல் நாள் அன்னைக்கு கூட இப்படி கலங்கல.

சனிக்கிழமை ஒன்பது பத்தரை இராகு காலம் முடிய கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க. சாப்பாடு கொள்ள மாட்டங்குது. அம்மா கண்டு பிடிச்சிடுச்சி பய புள்ளைக்கு என்னாமோன்னு. என்ன என்னன்னா என்னத்த சொல்ல. ஒண்ணுமில்லைன்னு முணங்கிக்கிட்டே வயத்துல பட்டாம்பூச்சி பறக்க தவிச்சி உக்காந்து, வாடா கிளம்பலாம்னு கிளம்பவும், நானே மஞ்சத் தண்ணி தெளிச்சி மால போட்டுகிட்டேன். 

நம்ம கஷ்டம் புரியுதா? விவேக்ல வாங்கலாமா? வி.ஜி.பில வாங்கலாமாடான்னு அம்மா( நாசமா போற தினத்தந்திய ஓசில படிச்சிட்டு என்னல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கு இந்த அம்மா). வி.ஜி.பி ரொம்ப தூரம்மா. (அது மவுண்ட்ரோடுல இருக்குன்னு தெரியும். எங்க இறங்கறது? எப்படி போறதுன்னு எனக்கு தெரியாதே). விவேக்லயே வாங்கலாம்மா.(ஆஃபீஸ் போற வழில இருக்குறதால எங்க இறங்கணும்னு தெரியும்). ஸ்டாப் வர முன்னாடியே அடுத்த ஸ்டாப்பில இறங்கணும்மான்னு சொன்னப்ப எம்புள்ளைக்கு என்னால்லாம் தெரியுதுன்னு அம்மா முகத்தில வெளிச்சம்.

ஸ்டாப்பிங்க்ல இறங்கி கடை 100 மீ கூட இல்லை. தூக்கு மேடைக்கு போறவன் கூட கொஞ்சம் வெரசா போயிருப்பான். அடி என்னமோ முன்னாடிதான் வைக்கிறேன். ஆனா நின்ன இடத்துலயே நிக்குறேன்.அம்மா நெட்டித்தள்ளாத குறையா இழுத்து முன்ன விட்டு சதி பண்ணுது. வாயெல்லாம் உலர்ந்து போக கடைக்குள்ள கால வெச்சாச்சி. என்ன தம்பி வேணும்னு வந்த ஆள் கடவுளாத் தெரிஞ்சாரு.

ஒரு செகண்ட்ல பட்ட அவஸ்தைல்லாம் காணாம போய் கட்டிபுடிச்சி அழணும் போல வந்திச்சி. ஃபே ஃபேன் வேணுண்ணான்னு சொன்னது எனக்கே கேட்டுச்சான்னு தெரியல. அதுக்குள்ள ஃபேன்லாம் வரிசையா தொங்கிட்டிருந்த கவுண்டர் கண்ணுல பட்டுச்சி. அந்த கொஞ்ச தூரம் நடந்த நடை இருக்கே. பூமில கால் பாவுச்சுங்கறீங்க? சிவாஜி கூட அப்புடி ஆட்டிகிட்டு நடந்திருக்க மாட்டாரு. ரொம்ப தெனாவட்டா ஃபேன் காண்பிங்கன்னு கேட்டேன்.

மனுசனுக்கு எந்த நிலமையிலயும் அகங்காரம் வந்துடப்படாதுங்கற பாடம் அங்க படிச்சது. என்னிய மாதிரி எத்தன பேர பார்த்திருப்பாரு அந்தாளு. டேபிள் ஃபேனா? சீலிங் ஃபேனான்னு கேட்டாரு. தோள குலுக்கிக்கிட்டே ம்ம்ம்ம் சீலிங்தான்னு சொன்னதுல இதென்னடா கேனக் கேள்வின்னு பட்டுச்சோ தெரியல. எதிரியாய்ட்டாருங்க. என்னா சைசுன்னு கேட்டாரு பாருங்க. கூனிப் போய்ட்டேன். இப்புடி வேற ஒண்ணு இருக்கா? இத நான் எங்க போய் கேட்டு சொல்ல? ஒரே அடியில நாக் அவுட் பண்ணிட்டியே பாவின்னு டரியலாயிட்டேன்.

கேட்டுட்டு வரேன்னு அம்மாவ அங்கயே விட்டு ஓடிடலாமான்னு வந்திச்சி. வயத்த வேற சங்கடம் பண்ண ஆரம்பிச்சிடுச்சி. விரல நீட்டிகிட்டு நிக்கிற புள்ளைய சட்ட பண்ணாம போர்ட்ல எழுதிட்டுருக்கிற வாத்தி மாதிரி தொங்குற ஃபேன் பக்கம் திரும்பி இல்லாத தூசிய தட்டுறான் அந்தாளு. கால குறுக்கி இடுக்கிகிட்டு தவிக்கிற புள்ள மாதிரி நானு.

பாவம்னு பட்டுச்சோ என்னமோ. திரும்பி அந்தாளு தம்பி 42, 46, 48 இதுல எது வேணுங்கறான். நான் என்னத்த கண்டேன். ஆகக் கூடி வெத்து வேட்டுன்னு நிரூபணமாயிடுச்சி. உடம்பு குழைஞ்சிருக்கும் போல. அது!ன்னு சொல்லாத குறையா ரூம் எவ்வளவு பெருசுன்னான். குத்து மதிப்பா ஒரு அளவு சொன்னா, அப்போ 42 போதும்னான். அடுத்த கேள்வி உஷாவா, ஓரியண்டா, க்ராம்ப்டனான்னு.

ஆஃபீஸ்ல பார்த்ததில எல்லாம் ஓரியண்ட். வெள்ளக்காரன் காலத்துது. அதான் நல்லது போலன்னு ஓரியண்ட்னேன். இருந்ததில ஒண்ண பொறுக்கி எவ்வளவுன்னா 475 ரூன்னான். அப்பாடா காசு போதும்னு ஒரு நிம்மதி. சரின்னேன். பய புள்ளைக்கு இன்னும் விளையாட்டு காட்டணும்னு நினைச்சான் போல. ஃபேன எடுத்து கம்பிய முடுக்கி, தூக்கி புடிச்சி, வயர சொருகி பாரு பாருன்னா என்னாத்த பார்க்கறதுன்னு தெரிய வேணாமா?

 ப்ளேடு இல்லாத ஃபேன் சுத்துதான்னு காட்ராராமா. சுத்துது சுத்துது(என் தலைய சொன்னேன்) குடுங்கன்னு வாங்கிகிட்டு  வெளிய வந்தப்ப தூக்கு மேடைக்கு போய் கடைசி நேரத்துல இது அப்புராணின்னு விடுதலை ஆனவன் கூட அவ்வளவு அப்பாடான்னு இருந்திருப்பானான்னு தெரியாது. பஸ்ஸுல ஏறி அம்மாக்கு இடம் கிடைக்க,  குடுடான்னு வாங்கி மடியில வெச்சிகிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க. யம்மா! சிரிக்கிறியா. நான் பட்ட அவஸ்தை எனக்கில்ல தெரியும்னு நானும் சிரிச்சப்ப எப்படி இருந்திருப்பேன்னு நினைச்சாலே சிரிப்பு வரும்.

12 comments:

Radhakrishnan said...

மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அருமை. ஒரு பொருளை வாங்குவதற்குள் படும் அவஸ்தை பெரும அவஸ்தைதான். :)

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன்
/மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அருமை. ஒரு பொருளை வாங்குவதற்குள் படும் அவஸ்தை பெரும அவஸ்தைதான். :)/
:). நன்றிங்க

Anonymous said...

Veetula vanthu eppudi mattuneenga?

vasu balaji said...

Anonymous

/Veetula vanthu eppudi mattuneenga?/

ஸ்டூல் போட்டு ஏறி கொக்கிலதான்:))

ஈரோடு கதிர் said...

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்
மகன் ஃபேன் வாங்கினபோது..

//சுத்துதான்னு காட்ராராமா. சுத்துது சுத்துது(என் தலைய சொன்னேன்)//

படிக்கிற எனக்கே தலை சுத்திடுச்சுங்ணா

இடுகை முழுதும் சிரிப்போ சிரிப்பு

சரி அப்படியே பேன மாட்டுகன கதையும் சொல்லுங்க

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/இடுகை முழுதும் சிரிப்போ சிரிப்பு

சரி அப்படியே பேன மாட்டுகன கதையும் சொல்லுங்க/

:)). நன்றி. நாளைக்கு நான் ரொம்ப வருஷம் கழிச்சி உங்கூருக்கு வந்து நைஞ்சி நாரான கதைய சொல்றேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

ரசிக்கும்படியான பதிவு

தொடருங்கள்
அன்புடன்
ஆரூரன்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/ரசிக்கும்படியான பதிவு

தொடருங்கள்/

நன்றிங்க ஆரூரன்.

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யம்...

சுத்தி சுத்தி அடிவாங்கினீக போல

:))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/சுவாரஸ்யம்...

சுத்தி சுத்தி அடிவாங்கினீக போல

:))/

:)). வாங்க வசந்த். அந்த வயசில அது பெரிய டார்ச்சரா இருந்தது.

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா! உங்கள் ஆதரவை வேண்டி..,


http://thuruthal.blogspot.com/2009/09/blog-post_1559.html

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்
/தலைவா! உங்கள் ஆதரவை வேண்டி..,/

கரும்பு தின்ன கூலியா. வந்துட்டம்ல