Wednesday, September 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.8

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

அட மனசுக்குள்ள புகுந்து கூட உளவு பார்க்குறாங்கப்பா. நம்பிக்கை வச்சாலும் குத்தமாங்க?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஐ.நா 5 மில்லியன் நிதி உதவி

காசு குடுக்க களவாணித்தனம். எல்லாப் பக்கமும் சுத்தி ராணுவத்தான் வந்தப்போ வெடிக்கல, அவன் அடிச்ச அடிக்கு ஓட இடமில்லாம ஜனங்க ஓடினப்ப வெடிக்கல. அப்புறம் ஆவி வந்து வச்சதோடா கண்ணிவெடி?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய கடல் எல்லையில் மேலும் பல இலங்கை மீனவர்கள் கைது

நல்லா விளையாடுறாங்கப்பா பிடிக்கிற விளையாட்டு. பிழைக்க விடுங்கப்பா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக தமிழர்களையும் கொல்வதற்கு ராஜபக்ச திட்டம்: வைகோ

அய்ய். அப்போ பெரியாறில் அணை கட்டி கழியும். காவேரி நீள்ளு நம்மகே. மதராஸ் மனதே!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வோரை, சட்டத் திருத்தங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியும்: கெஹலிய

இவனுங்க மட்டும் எந்த சட்டத்துக்கும் கட்டுப் பட மாட்டானுங்க. சட்ட பூர்வமான முறையில் வெளிநாட்டில் இருந்தாலும் சட்டவிரோதமா கடத்திக் கொண்டுவரவும் முடியும் நாய்ங்களுக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து வோல்டர் கெலின் கவலை தெரிவிப்பு

நொந்த கதியில் இருக்கிறவங்களுக்கு நடவடிக்கை மந்த கதியில்னு புளுவறானே இவன் எந்த கதிக்கு போவானோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பான் கீ மூன் தெரிவிப்பு

உன்னிப்பா அவதானிச்சிதான் உன் கண்ணு சுருங்கி உள்ளுக்குப் போச்சின்னே சொல்லேன். நம்பிட்டு போறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடும் நிபந்தனைகளுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீடிக்கப்படும் சாத்தியம்

இனிமே அச்சாப்புள்ளையா இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டு குடுங்க மக்கா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: சு.சாமி எதிர்ப்பு

இவனகூட சி.ஐ.ஏ ஏஜண்டுன்னெல்லாம் சொன்னாங்க. வாய்ல வார்த்தை இருக்கவே பாய்ஞ்சி விழுந்து தடுக்குது குடிகேடி நாயி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

இவரு பங்கு பிட்டும் போட்டாச்சி. வானம்பாடி! எலக்சன் முடிந்தது, எடுத்து வை ஈழத்தை எப்பொழுதாவது உதவும்னு எப்புடிடா எழுதின?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சேவை பழிவாங்க 100 பிரபாகரன்கள் வருவார்கள்: மங்கள சமரவீர

ம்கும். எந்த நூறு பேருன்னு தேட. எல்லாரையும் போட்டுத் தள்ளுன்னு போடவா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை உடனே வழங்க முடியாது: இலங்கை

அப்போ ஐ.நா.கு சொன்ன ஆறு மாசம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த்

அவன் ராவணனா இருக்கட்டும். நீங்க ரமணாவா போய் வன்னில செத்தது இத்தனை, துப்பாக்கி இத்தனைன்னு புள்ளி விவரம் பேசினா பைத்தியம் புடிச்சி ஓடிடுவாண்ணே. அதாவது செய்ங்கண்ணே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்.பி.க்களை அகதி முகாமுக்கு செல்ல அனுமதிக்கலாமா?இலங்கை ஆலோசனை

அருமையா இருக்கு. எங்களுக்கு அங்கயே தங்கணும் போல இருந்திச்சி. பாதுகாப்புன்னு ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல அடஞ்சிட்டாங்கன்னு புளுகற ஆளுங்களா அனுப்புவாங்கப்பு. எதுக்கு சீனு?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருவாரூர் பல்கலைக்கு முழு சுதந்திரம்: கபில் சிபல்

அப்ப மத்த பல்கலைக் கழகமெல்லாம் அடிமையாத்தான் இருக்கோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாலை மறியல் என்ன என்பதை உலகத்திற்கு எடுத்து காட்டியவாகள் பா.ம.க.வினர்தான்: ராமதாஸ்

உங்கள மாதிரி உலகத்தில எவனாவது மரத்தை வெட்டிப் போட்டு மறியல பண்றானா?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குவாடரோச்சி மீது வழக்கு வாபஸ்.

அவனென்ன தமிழனா?  நாளன்னைக்கு காந்தி ஜயந்தி. கதர் சட்ட போட்டுகிட்டு, மூஞ்சிய சோகமா வெச்சிகிட்டு அஞ்சலி செலுத்துவோம்ல. சத்யமேவ ஜயதே!

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, September 28, 2009

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்..

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்னு பாரதி பாடினப்ப ஒரு பக்கம் பயலுவ வசூல்னு இருப்பாங்க. மறுபக்கம் புள்ளைங்க தலைவிதி இவங்க கைலன்னு தெரிஞ்சிதான் பாடினாரு போல.

ப்ளஸ் டூ. கலியாணம் கட்டுனோம் சரி. புள்ளைய ஏண்டா பெத்தோம்னு பெத்தவங்களையும், ஏண்டா பொறந்தோம்னு புள்ளைங்களையும் ஒரு சேர டரியலாக்குற வாக்கியம் இது. அதுவும், தொகுப்பு வீடுகள்ள அக்கம் பக்கத்துல, அல்லது அலுவலகத்தில் அதே வகுப்புல படிக்கிற பசங்க இருந்துட்டா பெத்தவங்களுக்கு மானப் பிரச்சினையா மாறி உண்டு இல்லைன்னு ஆக்குற விஷயம் இது.

சி.பி.எஸ்.இ தான் பெஸ்ட்னு ஒண்ணு சொல்ல, மாநிலக் கல்விதான் நல்லதுன்னு ஒண்ணு சொல்ல மெட்ரிகுலேஷன்ல போட்டா நல்லதுன்னு ஒண்ணு நிக்க ஒரு மூலையில ஒண்ணு ஓ.எஸ். எல். சின்னு குரல் கொடுக்க அத்தனையும் மீறி அப்பன் ஆயி ஒரு முடிவெடுத்து புள்ளைய சேர்க்கிற கொடுமை உலகத்தில எங்கயாச்சும் உண்டுமாங்க?

ஐ.ஐ.டி இல்லன்னா அகில இந்திய தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுன்னு ஒரு குழு, அகில இந்திய மருத்துவக் கல்வி நுழைவுன்னு ஒரு குழு. எட்டாவதில ஆரம்பிக்கும் இந்த டார்ச்சர். லட்சத்துல கொட்டிக் கொடுத்து ட்யூஷன். (சொந்தமா படிச்சி ரேங்க் வாங்கின பசங்களுக்கு லட்சத்துல இவனுங்க காசு கொடுத்து என் கிட்ட படிச்சன்னு போட்டுக்குறேன், ஃபோடோ குடுன்னு பண்ற கேடு கெட்டத் தனம் தெரியுமாங்க?).

இப்புடி டார்ச்சர்ல புயல்ல அடி பட்ட கட்டுமரம் மாதிரி அலைக்கழிஞ்சி அரை லூசா இப்ப நான் என்னதான் பண்ணட்டும்னு ஆன புள்ளைங்கள, நீ ப்ளஸ் டூ பாஸ் பண்ணா போதும் மக்கான்னு தவிக்க வைக்கிற வியாதி இது. இப்புடி பைத்தியம் புடிச்சா மாதிரி சகலத்தையும் துறந்து படிக்கிற புள்ளைங்களையும், படிக்க வைக்கிற பெத்தவங்களையும் பொறுப்பான ஒரு துறை எவ்வளவு கவனமா கருத்தில் இருத்தி இருக்கணும்?

அப்புடியா இருக்கு? பரிட்சை முடிஞ்சதும் ரெயில் டிக்கட் மாதிரி ஒரு தத்கல் பரிட்சை. மறு கூட்டலுக்கு ஆயிரக் கணக்கில். மறு மதிப்பீட்டுக்கு இன்னும் சில ஆயிரம். இப்புடியெல்லாம் இருக்குன்னு தெரியாம தற்கொலை பண்ணிக்கிட்டு ஆயுசு பூரா எம்புள்ளைய படிக்க வெச்சி கொன்னுட்டனேன்னு தவிக்கிற பெத்தவங்க. பல பேரு ஜெயில் மாதிரி ஆறாவதில இருந்து எங்கயோ ஒரு குறிப்பிட்ட ஊருல மட்டும் சில பள்ளிகள்ள சேர்க்குறதுன்னு ஆகிப் போச்சு.

வெக்கக் கேட்டுக்கு உச்சமா இந்த வருடம் மறு கூட்டல்ல மாநிலத்துலயே முதலாவதா வந்திருக்கு ஒரு மாணவன். அதிலயும் அலக்கழிப்பு. மறு கூட்டல்ல வந்ததால முதல் ரேங்க் குடுக்க முடியாதுன்னு உளறிட்டு, ஆளாளுக்கு கிழிச்சதும் அவசரமா இல்ல இல்ல குடுக்கறோம்னு ஒரு சமாளிப்பு. போன வாரம், மறுகூட்டல்/மறு திருத்தல்ல சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு கவுன்ஸிலிங்காம். அதில் இயக்குனர் பேசிய கருத்துக்கள் அடப்பாவிங்களான்னு திகைக்க வச்சது நிஜம்.

மறு கூட்டல்ல ஒரு மார்க், இரண்டு மார்க் பரவாயில்லை. அறுபது, எண்பது மார்க் எல்லாம் சகஜமா வருது. அதுக்கு அந்தம்முனி சொன்ன ஆலோசனைகள் இருக்கே. இப்புடித்தானே இருந்திருக்கணும். இனிமேத்தான் பண்ண போறீங்களான்னு அறையணும் போல வருது.

1. ஒரு ஆசிரியர் திருத்தி கொடுத்த மதிப்பெண்ணை இன்னொருத்தர் கூட்டிப் போடணுமாம். அவங்களே பண்ணப்படாதாம். (அவங்களுக்கு கூட்டல் தெரியாதோ?)
2. காலையில் ஐந்து மாலையில் ஐந்து பேப்பர் மட்டுமே திருத்த வேண்டுமாம். (அப்போ இவ்வளவு நாளும் நிறைய திருத்தினா நிறைய காசுன்னு தானே இருந்திருக்கு?)
3. அந்தந்த பாடத்தை அந்தத் துறை ஆசிரியை தான் திருத்தணுமாம்.(இவ்வளவு நாள் கணக்கு பேப்பரை சரித்திர ஆசிரியர் திருத்தினாங்களா?)
4. ஒரு மார்க்குக்கு அந்த புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாங்கங்கறதை மனசுல வச்சிக்கணுமாம்.(வாத்திமார் பசங்க படிக்கிறாங்கதானே?)

இதையெல்லாம் தாண்டி பட்டப் படிப்புக்கு அல்லாடுற அல்லாட்டம் தனிக் கதை. அய்யா புண்ணியவான்களே. சமச்சீர் கல்வி இன்னும் என்ன கல்வி எல்லாம் உண்டோ எல்லாத்துக்கும் ஒரே ஒரு குறிக்கோள் வெச்சிக்கிடுங்க. படிக்கிறது பட்டணத்து அதிகாரிங்க புள்ளை மட்டுமில்ல. கூழ்க்காசை மிச்சம் பண்ணி படிக்கணும்னு வெறியோட படிக்கிற குக்கிராமத்து அப்புராணி பசங்களும்தான். சாமானியக் கல்வியா இருக்கட்டும் அது. செய்வீங்களாய்யா?

Sunday, September 27, 2009

அவள், அவன் & அது!

பெண்!

அம்மாவுக்குப் பெண்ணாய்
அனைவருக்கும் தோழியாய்
அடுத்துப் பிறந்தோர்
அன்புச் சகோதரியாய்
அவனுக்கு மனைவியாய்
அனைவருக்கும் தாயாய்
அவள் காலம் முடியக் காத்திருக்கையில்
அவள் மனம் கேட்கிறது
அரைநொடியாவது
அவளுக்காய் வாழ்ந்தாளா என!

*****

நியாயம்தானே!

கடைக்குப் போனேன்
கத்தரிக்கா வாங்கினேன்
வீட்டுக்கு வந்து
வெட்டிப் பார்த்தேன்
அத்தனையும் சொத்தை
அதனாலென்ன?
கடைக்காரனுக்குத் தந்ததும்
கள்ள நோட்டு தானே!

*****

நீதி!

எழும்பூர் கோர்ட்டில்
முன் நிறுத்தச் செல்கையில்
பேருந்து நிலையத்தில்
ஏட்டு சொன்னார்.
ஏய் பி.பி.
இந்தாடா ப்ளேடு
எனக்கும் சேர்த்து
எட்டுப் பேருக்கு
எப்புடியாவது தேத்துடா
பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும்.
இவன் குடுக்கிறது
எனக்கே ஃபுல்லுக்கு போதாது!

*****                                                                                                                                                                                                                                      

Saturday, September 26, 2009

அம்மா..

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி கண் மூடி நின்றாள் உமா. சொல்லொணா துக்கம் தொண்டைய அடைக்க மனதுக்குள் வேண்டினாள். "உனக்குத் தெரியும்தானே? எத்தனைத் தவித்திருப்பேன் இந்தக் குழந்தைக்கு. எத்தனை அழுதிருப்பேன்? என்னை சோதிக்கிறாயா? இவனைப் பிரித்து விடுவாயா என்னிடமிருந்து? ப்ளீஸ். எனக்கு என் குழந்தை வேண்டும். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்கு இப்படி ஒரு சாபம் வேண்டாம்" என்று விம்மி வெடிக்கும் போதே மம்மி என்று வந்து காலைக் கட்டிக் கொண்டான் பிரசாத்.

மார்போடு சேர்த்து அணைத்து பைத்தியம் பிடித்தவள் போல் முத்தமிட்டவாறு அழுத அம்மாவை புரியாமல் கட்டிக் கொண்டது குழந்தை. உமா, எட்டரைக்கெல்லாம் அங்கிருக்கணும், ரெடியா என்று பெட்ரூமிலிருந்து குரல் கொடுத்த கணவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள் உமா.

உமா. தஞ்சாவூரின் மிகப் பெரிய விவசாயக் குடும்பத்தில் ஒற்றைப் பெண் வாரிசு. பெரிய வீட்டில் பாட்டி, தாத்தா, சித்தப்பாக்கள், அத்தை என்று பெரிய குடும்பம். தாத்தா நிஜமாகவே மனுஷன். தன் வீட்டில் வேலை செய்பவனும் ஒரு சொந்தம் போல் நடத்துபவர். அத்தனைப் பேர் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவள். படிப்பிலும் சுட்டி. வேளாண்துறையில் எஞ்சினீரிங் முடித்தவள்.

ரங்கநாத். இந்தியாவின் பெரிய பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. அவர்களின் முதலீடில்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்பதே பெரிய பட்டிமன்றத்துக்கு தலைப்பாகும். சவால்களை எதிர் கொள்வதில் எதிரிகளையும் அசத்துபவன் ரங்கநாத். உமாவின், பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்ற போது முதல் பார்வையிலேயே இவள் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டான். தாத்தா மட்டும் கொஞ்சம் தயங்கினாலும், நல்ல குடும்பம், மிக ஒழுக்கமான பையன் என்பதே தூக்கலாக, அவரும் சம்மதித்து விட திருமணம் நடந்தது.

தனிமையின் தாக்கம் மிகக் கொடுமையாயிருந்தது உமாவுக்கு. குழந்தைக்காக ஏங்கித் தவித்தவளுக்கு வருடங்கள் ஓடியதே தவிர, தாய் என்ற வரம் தள்ளிப் போனது. பிஸினஸ் என்று பறந்த கணவனை கடிவாளமிட்டு மருத்துவரிடம் அழைத்துப் போக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சின்ன பிரச்சினைதான். மருந்து சாப்பிட்டால் போதும் என்ற மருத்துவரின் வார்த்தை ஆறுதலில் மேலும் இரண்டு வருடங்கள் போக பூஜை, விரதமென்று தவமிருந்தாள் உமா.

அதன் பிறகு பிறந்தான் பிரசாத். வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் பூரிப்பும் கொண்டாள் உமா.  திடீரென்று அவனைப் பிரிய நேருமென நினைக்கவே இல்லை. குழந்தை மிகவும் சோர்ந்திருந்தான். இன்றைக்கு டெஸ்ட். முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டுமே என்ற பதைப்பே மேலோங்கியது. தயாராகி, கிளம்புகையில், உமா ஏன் இப்படி இருக்கிறாய்?  குழந்தைக்கு தைரியம் சொல், பயந்து போயிருக்கிறான் என்ற கணவனைப் பார்த்த பார்வையில் இயலாமை வெடித்தது.

அவசரம் அவசரமாக போய்ச் சேர,  ஒரு தாதி வந்து குழந்தையை அழைத்துப் போனாள். பலிக்கு போகும் ஆடுபோல் உதடு பிதுங்க போன பிரசாத்தைக் காண அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது உமாவுக்கு. ஒரு சிஸ்டர் நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரலாம். விசிடர்ஸ் ரூமில் போய் இருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வா, காரில் இருக்கலாம் என்று பார்கிங் செய்த மரத்தடிக்குப் போனபோது இவர்களைப் போலவே கொஞ்சம் பெற்றோர்கள் நின்றிருந்தனர்.

பிரபலம் என்பதால், ரங்கநாத்தின் அறிமுகம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்க,  காரில் உட்கார்ந்து கண் மூடி பிரார்த்தித்தாள் உமா. கடவுளே ரிஸல்ட் நெகடிவாக வரவேண்டும், என்னைக் கைவிடாதே என்று. ஒரு மணி நேரம் ஒரு யுகமாய்க் கழிய,  தளர்ந்து போய் வெளியே வந்த பிரசாத்தை ஓடிச் சென்று அள்ளியெடுத்து கட்டிக் கொண்டாள். அழுதிருப்பான் போலும். அதிக நேரம் காக்க விடாமல், இவர்களை அழைத்தார்கள்.

நான் காரிலிருக்கிறேன் குழந்தையோடு. நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்றபடி தவிப்போடு காரில் இருந்தாள்.  சற்று நேரத்தில் வேக வேகமாக ரங்கநாத் வருவதைக் கண்டு பதறிப் போனாள். விருட்டென காரில் ஏறியவன், பிரசாத் ஏமாற்றிவிட்டான். அட்மிஷன் கிடைக்கவில்லை என்றான். 

இந்தியாவிலேயே பெரிய இன்டர்நேஷனல் ரெஸிடென்ஷியல் ஸ்கூல். தன் ஸ்டேடசிற்கு இங்குதான் சேர்க்க வேண்டும் என்ற கணவனின் பிடிவாதம் நொறுங்கிப் போனதில், குழந்தையைப் பிரிய வேண்டாம் என்ற மகிழ்ச்சியில் கடவுளே கடவுளே, தேங்க்ஸ் என்று மனதில் திரும்பத் திரும்பச் சொல்லியபடி குழந்தையை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள் உமா.  விடு உமா அழாதே என்ற ரங்கநாத்தை மனதுக்குள் "போடாங்கொய்யாலே"  என்று ரகசியமாய்த் திட்டிச் சிரித்தாள்.

பொறுப்பி(லி):கண்ட தமிழ் சினிமா பார்த்துட்டு குழந்தைக்கு அம்மாவ அழவச்சோபீலியா நோய்னு நினைச்சா நானா பொறுப்பு. த்தோ. நான் சுத்த சைவம். அழுகின முட்டைல அடிக்காதிங்க. தக்காளி ஓ.கே.

Thursday, September 24, 2009

இன்னொரு இமெயில் கதை!

காலை விழித்ததிலிருந்தே இனம் புரியாத பதட்டமாக இருந்தது சந்தியாவிற்கு. மணி வேறு ஆகி விட்டது. தாமதமாக எழுந்து பர பரவென ரெடியாகி, எரிச்சலூட்டிய கணவனுக்கு பதில் சொல்லாமல் அலுவலகம் கிளம்பினாள். இன்றைக்குப் பார்த்து மீட்டிங் வேறு இருக்கிறதே என்ற நினைப்பே அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் வெடித்துக் கிளம்பும் போலிருந்தது.

வங்கி, அரசு வேலை என்றில்லாமல் பொட்டிதட்ட வந்ததற்கு நொந்து கொண்டாள். ப்ரோஜக்ட், டார்ஜட், ரெவியூ என்று உயிரெடுப்பான் மீட்டிங்கில். நல்ல காலம் தன்னுடைய செயல்பாடு மிகத் திருப்தியாக இருப்பதாக தலை சொன்னதில் கொஞ்சம் ஆறுதலும் கூடவே இருப்பினும், தனியாக உட்கார்ந்து ஓவென்று அழவேண்டும் போல் வந்தது.

மீட்டிங் முடிய தன் இருக்கைக்கு வந்து கண்ணை மூடிக்கொண்டு, கடவுளே! ஏன் இப்படி சோதிக்கிறாய்? என்று அரற்றியவாறே சேரில் சாய்ந்துக் கொண்டாள். கணவன் மீது வெறுப்பாக வந்தது. சரியான முசுடு. காசுதான் குறி. எல்லாவற்றிற்கும் அவன் கையை எதிர் நோக்கி இருக்க வேண்டும்.

ரொம்ப நல்ல பையன் என்று கட்டி வைத்த அப்பாவின் மேல் கோபமாக வந்தது. நான்கு நாள் முந்தி ரொம்பப் பாசமாக வழிந்து கொண்டு, வெளியே சாப்பிடலாமே இன்றைக்கு என்ற போதே எதற்கோ அடி போடுகிறான் என்ற நினைப்பே மனதில் எழுந்தது.

வேண்டாமென்று சொல்லி விட முடியுமா?  சாப்பிட்டுக் கொண்டே, உன் அலுவலகத்தில் கார் லோன் எவ்வளவு கிடைக்கும் என்றான். இப்பொழுது கடன் எல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள், கிடைக்காது என்றதுமே முகம் மாறி விட்டது. பிடிவாதக்காரன். சரி பரவாயில்லை. சேமிப்பில் இருப்பதைப் போட்டு தவணையில் வாங்கி விடலாம். மாதா மாதம் உன் சம்பளத்தில் கட்டி விடலாம் என்று தீர்மானமாகச் சொன்னான்.

இப்போது இந்தக் கடன் தேவையா என்று மனதில் தோன்றிய கேள்வியை விழுங்கியபடி வீடு திரும்பினாள். சோதனை போல் இரண்டு நாட்களுக்கு முன் அவள் தந்தை போன் செய்தார். தங்கைக்கு ஒரு நல்ல வரன் குதிர்ந்திருக்கிறதாம்.

அவசரமாக நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்களாம். திருமணம் தைமாதத்திற்கு மேல் வைத்துக் கொள்ளலாமாம். அவள் திருமணத்திற்காக சேமித்து வைத்தது நிரந்தர வைப்பில் இருக்கிறதாம். இப்போது  கணக்கு முடித்தாலோ, கடன் என்று போனாலோ ஆகும் நஷ்டத்திற்கும் வட்டிக்கும் ஒன்றிரண்டு சவரனாவது வாங்கலாமாம்.

ஐம்பதினாயிரம் கடனாகக் கொடுத்தால், திருமணத்துக்கு முன்பு தந்து விடுவாராம். நல்ல மனுஷனம்மா. மாப்பிள்ளையிடம் பேசிப் பார். உன் பதில் கிடைத்ததும் நானே வந்து கேட்கிறேன் என்று சொன்ன போது, அப்பா அப்பா என்று மனதிற்குள் சிரித்தாலும்,  கணவனைக் கேட்கவும் முடியாமல், அப்பாவுக்கு இல்லை என்று சொல்லவும் முடியாமல் மனதிற்குள் குமைந்தபடி இருந்தாள் சந்தியா.

 ஸ்ரீதர் அவளைப் போலவே இன்னோரு ப்ரோஜக்டின் பொறுப்பாளர். டென்ஷன் என்பதே இல்லாமல் எப்படி இருக்கிறான் என்று ஆச்சரியமாக இருக்கும். மனம் விட்டுப் பேசக்கூடிய நல்ல நண்பன். நேற்று ஏதோ வேலையாக வந்த ஸ்ரீதர், இவள் முகத்தைப் பார்த்ததும், என்ன சந்தியா? ஏதாவது பிரச்சினையா? நான் ஏதாவது உதவ முடியுமா என்றான்.

அடைத்து வைத்திருந்ததெல்லாம் மொத்தமும் கொட்டி விட்டாள். கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர், கவலைப் படாதே சந்தியா, ஏதாவது வழி இருக்கும். நிதானமாக யோசித்துப் பார் என்றபடி திடீரென்று எழுந்து போய் விட்டான்.

நனவுக்கு மீண்ட சந்தியா, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மின்னஞ்சலில் புகுந்தாள்.  ஸ்ரீதரிடமிருந்து மின்னஞ்சல். பார்த்ததும், தன்னையறியாமல் புன்னகைத்தாள். மின்னஞ்சலைத் திறந்தவள் உறைந்து போனாள்.

சே! ஸ்ரீதரா இப்படி? நல்ல நண்பன் என்று நினைத்து நொடி கூட ஆகவில்லை. அத்தனை நம்பிக்கையிலும் மண்ணடித்து விட்டு இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பி இருக்கிறான்.  நேற்று அவனிடம் தன் மனப் பாரத்தை இறக்கி வைத்த போதே எங்கே பணம் கேட்டு விடுவேன் என்று நினைப்பானோ எனத் தயங்கினாலும், சே சே! அவன் ஜெண்டில்மேன். ஆறுதலுக்குப் பகிர்ந்து கொள்வது புரியும் என்று நினைத்தாளே தவிர இவ்வளவு சீப்பாக நடந்து கொள்வான் என்று நினைக்கவே இல்லை.

திறந்த பிறகு முட்டாள் தனமான அறிவிப்போடு தொடங்கியது கடிதம்.  இதை 10 பேருக்கு அனுப்ப முடியாவிட்டால் திறக்காதே என்று எழுதியிருந்தான். ஏதோ ஒரு சுவாமி படம். அதை 24 மணி நேரத்தில் 10 பேருக்கு அனுப்பினால் 4 நாட்களில் ஒரு அதிசயம் நிகழுமாம். 12 மணி நேரத்தில் அனுப்பினால் 2 நாட்களில் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வருமாம்.  6 மணி நேரத்திற்குள் அனுப்பினால் நிச்சயமாக மனதில் நினைத்திருக்கும் காரியம் நடக்குமாம்.

அனுப்பாமல் விட்டாலோ, டெலிட் செய்தாலோ நிச்சயம் கெடுதல் நிகழும். சொந்தங்கள் விலகிப் போகும். நஷ்டம் ஏற்படும் என்று என்னெல்லாம் உண்டோ அத்தனையும் எழுதியிருந்தது.

இப்படியா செய்வான்? என்று வெறுப்பாக வந்தது. கோபத்தில் ஃபோன் எடுத்து அவன் எண்ணுக்கு அழுத்தினாள். அவன் இன்னும் மீட்டிங்கில் என்பது கவனம் வர, வரட்டும் சாவடிக்கிறேன் என்று கறுவிக் கொண்டு நிதானமாக ஸ்ரீதர் பெயருக்கே பத்து மெயில் அனுப்பிவிட்டு அவன் முகவரியை ஸ்பாமில் போட்டாள் சந்தியா.

(டிஸ்கி: பாதி கதையில வக்கிரமா மனச அலைய விட்டுபோட்டு முடிவில பரதேசின்னு என்ன வஞ்சா நிர்வாகம் பொறுப்பில்லை. அப்பாடா. நானும் டிஸ்கி போட்டுட்டேன்.)

Wednesday, September 23, 2009

வெண்ணையின் லீலையை வென்றார் உண்டோ...

நம்ம வெண்ணெய் ஆதரவாளர்கள் கதிர், பாலாஜி இவங்களுக்கு இந்த இடுகை டிடிகேட் பண்றேன்(பண்பலைல இப்புடிதாங்க சொல்றாங்க).

கண்ணன் லீலையெல்லாம் தூக்கி சாப்டுடும் நம்ம வெண்ணெய் லீலை. பய புள்ளைக்கு பக்தின்னா அப்புடி ஒரு பக்தி. பண்டிகை வருதுன்னா பர பரன்னு ஆய்டுவான். பய புள்ளைக்கு பிரசாதம்னா அப்புடி ஒரு ஆசை. குற்றாலம் போய்ட்டு குளிக்காமன்னாலும் வருவான் கோவிலுக்கு போகாம வரமாட்டான்.

ஒரு மார்கழி மாசம் அண்ணா நகர் ஐயப்பன் கோவில்ல அபிஷேகத்துக்கு குடுத்திருந்தான். நல்ல பனி. காலைல 4 கே அபிஷேகம். பனியில போக வேணாம்டா. விடிஞ்சி மெதுவா போய் பிரசாதம் வாங்கிக்கன்னேன். பயபுள்ளட்ட ஒரு குணம் என்னன்னா, எதிர்த்தே பேசமாட்டான்.

காலைல எழுந்து பார்த்தா ஆளக்காணோம். சரி மணி ஏழாச்சே. கோவிலுக்கு போய் இருப்பான்னு, நான் காலைக்கடன் முடிச்சி, குளிச்சிட்டு வர‌ அய்யா வந்துட்டாரு. நெத்தியில சந்தனம் இருந்தாலும் சாந்தம் மிஸ்ஸிங். நம்மள பார்த்தா பம்முறான். அம்மா முகத்திலயும் என்னமோ ஒரு அவஸ்தை. சாப்பிட்டு அலுவலகம் கிளம்பி ஃப்ரிட்ஜ் மேல வச்சிருந்த கடிகாரத்த தேடினா காணோம்.

எங்க போச்சி?  இங்க தான வெச்சேன். காலைல மணி பார்த்து தானெ குளிக்கப் போனேன்னா கோரசா அம்மாவும் வெண்ணையும் அவனாங்கறாங்க. வா ராசா, உக்காரு. என்னாச்சின்னா ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு நீ சொல்லு நீ சொல்லுங்கறாங்க. அட சொல்லுடான்னா, முதல் நாள் சரின்னு போய் படுத்தவரு, அதென்ன நீ சொல்லி நான் விடிஞ்சப்புறம் போறதுன்னு அஞ்சரைக்கே கிளம்பி போயிருக்காரு.

இவரு சைக்கிள்ள போய்ட்டு வந்துண்டிருக்க ஒருத்தன் பின்னடி வந்து முட்டி விளுந்தா மாதிரி விளுந்து, பாக்கட்ல கை விட்டு ஒரு உடைஞ்சி போன ஊசி மருந்து வயால், ஒரு ப்ரிஸ்கிரிப்ஷன் நனைஞ்சது வெச்சிகிட்டு, மவனே எங்கம்மாக்கு கேன்ஸர். மருந்து வாங்கிட்டு போறேன். இடிச்சி நாசம் பண்ணிட்டியே. 600 ரூபா மருந்து போச்சி. அம்மா உசிரும் போய்டும் நாயேன்னு ரெண்டு வெச்சிருக்கான். மதன் பாப் மாதிரி, அடிக்கிற வேலைல்லாம் வெச்சிக்காத.   காசு தர மாட்டேன்னா சொன்னேன்னு சொல்லிட்டான் நம்மாளு.

அவனும் சரின்னு கூடவே வந்தவன், ஐ.சி.எஃப். குவார்டர்ஸ் வந்ததும் ஒரு வீட்டைக் காண்பிச்சி ஐயரூட்டுல சைக்கிள‌ வச்சி பூட்டுடான்னு சொல்லி சாவிய புடிங்கிட்டான். இவரும் விட்டுட்டு, அவன் வண்டில வந்து , யம்மா கிட்ட பஞ்சாயத்து வெச்சிருக்காரு. அந்தாளு அய்யோ எங்கம்மாக்கு என்னாச்சோன்னு சீன் போடவும், பதறிப் போய், இருப்பா காசு தரேன்னு உள்ள வந்த நேரம் பார்த்து, இவனும் உள்ள வந்து லவட்டிட்டான் போல.

இப்புடி ஒரு அம்மாக்கு, இப்படி ஒரு புள்ளையாடான்னு (என்னா நக்கலு) திட்டி, வாடான்னு இழுத்துண்டு போய் சைக்கிள‌ கொண்டு போக சொல்லிட்டு, மவனே மருந்து வாங்கிட்டு போறேன். எங்கம்மாக்கு ஏதாவது ஆச்சோ, சும்மா விடமாட்டேன்னு ஒரு பிட்ட போட்டு போய்ட்டான். அதான் ரெண்டு பேருக்கும் அவ்வளவு கவலை. ஒரு ரெண்டு நாள் மந்திரிச்சி விட்டா மாதிரியே இருந்தாங்க.

ஒரு சந்தோஷமான விஷயம். அந்தம்மாக்கு ஒன்னும் ஆவக் கூடாதுன்னு எந்த சாமிக்கும் வேண்டிகிட்டு அபிஷேகத்துக்கு குடுக்கலை. அவ்வளவு சோகத்துலையும் ஏந்தம்பி, அவன் அய்யரூட்டுல வெய்ன்னா வெச்சிட்டு வந்துட்டியே, எப்புடிடா? எடுக்கப் போறப்ப அவங்க கிட்டயும் மல்லுக் கட்டவான்னா, ரொம்ப பெருமையா சொல்றான். வைக்கறப்பவே பார்த்தானாம். பெயர் பலகைல ஏதோ ஐயர்னு பேரு இருந்திச்சாம். காசுதான் குடுத்தாச்சில்ல. நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?

Tuesday, September 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.7

இலங்கையின் யுத்தம் தொடர்பான அறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது

செனட் நூலகத்துக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு போகாம உருப்படியா நியாயம் கிடைக்க ஏதாவது பண்ணுங்கடா.
________________________________________________________________________________________________

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்

இதுக்கும் மேல கோரிக்கை வெங்காயம்னு பேசுறானுங்க பாரு. இத வெச்சே இவன் திருடந்தான்னு ஆவறத பாருங்கப்பு.
________________________________________________________________________________________________
அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கை வேண்டாம்னு சொல்ல முடியாதில்ல கிழவனுக்கு.
________________________________________________________________________________________________
பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்படையினரின் கடமைகள் முடிவடையவில்லை: கடற்படைத் தளபதி

ஆமாம். தமிழக மீனவர்ல ஆரம்பிச்சி தமிழ்நாட்டையும் ஒரு கை பார்க்குற வரைக்கும் முடியாதுடா உங்களுக்கு.
________________________________________________________________________________________________

ஐ.நா. பணியாளர்களை விடுவிக்கக் கோரி அதிகாரி லின் பாஸ்கோவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

இதுக்காவது ஐ.நா. படைய அனுப்புங்களேன் பரதேசிகளா. உயிரெல்லாம் உங்களுக்கு மயிருக்கு சமமா?
________________________________________________________________________________________________
ஜீ.எஸ்.பி. சலுகையை நீடிக்குமாறு கிறிஸ்தவ பேராயர் மூலம் ஜனாதிபதி கோரிக்கை

குதிரை கொள்ளுக்கு மட்டும் வாய பொளக்குமாம். கடிவாளம் கண்டா கடிச்சிக்குமாம். பேராயரை எப்படியெல்லாம் பயன் படுத்துறான் பரதேசி.
________________________________________________________________________________________________
இலங்கை அரசு மீது ஐ.நா. அதிகாரிகள் எந்தக் குற்றமும் சுமத்தவில்லை: பாலித கோஹன

அதாண்டா புரியல. என்னா வசியம் வெச்சிங்களோ?
________________________________________________________________________________________________
சனல்-4 வீடியோ விசாரணை திருப்தியில்லை, பக்கச்சார்பானது: ஜ.நா.சபை மீண்டும் விசனம்

இது விசனமில்லை. வசனம். கிளிப்பிள்ளை கூட ஒரு சேஞ்சுக்கு மாத்தி சொல்லும் எழுதி வெச்சி படிப்பிங்களாடா?
________________________________________________________________________________________________
படைகளின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தயார்

அப்ரூவரா மாறலாமுன்னா? செய்வடா எச்ச நீ. அவன விட்டா கக்கிடுவான்ல.
________________________________________________________________________________________________
ஈழப்பிரச்சனை: தமிழக எம்பிக்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்

ஏன்னா இவங்களுக்கு தெரியாது பாரு. இனிமேதான் பரிசீலிக்கப் போறாரு.
________________________________________________________________________________________________
தமிழர்களை கௌரவமாக நடத்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்: ஜெயலலிதா

வாங்களேன். உண்ணாவிரதம் இருக்கலாம். போராடலாம். இது நீங்க சொல்லலைன்னு தான் இருக்காங்களோ?
________________________________________________________________________________________________
இலங்கையில் தொழில் முதலீடு செய்யமாட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

ஆமாம் பின்ன. சன் டிவி தான் டிவியா?
________________________________________________________________________________________________
திமுகவில் இணையப்போகிறேன்: எஸ்.வி.சேகர்

அய்யோ சேகரு சேகரு. நீ இணையலாம். நீ சொத்தைன்னு தெரியும். சேர்ப்பாங்கன்னு நினைக்கிற?
________________________________________________________________________________________________
முல்லைப் பெரியார்.:மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்:கலைஞர்

தோ. யாருப்பா அங்க. இன்லேன்ட் லெட்டர் கொண்டா. அப்புடியே சொக்குக்கு ஒரு ஃபோன் போடு. மன்னிப்பு கேட்டுகிட்டு ச்ச்ச்ச்சும்மா டமாசுன்னு சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கணும்.
________________________________________________________________________________________________
தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 160 ஆடுகள் பலி

அதுங்க என்ன மனுசங்களா? மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எத்தன குடுத்தான்னு கேக்க மாட்டானுங்களே.
________________________________________________________________________________________________
ஹபீப் சயீது மீதான வழக்குப்பதிவு கண்துடைப்பே: பாக். மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ங்கொய்யாலே. கண்ண கட்டி சுட்டுட்டு பொய்ன்னானே. அதுக்கு வாய் தொறக்க முடியல. இதுமட்டும் என்ன? போர் நிறுத்தம் துடைச்ச வாய்க்கு பேச்ச பாரு.
 ________________________________________________________________________________________________

ரம்ஜானில் சகோதரத்துவம் பெருகட்டும்: தங்கபாலு

குடிச்ச கஞ்சிக்கு கூவிட்டான். அத்தன சகோதரர்களை அழிக்கத் துணை போன பாவி.
 ________________________________________________________________________________________________

தமிழகத்துடனான உறவு பலப்பட்டிருக்கிறது: எடியூரப்பா

வாயேன் ஒப்பந்தம் போட்டுக்கலாம் காவேரி தண்ணிக்கு தகராறே பண்ணமாட்டன்னு. ________________________________________________________________________________________________

Monday, September 21, 2009

இரு புள்ளிக் கோலம்..

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது சொலவடை. பாமரன் ப்ளஸ் இரண்டு புள்ளிகளில் தொடங்கி, பாலா பிளஸ் டூ புள்ளிகளாக பரிணமித்து வானம்பாடிகளா பதிவைக் கெடுக்காம ஏதோ எழுதிட்டிருக்கேன்னு இருந்தேன். இந்தக் கலகலப்ரியா நாம எழுத வந்த வரலாற்றை எழுதுங்கன்னு இழுத்து விட்டுச்சு. அதனோட விளைவு....

படிக்கிற காலத்துல அது பள்ளியின் குறையா? அல்லது என் கவனக் குறைவா தெரியவில்லை. எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி என்று எதுவும் நடந்ததாகக் கவனமில்லை. சொல்லிக் கொடுத்தவற்றை கிளிபோல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுடன் சரி. ஐந்தாம் வகுப்பு வரை கற்பலகையில்தான் பரீட்சையே. ஆறாவதில் பேனாவைக் கையால் தொடும் பாக்கியம் கிடைத்தது. அது வரை ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையெழுத்துப் பழகத் துணையிருந்தன.

கட்டுரையும், இலக்கணமும் ஒன்பதாவது வகுப்பில் திடீரெனத் திணிக்கப்பட்டது. திருவள்ளுவரும், புத்தரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தமிழாசான் எழுதிய புத்தகம் பற்றி விவாதித்தது ஒன்றே கிளிப்பிள்ளை பாடம் தவிர்ந்த ஒரு புது முயற்சி. பதினோராம் வகுப்பில் 'போட்டி' நம் பள்ளிக்கும் அறிமுகம் ஆனபோது, பாரதியார் கவிதையை குழந்தை மாதிரி ஒப்பித்து, கிடைத்த பரிசை வாங்கச் செல்ல வழி தெரியாத காரணத்தால் பேசாதிருந்து விட்டேன்.

ஐந்தாவது படிக்கையில் தினமணிக்கதிர் வாயிலாக என் தந்தை மகற்காற்றிய பேருதவி.. மஞ்சரி, கல்கி, கலைமகள், அமுத சுரபி, ஆனந்த விகடன் என்று விரிந்த.. அந்த உலகமே பள்ளி தவிர்த்த என் வாழ்க்கையானது. அதனூடாக கல்கி, கோ.வி. மணிசேகரன், சாண்டில்யன், அகிலன், ஸ்ரீ வேணுகோபாலன் ஆகியோர் எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்தது.

கி.ரா, ஜெயகாந்தன், தேவன் ஆகியோரைப் படிக்கையில் இயல்பாக உணர்ந்தேன். கண்ணதாசன் கவிதைகளும், வாலி, வைரமுத்து, பாரதி ஆகியோரின் கவிதைகளும் மெதுவே எழுதினால் என்ன என்ற ஆசையைத் தூண்டி விட்டது. இலக்கணம் சற்றுப் பயமுறுத்தியது.

ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன  என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின.

எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கவிதையை படித்துப் பாராட்டி அவள் ஊக்குவித்ததில் நானும் கிறுக்கினேன். நன்றாக இருப்பதை பாராட்டும் அதே தருணம் குறையென்று கூறாமல், நளினமாக ஒரு வார்த்தை மாற்றினால் என்று ஆலோசனை கூறும்போது அது மிக அழகாய் மாறிவிடுவது என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.

செய்திகளின் தாக்கத்தில் புழுங்கி, பதிவுலகம் பக்கம் வந்தபோது என் மன அழுத்தத்தைப் போக்க இது ஒரு வாய்ப்பு என்ற எண்ணம்தான், என் எழுத்தின் உடனடி உந்துகோலாக இருந்தது. என் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதும் பதிவர்களுக்கு, பின்னூட்டம் இடுவதில் ஆரம்பித்தது என் எழுத்துப் பயணம். "தலையா போய் விடும்" என்று, இலக்கணப் பிழைகள் பற்றியெல்லாம் கவலைப் படாது, மன அழுத்தத்தின் வடிகாலாய் மொட்டு விட ஆரம்பித்ததே, இப்போது பூத்துக் கொண்டிருக்கும் என் வலைப்பூ.

கவிதை, சொந்தக் கதை, பார்த்த கதை, பாராத கதை எல்லாவற்றுக்குமிடையே.. "நறுக்குன்னு நாலு வார்த்தை" என் அழுத்தத்தின் வெளிப்பாடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

பாராட்டுதல், பிழை எடுத்துக் கூறல் என்று பழமைபேசியின் பங்களிப்பும், ஆரம்பம் முதலே ஊக்குவிக்கும் ராஜ நடராஜன், ராகவன் போன்ற அன்புள்ளங்களும் என் எழுத்தின் தூண்டுகோல்கள்.     

 இந்த தொடர்பதிவுக்கான அழைப்பை ஏற்று நீங்க எழுத வந்த கதையும் எழுதுங்களேன்.

Sunday, September 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.6

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்குமாறு மகிந்த உத்தரவு

இது உனக்கே வினையா முடியணும்டா பிச்ச.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளுக்கு ரஷ்ய விசேட படையினர் பயிற்சி: இலங்கை புலனாய்வு பிரிவு

நிவாரணப் பிச்சை போடாதவனெல்லாம் பயங்கரவாதி இந்த எச்ச நாய்க்கு. உனக்கு கை தூக்கினான் பாரு. இன்னும் வேணும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமை விசாரணைகள் தொடர்பான ஐ.நாவின் கோரிக்கை நிராகரிப்பு

கோழியை கேட்டு மசாலா அரைக்கறதுன்னா குழம்பு வெச்சா மாதிரிதான். எந்த கோழி, சரி அரைச்சிக்கோன்னு சொல்லும். போங்கடா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருடம் வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட மாட்டாது: லங்காதீப

கோடி கோடியா வந்ததுல போனது யாருக்கு எங்கன்னு குழப்பமாத்தான் இருக்கும். டைம் வேணாமா கள்ளக் கணக்கெழுத.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முகாம் மக்கள் பகல் வேளைகளிலாவது வெளியே சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும்: ஐ.நா. கோரிக்கை

இதைக் கேக்க ஒரு ஐ.நா. எதற்கு? மனிதர்களா என்ன? வெக்கம் கெட்ட பிழைப்பு. அதுக்கு ஒரு அமைப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்ட சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்: அமெரிக்க புதிய தூதுவர்

தொடர்ந்து? கோடி கொடுத்தது தவிர என்ன பாடுபட்டீங்க அம்முனி. வலயத்துகுள்ள நடமாடிகிட்டுதான் இருக்காங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மீள்குடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் வாக்குறுதி கூர்ந்து கவனிக்கப்படும்: லின் பாஸ்கோ

சந்தோஷம். கவனிச்சிகிட்டே இருங்க. இனிமே அதற்கு அவசியமில்லைன்னு ஆயிடும். போர் நடக்கறப்போவும் கூஊஊர்ந்து தானே கவனிச்சிங்க. கொத்து கொத்தா போய் சேரலையா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வவு. முகாமிலிருந்து மக்கள், அதே போன்ற மாற்று முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்

மீள் குடியமர்த்தணும்னு தான் கோரிக்கை. வலையத்துக்கு வெளியன்னு யாராவது சொன்னாங்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் படும் துன்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தான் காரணம்: பழ. நெடுமாறன்

இதுங்க அம்புங்கையா. எய்தது யார்னு அரனும் சிவனும் அறிவான். பதவிக்கும் பதவி நீட்டிப்புக்கும் பலியானது தமிழினம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி .'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' : கலைஞர்

அய்யா! இந்த சீனை சன் பிக்சர்ஸ் எடுத்தாக் கூட ஆதித்யா சேனல்லதான் போடுவங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

‘’பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் என்ன?என்று செய்தியாளர்கள் சீமானிடம் கேட்டனர்.

எலும்புத் துண்டுக்கு அலையுதுங்க பரதேசிங்க. இறந்ததற்கு ஆதாரம் கேளுங்களேண்டா உங்க எஜமானன் கிட்ட.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் நலன்களை காக்க இந்தியா, இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்: அமெரிக்கா

எங்க பொழப்பு எல்லாப் பயலுக்கும் நக்கலாப் போச்சி. பொத்திட்டாவது இருக்கானுவளா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்த நடிகர் வந்தாலும் விடுதலை சிறுத்தைகளை அழிக்க முடியாது: திருமாவளவன்

நீங்களே போதுமா? பதவி தான் அழிக்க முடியும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீன நல்லுறவு பாதிக்கப்படலாம்: எம்.கே. நாராயணன்

கெடுவான் கேடு நினைப்பான். அடுத்தவன அழிச்சா நல்லுறவு. இவனுக்கு வந்தா பாதிப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம்: பாக்.

இவனுங்க அகராதில அப்பாவி ஜனங்கள சாவடிக்கிறதுக்கு பேறு நட்புறவு போல. சேர்ந்தானுங்க மொத்த அரக்கனும் ஒண்ணா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, September 19, 2009

வாத்தி வேலைக்குப் போறதுக்கு வாத்து மேய்க்கலாம்.

காலையில் பத்திரிகை வாங்க கடைக்குப் போனேன். வெளியில் தொங்கிய போஸ்டரிலேயே வெடிகுண்டு மாதிரி செய்தி. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் டீச்சர் திட்டியதால் தற்கொலைன்னு. பக்கத்துலயே டீக்கடை. அங்க நிக்கிறவங்க முன்னாடியே பேப்பர் வாங்கி படிச்சிகிட்டு அதுல ஒரு ஆளு திட்டுன திட்டு இருக்கே. செய்தி படிக்காததால அப்பொழுது கோபம் வந்தாலும், பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கிற மாணவனுக்கு தற்கொலை பண்ற தைரியம் எப்படி வந்தது?

வீட்டுக்கு வந்ததும் முதல்ல செய்தியைப் படித்தேன். 4வது முடிந்து இப்போது தான் காலாண்டு பரீட்சை முடிந்திருக்கிறது.  ஆசிரியை சொன்னாராம் சரியாகப் படிக்கவில்லை என்றால் திரும்ப நான்காவது வகுப்புக்கே அனுப்பிவிடுவேன் என்று. பயபுள்ள அழுதுகிட்டே மதியம் வீட்டில் வந்து சொன்னானாம். அம்மாக்காரி நான் ஆசிரியை கிட்ட கேக்குறேன்னாங்களாம் எப்படி அப்படி சொல்லலாம்னு. இவருக்கு சாப்பாடு வாங்க(?) கடைக்குப் போக இவரு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்து விட்டாராம். ஆசிரியை தற்கொலைக்குத் தூண்டினார்னு அம்மாக்காரி போலீசில் புகார் கொடுத்தார்களாம். அதன் அடிப்படையில் ஆசிரியர் கைதாம்.

மேலோட்டமாக ஏதோ என்று விடும் விஷயமாகத் தோன்றவில்லை எனக்கு. சரியாக படிக்காத ஒரு சிறுவனை இதை விடக் குறைந்த பட்சமாக என்ன சொல்லிவிட முடியும்? எந்த விதத்தில் இது தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்? ஆசிரியர் ஊக்குவித்திருக்க வேண்டும் என ஒரு கட்சி வாதிடலாம். பொறுங்கள். அந்தக் குழந்தை வந்து இப்படிச் சொல்கிறார்கள் எனக் கூறியதற்கு தாய் கூறிய பதில் என்ன? நான் ஆசிரியையைக் கேட்கிறேன் என்றால், தன் பிள்ளை படிக்காதது பெரிய விடயமில்லை என்றுதானே அர்த்தம்?

ஆசிரியை மிரட்டியது தவறு என்ற எண்ணம் அல்லவா அந்தப் பிஞ்சு நெஞ்சில் பதிந்திருக்கிறது. நீ ஏன் படிக்கவில்லை? படிக்கவில்லை என்றால் என்னாகும், நன்றாகப் படித்தால் ஏன் நான்காவது வகுப்புக்கு அனுப்பப் போகிறார்கள். இனிமேலாவது கவனமாகப் படிக்க வேண்டும் என்று அந்த அம்மா ஏன் சொல்லவில்லை? தற்கொலைக்குத் தூண்டியதாக யாரையாவது சுட்ட வேண்டுமானால் அந்த அம்மாவைத்தான் சுட்ட வேண்டும்.

ஐந்தாவது படிக்கும் மாணவனுக்கு தற்கொலை என்பதோ அதன் விளைவோ தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருக்கும் என்றால், தீக்காயம் எவ்வளவு கொடுமை என்பதும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்து திரும்ப நான்காவது போவதை விட சாவது மேல் என அவன் தீர்மானம் செய்யுமளவுக்கு தெளிவானவனா? அப்படியானால், சரியாகப் படித்தால் போதும் என்றல்லவா தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆக, நான் பள்ளியில் சேர்ப்பேன். கட்டணம் செலுத்துவேன். என் குழந்தை படிக்கிறதோ இல்லையோ. கண்டிக்கக் கூடாது. அப்படி ஒரு வேளை ஃபெயிலாகி விட்டால் அப்பொழுதும் ஆசிரியரைத்தான் கிழிப்பார்கள். சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை என்று. மறு புறம் பள்ளிக்கு அழுத்தம். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கைது செய்வது; பிறகு தான் பொறுப்பில்லை என விடுதலை ஆனாலும், எந்த பத்திரிகையும் ஆசிரியை நிரபராதி என செய்தி வெளியிடப் போவதில்லை. அந்த ஆசிரியைக்கு மாணவர் மேல் என்ன அக்கறை இருக்கும்? என்ன வேண்டுமானாலும் எழுது. நீ பாஸ் என்று தானே இருப்பார்கள்?

எழவெடுத்த சீரியலும் அதை உட்கார்ந்து பார்க்கும் வீட்டுப் பெரியவர்களும் தான் தூண்டியவர்கள். கலகலப்ரியா வாயிலாக குழந்தை வளர்ப்புக்கான பெற்றோருக்கு அயல் நாட்டினர் வெளியிட்ட (தமிழில்!) ஒரு கையேடு காண நேர்ந்தது. வயது வாரியாக குழந்தைகளை ஊடகங்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று. வன்முறைக் காட்சிகளே நீண்ட நாள் நினைவில் குடிகொள்ளும். எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் இங்கே, அத்தை சாப்பாட்டுத் தட்டை எறிந்து திட்டினாள் என்ற சொத்தைக் காரணத்துக்காக மருமகள் சமையலறையில் மண்ணெண்ணெய் டின்னை பார்ப்பதில் தொடர் முடியும்.

பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள் கொளுத்திக்கப் போறா என்று அத்தையை திட்டுவதும், மாட்டாள் என்று மாறாகவும் வாதம் செய்துக் கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் காத்திருந்து விலேவாரியாக  மண்ணெண்ணெய் எப்படி ஊற்றிக் கொள்ள வேண்டும், யாரும் காப்பாற்றி விடாமல் சன்னல், கதவு எல்லாம் எப்படி தாளிட வேண்டும், எப்படிக் கொளுத்திக் கொள்ள வேண்டுமென செய்முறை விளக்கம் காணலாம். ஒரு க்ராஃபிக்ஸில் நெருப்பும், மற்றவர்கள் பதறி கதவைத் திற என அலறுவதும் மட்டுமே காண்பிக்கப் படும்.

பார்ப்பவர்களுக்கு, எரிகிற உயிரின் வலியோ அவஸ்தையோ மறைக்கப் படும். அதைப் பார்க்கும் அந்த வயது சிறுவனுக்குப் புரிதல் எந்த அளவில் இருக்கும்? நான் கொளுத்திக் கொண்டால் மற்றவர்கள் பதறுவார்கள். எனக்காக அழுவார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். இது ஒரு மிரட்டலாக பின்விளைவை அறியாமல் செய்யத் தூண்டி இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியாக இருக்கிற மனநிலை உள்ளவன் இப்படி எழவெடுத்த அழுகை சீரியல் பார்க்கப் போவதில்லை. மனம் குமைந்துக் கொண்டிருப்பவர்களும் என் கதையே பெரிய எழவாப் போச்சு. இதுல இத வேற பார்த்து அழணுமா என்று பார்க்கும் மன நிலையில் இருக்கப் போவதில்லை. இதிகாச படங்கள், நாடகங்கள், காலட்சேபங்கள் இருந்த நாட்களிலும் மக்கள் போய் பார்த்து பிழியப் பிழிய அழுது கொண்டு வந்தாலும், கடவுளுக்கே இவ்வளவு கெரகம் புடிச்சி ஆட்டி இருக்கு. நாம எம்மாத்திரம்? சரியாயிடும் என்ற மனோநிலை இருந்தது. இப்போதோ சின்ன மனத் தாங்கலுடன்  தொலைக்காட்சி சீரியல் பார்த்தாலுமே இப்படித் தூண்டுதலாக அமையுமோ எனத் தோன்றுகிறது.

சீரியலுக்கு ஏன் தணிக்கை இல்லை? வன்முறை என்பது மிகப் பரந்த வட்டத்துக்குள் வந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்தில் ஊடகத் தணிக்கை மிக அவசியமென்றே தோன்றுகிறது. ஊடக சுதந்திரம், எழவு என்று எவனாவது கிளம்பினால், குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும். விளம்பரக் காசிலேயே குறியாய் இருக்கும் நாய்களுக்கு தன் வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் இது உறைக்கப் போவதில்லை. ஒட்டு மொத்தமாக அத்தனை உயிர்கள் போனதை எதிர்க்கத் துணிவில்லாத, கைக்கூலி ஊடகங்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசஎன்ன தகுதி இருக்கிறது?

இப்படியே போனால், வாத்தி வேலைக்குப் போகிறத விட வாத்து மேய்த்து பிழைக்கலாம் என்று ஆகி விடும். விவசாயம் போயாச்சு. கல்வியும்  கடனே என்றானால் விளங்கிடும் எதிர்கால சந்ததி. 

Friday, September 18, 2009

நேத்து ஆப்பு இன்னைக்கு சோப்பு!

நேத்து ஆப்பு பத்தி எழுதினதுக்கே கொல மிரட்டல் விடாத குறையா அலப்பறையா போச்சு. இராகவன் சார் வேற நமக்கு நூற்றாண்டு விழா கடந்திருக்குமோன்னு பிட்டப் போட்டுட்டாரு. அதனால இன்னைக்கு சோப்பு போட்டு எஸ் ஆயிடணும்.

சின்ன வயசில பள்ளிக்கூடத்துக்கு எதிர்லயே வீடு.  அஞ்சாவது படிக்கிறப்ப ஊரு மாறி வந்ததில அப்பா ஆஃபீசுக்கு பின்னாடி பள்ளிக்கூடம். அதனால நண்பர்கள், விளையாட்டெல்லாம் தெரியாத விஷயமா போச்சு. இந்த அழுத்தமெல்லாம் கரைக்கிறதுக்கு வருசத்துக்கு ரெண்டு அல்லது சில நேரம் மூணு முறை புகலிடம் பெரியம்மா வீடு, ஈரோடுதான். பெரியப்பா பவானி திட்டத்துல வேலை பார்த்ததால ரொம்ப சின்ன வயசில அவங்க இருந்த சிவகிரி, அரச்சலூர்(முதல் முதலா சேமியா ஐஸ் சாப்பிட்டது அங்கதான்) அதெல்லாம் கொசுவத்தி புகையாத்தான் கவனமிருக்கு.

ஸ்டேஷன ஒட்டி இருக்கிற குடியிருப்பில இருந்துதான் கொசுவத்தி. அரையாண்டு பரீட்சை லீவுக்கும் முழுப் பரீட்சை லீவுக்கும் என்ன வித்தியாசம்னு அந்த வயசில கேட்டிருந்தா என்னோட பதில் இதுவாத்தானிருக்கும். காலையில ப்ளூ வந்த பிறகு அரைப் பரிட்சை லீவுக்கு எல்லாரும் பக்கெட்ல போய் வென்னீ புடிச்சிண்டு வருவாங்க எஞ்சின்ல இருந்து (குளிர்காலம்). முழுப் பரிட்சை லீவுக்கு நல்ல தண்ணி புடிச்சிண்டு வருவாங்க (தண்ணீர் பஞ்சம். வெயில் காலம்). அங்க போகாத, இங்க நோண்டாதன்னு கேக்க நாதியில்லாம அண்ணந் தம்பிங்க அவங்க சினேகிதனுங்கன்னு போன காலம் அங்கதான்.

கும்மிருட்டில ரயில் போறப்போ அந்த விளக்கு வெளிச்சமிருக்கே.ஆஹா. சின்ன நிலா மாதிரி ஆரம்பிச்சி கடந்து போக டன்னல் மாதிரி எஞ்சின் வெளிச்சம், கட்டம் கட்டமா ஜன்னல் வெளிச்சம். ஒரு நாள் கூட மிஸ் பண்ணதில்ல. வாயுத் தொல்லை இருக்கிற தலைமை வரைவாளரை எச்டின்னு அறிமுகப் படுத்தினாங்க. சரியான சவுண்ட் பார்ட்டி. எல்லாருமா சேர்ந்து என்னை ஏத்தி விட்டு அவர் வீட்டு சுவத்தில கரியால டர்புர் சாமியார்னு எழுதினா கடலை உருண்டை வாங்கித் தரேன்னானுவ. இதுக்கென்னாடா கஷ்டம்னு எழுதிட்டிருக்க அவர் பையன் ஓடிவந்து காலர புடிச்சிட்டான். கைய புடிச்சி கடிச்சி வெச்சிட்டு சிட்டா பறந்துட்டேன். விதி விதிங்கறமே. அது அந்த வயசிலயே எனக்கு ஹலோ சொன்னது.

ரெண்டு மூணு வருசம் கழிச்சி அந்தாளோட பெரிய பையனுக்கு எங்கக்காவ சம்பந்தம் பேசிட்டாங்க. அக்கா நிச்சயதார்த்தத்துக்கு போறதா வேணாமான்னு அந்த வயசுல எனக்கு குழம்பணும்னு விதிக்குமா? அதும் அவங்க வீட்டில நிச்சயதார்த்தம். அந்த புட்டிக்கண்ணன் என்ன மறந்திருக்கணுமே கடவுளேன்னு போனேன். பய புள்ளைக்கு அக்கான்னா அவ்வளவு பாசம் போல, நிச்சயதார்த்ததுக்கே இப்படி சோகமா இருக்கான்னு நினைச்சிருப்பாங்க எல்லாரும். அப்புடி இருந்தேன். கோழித்திருடன் மாதிரி கூட்டத்துல பம்மி பம்மி நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். நல்ல காலம் அந்த புட்டிக்கு பரீட்சைன்னு ரூமுக்குள்ள போய் அடஞ்சிட்டான்.

எப்படா விடியும்னு காத்திருந்த காலம் ஈரோட்டிலதான். கண்ணு விழிக்கிறதே பச்சு பச்சுன்னு வாழத்தோப்பு, அதத்தாண்டி வயலுன்னு. ஒரு தூக்க எடுத்துக்கிட்டு கோவாலு பல்லுப் பொடி வாய்ல கொட்டிக்கிட்டு நேர கோண வாய்க்கா. முகம் கழுவி கரையோரமா நடந்து காடு கரடுன்னு சின்ன சின்ன கூழாங்கல்லு குத்த போறது. கிடைக்கிற ஓட்டாஞ்சில்லு பொறுக்கி டவுசர் பாக்கட்ல நிரப்பிக்கிட்டு ஓடணும். நீலகிரி பால் பண்ணை ஃபேக்டரில காலைல மோரு விப்பாங்க. அதுக்குத்தான் அந்த ஓட்டம்.

லேட்டானா தீந்துடும். அப்புடி ஒரு மோரு தயிர் கடைஞ்சாலும் வந்ததில்ல வீட்டில. 3 ரூபாய்க்கு வாங்க சொன்னா 2 ரூபாய்க்கு வாங்கிட்டு மிச்சம் ஒரு ரூபாய் ஆட்டைய போடுவானுங்க. கமிசனடிக்கறதுன்னு பேரு அதுக்கு. கடல முட்டாய், குச்சி ஐஸ் வாங்க காசு ஏது பின்ன? திரும்பி வரப்ப ரொப்பிட்டு போன ஓட்டாஞ்சில்ல வாய்க்கால்ல நேக்கா எறிஞ்சு என்னுது 5 தத்துச்சி உன்னுது 3 தான்னு எக்காளம்.

என்னைக்காவது முழுசுக்கும் வாங்கினா அளவு தெரியும். தோராயமா கையால பம்ப்செட் தண்ணிய கலந்து மாட்டாத நாளில்ல. சின்னண்ணன் ஒரு மாதிரி சீன் போட்டு எஸ்சாயிடுவான். பெருசு திருட்டு சிரிப்பு சிரிச்சி தானே மாட்டிக்கும். என் கிட்ட  நீ சொல்லு கண்ணூ, எவ்வளவுக்கு வாங்கினதுன்னா கண்ணூக்கு மடியறதா?  கடல முட்டாய்க்கு விசுவாசமா இருக்கிறதா? கடலமுட்டாய் தான் ஜெயிக்கும். அப்புறம் திரும்ப கோணவாய்க்கால்ல குளியல். முட்டிக்கால் அளவுக்கு மேல இறங்க மாட்டமே. இப்போ உறைக்குது. ஊருசனம் மொத்தமும் சோப்பப் போட்டு குளிச்சி, துணி துவைச்சி பண்ண அட்டூழியம் வெறுந்தரையா போச்சோன்னு.

குளிச்சிட்டு தறிக்காரர் ஊட்டுக்கு ஓடுனா சாப்பாட்டுக்கு போகவே மனசிருக்காது. அவரு சாப்புட போற நேரம் ஓடிப்போய் தின்னுட்டு வந்து அங்க நூலு பொறுக்குவோம். தரையில ஒரு நூல் இழை இருக்காது. ஹெ ஹெ. எதுக்கா? அதெல்லாம் குடுத்தா குச்சி ஐஸ், பிஸ்கோத்து எல்லாம் பண்டமாற்று. பசங்க காசு குடுத்து வாங்கி நான் பார்க்கலை. பசங்களுக்கு மட்டுமா. வீட்டு பொம்பளைங்க தறியில போய் துண்டு, ஜமுக்காளம், பெட்ஷீட்லாம் கொண்டு வந்து சுங்கு முடிப்பாங்க. சிறுவாட்டுக்கு காசாச்சி. வெட்டிப்பேச்சு, விவகாரம்னு யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் போயிருக்கும்.

இவ்வளவும் சொல்லிட்டு ரஸ்தாளி வாழைய சொல்லாம விட்டா பெரும் துரோகம். ரெண்டு கடல உருண்டை, ஒரு ரஸத்தாளி சாப்பிட்டா விருந்து சாப்பிட்டா மாதிரி. ஹி ஹி. நம்ம வெண்ண இருக்கானே. பய புள்ளைக்கு ஈரோடுன்னா அவ்வளவு பாசம். இப்பவும் நெய்யில்லாம இருந்தாலும் இருப்பானே தவிர, இங்க வாங்க மாட்டான். ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் ட்ரைவர்கிட்ட சொல்லி விட்டு, மழையோ, குளிரோ பெரம்பூர் ஸ்டேஷன்ல அந்த 3 மணிக்கு போய் காத்திருந்து வெண்ணை வாங்கி, வீட்டுல நெய் காய்ச்சுவான்.

பழமை வெட்டாப்பு விட்டதால மாப்புக்கு வேலை. டிச்சு(சாக்கடை), எச்சு(அதிகம்), ப்ளசரு(கார்) இதுக்கெல்லாம் ஏன் எப்புடி இந்தப் பேருன்னு விளக்குங்க மாப்பு.

Thursday, September 17, 2009

மாப்பு ஊருல வெச்ச ஆப்பு

இன்னைக்கும் கொசுவத்திதான். அதாங்க ஃப்ளாஷ்பேக். ரொம்ப சின்ன புள்ளையா மகிழ்ச்சியான தருணங்கள்னா கவனம் வரும் ஊர் ஈரோடு. ஹி ஹி. வருசா வருசம் லீவுக்கும் அங்கதான் கேம்ப். சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல கழிசடையா கால்வாய் நீர் தேங்கி இருக்கே. பக்கிங்காம் கால்வாய், அதுல தண்ணி இவ்வளவு மோசமா இல்லாம ஓடிட்டு இருந்தது. ஐலேன்ட் எக்ஸ்ப்ரஸ்னு ஒன்னு பகல்ல கிளம்பும். வண்டி கூடவே படகு சவுக்கு கட்டை ஏத்திக்கிட்டு கால்வாய்ல போகும். எதிர்ல உப்பு கொண்டுகிட்டு படகு வரும். நம்ப முடியுதா?

ஈரோடு. என்னோட மிகச் சுருக்கமான இளமைக் காலங்கள்ள சந்தோசமா இருந்த நாட்கள் அங்கதான். அது ஒரு இடுகை தேறும்.  73ம் வருசத்துக்கு அப்புறம் ஈரோடு போக முடியல. கிட்ட கிட்ட ஒரு மாமாங்கம் கடந்து நாம வேலைக்குப் போக ஆரம்பிச்சி ஒரு நாள் தகவல் வந்திச்சி. பெரியம்மாவுக்கு தொண்டைல கேன்ஸர், சாகறதுக்குள்ள பேத்திக்கும் தன்னோட அண்ணன் மகனுக்கும் கலியாணம்னு முடிவுன்னு. ரொம்ப வருசமாச்சா? அம்மா போகணும்டான்னு சொல்லிட்டாங்க.

ஹீரோ கிளம்பிட்டாரு. அம்மாவையும், வெண்ணையையும் கூட்டிகிட்டு. அட நாந்தேன். அதென்ன ஈரோவா. எப்போ போனாலும் குதிரை வண்டியில குதிரை பக்கத்துல உக்கார விடாம யப்பா, பின்னாடி கால தொங்க விட்டுக்கிட்டு உக்கார விடமாட்டாத  குதிரை வண்டிக்காரன்னே நம்ம பிரயாணம். பின்பாரம், தம்பி முன்னுக்கு வான்னு என்னமோ நாந்தான் மகா கனம் மாதிரி, நடுவுல தள்ளி  உட்ருவாங்க. அதெப்பிடி என் உசரத்துக்குன்னே குறுக்கு சட்டம் அடிச்சிருப்பானோ. பின் மண்டை ணங் ணங்னு இடிச்சி புண்ணாயிடும். இந்த வாட்டி நாந்தான் குதிரை பக்கத்துலன்னு கனவோடதான் போனது. ஈரோடு என்னமோ மாறவே மாறாதுன்னு நினைப்பு.

கோவை எக்ஸ்ப்ரஸ புடிச்சி, போய் இறங்கி, ரயில்வே குவார்டர்ஸ் இடப்புறம் வருதே எல்லாரும் வலப்புறமா வெளிய போறாங்களேன்னு குழம்பியே வெளிய வந்தா எல்லாம் ஆட்டோவா நிக்குது. அப்போவே புளிய கரச்சிடுச்சி. இவிங்க நம்மூரு ஆட்டோ காரங்க மாதிரியா என்னான்னு. எப்புடியோ இருக்கட்டும். நாம இப்போ வெளியுலகம் தெரிஞ்சவன்னு இறுமாப்பு. பண்ணக்கூடாத தப்ப பண்ணி பாக்கட்ல வெச்சிருக்கறது தெரியலீங்க எனக்கு.

உசாரா வடிவேலு மாதிரி (ரெம்ப நல்லவனா) ஒரு ஆட்டோ அண்ணன தேடுனேன். முத அடி விழுந்திச்சி. வரிசையாதான் வரும். முதல் ஆட்டோக்கு போன்னு. நல்லவரா இருக்கணுமேன்னு வேண்டிகிட்டே போனா வாடி வான்னு ஒரு அண்ணன்.

நானு:சீனியந்தோட்டம் வரீங்களாண்ணா.
அண்ணன்: போலாந்தம்பி. உக்காருங்க. (வெண்ண பாஞ்சி உக்காந்துட்டான் படுபாவி)
நானு:எவ்ளவுங்ணா
அண்ணன்: பதினஞ்சு தானுங்.
நானு: இல்லிங்ணா. பத்துதானுங்ணா எப்பவும் குடுக்கிறது
அண்ணன்:எப்பொங் கடைசியா வந்தது( குசும்பு ஆரம்பம்)
நானு: (ஆஹா. சங்கப் புடிச்சிட்டாரே) கோபால கிருஷ்ணன் இல்லிங்ணா? இந்த ஸ்டேன்ட்ல தான் ஆட்டோ ஓட்றாரு. அவரு மருமவண்ணா.  அவரு பொண்ணு கலியாணத்துக்கு வந்தனுங். அவருதான் சொன்னாரு.
அண்ணன்: அட நம்ம கோபு. நீங்க உக்காருங் தம்பி. நான் அவருட்ட பதினஞ்சு வாங்கிக்கிறேன். நீங்க பத்து ரூபா அவருக்கு குடுத்துடுங்கன்னாரு பாருங்க. உச்சி மண்டைல டாம் அண்ட் ஜெர்ரில டாமுக்கு கேரட் முளைக்குமே. அப்புடி முளைச்சா மாதிரி இருந்துச்சி எனக்கு.

மத்த ஆட்டோல்லாம் சர்ரு சர்ருன்னு கிளம்புது. வெண்ண வேற ஏறி உக்காந்துட்டான். எல்லாம் விட நம்ம கோபுன்னுட்டாரு.  வீடு தெரிஞ்சிருக்கும். எப்புடி போறதுன்னு வழி காட்ட (தெரிஞ்சாதானே காட்ட) தேவையில்லைன்னு உட்கார்ந்தேன். சுப்பராயன் ஸ்டோர்ஸ்னு கவனம். (அதென்னமோ வரிசையா கட்டுன வாடகை வீடுங்களுக்கு அப்புடி பேரு. கதிர் ஒரு விளக்க இடுகை போட நிறைய மேட்டர் இருக்குங்). இறக்கி விட்டாரு. ரொம்ப ஸ்டைலா பேன்டு பாக்கட்ல கை விட்டு புது பத்து ரூபா நோட்டு கட்டு (ஹெ ஹெ மொத மொதல்ல அவ்வளவு காசு கைலங்கோவ்) எடுத்து, பின்னை புடுங்கி ரெண்டு நோட்டு எடுத்து ஸ்டைலா நீட்டி,  அஞ்சு ரூபா குடுங்கண்ணான்னேன். பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரியல.

கோபுன்னு குரல் விட்டாரு. மாமா வரவும், பதினஞ்சு ரூபா குடு. நாம் போணும். மருமவன நீ டீல் பண்ணிக்கன்னு விட்டு போய்ட்டாரு. மாமா கிட்ட போய் காச நீட்டவா? ஏன்னே புரியாம வீட்டுக்குள்ள போய் பெரியம்மாவ பார்த்து அழுது, அப்புறம் கலியாண வேலைல கலந்துக்கலாம்னு போனேன். ஆடி ஓடி கொஞ்சம் வேலை பார்த்ததுல களைப்பு. ஓட்டல்ல போய் ஏதாவது சாப்டலாம் வாடான்னு எங்கண்ணன கூட்டிகிட்டு போய் ரோஸ்டும் காபியும் அடிச்சிட்டு,  பில்லுக்கு தகடு தகடா நோட்ட நீட்டினா, வேற குடுங்கிறான்.

புரியல எனக்கு. என்னாடா வேற நோட்டு; கையால கூட தொடாமன்னு. இல்லிங் புது நோட்டு தானுங்களே. வேற நோட்டுன்னா என்னங்னா, இது செல்றது கஷ்டம் தம்பி. பழைய நோட்டு குடுங்கிறாரு. நானெங்க போக? அண்ணங்காரன் அவசரத்துல சொக்காய மாட்டிகிட்டு வந்தவன் பிதுக்கிட்டு இல்லடாங்குறான். இப்போ மாவாட்ட சொல்லிருவாங்களோனு பயத்தோட, இத வச்சிக்கிங்க, நான் வீட்ல போயிட்டு பழைய நோட்டு கொண்டு வரேன்னா பார்த்த பார்வைல அப்புடி ஒரு கொலை வெறி. ஏண்டா நான் என்ன இளிச்ச வாப் பயலான்னு. அப்புறம் ஆஃபீஸ் அடையாள அட்டை, போஸ்டாபீஸ்ல வேல செஞ்சிட்டிருக்கிற அக்கா பேரு எல்லாம் ஜாமீன் குடுத்து வீட்ட வந்து மாமா கிட்ட புலம்பி காசவாங்கிகிட்டு போய் குடுத்துட்டு வந்தேன்.

அப்புறம் மாமாகிட்ட கேட்டேன். ஏனுங் மாமா எங்க போனாலும் புது நோட்டு வேணாங்கிறாங்கன்னு. இப்போ படம் ரிலீஸ் ஆக முன்ன திருட்டு டிவிடி வரா மாதிரி அப்போ கோயம்புத்தூர்ல பேப்பர்ல புது நோட்டுனு செய்தி வந்ததுமே நோட்டடிப்பாங்க போல. கசங்குனது, ஒட்டுனது, இந்தப் பக்கம் பார்த்தா மத்த பக்கம் மூஞ்சி தெரியறது, சாயம் போனது எதுனாலும் வாங்குவாங்கடா. நம்பர் கிட்ட கிழிஞ்சி ஒட்டினது, புது நோட்டு ரெண்டும் செல்லாதுன்னு சொன்னாங்க. இப்பிடி என்னை காசிருந்தும் பிச்சக்காரனாகிட்டீங்களான்னு அவஸ்தையா போச்சு.

சரின்னு போஸ்டாபீசுக்கு அண்ணன கூட்டிகிட்டு போய் அக்கா பேர சொல்லி, நிலவரத்த சொல்லி போஸ்டாபீஸ்ல இத குடுத்தா கலக்ஷன்ல மாத்திக்கலாம்னு அறிவு பூர்வமா யோசிச்சிட்டு போனா, அக்கால்லாம் ஊட்டோட. இது ஆபீசு. போய் பேங்குல கேளுன்னுட்டாங்க. காலைல கலியாணம். பொண்ணுக்கு மாமன் சீல எடுக்கோணுமேன்னு பெரிய கடையா போய், முதல்லயே அடையாள அட்டைய காண்பிச்சி, அழமாட்டாக் குறையா கெஞ்சினதுல‌, துணி எடுங்க பிரச்சன இல்லன்னாங்க. அப்பாடா தெய்வம்யா நீயின்னு எடுத்து, அப்புடியே மேக்கொண்டு சில்லறையா குடுத்து ரெண்டு நூறு ரூபா வாங்கிட்டு வெளிய வரவும்தான் மனுசனா உணர்ந்தேன்.

அடுத்த கூத்து, அந்த வீதி பேரு கவனமில்ல. வார துணி சந்தை நடக்குற இடம். அங்கன ஒரு நகராட்சி கழிப்பிடம் . உலகத்துல வேற எங்கயும் கழிப்பிடத்தில பாட்டு பொட்டி வெச்சிருப்பாங்களான்னு தெரியல. வர்த்தக ஒலிபரப்பு ரொம்ப ஃபேமஸான நேரம். அங்க போலாம்டான்னு அண்ணனுங்க கூட்டிப் போனானுங்க. உள்ள போனவன் அடுத்த பாட்டு என்னா வரும்னு வெளிய வரமாட்டங்குறான். வெளிய நிக்கிறவன் பாட்டு கேக்க விடாம கதவ இடிக்கிறான்.

பாட்டு பிடிக்காமலோ, இல்ல இதுக்கு மேல உக்காந்தா கால் மறத்து போய்டுமுன்னோ, வெளிய வர்ற‌வன மறிச்சி பாட்டு கேக்க இதாடா இடம்னு அவசரத்த மறந்து சண்ட போடுறாங்க. இந்த கூத்துல ஒண்ணு ஓடிப் போய் பூந்துடிச்சி. இவன விட்டு அந்தாளு திரும்ப 'ஆலய மணிக்கதவே தாள் திறவாய்னு' பாடாத குறையா, நியாயம் கேக்குறாரு. வெளிய நிக்குறவனெல்லாம் லேபர் வார்ட்ல நிக்கிறா மாதிரி நிக்கிறப்ப, இதக் கண்டு அடக்க மாட்டாம கெக்கேக்கேனு நான் சிரிக்க, எதுக்குடா சிரிக்கிறன்னு எங்கண்ணனும் புரியாமலே சிரிக்க இந்த அவஸ்தையிலயும் லூசுப் பயலுவளான்னு அவங்க பார்த்த பார்வைய ஆஸ்கார் நடிகரால கூட பார்க்க முடியாது.
இப்ப ஒரு வேள டிஷ் டிவி வெச்சிருக்காங்களோ தெரியல. இன்னோரு அதிசயமும் கவனம் வருது. மண்ணெண்ணெயில ஆட்டோ ஓடும்னு எப்புடி கண்டு புடிச்சாங்களோ ஈரோட்டில‌. இதுக்கு மேலயும் சொன்னா, கதிர், மேடி எல்லாமா சேர்ந்து கெரசின் ஆட்டோ அனுப்பினாலும் அனுப்புவாங்க. சமாதானமா போயி நல்ல விசயமா இன்னோரு இடுகையில சொல்லிக்கிறேன்.

Wednesday, September 16, 2009

ஃபேனு வாங்கப் போனேன்...

பத்தொம்பது வயசு கைப்புள்ளைக்கு வந்த சோதனை இது.அட சிரிக்காதீங்க. கோழி மாதிரி றக்கைக்குள்ள வெச்சி காப்பாத்தி திடீர்னு வேலைக்கு போற புள்ளை. வெளி உலகம்னா என்னான்னே தெரியாது. 20ம் நம்பர் பஸ்ல ஏறி சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி மூர்மார்கட் ஃப்ராடுங்களுக்கு தப்பி அலுவலகம் போகத் தெரியும். நர்ஸ் விடுதியில் இறங்கினா பக்கம்னாலும், நிறுத்தாம பாரீஸ் போய்ட்டா என்ன பண்றதுன்னு பயம்.

ஓட்டு வீட்டுல வெயில் காலத்துக்கு கோணிய போட்டு 2 மணிக்கு ஒரு தடவை தண்ணீர் தெளிச்சி ஏர்கண்டிஷன் பண்ணி இருந்த பய. ராவில வீட்டுக்கு வெளிய படுத்து இயற்கையா வாழ்ந்த பய. எமெர்ஜென்ஸி முடியவும், பிடிப்பிலிருந்த அகவிலைப் படியை பட்டுவாடா செய்ய இந்திரா அம்மையார் கருணை புரிந்த நேரம். சுளையா 578 ரூபாய் கையில. கண்ணு முழி பிதுங்க இத வெச்சி என்ன பண்ணுறதுன்னு அம்மாட்ட நீட்ட அத வாங்கிகிட்டு கட்டி புடிச்சி அழுதுச்சி அம்மா.

கைல காச குடுத்தா வாங்கிட்டு என்னமோ பண்ணலாம் தானே?  ஃபேன் வாங்கலாம்டான்னுச்சி. அன்னைக்கு புடிச்சது சனியன். சரின்னு சொல்லிட்டேன். மனசு கெடந்து தவிச்ச தவிப்பிருக்கே. அம்மாக்கு புள்ள சிங்கம்னு நினைப்பு. எனக்குல்ல தெரியும் என் மனப் போராட்டம். எப்புடி வாங்கறது ஃபேன்? கடைல போய் ஒரு கிலோ வெல்லம்னு கேக்குறா மாதிரி ஒரு ஃபேன் குடுங்கன்னா? அவன் மேக்கொண்டு ஏதாச்சும் கேப்பானோ? தெரியாம பேந்த பேந்த விழிச்சா என்ன விட அம்மாக்கு என் புள்ள மக்குன்னு மனசுல விழுந்துடுமோ? சரி ஆபீஸ்ல யாரையாவது கேக்கலாமான்னா அதுவும் கூச்சம். இது கூட தெரியாத ஒரு புண்ணாக்காடா நீன்னு கேவலமா ஆயிடுமே. அந்த வாரம் முழுசும் திருவிழால காணாம போனா மாதிரியே அலைஞ்சேன். மனசுக்குள்ள நானே கடைக்காரன், நானே வாங்க வந்தவன். எப்பவும் கடைக்காரனே கோக்கு மாக்கா கேள்வி கேட்டு விளுத்தறான்.

வெள்ளிக்கிழமை ராத்திரி தூங்கப் போக, அம்மா குண்ட போட்டுச்சி. நாளைக்குப் போய் ஃபேன் வாங்கலாம்டான்னு. தூங்கவா முடியும்? கடவுளே ராத்திரி விடியாமலே இருக்காதான்னெல்லாம் தவிச்சாலும் தவிர்க்கவா முடியும் ? விடிஞ்சிடுச்சி. S.S.LC.  பரிட்சை முதல் நாள் அன்னைக்கு கூட இப்படி கலங்கல.

சனிக்கிழமை ஒன்பது பத்தரை இராகு காலம் முடிய கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க. சாப்பாடு கொள்ள மாட்டங்குது. அம்மா கண்டு பிடிச்சிடுச்சி பய புள்ளைக்கு என்னாமோன்னு. என்ன என்னன்னா என்னத்த சொல்ல. ஒண்ணுமில்லைன்னு முணங்கிக்கிட்டே வயத்துல பட்டாம்பூச்சி பறக்க தவிச்சி உக்காந்து, வாடா கிளம்பலாம்னு கிளம்பவும், நானே மஞ்சத் தண்ணி தெளிச்சி மால போட்டுகிட்டேன். 

நம்ம கஷ்டம் புரியுதா? விவேக்ல வாங்கலாமா? வி.ஜி.பில வாங்கலாமாடான்னு அம்மா( நாசமா போற தினத்தந்திய ஓசில படிச்சிட்டு என்னல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கு இந்த அம்மா). வி.ஜி.பி ரொம்ப தூரம்மா. (அது மவுண்ட்ரோடுல இருக்குன்னு தெரியும். எங்க இறங்கறது? எப்படி போறதுன்னு எனக்கு தெரியாதே). விவேக்லயே வாங்கலாம்மா.(ஆஃபீஸ் போற வழில இருக்குறதால எங்க இறங்கணும்னு தெரியும்). ஸ்டாப் வர முன்னாடியே அடுத்த ஸ்டாப்பில இறங்கணும்மான்னு சொன்னப்ப எம்புள்ளைக்கு என்னால்லாம் தெரியுதுன்னு அம்மா முகத்தில வெளிச்சம்.

ஸ்டாப்பிங்க்ல இறங்கி கடை 100 மீ கூட இல்லை. தூக்கு மேடைக்கு போறவன் கூட கொஞ்சம் வெரசா போயிருப்பான். அடி என்னமோ முன்னாடிதான் வைக்கிறேன். ஆனா நின்ன இடத்துலயே நிக்குறேன்.அம்மா நெட்டித்தள்ளாத குறையா இழுத்து முன்ன விட்டு சதி பண்ணுது. வாயெல்லாம் உலர்ந்து போக கடைக்குள்ள கால வெச்சாச்சி. என்ன தம்பி வேணும்னு வந்த ஆள் கடவுளாத் தெரிஞ்சாரு.

ஒரு செகண்ட்ல பட்ட அவஸ்தைல்லாம் காணாம போய் கட்டிபுடிச்சி அழணும் போல வந்திச்சி. ஃபே ஃபேன் வேணுண்ணான்னு சொன்னது எனக்கே கேட்டுச்சான்னு தெரியல. அதுக்குள்ள ஃபேன்லாம் வரிசையா தொங்கிட்டிருந்த கவுண்டர் கண்ணுல பட்டுச்சி. அந்த கொஞ்ச தூரம் நடந்த நடை இருக்கே. பூமில கால் பாவுச்சுங்கறீங்க? சிவாஜி கூட அப்புடி ஆட்டிகிட்டு நடந்திருக்க மாட்டாரு. ரொம்ப தெனாவட்டா ஃபேன் காண்பிங்கன்னு கேட்டேன்.

மனுசனுக்கு எந்த நிலமையிலயும் அகங்காரம் வந்துடப்படாதுங்கற பாடம் அங்க படிச்சது. என்னிய மாதிரி எத்தன பேர பார்த்திருப்பாரு அந்தாளு. டேபிள் ஃபேனா? சீலிங் ஃபேனான்னு கேட்டாரு. தோள குலுக்கிக்கிட்டே ம்ம்ம்ம் சீலிங்தான்னு சொன்னதுல இதென்னடா கேனக் கேள்வின்னு பட்டுச்சோ தெரியல. எதிரியாய்ட்டாருங்க. என்னா சைசுன்னு கேட்டாரு பாருங்க. கூனிப் போய்ட்டேன். இப்புடி வேற ஒண்ணு இருக்கா? இத நான் எங்க போய் கேட்டு சொல்ல? ஒரே அடியில நாக் அவுட் பண்ணிட்டியே பாவின்னு டரியலாயிட்டேன்.

கேட்டுட்டு வரேன்னு அம்மாவ அங்கயே விட்டு ஓடிடலாமான்னு வந்திச்சி. வயத்த வேற சங்கடம் பண்ண ஆரம்பிச்சிடுச்சி. விரல நீட்டிகிட்டு நிக்கிற புள்ளைய சட்ட பண்ணாம போர்ட்ல எழுதிட்டுருக்கிற வாத்தி மாதிரி தொங்குற ஃபேன் பக்கம் திரும்பி இல்லாத தூசிய தட்டுறான் அந்தாளு. கால குறுக்கி இடுக்கிகிட்டு தவிக்கிற புள்ள மாதிரி நானு.

பாவம்னு பட்டுச்சோ என்னமோ. திரும்பி அந்தாளு தம்பி 42, 46, 48 இதுல எது வேணுங்கறான். நான் என்னத்த கண்டேன். ஆகக் கூடி வெத்து வேட்டுன்னு நிரூபணமாயிடுச்சி. உடம்பு குழைஞ்சிருக்கும் போல. அது!ன்னு சொல்லாத குறையா ரூம் எவ்வளவு பெருசுன்னான். குத்து மதிப்பா ஒரு அளவு சொன்னா, அப்போ 42 போதும்னான். அடுத்த கேள்வி உஷாவா, ஓரியண்டா, க்ராம்ப்டனான்னு.

ஆஃபீஸ்ல பார்த்ததில எல்லாம் ஓரியண்ட். வெள்ளக்காரன் காலத்துது. அதான் நல்லது போலன்னு ஓரியண்ட்னேன். இருந்ததில ஒண்ண பொறுக்கி எவ்வளவுன்னா 475 ரூன்னான். அப்பாடா காசு போதும்னு ஒரு நிம்மதி. சரின்னேன். பய புள்ளைக்கு இன்னும் விளையாட்டு காட்டணும்னு நினைச்சான் போல. ஃபேன எடுத்து கம்பிய முடுக்கி, தூக்கி புடிச்சி, வயர சொருகி பாரு பாருன்னா என்னாத்த பார்க்கறதுன்னு தெரிய வேணாமா?

 ப்ளேடு இல்லாத ஃபேன் சுத்துதான்னு காட்ராராமா. சுத்துது சுத்துது(என் தலைய சொன்னேன்) குடுங்கன்னு வாங்கிகிட்டு  வெளிய வந்தப்ப தூக்கு மேடைக்கு போய் கடைசி நேரத்துல இது அப்புராணின்னு விடுதலை ஆனவன் கூட அவ்வளவு அப்பாடான்னு இருந்திருப்பானான்னு தெரியாது. பஸ்ஸுல ஏறி அம்மாக்கு இடம் கிடைக்க,  குடுடான்னு வாங்கி மடியில வெச்சிகிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க. யம்மா! சிரிக்கிறியா. நான் பட்ட அவஸ்தை எனக்கில்ல தெரியும்னு நானும் சிரிச்சப்ப எப்படி இருந்திருப்பேன்னு நினைச்சாலே சிரிப்பு வரும்.

Tuesday, September 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.5

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

இப்படி சொல்லி ஏமாத்திக்க வேண்டியதுதான். அதென்னா விக்கிரமாதித்தன் சிம்மாசனமா?
________________________________________________________________________________________
இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர்; ஆண்கள் எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: விடுதலையான இளம்பெண்

மனித உரிமைக் கழகம் விளக்கம் கேட்கும். எல்லாம் நாசமானதும் விசாரணைன்னு ஜுரம் வந்தா மாதிரி அனத்திட்டு கிடக்கலாம்.
________________________________________________________________________________________
பாலித கோஹன, பான் கீ மூனை சந்தித்துள்ளார்

டீ சாப்பிட்டு வந்துடுவாரு. வேற ஒண்ணும் நடக்க போறதில்லை.
________________________________________________________________________________________
இந்தியாவும் இலங்கையும் புதிய வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன

எல்லாம் உடன்படிக்கை கைச்சாத்தோடதான் நடந்துச்சோ?
________________________________________________________________________________________
தமிழர்கள் படும் அவலத்தை பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது: இலங்கைத் தமிழர் பற்றிய கேள்விக்கு விஜய் மழுப்பலான பதில்

இவரு குரல்தான் குறைச்சலா இருந்திச்சின்னு அட்டூழியம் பண்ணிட்டிருக்கான். இனிமே பண்ணமாட்டான்.
________________________________________________________________________________________
சட்ட திட்டங்களை மீறும் எவரும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்: ரோஹித போகொல்லாகம

அடங்கொன்னியா. அப்படி இருந்தா நீங்க ஒரு பய அங்க இருக்க முடியாதேடா? கிளம்பி பாரு? உனக்கு முட்டு குடுத்தவன் ஒருத்தனாவது உன்ன சேர்க்கிறானான்னு.
________________________________________________________________________________________
தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு

நடக்கணும். அடைச்சு வச்சா என்ன கொடுமைன்னு புரியணும் நாய்ங்களுக்கு.
________________________________________________________________________________________
மீள்குடியமர்வு விடயத்தில் பொறுப்பிலிருந்து அரசு விலகாது - கெஹெலிய ரம்புக்வெல

நேத்துதானே யார் சொன்னாலும் பண்ணமாட்டேன்னான். குடிச்சிட்டுதான் பேசுவானா?
________________________________________________________________________________________
ராணுவத்தின் அதிகாரத்தைப் பறிக்க ராஜபட்சே முடிவு

கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.
________________________________________________________________________________________
ஒளிந்திருக்கும் ஜெயலலிதாவை கண்டுபிடியுங்கள்: அழகிரி

கண்ணா மூச்சி ஆடுறாய்ங்கப்பா. நல்ல அரசியல்டா சாமி.
________________________________________________________________________________________
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்போம்: கலைஞர்

ஃபூ ஃபூ. எவ்வளவு தூசி. அய்யா இறையாண்மை பாதிக்காதுங்களா? டங்குவாலுகிட்ட கேட்டீங்களாய்யா?
________________________________________________________________________________________
ராகுல் அழைத்ததாக விஜய் கூறுவது சுத்த பொய்: எஸ்.வி.சேகர்

சொருகி வெச்ச அகப்பைங்கறது இதுதான். இதுக்கு ஒண்றதுக்கு நிழலில்ல, இது அவருக்கு வக்காலத்து வாங்குது.  நீ வா சேகரு. ட்ராமா போட்டு பொழப்ப பார்க்கலாம்.
________________________________________________________________________________________
பெண் சிங்கம் படத்தின் ரூ.50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் கலைஞர்

பெண் புலின்னு வெச்சா சுவாமி புலிகள் கிட்ட பணம்னு அலறும்னு சிங்கம்னு வெச்சீங்களா. சிங்களவன் கிட்ட வாங்கிட்டாரு. அதுக்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லும் லூசு.
________________________________________________________________________________________
ஆளும்கட்சியினர் சொந்த பணத்தில் நல்லகாரியங்களை செய்கிறார்களா?: விஜயகாந்த் கேள்வி

ஏஞ்சாமி. தெரியாம கேக்குறேன். உங்க காலேஜ்ல எத்தன தகுதியான ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமா இடம் குடுத்திருக்கீங்க. குவார்டரும் பிரியாணியும் நல்ல காரியமா?
________________________________________________________________________________________
பாக். வழங்கும் நிதியை அமெரிக்கா கண்காணிக்க வேண்டும்: சசி தரூர்

525 கோடி குடுத்தீங்களே. என்னாடா புடிங்கினன்னு கேப்பீங்களாடா. அடுத்தவன் முதுகுல அழுக்கு காட்றதுக்கு ரெடி. நாறப் பயலுவ.
________________________________________________________________________________________
டிவியில் ஆபாச நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டம்!

அட பன்னாடைங்களே. இருக்கிறது போறாதுன்னு இது வேறயாடா? இப்போ 'காட்றதே' தாங்காதே.
________________________________________________________________________________________
உறவினர்கள் கறுப்பாக இருந்ததால் திருமணம் நிறுத்தம்

பெண்ணும் பையனும் பார்த்து கலியாணம் பண்றதே பெருங்கஷ்டம். இதில சொந்தக்காரன் கருப்பா இருக்கான்னு வேறயாடா? எந்த கருவாப்பய நிறுத்தினது?
________________________________________________________________________________________

வலிகளும் சுகமே..

வார்த்தைகளுக்கு இங்கே வேலையில்லை. வலிகளும் சுகமே:

Monday, September 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.4

அரசாங்கத்தின் போர் குற்றங்கள் தொடர்பான செய்மதிப்படங்கள் அமெரிக்க அமைப்பினால் சேகரிப்பு

ஆல்பம் போடவா. உருப்படியா ஏதாவது பண்ணுங்கையா. படம் வந்தப்பவே புடுங்கி இருந்தா எத்த உயிர் பிழைச்சிருக்கும்.
_____________________________________________________________________________________________
பொய்யென நிரூபிக்க சிறிலங்கா அரசு பயன்படுத்திய வீடியோ போலியானது

பொய்யிலயும் போலியிலையுமே பிழைக்குது ஒரு அரசு. போகிற உயிர் என்னமோ நிஜம்.
_____________________________________________________________________________________________
இலங்கை இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்

அட போய்யா. உணவே இல்லையாம் அதில ஊட்டமும் சத்தும் இல்லைன்னு இவரு சொல்ல வந்துட்டாரு. ஊட்டத்துக்கு தனியா நிவாரணம் குடுப்பா சூனியா.
_____________________________________________________________________________________________
குமரன் பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

3 கேள்விக்கு இவ்வளவுன்னு ரேட் போட்டு லாட்ஜ்ல ரூம் போட்டு குடுங்கப்பு. மேச்செலவுக்கு காசு தேத்தலாம். வந்துட்டானுவ.
_____________________________________________________________________________________________
வெளிநாடுகளில் தங்கியுள்ள த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

நடவடிக்கை எடுக்க வேண்டியதெல்லாம் கெடப்புல. இவருக்கு இது இப்போ அவசரம்.
_____________________________________________________________________________________________
புலி உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய பிரத்தியேக நீதிமன்றம்: அமெரிக்காவின் உதவி பெற திட்டம்

இதுக்கு மட்டும் அமெரிக்கா உதவி தேவையோ? இந்த சாக்குலயும் காசு பார்க்கலாம்.
_____________________________________________________________________________________________

கச்சதீவுக் கடலில் சிறீலங்கா கடற்படை கொலைவெறியாட்டம்

இன்னும் ரெண்டு கப்பல் குடுப்பாங்க. தலைவரு தந்தி அடிச்சிருப்பாரு இன்னேரம். இன்னும் என்ன பண்ண முடியும்?
_____________________________________________________________________________________________
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்

தோ. முதல்ல குடுத்துட்டு தான் மறு வேலை. அத வாங்கினதும் மட மடன்னு இவங்க வேலை ஆரம்பிச்சிடுவாங்க.
_____________________________________________________________________________________________
தமிழர் தாயகத்தில் படைமுகாம்கள் அகற்றப்படமாட்டா - மகிந்த ராஜபக்ச

அது படை இல்லை. புற்றுநோய். அகற்ற முடியாது. என்னா உள்குத்தோ. யாருக்குத் தெரியும்.
_____________________________________________________________________________________________
கேரள கடற்கரையில் புலிகள் ஊடுருவலாம் எனப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அவன் போர் நிறுத்திட்டேன்னு சொன்னப்ப சொல்லிட்டான்னு நம்புனீங்களே, இப்ப தொலைச்சி கட்டிட்டேன்னு சொல்றான்ல. இத ஏண்டா நம்ப மாட்டீங்க?
_____________________________________________________________________________________________

ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன்

நாயகன் பட வசனமா? ஆக இனிமே இவரு பேசவே மாட்டாரா?
_____________________________________________________________________________________________
இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை

ஆமாம்பா. அவன் என்ன தமிழ்நாட்டு மீனவனா? அப்பிடியே 4 பீரங்கியும்  குடுத்து கண்ணு துடைச்சி விட்டு அனுப்புங்கடா.
_____________________________________________________________________________________________
நதிகள் இணைப்பை ஆதரித்தவர் இந்திரா காந்தி: கலைஞர்

அந்தம்மா ஆதரித்ததெல்லாம் உங்களுக்குச் சரின்னா சரித்திரம் வேற மாதிரி இல்ல மாறி இருக்கும்.
_____________________________________________________________________________________________
தமிழர்களுக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் போராடுவேன்: விஜய்

அய். இனிமே தமிழனுக்கு கவலையே இல்ல. சும்மா சுத்தி சுத்தி அடிச்சி கிழிச்சிடுவாரு.
_____________________________________________________________________________________________
இந்தியர்களின் கறுப்பு பணம் எதுவும் இல்லை: சுவிஸ் வங்கிகள் அறிவிப்பு

ஹய்யோ ஹய்ய்ய்ய்ய்ய்யோ. நம்பீஈஈஈட்டம்ல.
_____________________________________________________________________________________________
தமிழ்நாட்டில் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்.

அப்புடியா? 15 லட்சம் போலி கார்டுக்கு வெள்ள நிவாரணம் கார்டுக்கு 2000 ரூ, கலர் டெலிவிஷன் ரூ 3000. எத்தன பூச்சியம் வருது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுதே.
_____________________________________________________________________________________________

Sunday, September 13, 2009

உக்காந்து யோசிப்பாய்ங்களோ?..

இந்தியாவின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் குப்பை பொறுக்கி பிழைக்கும் சிறுவர்களிடமும், மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவர்களிடமும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பெருமைப் பட முடியவில்லை.

உங்கள்ள டூ வீலர் வெச்சிருக்கிறவங்க மெகானிக் ஷாப்ல சர்வீசுக்கு விடும்போது பார்த்திருப்பீங்க. பெட்ரோல் டாங்க்ல இருந்து பெட்ரோல் எடுக்க வாண்டுப் பசங்க போட்டி போட்டுகிட்டு ஓடி வருவாங்க. விஷயம் என்ன தெரியுமா? பெட்ரோல் உரியறதில ஒரு ட்ரிக் கண்டு பிடிச்சிருக்குங்க பரதேசிப் பயபுள்ளைங்க. உசுக்குனு உரியறபோதே கொஞ்சம் ஆவியாகி நுரையீரலுக்குள்ள போறா மாதிரி உறிஞ்சா, போதை வருமாம். அதுக்குத்தான் போட்டா போட்டி. ஏண்டா இப்புடின்னா மெகானிக் அண்ணன் ஸ்பேன்னர்ல அடிக்கிற வலி. வேல செய்யிற வலி தெரியாம இருக்கவாம். இந்த போதைல 12ம் நம்பர் ஸ்பேன்னர் கேட்டா 14 குடுத்துட்டு அதுக்கும் வாங்குவானுங்க.

ஃபெவி பாண்ட்னு ஒன்னு. சைகிள் டியூப், ஓட்ட ஒடசல் ஒட்றதுக்கு கண்டு பிடிச்சது. கண்டு பிடிச்சவன் நினைச்சிருப்பானா. இந்தப் பய புள்ளைங்க இதுலயும் போதை வர வைப்பானுங்கன்னு. இன்னைக்கு தினத்தந்தில ஃபோடோ  கூட செயல் முறை விளக்கம். ஒரு 12 வயசு பயபுள்ள அண்ணா நகர்ல நடு வீதில ஒரு பாலிதீன் கவர்ல ஃபெவிபாண்ட் பசைய பிதுக்கி கசக்கி அப்பப்ப வாய வெச்சி உறிஞ்சி கொஞ்ச நேரத்துல போதை தலைக்கேற தானே பேசிண்டு பாடிண்டுன்னு இருந்திச்சாம். நம்மூர்லதான் காகா கரண்ட் கம்பில அடிபட்டு விழுந்தாலே நாட்டாமைய கூட்டி நாள் கணக்கா கூட்டம் போட்டு பேசுவமே. அப்படி இவனையும் சுத்திகிட்டாங்களாம்.

அய்யா போதை தெளிஞ்சி டெமோ பண்ணி காண்பிச்சி விளக்கினாராம். வீட்டாண்ட 8, 9 வயசு பசங்க கத்து குடுத்தாங்களாம். கோட்டர் காசு அதிகமாம். பசங்களுக்கு குடுக்க மாட்டாங்களாம். இது சீப்பாம். போதை அதிகமாம். கைல ரேஷன் கார்டு வச்சிருந்தானாம். அது எதுக்குடான்னு ஒரு மண்டையனுக்கு குடைச்சல். கேட்டதுக்கு பயபுள்ள சொல்லி இருக்கு. அம்மா ரேஷன் வாங்க சொல்லி காசு குடுத்திச்சாம் 100 ரூ. 20 ரூபாய்க்கு ஃபெவிபாண்ட் வாங்கிட்டானாம். ரேசன் வாங்க மாட்டானாம். கேட்டா தொலைஞ்சி போச்சின்னு பொய் சொல்லிக்குவானாம். வர்ட்டான்னு சொல்லாம போய்ட்டானாம்.

இனிமே ஃபெவிபாண்ட் பிச்சிக்கும். பான்பராக்கும், கைனியும் தடை செய்யப்பட்டதுன்னு சொல்லியும் 5 வயசு பையன்ல இருந்து எல்லாரும் அதோடயே அலைறாங்க. மாவா கடை ஒண்ணுதான் லோகத்துலயே போர்ட் இல்லாம நடக்குறது போல. கார் டியூப்ல கண்ட கசமாலத்தையும் போட்டு வரட்டு வரட்டுன்னு தேய்ச்சி, சவரன் கணக்கா குடுக்குறான். போலிசுக்காரங்களுக்கு தனி பேக்கேஜ் ரெடியா எடுத்து வைக்கிறான். ஓசிக்கே, டாய், சும்மா ஏதோ கலக்குறியா? சப்பையா இருக்குன்னு ஓபனா மிரட்டல் விட்டு வாங்கிக்கிறானுங்க.  போற போக்க பார்த்தா அரசாங்கமே இப்படி கண்டதையும் உபயோகிச்சி பசங்க கெட்டு போகுதுங்க,அதனால சின்ன பசங்களுக்குன்னே டாஸ்மாக் ஜூனியர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்.
****

Saturday, September 12, 2009

தொலைந்து போனவர்கள் - 4

பாண்டி பஜார் வளையல் கடையில் வளையல் வாங்கப் போனேன். மச்சான் இது எவ்வளவு என்று  கடை ஆள் குரல் கொடுக்க உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்து என்ன போட்டிருக்கு என்கிறது. ’ருங்டுக்’ என்கிறான் இவன். மொழி பெயர்த்து டஜன் 65 ரூபாய் என்றான். போன முறை ஐம்பதுக்கு தந்தாய் என்றேன். திரும்ப மச்சான் ’குர்டு’ ங்கிறாங்க என்கிறான். அந்தாளு அது ’துன்சி ’ என்கிறார். இவனும் இதும் ’துன்சி’ தான் ’சுரிபெ’ இல்லை என்றான். சரி கொடு என்றதும், மெதுவாய் சிரித்து என்ன பாஷை இது என்றேன். மலாயா தமிழ் சார் என்றான். கண்ணா, 20 வருசம் முன்னாடியே நாமளும் பேசின பாஷை தான். சுரிபெ என்றால் பெரிசு, துன்சி என்றால் சின்னது என்று. நானும் தலைகீழாய் நின்று பார்த்து விட்டேன், நம்பர் மட்டும் புரியுதில்லை. டுங் என்று ரெண்டு எழுத்து போட்டு 1300 ரூபாய் என்று எப்படி மொழி பெயர்க்கிறீர்கள் என்றேன்.  விவரமான ஆளுங்க சார் நீங்க என்ற பாராட்டோடு கேனையனாய் வெளியே வந்தேன். மண்டைக்கு மேல் சுருள் சுருளாக. அட முடி இல்லைங்க. ஃப்ளாஷ்பேக்.

ஏழாவது வகுப்புப் படிக்கும்போது என் கணக்கு நோட்டை வாங்கிக் கொண்டு சென்ற என் வகுப்பு மாணவி இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. வீட்டுப் பாடம் சேர்ந்து விட, வாங்கப் போனபோது எப்பொழுதுமில்லாமல் அவள் அம்மா மறித்துக் கேட்டார்கள். என் கணக்கு நோட்டு வாங்கிக் கொண்டு வந்திச்சி. வீட்டுப் பாடம் எழுதணும். பள்ளிக்கு வரவில்லை அதனால் வாங்கிக் கொண்டு போக வந்தேன் என்றேன். உள்ளே கூட அழைக்காமல், கடவடைத்து பிறகு தானே கொண்டு வந்து தந்தார்கள். உர்ரென வந்து அம்மாவிடம் புலம்பிய போது சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவள் பெரிய மனுஷி ஆயிட்டா. நீ அங்க போகக் கூடாதென்று.

டேய் மூக்கா. ப்ளீஸ் அப்பா வந்துடுவாங்கடா. தம்பியக் காணோம். ஓடிப்போய் தேங்காய் சில்லு வாங்கிட்டு வாடா. சமையல் முடியலன்னா தட்டு பறக்கும் என்பாள் கௌரி அக்கா. வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் தேங்க்ஸ்டா மூக்கா என்று மூக்கைத் திருகுவாள் அலற அலற.  திருமணமாகி முதல் முறை வந்த போது பார்த்தும் பாராமல், எப்படி இருக்கிறாய் என்ற போது யாரோவானாள்.

தயிர்க்காரன், பால்காரனென்று வீதியில் பேரம் பேசி வாங்கும் பக்கத்து வீட்டு மாமி, மாமாவின் நண்பரோ வெளியாட்களோ வந்தால், கதவு மறைவில் நின்று பதில் சொல்லும்.  எட்டு மணிக்கு சாப்பிட்ட ஃபாரக்ஸ் உதட்டைச் சப்பிக்கொண்டு அழகாய்ச் சிரிக்கும் குழந்தை கூட தூக்கப் போனால் அலறும். கண்ணகியின் மறு வாரிசென புளகித்துப்போய் ஆம்பிளப் பசங்கள பார்த்தா அழுவான்னு அலட்டும் அவள் அம்மா.

ஒடிசலான உருவம். வெயிலில் அலைந்து அலைந்து கருத்துச் சுருங்கிய சருமம். தலையில் முண்டாசு. வெள்ளைக் காடாக்குள் வைத்துக் கட்டி ஒரு தோளில் தொங்கும் பாரம். இரண்டடிக்கு இரண்டடியில் பிடி வைத்த ஒரு மரப்பெட்டி மறுகையில். வாலிபத்தில் கால் வைத்து மீசை வரைந்தாற்போல் பேரனும் இதே கோலத்தில். அடிக்கிற வெயிலில் அலைந்து, சலித்து “தல்லி! ஸல்லகா மஞ்சி நீள்ளு ஈ ரா” என்ற குரல் வந்ததும் அத்தனை தடையும் உடைத்து பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்தான் வளையல் தாத்தாவும் அவர் பேரனும்.

தண்ணீர் குடித்து, முகம் கழுவி, முண்டாசு பிரித்து உதறி துணி மூட்டை அவிழ்ப்பார். அவசரமின்றி மொத்தம் எடுத்து அடுக்குவார் கட்டி வந்த துணியில். அவரவர் விருப்பத்துக்கு வளையல் காட்டுவார். கண் பார்வையிலேயே இது சின்னதும்மா. உன் கைக்கு சரி வராது. இது பெரிசு. வேற பாரு என்பார். பேரனும் கடை திறந்து வைத்திருப்பான். தலை வெளுத்தவரெல்லாம் அவ்வா, மற்றவரெல்லாம் அக்கா. விரல் குவித்துப் பிடித்து வளையல் சொருகி பெரும்பாலும் சரியாக இருக்கும். சிலருக்கு ’சவக்காரம் தே ரா’ என்று, கையை நனைத்து சோப்பைக் குழைத்துப் பூசி வளையல் போடுவார்.சிலருக்கு வெறும் கையில் வைத்துப் பிடித்து விட்டு சொடுக்கெடுத்து போடுவார்கள். சிலருக்கு ”நூன”( எண்ணெய்) என்று மஸாஜ் செய்து போடும்போது என்ன மாயமோ, விறைத்திருந்த கை நெகிழ்ந்து தடையின்றி வளையல் ஏறும். பெரிய மனுஷியான வகுப்புப் பெண், புது மணப்பெண் கௌரியக்கா, கதவுக்குப் பின்னால் ஒளியும் மாமி என எல்லாரும் தயக்கமின்றி  கை நீட்டுவார்கள்.

ஒன்றொன்றாய் அவரவர் வாங்க, மதியம் வந்துவிடும். தவறாமல் லட்சுமிப் பாட்டி சாதம் பிசைந்து, பலா இலை கழுவி எடுத்துக் கொண்டு மெதுவாய் வரும். நிதானமாய் உண்டு முடித்து “தேவுடு நின்னு சல்லகா சூஸ்தாடம்மா” என்கையில் கண்கள் பனிக்கும். ஒருவரும் பேரம் பேசி நான் பார்த்தில்லை.  வீதி முழுதுமே அங்கு வந்து விடுவார்கள். ஏக்கமாய் பார்க்கும் வேலை செய்யும் சிறுமிகளுக்கும் சும்மாவே 2 வளையலாவது போட்டு விடுவார் தாத்தா. வியாபாரம் முடிந்ததும், கலியாணம், சீமந்தம், வளைகாப்பு என்று விசேஷமிருப்பவர்கள் வெற்றிலை பாக்கில் பத்திரிகை வைத்து அழைப்பார்கள். நல்ல டிசைனில் கொண்டு வர வேண்டும். இத்தனை பேர் வருவார்கள். எல்லா அளவிலும் கொண்டு வர வேண்டுமென்று கேட்பார்கள். இவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள்.

வளையல் அடுக்கி காசு வாங்கியதும், ஒரு தட்டு வாங்கி, பைக்குள் கசங்கிய வெற்றிலை பாக்கில் காசு வைத்து ஆசிர்வாதம் செய்வார். அதும், வளைகாப்பில் பெண்கள் காலில் விழுமுன்னரே பதறி பாதியில் தடுத்து ‘ஒத்துரா சிட்டி தல்லி’ என்று உச்சி முகரும்போது அங்கே வியாபாரி இல்லை, ஜாதி இல்லை, பொருளாதார ஏற்றத் தாழ்வில்லை . நேசம் நேசம் நேசம் மட்டுமே. ஆண்களைக் கண்டால் அழும் குட்டிப் பெண் கூட மடியில் அமர்ந்து முகம் பார்த்து வளையல் போட்டுக் கொள்ளும்.

பிற்பாடு எங்கோ படித்தேன். கி.ரா. என்று கவனம். இந்தத் தொழிலுக்கு வருமுன்னர் தொழில் கற்றுக் கொடுக்கும் முதியவருடன் (தந்தை அல்லது பாட்டன்) குல சாமி கோவிலில் சத்தியம் செய்வார்களாம். நான் மணக்கும் பெண்ணைத் தவிர அனைவரையும் தாயாய், சகோதரியாய் நினைப்பேன் என்று.  அதனால் தானோ அத்தனை பெண்களும் கூச்சமின்றி கை பிடிக்க விட்டு வளையல் போட அனுமதித்தார்கள்? இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.

Friday, September 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.3

சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால் உருத்திரகுமாரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அமெரிக்கா அறிவித்துள்ளதாக திவயின தகவல்

ஃபெய்ன், பாய்ல்லாம் முன் வைத்ததை முதல்ல பார்த்துட்டு வருவாங்கப்பு. சரிதானே?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர் விடயத்தில் ராகுல் காந்தி கூறுவதெல்லாம் தவறு: வைகோ

நீங்களெல்லாம் சரியாச் சொல்லிதான் என்னாச்சி?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய விவசாய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது

ஏன்டா! உள்ளூர்ல ஓணான் புடிக்க வழியில்லை. இறக்குமதின்னு சாவறீங்க. அவனுக்கு இடுப்பு பிடிக்க ஆளனுப்புறாராம்ல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் ரத்து தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம்

அதிகாரப் பிச்சைன்னு சொல்லத்தான் கேள்விப் பட்டிருக்கேன், இதானா அது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவலில் உள்ள ஐ.நா. சபை ஊழியர்கள் துன்புறுத்தப்படும் பட்சத்தில், அரசு சட்டத்தை மீறியுள்ளதாக கணிக்கப்படும்: ஐ.நா.சபை கண்டனம்

ஏனோ? ஒரே நாள்ள எத்தனை உயிர் போச்சி. அதெல்லாம் மீறினதில்லைன்னு தானடா இருக்கீங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், அதன் சர்வதேச தொடர்புகள் அச்சுறுத்தலாகவே உள்ளன: ஜீ எல் பீரிஸ்

ரொம்பத்தான்டா அஞ்சுறீங்க. மொத்தமா அழிச்சாச்சின்னு டாக்டர் பட்டமெல்லாம் குடுத்துக்குறீங்க. அப்புறம் யாருடா தொடர்பு வைக்கிறா? ஒய்ஜா போர்ட்ல ஆவி கூடதான் வெச்சிக்கணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தக் குற்ற நாடுகள் தொடர்பான ஐ.நாவின் வரைபடத்தில் இலங்கை

இதத்தான் படம் காட்றதுன்னு சொல்லுவாங்க போல.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை பாதுகாப்பு அமைச்சு

எல்லாத்தையும் ரொம்ப உறுதியா சொல்லிட்டீங்களோ. இது மட்டும் ஏன் சொல்ல முடியாது?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை : இந்து நாளிதழ்

மறைவுக்கு விளம்பரம் குடுக்க சொல்லி இவன்ட வந்தாங்களா? வெறி புடிச்சி அலையுது நாயி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் : சம்பந்தம்

இவங்க அபிலாஷைக்கு அது தடையா இருக்கிறது தான் பிரச்சினை. இல்லாத ஊருக்கு  இலுப்பைப் பூ சர்கரைன்னு அப்படியாவது நாம ஒரு பதவி புடிச்சிடணும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சனல்-4" வீடியோ குறித்த சர்வதேச விசாரணை:அரசு ஒருபோதும் சம்மதிக்காது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

அது எங்களுக்கு தெரியுமே? உங்கண்ணன் ஏதோ கதை சொல்றான் பாரு தம்பி. பேசிக்கிங்கடா. ஆளாளுக்கு உளறாம.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேனல் 4 இல் ஒளிபரப்பான வீடியோ உருவாக்கியது யார் என கண்டுபிடித்துள்ளோம் - மஹிந்த சமரசிங்க

மகா கேவலமா இருக்கு தம்பி கதை. இப்புடியே ஊரை ஏமாத்த முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்டி ஆப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்

இதான் 3 மாசமா அலறிக்கிட்டிருக்காங்களே. நீங்க தேர்தல் துக்கத்துல இதெல்லாம் எங்க பார்த்திருக்கப் போறீங்க?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்கிறோம்:ராகுல்

இப்படி சொல்லி அனுப்பி வெச்சது போறாதா தம்பி. விடுப்பா. அவங்களுக்கே விதி முடிஞ்சி போய்டுவாங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழர் பிரச்சனையில் என் பாட்டி,தந்தை, தாயார் அக்கறை செலுத்தினர்:ராகுல்

ம்ம்கும். பாட்டி பேரை கெடுக்கறதுக்குன்னே இருக்கு போல பேராண்டி.  மத்த ரெண்டு பேரு செலுத்தின அக்கறை எல்லாருக்கும் தெரியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்பாட்டு பாடி அசத்திய மத்திய அமைச்சர்!

ஆகக்கூடி தமிழனுக்கு பாட்டும் கதையும் சொல்லி விளுத்திடலாம். போங்கடாங்கொய்யாலே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இளம் தலைவர் ராகுல்தான்: வாசன்

பாடைய புடிச்சி தொங்கறதெல்லாம் பதவிய விட மனசில்லாம இருக்கிற கட்சியில 50 வயசு ஆனாலும் இளைஞர்தான். பதினெட்டு வயசில சேர்ந்தா பாலர் அணியாங்க வாசண்ணா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியார் இல்லத்தை சீரமைக்காவிட்டால் போராட்டம்: இல.கணேசன்

ங்கொய்யாலே. பாரதி அரசாங்க சொத்தா? ஓட்டுக்கு எவ்வளவு காசு குடுக்குறீங்க. அக்கறை இருந்தா நீங்க பண்ணலாம்ல?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாமீன் கேட்டு மான்கறி வைத்தியர் மனு

பிணையா பணம் கட்டுறானாமா? இல்ல தங்கபஸ்பம் தரானா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ராசி இல்லாதவளா?: நடிகை ரோஜா ஆவேசம்!

ராஜ் டிவிய பாருங்கம்முனி. ராசிக்கல்லு போட்டுக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தூண்டிற்புழுவினைப் போல்

பன்னிக்காய்ச்சல் பீதியெல்லாம் ஒன்னுமே இல்லங்கறா மாதிரி கொஞ்ச நாளா பேப்பர் வாங்க கடைக்குப் போனா தவறாம காதுல விழற கேள்வி. இன்னைக்கு எத்தன பேருப்பா மாட்டினான்னு. பக்கத்துக்கு பக்கம் லஞ்ச ஊழலில் கைதுன்னு ஒரு நியூஸ். தவராம ஒரு சுமாரான மீன் மாட்டினாலும், ஆண், பெண், பியூனிலிருந்து பெரிய அதிகாரின்னு ஒரு துறை விட்டு வைக்காம லஞ்சம் வாங்கி மாட்டிகிட்டுதானிருக்காங்க. அட பிடிக்கிறாங்கப்பா, கொஞ்சம் கேப் விடுவோம்னு கூட எவனுக்கும் உறைக்காதுபோல. எவனோ மாட்டப்போறான். நான் மாட்ட மாட்டேன்னு திண்ணக்கம்.

சாதாரணமா யாரோ ஒரு புகார் குடுத்துட்டாங்க, போய் ரெய்ட் அடின்னு அடிக்க மாட்டாங்க. தீவிரமான கண்காணிப்பு, விசாரிப்பு, அதுவும் ஒரு எல்லை மீறிப்போய் குடுக்கலைன்னான்னு கொலக்கேசு ரேஞ்சுக்கு போறப்பதான் கஞ்சி காச்சுவாய்ங்க. பரதேசிப் பய புள்ளைய கொட்டித்தான் குடுக்குறான் சம்பளம். அதுக்கு உக்காந்து தின்னாலே ரெண்டு பேருக்கு உதவலாம். அப்படி இருந்தும் இப்படிப் பேராசை பிடிச்சி எல்லாம் இழந்து, பிச்சை எடுக்கிற நிலமைக்கு வந்தும் எவனுக்கும் எப்படி உறைக்காம போகுது? எனக்காகவா வாங்கினேன், பொண்டாட்டி புள்ளகுட்டின்னு கதை விட்டாலும் மனுபோட்டு பார்க்க கூட வருவாங்களானு சந்தேகம்.

இது நிறைய சலிக்க சலிக்க படிச்சாலும், நேற்றும் இன்றும் மாட்டின ரெண்டு கேஸ் ரொம்பவே கேவலமா இருக்கு. காசநோய் ஒழிப்புக்கு உதவியாளருக்கு ஆள் எடுக்கிறாங்களாம். 180க்கும் மேல வேலை காலின்னு, பக்காவா ஏஜண்ட் வச்சி வாங்கி இருக்கிறாரு ஒரு உயரதிகாரி. பேப்பர்காரன் பங்குக்கு இந்தியத் தொலைக்காட்சியிலேயே மாதிரி இந்தத் துறையில் உயர் அதிகாரி மாட்டினதுன்னு (வாங்கினதில்லை) சிறப்பா வேற சிலாகிச்சுக்கிறான். சின்ன வயசோ? கன்னா பின்னான்னு செலவுக்கு காசு போதாதுன்னனு வாங்கி இருக்குமோன்னு பார்த்தா கழுதைக்கு 52வயசு. மனைவி கோவையில் விரிவுரையாளர். மகனும் மகளும் படிக்கிறார்களாம். ரூம் போட்டு லஞ்சம் வாங்கியிருக்காரு அய்யா.

எங்க பார்த்தாலும் கார்டு தேய்க்கிற நாள்ள, பெரிய மகாராஜா மாதிரி 2லட்சத்து 30ஆயிரம் மாட்டின காசை செலவுக்கு வெச்சிருந்தேன்னு சொல்லுறானாம். புடிச்ச பிறகு மூஞ்சில கர்சீப்பைபோட்டு மூடிக்க இருக்கிற அறிவு, தன் செயலால ஒரு ஆசிரியத் தொழில்ல இருக்கிற மனைவிக்கும், படிக்கிற பிள்ளைகளுக்கு கல்லூரியில் ஏற்படும் அவமானத்தை நினைச்சுப் பார்க்க முடியாமலா காசு கண்ணை மறைச்சுடும்?  ஆள் நியமனத்துக்கே இப்படி வாங்கினான்னா, மருந்து வாங்குறதுல எவ்வளவு அடிப்பான்? இவனுக்கு லஞ்சம் குடுத்தவன் காசநோய் ஒழிக்கவா வேலை செய்வான்? அவன் ஒன்னுக்கு பத்தா போட்ட முதல் எடுக்க நினைக்க மாட்டானா? காச நோய் சாவடிக்குதோ இல்லையோ இந்தக் காசு நோயை ஒழிக்கக் கூட காசு தேத்துவாங்களாட்ருக்குது.

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்லுவாங்கல்ல. அடுத்த கேஸ் கோவில்ல. சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை அதிகாரி (காசு வாங்கறதே அறம் போல இவருக்கு). இந்தக் கோயில் கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜகணபதி கோவில் அர்ச்சகர், தட்டில் விழும் காசை தானே வைத்துக் கொள்ளவும், தனி உதவியாளரை நியமித்துக் கொள்ளவும் 10ஆயிரம் ரூபாய் தரணும். இல்லைன்னா காசு வராத கோவில்ல மாத்திடுவேன்னு மிரட்டி காசு வாங்கி இருக்காரு. விட்டா, சாமிதான் வாங்க சொன்னாருன்னே சொல்லுவானுங்க போல. மனசு சரியாயில்லை கோவிலுக்காவது போலாம்னா காசு குடுத்தாத்தான் சாமி பார்க்கலாம்னு மறிப்பானுங்க போல.

நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு பாட்டு கவனம் வரும்போது பாரதியும் கவனம் வருமில்லையா? இன்னைக்கு அவரோட நினைவுநாள். நாம ஏன் இந்தப் பாட்டை நினைச்சி இன்னும் நொந்து போகணும். அழகா பாரதி பாடின ஒரு காதல் பாட்டு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் கடைசியில் நாமளே தேத்திக்க வேண்டியதுதான்னு சொல்றா மாதிரி அழகான பாட்டு. கேட்க மனசிருந்தா கேட்டுப் பாருங்க.

Thursday, September 10, 2009

சொல்லாமல் மறைத்த பதில்கள்..

அம்மா: மண்ணுல படுத்து புரண்டு எழுந்து வருவியா. யூனிஃபார்ம்லாம் இவ்வளவு அழுக்கா வந்தா யாரு துவைக்கிறது?
மகன்: (வாஷிங் மெஷின் தான். நீங்க ஸ்கூல்ல விளையாடும் போது தரைல கம்பளம் விரிச்சிட்டா விளையாடினீங்க)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கண்ணுல்ல. டாக்டர் சொன்னாங்கல்ல. நிறைய காய் சாப்பிடணும்னு. சாப்புடும்மா.
மகன்: ( நம்ம வீட்ல ஒரு நாளாவது சாப்பிட்டிருந்தா அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறீங்க?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆங்கிலத்துல என்ன மார்க் எடுத்திருக்க? இதெல்லாம் ஒரு மார்க்கா?
மகன்: (அன்னைக்கு அந்த அங்கிள் கலியாணத்தில உங்களுக்கு ரெண்டு வரி ஒழுங்கா ஆங்கிலத்தில எழுத வராதுன்னு உங்க பாஸ் யார் கிட்டயோ சொல்லிண்டிருந்தாங்களே. நான் கேட்டேனா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆயிரம் ஆயிரமா ஃபீஸ் கட்டுறோம்ல. நல்லா படிச்சா என்ன?
மகன்: (லட்சம் லட்சமா சம்பளம் தராங்களே. நீங்க வேலை செஞ்சா என்ன?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: விளக்கு வெச்சாச்சி. இன்னும் காமெடி சானல் பார்த்துண்டிருக்காம போய் படி.
மகள்: (சீரியல் ஆரம்பிச்சிடும். ரிமோட்ட குடுன்னு நேர்மையா கேட்டா என்ன குறைஞ்சிடும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: என்னேரமும் டிவி, விளையாட்டுன்னு இல்லாம நிறைய படிக்கலாமே. அறிவு வளரும்ல?
மகன்: (நீங்க எனக்கு அப்பாவாகி இத்தன வருஷத்தில ஒரு நாளும் படிச்சி நான் பார்க்கலையே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: புக், கைட்னு எல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேன்ல. ஒரு நாளாவது படிக்கிறியாடா?
மகன்: (வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகி இருக்குமா? வருஷம் புல்லா நான் படிக்கணும்னு எதிர்பார்த்தா என்ன நியாயம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கணேஷ் எவ்ளோ மார்க் வாங்கறான். உனக்கென்ன கேடு?
மகன்: (கணேஷ் ஸ்கூலுக்கு கார்ல வரான். அவனுக்கு லேப்டாப் இருக்கு. அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அந்த அங்கிள் ஏதோ கேட்டா  பதில் சொல்லாம போறது மேன்னர்ஸ் இல்லை. தெரிஞ்சதா?
மகன்:(அவங்க போனப்புறம் சரியான சாவுகிராக்கின்னு சொல்றது மேன்னர்சாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: கணக்குப் பரீட்சைல எவ்வளவு சுலபமா கணக்கு குடுத்தும் இவ்வளவு பேர் தப்பு தப்பா பண்ணி இருக்கீங்களே?
மாணவன்:(எங்கண்ணனுக்கும் நீங்கதான் டீச்சராமே. சிலபஸ் மாறிடுச்சின்னு கணக்கெல்லாம் நீங்களும் திணறி திணறிதான் போடுறீங்கன்னு சொல்றான்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பசங்களா, நானும் ஒரு அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு வெறியோட படிக்கணும்.
மாணவன்:( சே. இந்த கலாம் அங்கிள் நீங்க படிக்கும் போதே விஞ்ஞானியாகி இருக்கலாம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பரிட்சைல காபி அடிச்சா அப்புறம் பரீட்சை எழுத முடியாது, சாக்கிறதை.
மாணவன்:(சாக்கிறதையா அடிச்சா நீங்க புடிக்கவே முடியாதே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அரை வருச பரீட்சைல கணக்குல 100 வாங்கினா உனக்கொரு ஜீன்ஸ் வாங்கித் தரேன்.
மகன்:( அதே பேப்பர் நீங்க எழுதி 50 மார்க் வாங்கினா நான் ஒரு மாசம் டி.வி. பார்க்காம இருக்கேன்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: எப்போ பார்த்தாலும் பிஸா, நூடில்ஸ்னு ஃபாஸ்ட்ஃபுட் உடம்புக்கு நல்லதில்ல.
மகன்:(எங்கயாவது போய்ட்டு , ஏங்க ரொம்ப டயர்ட், பிஸா வாங்கிண்டு போலாம்னு சொல்றப்போ நல்லதோ?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: டெய்லி அகராதி எடுத்து ஒரு பத்து வார்த்தை பார்த்து அர்த்தம் தெரிஞ்சிக்கடா.
மகன்:(தாத்தாக்கு அவங்கப்பா குடுத்தது மூலை மடியாம இருக்கே அதாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: கழுத வயசாச்சி. எப்பவும் தங்கச்சி கூட சண்டையா? விட்டுக்குடுத்தா என்ன?
மகன்:(ங்கொய்யாலே. காலைல சாக்ஸக் காணோம்னு எனக்கு சாப்பாடு கூட கட்டவிடாம‌ சண்டபோட்டதுக்கு நான் ஏதாவது சொன்னேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: தினம் டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளெயின்ட். மானம் போவுது.
மகன்:( ராத்திரி 9 மணிக்கு மேல ப்ரோஜக்ட் மேனஜர் கிழிக்கிறது பால்கனில நின்னாலும் கேக்குதே. ஒரு வார்த்த நான் இப்படி கேட்டிருப்பேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: மணி பத்தாகுது. போய் படு. எப்போ பார்த்தாலும் நெட்ல
மகன்:(உருப்படாத இடுகை போடுறதுக்கு அலம்பல பாரு.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------