Saturday, August 8, 2009

இதென்னங்க நியாயம் - 2

அவனவனும் கடன்படாம கவுரவமா வாழ்க்கைய ஓட்ட போராடுற காலம் இது. இதில நான் கடனாளியாக பட்ட பாடு இருக்கே. அவ்வ்வ்வ்வ். நரி இடம் போனா என்ன. வலம் போனா என்ன. நம்மள பிடுங்காம போனா சரின்னு தானே சாமானிய பொதுசனத்தோட தினசரி ஓடுது. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர அரசுத் துறை கிட்ட அறிவிருக்கிறவன் போய் நிப்பானா? ஏதோ ஒரு தேவைக்காக அங்க போக வேண்டிய நேரம் வந்துச்சோ, மனுசனுக்கு உங்க உறங்க முடியுமா? அப்படி ஒரு இக்கட்டு அடியேனுக்கு வந்து சேர்ந்துச்சி.

பொட்டி தட்டி பொழப்ப ஓட்டிகிட்டிருந்த பிள்ளையாண்டான் ஒரு நாள் வந்து நின்னான். மேல படிக்க போறேன். அமெரிக்கா போணும்.நாலு பல்கலைக் கழகத்தில இடம் கிடைச்சிருக்குன்னான். சரி தம்பி பண்ணிருவம். நீ மேக்கொண்டு பாருன்னு கொஞ்சம் தெனாவட்டா சொல்லிட்டேந்தான். அப்பாவியான என்னை அரசு இயந்திரத்துக்கிட்ட சிக்கவெச்ச கொடுமை அந்த நேரம் வந்து உக்காந்திச்சி போல.

ஆவ‌ண‌மெல்லாம் த‌யார் ப‌ண்ணிகிட்டிருந்த‌ப்ப‌ அண்ணாச்சி ஆளுங்க‌ளால‌ வ‌ந்துச்சி ஆப‌த்து. அதாங்க‌ ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன்ல‌ வேலை செய்ய‌ ஆளுங்க‌ள‌ அமெரிக்கா அனுப்பின‌ ஊழ‌ல். வெள்ள‌ச்சாமி தொலைச்சுப்புடுவேன்னு எச்ச‌ரிக்கை விட்டான். சொத்து விவ‌ர‌த்தில‌ ப‌ண‌மா காண்பிச்சா க‌ட‌வுச்சீட்டு த‌ர‌ மாட்ட‌ங்குறான் வெள்ள‌ச்சாமின்னு ஒரு பீதிய கிளப்பி விட்டானுவ . இதென்னாடா விவ‌கார‌ம். ச‌ரி, சித‌ம்ப‌ர‌த்த‌ ந‌ம்புவோம். க‌ட‌வுச்சீட்டு வாங்க‌ணும்னா அவ‌ரு ஒரு வார்த்த‌ நான் க‌ட‌ன் குடுக்கிறேன்னு எழுதி குடுத்தா போதுமாம். அப்புற‌ம் க‌ட‌ன் வாங்க‌ணும்னு அவ‌சிய‌மில்லைன்னு உள்ளுக்குள்ள‌ இஃகி இஃகினு சிரிச்சிகிட்டு (என் விதி சிரிக்கிற‌து கேக்க‌லை)அதான் புள்ளைய‌ ம‌ட்டும் நீ பெத்துக்க‌ ப‌டிப்பு செல‌வுக்கு, ம‌ருத்துவ‌ செல‌வுக்குன்னு வ‌கை வ‌கையா க‌ட‌ன் த‌றேன்னு சொல்றானுவ‌ளேன்னு ஒரு வ‌ங்கிக்கு போனேன். உசாராத்தேன் போன‌து.

எவன் கடன் வாங்குறான்? விசா கிடைச்சதும் இந்த பக்கமே வரமாட்டானுவ. அப்படியே வந்தாலும் ஒரு செமஸ்டரோட சரி. ஆறு மாசத்தில கடன கட்டிடுவாங்க. அதனால பரிசீலனைத் தொகை ஐந்தாயிரம்,வங்கி வழக்கழிஞர் சான்றிதழ் தரணும் அதுக்கு ஒரு மூவாயிரம், மதிப்பீட்டாளர் பரீசலனைக்கு இரண்டாயிரம்னு சின்ன ஆப்பு இறங்கிச்சி. குறி சொன்னா மாதிரி எவனும் கடன் வாங்குறதில்லைன்னு சொன்னதில குளிர்ந்து விறைச்சதால அந்த ஆப்பு இறங்கின வலி தெரியல.

எல்லா ஆவணமும் கொடுத்த பிறகு ஒரு இந்தியன் எழுத்தர் மூலம் பெரிய ஆப்பு இறங்கிச்சி. வீட்டு பிளான் சரி இல்ல. 4 வீட்டுக்கு அனுமதி வாங்கிட்டு 10 வீடு கட்டி இருக்காங்க. அதனால சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்து சான்றிதழ் கொண்டுவான்னு திருப்பிட்டான். விசாக்கு நேர்காணலுக்கு 10 நாள் தான் இருக்கு. சரி. ஆளத் தேள புடிச்சி வாங்கிறலாம்னு கூட வேலை செய்யிற நண்பர் கிட்ட புலம்பினப்போ பார்த்தாரு ஒரு பார்வை. நீயெல்லாம் எப்படித் தாண்டா பொழைக்கிறன்னு. அப்புறம், இதெல்லாம் ஆவாத காரியம்.போய் கேட்டா, பார்த்துட்டு ஆமாம், வரைமுறை மீறி இருக்கு. நெறிப் படுத்த இவ்வளவு கட்டணம்னு கட்டச் சொல்லுவான். பத்து வீட்டுக் காரனும் ஒத்துகிட்டு கையெழுத்து போட்டு பணம் கட்டணும். கட்டின பொறவு சட்ட விதிக்குட்பட்டு ஒரு வரைபடம் குடுப்பான். இது மாதிரி இடிச்சி கட்டிட்டு வந்து சொல்லுங்க. நாம சரி பார்த்து சான்றிதழ் தருவோம்னு. வரை படத்தைப் பார்த்தா தரைத் தளத்துல சுற்றுச் சுவர் முழுதுமா இடிச்சி கட்டணும். அதாவது மொத்த வீட்டுத் தொகுப்பும் புதுசா கட்டணும். அப்புறம் கட்டுனியா கட்டுனியான்னு குடைச்சல் குடுப்பான். நம்ம தொகுப்பில 1.25 லட்சம் கொடுத்துட்டு அவஸ்தைப் படுறோம்னு அணுகுண்டு போட்டாரு.


இனிமே சரி வராதுன்னு ஆளு அம்பை பிடிச்சி செ.பெ.வ.கு. ல ஒரு பெரிய அதிகாரிகிட்ட போய் வரைபடத்தை நீட்டுனா வாங்கி பார்த்தாரு. பார்த்துட்டு ஆமாங்க, நெறிப்படி கட்டலை. இது கட்டி 10 வருசத்துக்கு மேல ஆச்சி. அவங்க சொன்னா மாதிரி நாம குடுக்கிற வரைபடம் மாதிரி கட்டினாதான் சான்றிதழ் கிடைக்கும். அது நடக்காத காரியம். அதுமில்லாம, இந்த நெறிப் படுத்துற சட்டத்தை எதிர்த்து பயனாளர் குழு உச்ச நீதி மன்றத்தில நிரந்தரத் தடை வாங்கிட்டாங்க. சட்டப் படி இப்படி வீடு கட்டி மூன்று வருடத்துக்குள்ளதான் நாங்க நடவடிக்கை எடுக்கலாம். பத்து வருஷமாகிட்டதால நாங்க இடிக்கல்லாம் முடியாது. அதனால உங்க வீட்டுக்கு எந்த பாதிப்பும் வராது. அதே நேரம் சட்டப் படி அது வரைமுறை மீறிய கட்டிடம் தான். சென்னைல 99.9 சதம் இப்படித்தான் இருக்கு. நீங்க விற்கிறதுக்கு எந்த தடையுமில்லை.பிணையா காட்டினா இதே பிரச்சினை வந்தா அது சரிதான். இத சரி பண்ண வழியே இல்லைன்னுட்டாரு.வேற வங்கில கேட்டுப் பாருங்கன்னு ஆலோசனை இலவசம். அதுக்கு வேற ஒரு ஐந்தாயிரம் செலவாகுமே . அவனும் இதே கேக்காம இருப்பானான்னு என்ன நம்பிக்கை?

அப்புற‌ம் வேற‌ ஆளு வேற‌ அம்பு, நிர‌ந்த‌ர‌ வைப்புன்னு ஏதோ ப‌ண்ணி அந்த வங்கி இந்தியன சமாளிச்சி கடனாளின்னு கடிதம் வாங்கி க‌ட‌வுச் சீட்டு கிடைச்ச‌து வேற‌ க‌தை.

தெரியாம‌த்தான் கேக்குறேன்: இப்ப‌டித்தான் க‌ட்ட‌ணும்னு ஒரு வ‌ரை ப‌ட‌த்தை ஒப்ப‌ளித்த‌ பிற‌கு அப்ப‌டித்தான் க‌ட்டுறாங்களா? இல்லையான்னு சரி பார்த்து அப்ப‌வே ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாத‌ நிர்வாக‌ம் எப்ப‌டி வேணுமானாலும் க‌ட்டிக்கோ. வித்துக்கோ. அப்புற‌ம் மூணு வ‌ருச‌த்துக்குள்ள‌ நான் உடைச்சி போட‌லாம். த‌ப்புச்சுன்னா எஸ்கேப்னு ஒரு ச‌ட்ட‌ம் எதுக்கு? இப்படி கட்டுறதையும் வாங்குறதையும் தடுக்கணும்தான். ஒரு தேதி குறிச்சி, இதுக்குள்ள இவ்வளவு தண்டம் கட்டித் தொலை. இருக்கிறத இடிக்காம ஒப்பளிச்சி தொலையுறேன்னு சொன்னா என்னா போயிடும்? என் சட்டம் என்னோட. நீதி மன்றத் தீர்ப்பின் பாதுகாப்பு உன்னோடன்னு கவுரவம் பார்த்தா இது என்னாங்க நியாயம்?

பி.கு. சரி போடேன்னு இருந்துட்டா அப்புறம் நாம எதுக்குன்னோ என்னாமோ, விரிவாக்கம் இரண்டு ஆரம்பிச்சி, அதிலயாவது இத ஒழுங்கு பண்ணாம இப்போ அதே வரைமுறையில ஆறு வீடு இருந்தா பரவால்லையாம். அதுக்கு மேலன்னா தப்பாம். இவனுங்கள எவன் கேக்குறது?
***

7 comments:

இராகவன் நைஜிரியா said...

பாமரன் என்று சரியாகத்தான் பேர் வச்சு இருக்கீங்க.

ஏங்க அரசு இயந்திரம் அப்ப அப்ப ஒழுங்கா வேலை செஞ்சா அப்புறம் வேலை செய்வதற்கு ஒன்றுமில்லாமல் போய் விடாதா? அதனால் தான் உடனே ஒன்றும் செய்வதில்லை. மெதுவாகத்தான் செய்வார்கள்.

துபாய் ராஜா said...

என்ன கொடுமை சார் இது ??!!.

vasu balaji said...

/ஏங்க அரசு இயந்திரம் அப்ப அப்ப ஒழுங்கா வேலை செஞ்சா அப்புறம் வேலை செய்வதற்கு ஒன்றுமில்லாமல் போய் விடாதா? அதனால் தான் உடனே ஒன்றும் செய்வதில்லை. மெதுவாகத்தான் செய்வார்கள்./

காசு தேத்த வழி. அவ்வளவுதான்.

vasu balaji said...

/ துபாய் ராஜா said...

என்ன கொடுமை சார் இது ??!!./

ஒரு குடிசை வாங்கணும்னு வாய கட்டி வயத்த கட்டி செத்தா போதாதுங்க. எஞ்சினீயரா, வக்கீலா எல்லாம் பாதிக்கு படிக்கணும் போல.

Suresh Kumar said...

மெதுவா போனா தானே அரசு இயந்திரம்

Senthilkumar said...

அரசு எந்திரம் அதன் தலைவர் போல வயதாகி விட்டது

யூர்கன் க்ருகியர் said...

//அரசு எந்திரம் அதன் தலைவர் போல வயதாகி விட்டது//

செம தமாசு :)