Wednesday, July 22, 2009

செல்லாப்பு

மனுசனுக்கு எங்கல்லாம் ஆப்பு இருக்குமோ தெரியல. மாச சம்பளம் வாங்கி பிதுக்கி பிதுக்கி செலவு பண்ணி கடைசி நாள் வெறுஞ்சட்டைய உதறி போட்டுகிட்டு போய் காசாளார் வருவாரான்னு காத்திருந்து சம்பளம் வாங்கினதும் முகத்தில வரும் பாருங்க ஒரு வெளிச்சம். அலுவலக வாசல்ல அல்வாகாரன்ல இருந்து அண்டர்வேர் விக்கிறவன் வரைக்கும் கடைய போட்டு, கடன் குடுத்த ஆளுங்க ஒளிஞ்சி நின்னு கப்னு பிடிச்சி உதறின்னு களேபரமா இருக்கும். எல்லாம் போச்சி. சம்பளமெல்லாம் வங்கிலதான்னு வந்திச்சி ஆப்பு. கடன்னா காததூரம் ஓடின பயபுள்ளைகள புடிச்சி இந்தியாவே கடன் வாங்கறப்ப குடிமகன் நீ கடனில்லாம இருக்கலாமான்னு கடன் அட்டைய நுழைச்சாங்க பாருங்க. அது அடுத்த ஆப்பு. ஃபோன்னாலே யாரோ மண்டைய போட்டுட்டாங்களான்னு கலங்கி போன காலம் போய், மாப்ள கணக்கா இருக்கான் பயபுள்ள பைத்தியம் புடிச்சி போச்சேன்னு பார்த்தா அப்புறம் தெரியுது அவரு ப்ளூடூத்ல தனக்கு தானே பேச்சிட்டு போறது . இப்படி அலைபேசி ஆப்பு கூட சேர்ந்திச்சி. கடைக்கு போனா பொருள வாங்கி முடிச்சா காசா, அட்டையான்னு கேட்டு, அட்டைன்னா மேலையும் கீழையும் பார்த்து அந்தப் பக்கம் நில்லுன்னு விரட்டி, காக்க வெச்சு பில் குடுத்த காலம் போய், காசுன்னா, நீயெல்லாம்னு ஒரு புழுவ மாதிரி பார்க்கிற கொடுமைய எங்க போய் சொல்ல? எதுக்கும் மசியாம கைமேல காசு வாய் மேல தோசைன்னு வாழ்க்கைய ஓட்டிகிட்டுதான் இருந்தேன். காலத்தின் கட்டாயம், கட்டத் துணி இல்லைன்னாலும் பரவால்ல கடனட்டை இல்லாதவன் மனுசனே இல்ல, ஆடை இல்லாம இருந்தாலும் பரவால்ல அலைபேசி இல்லாதவன் மனுசனான்னெல்லாம் புது மொழி வர அளவுக்கு ஆகிப் போச்சு. போதாக் குறைக்கு இணைய வர்த்தகம் நான் என்ன பாவம் பண்ணேன்னு தன் பங்குக்கு ஆப்பு கொண்டு வர, காசை வைத்துக் கொண்டு நேரா போய் மதுரைக்கு விமான கட்டணம் எவ்வளவுன்னா சொறிஞ்சி சொறிஞ்சி ரூ3,400ங்கறாங்க. வீட்டில உக்காந்து கணினில தட்டி கடனட்டை நம்பர் குடுத்தா ரூ1800ங்கற நிலைமைல அடிக்கிற அலைக்கு எதிர்நீச்சல் போட்டா வாழ முடியாதுன்னு அலைபேசி, கடனட்டை, இணைய இணைப்புன்னு ஆப்பு மேல ஆப்பா சந்தோசமா ஏத்துக்க வேண்டியதா போச்சு.

அட்டையும் இணையமும் பரவால்லைங்க. கொத்து குண்டு மாதிரி அலைபேசி ஆப்புல இருந்து கிளம்புது பாருங்க வகை வகையா ஆப்பு. தாங்க முடியலைங்க. 500 ரூபாய்க்கு ஏதோ வாங்கினா வருது ஒரு அழைப்பு. ரூபாய் 60,000 என்னை நம்பி கடன் குடுக்க தயாரா இருக்கிற வங்கி 500 ரூபாய மாசா மாசம் தவணையா கட்டுறியான்னு கேக்க கூசிப் போச்சு . ஆத்தா அப்பன் கூட கொஞ்சி இருக்காத குரல்ல கொஞ்சி, நாங்க உன்ன கடனாளியாக்குறதா முடிவு பண்ணி ரூபாய் மூணு லட்சம் ஒப்புதல் பண்ணியாச்சி. மஞ்ச தண்ணி தெளிச்சி மாலைய போட்டுகிட்டு எப்ப வந்து கழுத்த நீட்டுவ அறுக்கங்கறத ஒத்த வரில எப்போ வேணுமோ இந்த நம்பருக்கு அழைச்சா போருங்கன்னு சொல்றதுக்கு மசியாம இருக்கணும்னா என்னா மனத் திடம் வேணும் தெரியுமா? காரு வாங்கறியா, கருவேப்பிலை வாங்கறியான்னு குறுஞ்செய்தி தாக்குதல் வேற. குழம்புக்கு அரைச்ச அம்மியில கோவணம் கட்டிகிட்டு உக்காந்தவன் மாதிரியே கடுப்பில இருக்கிற அதிகாரி கிட்ட சிக்கி சின்னா பின்னமாகாம பேசிட்டிருக்கிறப்போ இவனுகளுக்கு எப்படி தெரியுமோ? தவறாம வரும் அழைப்பு. அவ்வளவு நேரம் பட்ட அவஸ்தையும் அம்போன்னு போக அந்தாளுட்ட கிழிபட்டு சாவணும். தூங்கறப்போ கொசு கடிச்சா தூக்கத்துலயே ஒரு தட்டு தட்டுறாப்புல இந்த அவஸ்தைல்லாம் பழகிதான் போச்சுன்னு இருக்க வந்துச்சுங்க ஒரு ஆப்பு போன மாசம்.

காலையில அலுவலகத்துக்கு போற அவசரத்துல ஒரு அழைப்பு. ஒரு அம்மணி ரொம்ப மரியாதையா நம்ம அலைபேசி எண்ணை சொல்லி அதானுங்களேன்னிச்சி. இல்லைன்னா எப்படி பேசப்போறன்னு கேக்க வந்தாலும் காலைலயே பொறுமை இழந்தா கஷ்டமேன்னு ஆமாம்மான்னு சொல்லி வெச்சேன். பேர சொல்லி நீங்கதானான்னுச்சி. ஆமாம்னேன். அன்னிய வங்கி பேர சொல்லி அவிங்க கடனட்டை வெச்சிருக்கீங்கல்லன்னிச்சி. மெதுவா வயறு கலங்க ஆமாம்னேன். இந்த கடனட்டைய தவறா பயன் படுத்தாம பாதுகாவலா ஒரு இன்சூரன்சு, அப்படி காணாம போனாலோ அத வெச்சி யாராவது உனக்கு நாமம் போட்டா அதுக்குண்டான பணத்த இன்சூரன்சு கட்டும்னு சொல்லி புரியுதுங்களான்னிச்சி. இந்தக் கலிகாலத்துல இப்படி கூட பாசக்கார பயலுவ இருக்கானுவளே. தேவையோ இல்லையோ க‌டனயும் குடுத்து காணாம போய் கள்ளத் தனம் நடந்தா பாதுகாப்பும் தரானுவளேன்னு ஆகா நல்லா புரியுதுங்கன்னேன். ரெண்டு நிமிடம் சார். அதோட இல்ல இது கூட மருத்துவ வசதியும் தராங்கன்னிச்சி. லேசா, அடி மனசுல உசாருடா வெண்ணன்னு அலாரம் அடிக்க, சொல்லுங்கன்னேன். ஆரம்பமே அசத்தலா, உங்களுக்கு ஹார்ட் அட்டாக், கேன்ஸர்னு பயமுறுத்தி இதெல்லாம் வந்தா இந்தியால எங்கன்னாலும் 2000 கு மேல ஆஸ்பத்திரில போய் அட்டைய நீட்டிட்டு ஆயுசிருந்தா விசிலடிச்சிட்டே வெளிய வரலாம். எவ்ளோ நாள் படுக்கைல இருக்கியோ நாளைக்கு இவ்வளவு ரூபாய் காசா கிடைக்கும்னு சொன்னப்போ அலாரம் கூடி, மாமனார் இருந்தா கூட இப்படி எல்லாம் அள்ளி வீசுவாரான்னு உசாராகி, சொல்லுங்க வேலைக்கு போணுங்கன்னா. திரும்ப ஒரு வாட்டி பேரு, பொறந்த நாளு, முகவரி எல்லாம் சொல்லி கடனட்டை எண் சொல்லுங்கன்னிச்சி. நான் பயணத்துல இருக்கேன் அப்புறம் பார்க்கலாம்னேன். இருங்க சார் நான் நம்பர் சொல்லுறேன் சரியா சொல்லுங்கன்னிச்சி. விட்டா போரும்டா சாமின்னு சரின்னேன். அதோட மூடிட்டு அப்புறம் அந்த நம்பர்ல இருந்து அழைப்பு வரப்போல்லாம் எடுக்காம விட்டேன் கிட்ட கிட்ட 10 வாட்டிக்கு மேல.

அந்தம்மா சினந்துகிட்டே செஞ்சதோ சிரிச்சிகிட்டே செஞ்சதோ தெரியல. வங்கில இருந்து ரூபாய் 1200 கிட்ட கட்டுங்கன்னு பில்லு வருது. அய்யோன்னு அலறி எதுக்குன்னே தெரியலயேடா பாவின்னா இன்சூரன்சு கம்பெனிகாரனுக்கு குடுத்திருக்கேன் அங்க கேளுங்கறான். பதறிப் போய் இ‍‍ மெயில்ல அழுது மிரட்டி நான் யாருன்னு அவனுக்கு தெரியாது, அவன் யாருன்னு எனக்கு தெரியாது. இப்படி நடந்துச்சி விசாரி. நான் பணம் கட்ட மாட்டன்னா பதில் வருது. வாயால சரின்னு சொன்னியேவாம். கொலை வெறியோட கோர்டுக்கு போவேன் ஒளுங்கா கேன்சல் பண்ணு. ஃப்ராடு வேலை பண்றியான்னு மெயில் பண்ணிட்டு இருந்தா குறுஞ்செய்தி அனுப்புறாரு இன்சூரன்சு காரரு. உன்னோட கோரிக்கைய இந்த நம்பர்ல பதிஞ்சிருக்கோம். ஒரு வாரத்துல தகவல் வரும்னு. நீ யாருன்னே தெரியாதேடா. நான் எங்கடா கோரிக்க வெச்சேன். இந்த வங்கிக்காரன் கிட்ட அல்லாடிக்கிட்டிருக்கேனே அவனா நீயின்னு வடிவேலு மாதிரி அவ்வ்வ்வ்வ்னு அழுது, பாரு ராசா இந்த தில்லாலங்கிடி வேலைல்லாம் வேணாம். பாலிசி கீலிசின்னு வந்தா நடக்கறதே வேறன்னா, பார்க்கரோம்னு மெயில் வருது. பின்னாடியே குறுஞ்செய்தில பாலிசிய கேன்சல் பண்ணதுல மனசுடைஞ்சு போய்ட்டோம். தண்டனை பணம் போக 324 ரூபாய் உனக்கு அனுப்பறோம்னு வருது. அய்யா சாமி நான் ஒரு பைசா கட்டல. எனக்கு ஒரு காசும் நீ தரவேணாம். எவன் கட்டினானோ அவனுக்கு மொத்தமா அனுப்பு. எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லைன்னு மெயில் பண்ணா கடனட்டை வங்கில இருந்து உன் கடன் தொகையை கேன்சல் பண்ண சொல்லிட்டோம்னு பதில் வந்துச்சு. அப்பாடான்னு இருந்தா, இன்சூரன்சு காரன் விடாப்பிடியா செக் கூரியர்ல அனுப்பிட்டேன்னு அலம்பல் பண்ணுறான்.

உசாரு சாமிகளா. அலைபேசில சரி, ஆமாம், புரியுதுனு எல்லாம் தெரியாதவங்க கிட்ட பேசிறாதிங்க. படுபாவி பயலுவ எப்படிடா மாட்டி விடலாம்னு உக்காந்து யோசிப்பாங்களோ?
***

8 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//நாங்க உன்ன கடனாளியாக்குறதா முடிவு பண்ணி ரூபாய் மூணு லட்சம் ஒப்புதல் பண்ணியாச்சி. மஞ்ச தண்ணி தெளிச்சி மாலைய போட்டுகிட்டு எப்ப வந்து கழுத்த நீட்டுவ அறுக்கங்கறத ஒத்த வரில எப்போ வேணுமோ இந்த நம்பருக்கு அழைச்சா போருங்கன்னு சொல்றதுக்கு மசியாம இருக்கணும்னா என்னா மனத் திடம் வேணும் தெரியுமா? //

உக்கார்ற எடத்துல ஆப்பு இருக்குன்றதே தெரியாமலே எத்தனை பேர் உக்கார்றாங்க...

ஆப்புக்கு அலாரம் வைத்த உங்களுக்கு நன்றி தலைவா!

sakthi said...

அலைபேசில சரி, ஆமாம், புரியுதுனு எல்லாம் தெரியாதவங்க கிட்ட பேசிறாதிங்க. படுபாவி பயலுவ எப்படிடா மாட்டி விடலாம்னு உக்காந்து யோசிப்பாங்களோ?
***

ரூம் போட்டு யோசிப்பாங்க போல

vasu balaji said...

வாங்க சூர்யா. நன்றி.

vasu balaji said...

வருகைக்கும், பின்னூட்டத்துக்கும், விருதுக்கும் நன்றி சக்தி.

யூர்கன் க்ருகியர் said...

மத்தவங்களுக்கு ஆப்பு வைத்தே ஆட்டைய போடும் பல நாட்டுக்காரனுங்க நம்ம நாட்டுல சுத்திட்டு இருக்கானுங்க.!
(ஆசை காட்டி மோசம் பன்றவனுங்கள துவம்சம் பண்ணனும்! )

நல்ல ஒரு எச்சரிக்கை பதிவுதான் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி !

கார்த்திக் said...

மனசனுக்கு எப்படி எப்படிலாம் பிரச்சனவருது.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல..

vasu balaji said...

நன்றி யூர்கன்.

vasu balaji said...

/மனசனுக்கு எப்படி எப்படிலாம் பிரச்சனவருது.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல../

வாங்க கார்த்தி. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்