Tuesday, May 19, 2009

இனியாகிலும்...

தொப்புள் கொடியறுக்க துவளாமல் உழைச்சவரே
தமிழினக் காவலரே தரம் கெட்டுப் போவீரோ?
பதவி சுகம் பெரிதென்றே பாசாங்கு செய்திட்டீர்
தமிழினத்தை அடகு வைத்தே தலைவராய் நிலைத்திட்டீர்!

ஆறே மணிநேரம் ஆரவாரமில்லாமல்
ஆங்கோர் போர் நிறுத்தம் அழகாய்த்தான் செய்திட்டீர்
கருவறுக்க கயவனுக்கு கடனாய் ஆயுதத்தை
தயங்காமல் அளித்தவரை தாயென்று அழைத்திட்டீர்!

குந்தக் குடிசையின்றி குழந்தைக்குப் பாலின்றி
கும்பிக்கு சோறின்றி குடும்பங்கள் அழிந்ததங்கே
ஒட்டு மொத்த தமிழ்க் குடியை ஓட்டாண்டியாக்கிவிட்ட‌
திமிர்பிடித்த பெண்ணுமக்கு தியாகச் சுடர்விளக்கு!

தேர்தல் முடிஞ்சாச்சி தேவையெல்லாம் முடிவாச்சி
அமைச்சர் பதவியெல்லாம் அசராம தேத்திடுங்க!
போர் நிறுத்தச் சொன்னால்தான் போயிடுமே இறையாண்மை
போரும் முடிஞ்சாச்சாம் பொழுதும் விடிஞ்சாச்சாம்!

இனியாகிலும் உம் இதயம் திறக்கட்டும்
இருப்போர் வாழ்ந்திடவே இனி வழி பிறக்கட்டும்.
ஆவாய் அடைக்காமல் ஆலாய்ப் பறக்காமல்
அவரவர் குடும்பத்தார் அன்பாய் சேரவிடும்!

கட்டத் துணி வேண்டி கவளச் சோற்றுக்காய்
காத்துக் கிடக்கவில்லை காப்பாற்று என வேண்டி!
அங்கம் இழந்தபடி அழக்கூட மறந்த படி
ஆதரவு யாருமின்றி ஆயிரம் பிஞ்சங்கே!

மருந்துக்கு வழியின்றி மன நிலையும் குலைந்தபடி
மரணம் வரமென்றே மனமுடைந்து நிற்கின்றார்!
எத்தனை மரணங்கள் எத்தனை தியாகங்கள்
எல்லாம் மண்ணாச்சு எத்தர்கள் வென்றாச்சு

இனமழிக்க தனித்தனியாய் ஏதேதோ செய்திட்டோம்
இனம் காக்க வழிதேடி ஒன்றாவோம் இப்போது
மாற்றுக் கருத்தின்றி மமதைப் பேச்சின்றி
மக்கள் நலம் கருதி மாற்று வழி கண்டிடுவோம்.

போன உயிர் போகட்டும் பொழைச்ச உயிர் வாழட்டும்
சுதந்திரமாய் அவர் வாழ வழியொன்று பிறக்கட்டும்
சொக்குவைக் கேப்பீரோ சொந்தமாய்ச் சொல்வீரோ
சொந்தங்கள் வாழ்ந்திடவே செய்யுமைய்யா ஓர் வழிதான்!

6 comments:

supersubra said...

தமிழக ஒட்டு பொறுக்கிகளை நம்புவதை கைவிடுத்து உங்களை நீங்கள் நம்புங்கள்

பாலா... said...

அப்படி விட்டிருந்தா கதை எப்படியோ போயிருக்குமே! தேவையோ இல்லையோ இவங்க தலையீடும் முக்கியம்.

SUBBU said...

மனசுல இருக்கிரத கசக்கி எடுத்திட்டீங்க :((((((((

Anonymous said...

ஏய்..என்னாப்பா நீ ......அந்தாளு எவ்வளவு பிஸி..... இப்ப போய் கவிதை ,,,கிவிதை ன்னுட்டு!

"நான் ஒருதரம் முடிவு எடுத்துட்டா அப்புறம் என் பேச்ச நானே கேட்க மாட்டேன்" அப்படின்னு சோனியா கிட்ட பேரம் பேசிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு .....


- ஜுர்கன்

கலகலப்ரியா said...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணராத கழுதைகள் இருக்கும் வரைக்கும் நரிகளுக்கு கொண்டாட்டமே!

பாலா... said...

அதாங்க வருத்தமே. இப்போவாவது ஒண்ணா உருப்படியா ஏதாவது பண்ண மாட்டாங்களான்னு இருக்கு. நன்றி!