Saturday, May 2, 2009

என்ன செய்யப் போகிறோம்?

  • இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்?
  • அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.
  • சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!
ஜூனியர் விகடனில வந்த கட்டுரையில் இருந்த சில விடயங்கள் மட்டுமே இது. இதெல்லாம் யார் கண்ணிலுமா படாது? நம் நாட்டிலேயே அடிப்படைக் கட்டமைப்பு , மருத்துவ நிலையங்கள், பள்ளிகள் என பல தேவைகள் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை விளிம்பில் இருக்கும்போது 1500 கோடி ரூபாய் கடன் கொடுத்தாவது அடுத்தவன் அழிக்க வழி காட்டியது எந்த வகையில் சரி. கொல்லப்பட்ட மக்கள் எத்தனை? தீவிர வாதிகள் எத்தனை பேர்? போருக்கு வழி சொல்லும் இறையாண்மை காப்பாத்தவோ போர்நிறுத்தவோ தடையாகி விடுமாம்.

போனதெல்லாம் போகட்டும். போரை நிறுத்தச் சொல்ல வேண்டாம். நம்பி வந்த மக்களை இந்தக் கொடுமைக்காளாக்கும் அரசு இவர்களின் நல வாழ்க்கைக்கு என்ன செய்துவிடும்? தொண்டார்வ நிறுவனங்களை சேர்க்க மறுக்கும் அரசு எந்த விதத்தில் இவர்களை வாழ வைக்கும். இதை எல்லாம் யோசிக்காமல் ஆளாளுக்கு பாய்ந்து நல வாழ்வுக்கு கோடி கோடியாய் கொடுப்பது சரியா?

தொலைபேசியில் போரை நிறுத்த முடிந்த கனவான்கள் பொது நிறுவனங்களுக்கு அனுமதி பெற முடியாதா? தனி ஈழமோ ஐக்கிய கட்டமைப்போ என்ன இழவோ இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன விதத்தில் பயன் படப் போகிறது. குறைந்த பட்சம் தோழமைக் கட்சிகள் தோளில் கை போட்டோ, எதிர் கட்சிகள் துண்டு போட்டோ ஒற்றுமையாக ஏதாவது வழி காணத்தான் வேண்டும். ஒத்தைப்பால ரெட்டையர்களின் தலையீடின்றி இந்தியாவின் நேரடிப் பொறுப்பில் இவர்களுக்கு வழி காட்டும் கடமை இருக்கிறது.

அதற்கு முன்னால் இங்கு அகதிகள் என்றும், ஏதிலிகள் என்றும் பெயர் கொடுத்து முகாமில் அடைத்து வைத்திருக்கும் நம் மனசாட்சிக்கும் பதில் சொல்லி ஆக வேண்டும். வேறெங்காவது நம் உறவுகள் இப்படித் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று கூட சொல்ல முடியாது. தன் நாட்டை நம்பி வந்தவர்கள் இவர்கள். இவர்களால் வாழும் திரை உலகம் மனது வைத்தாலே இவர்கள் வாழ்வு தொடங்கும்.

செய்வோமா?
***

4 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சீக்கியர்களின் மயிருக்கு (டர்பன் அணியும் உரிமை கேட்டு) பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங் தமிழின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷே விடம் பேச மறுப்பது என்? சீக்கியர்களின் மயிரைவிட கேவலமா? தமிழின் உயிர்?

கலகலப்ரியா said...

இன்னும் என்ன எல்லாம் பண்ணுவாங்க... இதுக்கு மேலயும் கொடுமைனு ஏதாவது இருக்கா.. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு உயிருடன் இருக்க பிடிக்கல..

பாலா... said...

/மன்மோகன் சிங் தமிழின் உயிருக்காக சிங்கள ராஜபக்ஷே விடம் பேச மறுப்பது என்?/

அவர யாரு பேச விடுரா? ஒத்தப்பால ஜெமினிங்கதான் பேச முடியும்

பாலா... said...

/இதையெல்லாம் கேட்டுக் கொண்டு உயிருடன் இருக்க பிடிக்கல../

கலங்கிப் போய் இருக்கேன். எத்தனை அமைப்பிருந்தும் ஒண்ணும் பண்ணலையேன்னு இருக்கு. மிருகமா பிறந்திருந்தா இந்த அவஸ்தைல்லாம் இருந்திருக்கதில்லையாங்க?