Sunday, April 19, 2009

கத கேளு கத கேளு - 9

(சின்ன வயசுல அம்புலிமாமா கத படிச்சது. மலரும் நினைவுகள். )


தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மரத்தின் மீதேறி ஒரே வீச்சில் உடலை விடுவித்துத் தோளில் போட்டுக் கொண்டு இறங்கி நடக்கலானான். வேதாளம் இடி இடியென்று சிரித்து, அரசே! உனக்கேன் இந்த வேண்டாத வேலை. என்னை விட்டு விடு எனக்கூறியது. பதிலேதும் கூறாத விக்கிரமாதித்தன் தொடர்ந்து நடக்கலானான். சிறிது தூரம் சென்றதும் வேதாளம், சரி மன்னா, நான் என்ன கூறியும் நீ கேட்கப் போவதில்லை. உன்னைப் போலவே பிடிவாதமான ஒரு மன்னன் கதையைச் சொல்கிறேன் கேள் எனக் கூறியது.

மகதநாட்டின் ஆளுகைக்குட்பட்டு மச்சநாதன் என்றோர் குறுநில மன்னன் மஞ்ச தேசத்தை ஆண்டு வந்தான். அவன் நீதிமான். அவனது ஆட்சியில் அவன் தேசம் பல வழிகளிலும் செழித்தோங்கியது. அந்த தேசத்தில் ஒரு துறவி இருந்தார். தன் தவ வலிமையால் முக்காலமும் உணர்ந்த ஞானியாக விளங்கினார். மன்னன் அவர் மீது மிகுந்த பாசமும், பக்தியும் கொண்டவனாக இருந்தான். பல தருணங்களில் மன்னன் அவரது ஆலோசனை நாடிச் செல்வது வழக்கம். அவரோ இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற இடையூறில்லாமல், பல்வேறு வழிகளைக் கூறி இவற்றில் எது சிறந்தது என்று மன்னன் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி மன்னன் பொறுப்புணர்ந்து செயல் பட வழிகோலினார்.

அந்தத் துறவி தினமும் ஒரே ஒரு வேளை ஒரு தேங்காய்ச் சிரட்டையை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு வீட்டில் சென்று பிச்சை வேண்டி நிற்பார். சமைத்த உணவு எதையும் ஏற்க மாட்டார். ஒரு கைப்பிடி அரிசி மட்டும் பெற்றுக் கொண்டு, இன்னோர் வீட்டிற்குச் சென்று அங்கு அரைக் கைப்பிடி பயற்றம் பருப்பு பிச்சையாகப் பெற்று வந்து இரண்டையும் ஒன்றாய் சோறாக்கி உண்பார். வேறு யார் எது கொடுத்தாலும் பெற மாட்டார். தவத்திருந்து இறையருள் வேண்டி நிற்பார். மன்னனுக்கு இது மிகுந்த மன வருத்தமளித்தது. பல முறை அவரிடம் மன்றாடி, துறவியாரே உங்களுக்கேன் இந்த நிலை. என் அரண்மனைக்கு வாருங்கள். எனக்கு ஆலோசகராக இருங்கள். இப்படி பிச்சை எடுக்க வேண்டாம் எனக் கேட்டும் துறவி மறுத்து விடுவார்.

ஒரு நாள் மன்னன் பிடிவாதமாக துறவியிடம் அழுது மன்றாடி ஒரே ஒரு வேளை தன் அரண்மனையில் விருந்தாளியாக வந்திருந்து அவருக்கு தானே சேவை செய்ய அனுமதிக்க வேண்டுமென மன்றாடினான். வழக்கம் போல் துறவி எவ்வளவோ மறுத்தும், அழுது கெஞ்சி வற்புறுத்தலானான். முனிவரும் வேறு வழியின்றி சரி ஒரே ஒரு நாள் வருகிறேன். ஆனாலும் எனக்கு என் தினசரி உணவு மட்டுமே வேண்டும். வேறு எதுவும் உண்ண வற்புறுத்தலாகாது என்ற நிபந்தனையும் விதித்தார். மன்னன் மகிழ்வுடன் அவரை வரவேற்க சகல ஏற்பாடுகளும் செய்தான். அவர் வந்ததும் பாதம் கழுவி, சகல மரியாதையும் செய்வித்து சாப்பிட அழைத்துச் சென்றான். அவரும் அவருடைய உணவை அவருடைய சிரட்டையிலேயே பெற்று உண்டு விட்டு நன்றி கூறி கிளம்பினார். மன்னனோ அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு துறவியாரே, நான் தங்களுக்கு சேவை செய்யவும் தாங்கள் அனுமதித்தீர்கள். எனவே இப்படிப் போகலாகாது என்று ஒரு மஞ்சத்தில் அமரச் செய்து தானே விசிறத் துவங்கினான். துறவி மெதுவாக தூங்கி விழ ஆரம்பித்தார். மன்னன் அவரை படுக்கச் செய்து விசிறவும் கால்களைப் பிடித்து விடவுமென சேவை செய்தான். அப்போது அவன் மார்பிலிருந்த நவரத்தின மாலைகள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் சப்தம் அவருக்கு இடையூறாக இருக்கலாம் எனக்கருதி அவற்றை அவிழ்த்து அங்கிருந்த மேசையிலி வைத்து விட்டு அவருக்கு பணிவிடை செய்தான். துறவி அசந்து தூங்கிவிட்டார். மன்னனும் சப்தமிடாமல் அறையை விட்டுச் சென்றான்.

மாலையில் துறவி எழுந்து மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற பிறகு மன்னன் தன் மாலைகளை எடுக்க அந்த அறைக்குச் சென்ற போது அவற்றைக் காணவில்லை. அரசவையே அல்லோல கல்லோலப் பட்டது. இறுதியில் அமைச்சர் காவலருக்கு கட்டளையிட்டு அரண்மனை முழுதும் சோதனையிட்டும் அது கிடைக்கவில்லை. மன்னன் பெரும் கோவத்துக்குள்ளானான். செய்வதறையாது திகைத்த மந்திரி பொற்கொல்லனிடம் அதே போல் வேறு நகைகள் செய்யச் சொல்லி இரண்டாம் நாள் ஒரு திருடனைப் பிடித்து சோதித்ததில் அவனிடமிருந்ததாகவும், அவனும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறினான். மன்னன், அவனை விசாரித்ததும் அவன் தானே திருடியாதாக ஒப்புக் கொண்டான். மன்னனோ அவனுக்கு கழுவிலேற்றிக் கொல்லும்படி தண்டனை விதித்து விட்டார். உடனே அவன், மன்னா நான் திருடவில்லை. மந்திரியார்தான் இப்படி ஒப்புக்கொள்ளச் சொன்னார் எனக் கதறவும் அமைச்சர் இல்லை மன்னா. இவன் தண்டனைக்கு அஞ்சி இவ்வாறு கூறுகிறான் எனச் சொன்னார்.

அந்த வேளையில் துறவி மிகவும் வாடி வதங்கி அங்கு வந்தார். மன்னா, இவன் சொல்வது உண்மை இவன் திருடனல்ல. நான் தான் திருடினேன் என்றார். மன்னனோ இல்லை. நீங்கள் இவன் மீது இரக்கம் கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். நீங்கள் விரும்பினால் நாதே நன் தர இருக்கும்போது நீங்கள் ஏன் திருட வேண்டுமென்றான். அவரோ ஏனென்று தெரியவில்லை. நீஎவ்வளவு முறை என்னை அரசவையில் பதவியில் இருத்தி சகல வசதிகளும் தருவதாகக் கூறிய போதெல்லாம் சலனப்படாத என் மனது அன்று நான் துயிலெழுந்தவுடன் உன் மாலைகலைக் கண்டதும் திருடத் தோன்றியது. நானும் எடுத்துவிட்டேன். இதை வைத்துக் கொண்டு நான் எதுவும் செய்ய முடியாதுதான். எனக்குத் தேவையுமில்லை தான். ஆனால் என்னால் என் தவறைத் திருத்திக் கொண்டு உன்னிடம் மன்னிப்புக் கேட்டு திரும்பக் கொடுக்கத் தோணவில்லை. அதன் பிறகு எனக்கு ஓயாத வயிற்றுப் போக்கு. உடல் தளரத் தளர மனச் சாட்சி இடித்துரைத்தது. என் குற்றத்தை ஒப்புக் கொண்டு எனக்குண்டான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்று வந்தேன் என்றார்.

மன்னன், துறவியாரே எனக்கொன்றும் விளங்கவில்லை. நீங்கள் இப்படிச் செய்ய காரணமென்ன என்பதையும் நீங்கள் தான் கூற வேண்டுமென்றான். துறவி, மன்னா எனக்கு அளித்த சோறு எப்படிச் சமைக்கப் பட்டதென்றார். அரசன் மந்திரியைப் பார்க்க, மந்திரி மடைப்பள்ளிக்காரனை அழைக்க அவன் மன்னா நீங்கள் சொன்ன படி புது அரிசி தனாதிகாரியிடம் பெற்றுத்தான் சமைத்தேன் என்றழுதான். துறவி தனாதிகாரியிடம் அந்த அரிசி எப்படி அரண்மனைக்கு வந்ததெனக் கேட்டார். தனாதிகாரி ஏடுகளைப் பார்த்து, துறவியாரே இந்த அரிசியை ஒருவன் களவாடி கொண்டு செல்லும் போது காவலரிடம் பிடி பட்டான். அவனுக்கு தண்டனை அளித்து உரியவர் தக்க சான்றுடன் நிரூபித்துப் பெற்றுச் செல்லலாம் எனப் பறை அறிவித்தும் யாரும் வரவில்லை. எனவே அரசுக்கு சொந்தமானது என்றார்.

துறவி, பார்த்தாயா மன்னா? இது தான் காரணம். நான் பிச்சை எடுத்து உண்டால் அது எனக்குப் பிச்சையாய் இடப்பட்டது. அதற்கு தோஷமில்லை. இங்கு நான் பிச்சை எடுக்காமல் உண்டதால் அந்தக் களவு எண்ணம் எனக்கும் வந்துவிட்டதென்றார். மன்னன் அப்படியானால் நானும் அதே அரிசி தானே உண்டேன் . எனக்கொன்றும் ஆகவில்லையே என வினவினான். மன்னா நாடே உனக்குச் சொந்தம். அதனால் அரண்மனை சேர்ந்த பொருள் உன்னுடையது. அது தான் காரணமென்று கூறி வேதனையுடன் புன்முறுவல் செய்தார். மன்னனும் திருடனை விடுவித்து மாலையைப் பெற்றுக் கொண்டான் எனக் கூறிய வேதாளாம், மன்னா துறவி ஏன் வேதனையுடன் புன்முறுவல் செய்தார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தும் பதில் கூறாவிடில் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்றது.

விக்கிரமாதித்தன், வேதாளமே, துறவி முக்காலமும் உணர்ந்தவரென்று கூறினாயல்லவா. அவருக்கு எதிர்காலம் மனதில் ஓடி, மக்களாட்சியில் நாடாள வருபவர்கள் நாடு என்னுடையது என்று நான் கூறியது போல் கொள்ளை அடிப்பார்கள். மக்களிலிருந்தே ஆள வருபவர்கள் தானே. அப்படியானால் மக்களுக்கெப்படி இந்த திருட்டுக் குணம் வர முடியுமென்று ஒரு பாமரன் குழம்பி இடுகை போடுவான்! இதைப் படிப்பவர்களும் குழம்புவார்கள். அதனால் தான் அப்படிச் சிரித்தார் என்று கூறினான். மன்னன் பதிலால் திருப்தி அடைந்த வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது.14 comments:

கலகலப்ரியா said...

நான் ஒரு விக்ரமாதித்தன் கதை போடணும்னு இருந்தேன்.. நீங்க முந்திக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..!

பாலா... said...

போடுங்க சீக்கிரம். வாழ்த்துகளுக்கு நன்றி.

இராகவன் நைஜிரியா said...

என்னடா பாமரனுக்கு என்ன ஆச்சு. தீடிரென, விக்ரமாதித்யன் கதைகள் போட ஆரம்பிச்சுட்டாரே அப்படின்னு நினைச்சு படிச்சு பார்த்த பிறகுதான் புரிந்தது. கொன்னூட்டீங்க நண்பரே.

உங்க எழுத்துக்களுக்கு முன், பின்னூட்டம் போடக்கூடிய தகுதி கூட எனக்கு இருக்கா என்று சந்தேகமாயிடுச்சுங்க...

இராகவன் நைஜிரியா said...

தமிழ்ஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க..

கலகலப்ரியா said...

ஆஹா.. ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போலயே..! பாலா சாருக்கு இத பார்த்தாவது அவங்க எழுத்தில நம்பிக்கை வரட்டும்..!

பாலா... said...

/உங்க எழுத்துக்களுக்கு முன், பின்னூட்டம் போடக்கூடிய தகுதி கூட எனக்கு இருக்கா என்று சந்தேகமாயிடுச்சுங்க.../

இராகவன் சார். இது நியாயமா. நாமளும் உங்க திண்ணைக்கெல்லாம் வந்து பார்த்துண்டு தானே இருக்கோம்.

பாலா... said...

/தமிழ்ஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சுங்க../

நன்றிங்க!நன்றிங்க!

பாலா... said...

/ஆஹா.. ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போலயே..! பாலா சாருக்கு இத பார்த்தாவது அவங்க எழுத்தில நம்பிக்கை வரட்டும்..!/

கலகலப்ரியா கலாய்க்கறப்ரியா..அவ்வ்வ்வ்வ்

தீப்பெட்டி said...

ரொம்ப நல்லா இருக்கு

கலகலப்ரியா said...

அட கொஞ்சம் நம்புங்க சார்..

பழமைபேசி said...

துடுக்குப்ரியா...ச்சீ...கை பிறழ்றது.. கலகல்ப்ரியா சொல்றா மாதிரி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நாங்க.... இஃகிஃகி!

கலகலப்ரியா said...

ஆஹா.. இங்கயும் நம்மள வம்புக்கு இழுக்கிறாங்களே.. சரி பழமை ஒரு வாட்டி பின்னூட்டம் போட்டா அப்புறம் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கிற வாடிக்கை கிடையாது.. அதனால கன்னாபின்னான்னு திட்டினாலும் தெரியாது..
அப்புறம் வந்து நிதானமா திட்டிக்கறேன்...

பாலா... said...

அப்பாடா. இப்பதான் நம்ம பின்னூட்ட பக்கம் களை கட்டுது. இவ்ளோ நாள் கண்ண கட்டுச்சி. பழமை, இராகவன் சார் அப்புறம் நம்ம கலக்கல் ப்ரியாக்கு நன்றி.

கலகலப்ரியா said...

அடடா... இப்டி ஏங்கிப் போயிருக்கே புள்ள.. முன்னாடியே சொல்லி இருக்கப்டாதா ராசா.. நான் என்னமோ இவ்ளோ நாள் அனுதாப ஓட்டுதான் போட்டுண்டிருக்கேன்.. (ச்சும்மா).. இனிமே ஒரு அனுதாப கோஷமும் போடுறேன்... (இது தேர்தல் நேர வாக்குறுதி என்பதைக் கவனத்திற் கொள்ளவும்..)