Monday, April 6, 2009

கத கேளு கத கேளு - 7

ஒரு நாட்டுல ராஜா ஒருத்தர் இருந்தாரு. வில்லங்கம் புடிச்ச ராஜா. இதோ அள்ளிக் குடுக்கப் போறாருன்னு நினைச்சா கிள்ளி கூட குடுக்க மாட்டாரு. பிசுனாரியாச்சே இவன். ஆனாலும் என்ன பண்ணன்னு போய் நின்னா மலை மலையா குடுத்து அய்யோ செத்தேன்னு திணரடிச்சுடுவாரு. சமயத்துல இது என்னா வகைன்னே கணிக்க முடியாது. எதிரி இலந்தப் பழம் திருடிட்டான்னு ஊர கொளுத்தி நாசம் பண்ணி அட்ரஸ் இல்லாம ஆக்கிப் போடும். அய்யோ ராசா போயே போச்சி. நம்ம ஊர்ல ஒண்ண பத்திட்டான் எதிரின்னா, தலைல கைவெச்சிண்டு, விதி வேற என்ன பண்ண முடியும். யாரங்கே. தலை வலிக்குது. பானம் கொண்டுவான்னு கெடக்கும்.

ராஜா இருந்தா ராஜாவ அண்டிப் பிழைக்கிற புலவர் இல்லாமலா? இருந்தாரு. கொஞ்சம் தெனாவட்டு புடிச்ச ஆளு. தேவைன்னா போவாரு. அதுவே இதுவே, அப்படியே இப்படியேன்னு பிட்ட போட்டு கிடைக்கற பரிச வாங்கிட்டு வர வழிலயே அவன் கெடக்கான். கிறுக்குப்பயன்னு வர ஆளு.

வழக்கம் போல தேவை வந்திடிச்சி. தேவைன்னா இப்படி அப்படி இல்ல. ரொம்ப மோசமான நிலமை. எப்படியோ ஏதோ பண்ணி நிலமைய சீராக்க வேண்டிய நிர்பந்தம். சிக்க மாட்டானா? மொத்தமா லவட்டிடலாம்னு கடங்காரங்க காத்து நிக்கிறாய்ங்க. மானப் பிரச்சன வேற. கிறுக்குப் பயதான். என்னா பண்ணுவானோ தெரியாது. முடிஞ்ச வரைக்கும் அடிச்சி விட்டு குஷியேத்தி எவ்வளவு முடியுமோ கறந்துடணும்னு முடிவு பண்ணி ராஜாவ பாக்க நேரம் வாங்கிடிச்சி.

நேரமா போய் நின்னு கும்பிடு போட்டு எடுத்து விட்டாரு ஒரு பாட்ட. ராஜா குஷி ஆகி கொண்டு வா ஆயிரம் பொன்னுன்னாரு. என்னா எளவுடா ஆயிரம் பொன்ன வெச்சி ஆட்டுக்கு தழை கூட வாங்க முடியாதே. சரி பாப்பம்னு அடுத்து ஒண்ணு ஏத்தி விட்டாரு. ராஜா குஜால் ஆகி கொண்டுவா நவரத்தினம் எடைக்கு எடைன்னாரு. ஆளு திக்கு முக்காடி போய்ட்டான். ஆகா. கஷ்டமெல்லாம் தீந்துடும். கடனுக்கு நின்னவனெல்லாம், கடனா நினைக்க வேணாம். ஏதோ கெரகம் செரி இல்ல. கேட்டுபுட்டோம். நம்மள எதிரியா நினைக்காம தோழனா ஏத்துக்கணும்னு கெஞ்சுறா மாதிரி கண்ணில ஓடுது. சரி கிறுக்கன் என்னாமோ இன்னைக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கான். ஒரு போடு போட்டு பர்க்கலாம் என்னா பேருதுன்னு எடுத்து விட்டான் ஒரு பாட்ட. கடவுளெல்லாம் கால் தூசு. உன்னைய மாதிரி வருமா? அப்பிடி இப்பிடின்னு. ராஜா கண்ணீர் வழிய கட்டி புடிச்சி அழுது ஆர்பாட்டம் பண்ணி, இப்படி ஒரு சீவன அல்லாட விடுவனா. இந்த நாட்டில பாதி உனக்குத் தந்தேன்னாரு.

அப்பிடி போடு அருவாளன்னு நினைச்சி , புலவரும் ராஜா, நெம்ப நன்றி. உன்ன இதுக்கு மேல எப்படி பாராட்டப் போறேன். வரட்டான்னாரு. சரின்னு சொன்னாரு ராசா. புலவர் பரிசு பக்கம் பாய ராஜா யாரங்கே. எல்லாத்தையும் உள்ள எடுத்து வைன்னாரு. இதென்னாடா இழவுன்னு பதறிப் போய் ராஜா என்னா இதுன்னாரு.

ராஜா, இங்க பாரு நீ பாட்டு பாடின. எனக்கு கேக்க சந்தோசமா இருந்திச்சி. நான் பரிச சொல்ல சொல்ல உனக்கு கேக்கறதோட இல்ல பார்க்கவும் சந்தோசமா இருந்திச்சி. நீயும் ஜாலி. நானும் ஜாலி. உன் பாட்டு உன்னோட. என் பரிசு என்னோட. கிளம்புன்னு சொல்லிட்டாரு. புலவனுக்கு திட்டவும் முடியல. போடாங்கொய்யாலென்னும் போக முடியல. விதிய நொந்துகிட்டு, நாள பின்ன இந்த கிறுக்குப் பயகிட்டதான் வரணும். அப்போ மனசு மாறிடும்னு நெம்ப நன்றி மகாராஜான்னு நடய கட்டினாரு.

(வழக்கம் போல ராஜா தான் மக்களா, புலவர் தான் கட்சிங்களா, பாட்டு தான் வாக்குறுதியா, பரிசு தான் வாக்கா. வாய் வார்த்தைய அள்ளி விட்டு வாக்கு அள்ளிட்டு போய்டலாம்னு வந்தா 49-O சொல்றதுதான் இதான்னு கேட்டா நான் பொருப்பில்லன்னு சொல்லுவேன்னு நினைச்சா அதுக்கு நான் பொருப்பில்ல. அதாஞ்சொன்னேன்)

5 comments:

பழமைபேசி said...

எப்படிங்க அண்ணே, எதுக்கும் ஒரு கதை தயார்படுத்திடுறீங்க?

vasu balaji said...

அதெல்லாம் இல்ல. கத இருக்கிறது தெரிஞ்சி நம்மாளுங்க நடந்துக்கறாங்க. அவ்வளவுதான். இஃகிஃகி

கலகலப்ரியா said...

தெரியாத கதையா சொல்லுங்கோ..:p

கிருஷ்ணா said...

கதையென்னமோ தெரிஞ்ச கதைதான். ஆனா, கடைசியில சொன்னதுதான் மனசுல நிக்குது..

vasu balaji said...

/கடைசியில சொன்னதுதான் மனசுல நிக்குது../

அதான் பண்ணணும். பண்ணமுடியும்னு சொல்றாங்க. பார்க்கலாம்.