Sunday, April 5, 2009

கத கேளு கத கேளு-6

ஒரு ஊர்ல ஒரு புருசன் பொஞ்சாதி இருந்தாங்க. ஒத்துமன்னா அப்படி ஒரு ஒத்தும. அவிங்க வீட்ல சண்ட சச்சரவு, மூஞ்சிய தூக்கி வெச்சி அந்தம்மா அளுவறது, அய்யா துண்ட உதறி தோள்ள போட்டுகிட்டு போறதுன்னு ஊரு கண்டதில்ல. மத்த வீட்ட தகறாருன்னா உடனே ரென்டு பேரும் போய்ருவாங்க. அந்தூட்டு அம்மாட்ட இந்தம்மா அய்யாட்ட இந்தய்யா தனியா பேசினாய்ங்கன்னா அதோட அந்த பிரச்சன முடிஞ்சது. இதனால ஊர்ல நல்ல மரியாத அவிங்களுக்கு.

அந்த ஊர்ல ஒரு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். மனுசனுக்கு அவ்ளோ நல்ல மனசு. யாராவது நல்ல படியா இருந்துட்டா. இவனுக்கு இருப்பு கொள்ளாது. ஏதாவது பண்ணி அவங்க நாறிப்போறதா பார்த்து சந்தோசமா போற ஆளு. நல்லா தின்னுட்டு திண்ணைல துண்ட உதறி போட்டு படுத்திருக்க நம்ம அய்யாவும், அம்மாவும் அந்த வீதில வந்தாய்ங்க. எல்லா வீட்டில இருந்தும் ஆளுங்க வந்து, வணக்கம் சொல்லி விசாரிச்சி மரியாதயா அனுப்பி வச்சத பார்த்தாரு நம்மாளு. தாங்குமா? வீட்டாள கூப்டு யாரு என்னா விபரம்னு கேட்டாரு. அவிங்களும் சொன்னாய்ங்க. அப்பிடியான்னு கேட்டுகிட்டு தூங்கிட்டான்.

அடுத்த நாள் எழுந்து அப்படியே ஒரு பொடி நடயா போய்க்கிருக்க அந்தய்யா எதிர்ல வந்தாங்க. வணக்கஞ் சொல்லி முகத்த வெறிச்சி பார்த்த படி நின்னான். இவங்களுக்கு விளங்காம யாரு என்னாப்பான்னா, இல்லிங்க, நமக்கு முகசோசியம் தெரியுமுங்க. உங்கள பார்த்ததும் தெரிஞ்சது. போன சென்மத்தில நீங்க பெரிய ராசா. ஏதோ ஒரு சாபம், அதனால இந்த சென்மத்துல இப்பிடி சாதாரணமான ஆளா பொறந்திட்டீங்க. ஆனாலும் போன சென்மத்துல இருந்தா மாதிரியே இப்பவும் எங்க போனாலும் மரியாத. மதிப்பு. என்னா? நாஞ்சொல்றது சரிதானுங்களேன்னு கேக்க அந்தாளு தாடிய சொறிஞ்சிட்டு, இவன பார்த்ததே இல்ல. இருந்தாலும் இவ்ளோ சரியா சொல்றானேன்னு நினைச்ச படி, அடக்கமா, அது என்னாமோ, சனங்களுக்கு நம்மள புடிக்கும். அவ்ளோதான்னாரு. இவன் முகத்த சோகமா வெச்சிகிட்டு, அய்யா, கோவிக்கப்படாது. உங்களுக்கு மனைவியா இருக்கிறவங்க பொருத்தமில்லைங்கய்யா. போன சென்மத்துல நாயா இருந்தாய்ங்கன்னு சொல்லிட்டான். இவருக்கு கோவம் வந்துடிச்சி. யோவ். ஏதோ உளற்றன்னு விட்டா ஓவரா போய்க்கிருக்க, அப்பிடியேன்னாலும் போன சென்மத்துல என்னாவா இருந்தா என்ன, இப்போ எனக்கு ஏத்த மவராசின்னாரு. அய்யா மன்னிக்கோணும். இப்பவும் அவிங்களுக்கு அந்த சென்ம வாசன போகல. தினம் உங்க கணுக்கால நக்குவாய்ங்க. தூங்குறப்போ. நீங்க வேணும்னா தூங்கறா மாதிரி இருந்து கண்டுக்குங்கன்னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தாளு தலைல அடிச்சிகிட்டு போய்ட்டாங்க.

இவன் நேர அந்தய்யா வீட்ட போய், அய்யா அய்யான்னா, அந்தம்மா வந்து உக்கார சொல்லி, அய்யா இல்ல. வெளிய போய் இருக்காங்க. மாலைல தான் வருவாய்ங்கன்னு சொல்லிச்சி. இவன் அப்பிடியே முகத்த பார்த்து அட அட என்னா கள என்னா கள. போன சென்மத்துல அரசியா இருந்தது அப்டியே தெரியுதே. இப்பவும் என்னா குறை. வீட்டுக்கு மட்டுமா. ஊருக்கே ராணீ மாதிரித்தேன்னு அளந்து விட்டான். இந்தம்மா இவன பார்த்ததே இல்லயே, இப்படி எல்லாந்தெரிஞ்சா மாதிரி சொல்றானேன்னு இருக்க, முகத்த பாவமா வெச்சிகிட்டு, அம்மா நான் சொல்றத கேட்டு வருத்தப்படாதீங்க. நீங்க புருசனா அடைஞ்ச ஆளு பொருத்தமில்ல. போன சென்மத்துல உப்புக் குறவனா பிறந்தவங்க. நான் சொல்றத நம்பலைன்னா ராத்திரி அய்யா தூங்கும்போது கணுக்கால நக்கிப் பாருங்க கரிக்கும்னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தம்மாக்கு குடைச்சல் ஆரம்பிச்சது. இது நிசமா என்னா. நிசமானாதான் என்ன. இப்போ நல்லாதானே இருக்கோம்னு.

ராத்திரி அந்தய்யா வந்து சாப்பிட்டு படுக்கறப்ப இவன் சொன்னது கவனம் வந்திச்சி. தூக்கம் வரல. சரி பார்ப்போம். தினம் நக்குறான்னா ஏன் என்னான்னு கேக்காம விடுறதில்லனு இருக்க, அந்தம்மாக்கும் கவனம் வந்து தூக்கம் கெட்டு, மெதுவா எழுந்து கால நக்க போச்சி. இவரு விலுக்குன்னு ஒரு உதை விட்டு, அடி நாயே நாயே. ஜென்ம வாசன போகுதா கால நக்குதுன்னு கத்தினாரு. அம்மணிக்கு பொல்லாத கோவம். யோவ். ஜன்மத்த பத்தி நீ பேசாத. உப்புக் குறவனா உப்பாடி ஆடி பொழச்ச பொழப்பு மறந்து போச்சான்னு கத்திச்சி. அவரு கத்த இந்தம்மா கத்த ஊரு கூடி நின்னு இவிங்களா இப்படின்னு என்னமோல்லாம் சொல்லிப் பார்த்தும் அதெல்லாம் முடியாது. ஒட்டுமில்ல உறவுமில்லன்னு ஆளுக்கொரு பக்கம் போய்ட்டாங்க.

பத்த வெச்ச புண்ணியவன். அப்பாடா. வந்த வேல முடிஞ்சது. நம்ம கிட்டயேவான்னு போய் சேர்ந்தான்.

(வழமை போல அதாரு இதாருன்னு யோசிச்சா நான் பொறுப்பில்ல.)
____________________________________________________________

5 comments:

vasu balaji said...

நேத்து இந்த இடுகைய போட்டு தமிழிஷ், தமிழ்மணத்துலயும் பதிஞ்சி, பிழையா அழிச்சிட்டேன். இன்னைக்கு மெயில்ல இதுக்கு பிரபலமான இடுகைன்னு அறிவிப்பும் வந்துச்சி. பார்த்தா 10 ஓட்டு வேற. திரும்ப இப்போ இட்டு பதிஞ்சா, இன்னொரு இடுகை கணக்கில நிக்குது. வாக்களிச்சவய்ங்க படிச்சிருந்தா நல்லது. படிக்கலைன்னா படிங்க. மூத்தவிங்க இந்த தவற தமிழிஷ்கும் தமிழ்மணத்துக்கும் எப்படி சொல்றதுன்னு சொன்னா நல்லது. நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நகைக்க வச்சுபுட்டீங்க

கலகலப்ரியா said...

நான் நேற்று இதுக்கு பின்னூட்டம் போட்டேன்.. அதையும் சேர்த்து நீக்கிட்டீங்க.. என்ன போட்டேன்னு நான் மறந்துட்டேன்.. இப்போ எதுவும் தோணல...

vasu balaji said...

வாங்க ஞான சேகரன். வணக்கம் . நன்றி

vasu balaji said...

//நான் நேற்று இதுக்கு பின்னூட்டம் போட்டேன்.. அதையும் சேர்த்து நீக்கிட்டீங்க.. என்ன போட்டேன்னு நான் மறந்துட்டேன்.. இப்போ எதுவும் தோணல...//


ஏங்க! அவ்ளோ பெரிய கதைய தெரியாம அழிச்சிபோட்டு திரும்ப எழுதி இருக்கேன். நீங்க பின்னூட்டம் போட சலிச்சிக்கிட்டா எப்படி. போட்டேனேன்னா. அது நேத்து. இது இன்னைக்கு. பின்னூட்டம் கேக்குறது கூட வடிவேலு மாதிரியே வருதே! நான் என்னா பண்ணுவேன் என்னா பண்ணுவேன். ஒரு பின்னூட்டத்துக்கு இப்படி புலம்ப விட்றாய்ங்களே.