Wednesday, March 25, 2009

பதில் கேள்வி

சிறிது நாட்களாக நம் தமிழினக் கோவலர் சாதுர்யமாக மற்றவர்களைக் கேட்கவிட்டால் சங்கடம் என்று தானே வசதிக்கு கேள்வி கேட்டு தானே அருமையாகபதிலும் சொல்லி காவடிப் பத்திரிகைகளில் போட்டு காதில் பூ சுத்தி வருகிறார். மூத்த தலைவர் என்ற நினைப்பு சிறிதுமின்றி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போகமுடியுமோ அவ்வளவும் பேசும் இவரின் இன்றைய கேள்வி பதிலைப் படிக்கும்துர்பாக்கியம் நமக்கெல்லாம் வாய்த்தது. பண்பு நாகரிகம் குறித்து பேசுவதற்குஎன்ன தகுதி இதற்கு மேலும் இருக்க முடியும். நீங்களே பாருங்கள்.

1. இறையாண்மையை காட்டி இலங்கை தமிழர்களுடைய வேதனைகளை அலட்சியப்படுத்த நானும் சரி- தி.மு.க.வும் சரி என்றைக்கும் எண்ணியதில்லை

வாஸ்தவம். அலட்சியப் படுத்த வேண்டுமென்றால் அது குறித்து ஒரு உணர்வாவது வேண்டும்.

2.இறையாண்மை, ஒருமைப்பாடு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத் தான்- அவற்றுக்கு மாறாக செயல்பட்டாலோ, பேசினாலோ, எழுதினாலோ சட்டம் கொட்டும் என்று ஒரு நிலை உருவாக்கப்பட்டிருப்பதால்....

ஆமாம். காவிரி நீர் தர மறுப்பவனுக்கு மட்டும் இவை இல்லை. அங்கு யாராவது ஒருமைப்பாட்டுக்கு இறையாண்மைக்கு எதிராக தண்ணீர் தர மறுப்பது தவறு என கைது செய்யப்பட்டிருக்கிறார்களா. இங்கு கூவும் தொங்க பாலு இது இறையாண்மைக்கு மாறில்லை எனக்கூறி ஓட்டு கேட்கட்டும். அவரெதற்கு ? நீங்கள் சொல்லலாமே? இதைக் கேட்டவர்கள் தான் சிறையில்.

3. இலங்கை தமிழர் பாதுகாப்பு அணியிலே உள்ள தளகர்த்தர்கள், சேனாதிபதிகள், வழிகாட்டிகள்- இவர்கள் எல்லாம் இப்போது சமீப காலமாக இலங்கையிலே உள்ள முல்லைத்தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி பற்றியோ பேசுவதில்லை.

பிரமாதம். ஐயா. இப்போது சாவதெல்லாம் புதுக்குடியிருப்பில். நீங்கள் சொல்லுமிடமெல்லாம் உங்கள் கூட்டணி தயவில் பிடித்து விட்டதாக( ஓர் இரு நாய்கள் தவிர ஏதுமில்லை அங்கே). இதிலிருந்தே நீங்க எவ்வளவு தூரம் அக்கரையாக கவனிக்கிறீர்கள் எனத் தெரிகிறது.

4. அவர்களுடைய பிரச்சினை எல்லாம் திருநெல்வேலி தொகுதி யாருக்கு? திருச்சி தொகுதி யாருக்கு? சிதம்பரம் தொகுதி யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? ராஜ்ய சபையும் சேர்த்தா? சேர்க்காமலா?

நாளைக்கு தானே நல்ல நாள் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் பிரச்சனை வராமலா போகப் போகிறது?

5. மேடையேறி பேசுகின்றவர்களையெல்லாம் "இறையாண்மை'' மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழ்நாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. சொல்லப் பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். காவேரி தண்ணீரைக் கொண்டு வர முடியாதவர்கள் எல்லாம் "வேசி மக்கள்'' என்றும்- இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினி இறந்துவிட்டான், ஆனால் சேலை கட்டி வந்த முசோலினிதான் சோனியா என்றும்- ராஜீவ்காந்தி கொலை செய்யப்படவில்லை, அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்றும் இப்படியெல்லாம் பேசுவதுதான் மேடை நாகரிகம்- அரசியல் பண்பாடு என்று கருதினால்- அப்படி பேசியவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் அல்ல என்று நீங்கள் வாதிடுவதிலே எந்த பயனும் இல்லை.

இவ்வளவு பச்சையாக இல்லாவிடினும் அந்த பதிவிரதை அறிக்கை இறையாண்மை மீறல் இல்லையா?
புடவைகட்டிய முசோலினி இறையாண்மை மீறல் என்றால் அம்மையாரை அர்ச்சித்ததெல்லாம் மீறல் இல்லையா?
உங்கள் கருத்துப்படி மரணதண்டனை என்று சொன்னது இறையாண்மை மீறல். சரி. இந்திரா அம்மையார் மரணத்தைத் தொடர்ந்து சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது ராஜீவ் சொன்ன ஆலமர உதாரணம் என்ன? ஆக ஆளும் கட்சிக்கு எதிராக சொல்லப் படும் கருத்துக்கள் இறையாண்மைக்கு மாறு. அவ்வளவுதானே?

6. இவர்கள்தான் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றும் அந்த கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள்- முழங்கட்டுமே முரசம்- கொட்டட்டுமே பேரிகை. இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?

அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம். இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு- அவரையும் அழைத்து செல்லுங்கள். அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று- அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.

உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா. இப்படி கேலி பேசும் விடயமா இது. ஏன் அப்போது கூட நாங்களும் வரத் தயார் என சொல்ல முடியாதா? களிப்பீர்கள். கை தட்டுவீர்கள். எவ்வளவு அழகான திட்டம். ஒரே போட்டில் தமிழுணர்வாளர்களையும் சேர்த்து ஒழிக்க. ஓட்டு போடவாவது மக்கள் வேண்டும் ஐயா. அய்யா அய்யகோ. முடியுமானால் மேற்சொன்னவற்றை ஒரு முதல்வராக, மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் உறுதியோடு நீங்கள் போங்கள். ஒன்றும் செய்ய மாட்டோம். திரும்பி வந்தால் எப்படி போனீர்கள் என்ற கேள்வியுமிருக்காது என்று உறுதி மொழியாக கூறிப் பாருங்கள். போஸ்டர் ஒட்ட உங்கள் கட்சியிலே கூட தொண்டர்களிருக்க மாட்டார்கள்.
எல்லோரும் அங்கே இருப்பார்கள்.
வேண்டாம். ஐயா. ஏதாவது செய்ய முடியும் நிலையில் இருந்தும் செய்ய மறுப்பது பெரும்பாவம். முடியுமானால் அந்த அவலங்களை வலைமனையில் பார்க்க மனதைரியமிருந்தால் பாருங்கள். இதோ. உங்களை வாழ வைக்கும் தமிழிலேயே அந்த அவலத்தை கேளுங்கள். இப்படி பேசியதற்கு அழுங்கள்.

2 comments:

கிருஷ்ணா said...

இப்படிக் கழுத்தறுப்பதைவிட கருணாநிதி எதுவுமே செய்யாமலிருப்பது நல்லது. ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதித்தாகிவிட்டது. இங்குள்ள தமிழர்களிடம் ஜெயலலிதா மீது கூட இந்த அளவு வெறுப்பு இருப்பதைக் காணவில்லை.

இந்தியாவை மத்தியில் ஆள்பவனுக்கு இதயத்தில் கோளாறு, தமிழகத்தில் ஆள்பவனுக்கு முதுகெலும்பில் கோளாறு. உறுப்பில் மட்டுமல்ல கருத்திலும்கூட.. (இறையாண்மைக்கு எதிரா சொன்னதா நம்மளப்பிடிச்சு உள்ள போடமாட்டாங்களே?)

பழமைபேசி said...

வருத்தமா இருக்குங்க அன்ணே!